ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை
ஶ்லோகம் 41 – இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார். பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.
தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||
வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் …
ஶ்லோகம் 42 –ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்; எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.
த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||
விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்; எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக்கூடியவர்.
ஶ்லோகம் 43 – விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார். இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?” (எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.
ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-
* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..
துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!
ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல் இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே” (நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்) என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.
அபூர்வ நாநாரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||
தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்; இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.
ஶ்லோகம் 45 – ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||
எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்; அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்; தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன், ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் …
ஶ்லோகம் 46 –ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும் என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில் பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.
பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||
மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?
ஶ்லோகம் 47 – இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து “ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால் தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்? எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து, நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.
திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||
புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும், ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.
ஶ்லோகம் 48 – ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார். அல்லது – ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார். முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்; இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக்கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.
அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||
துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்; இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை; உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஶ்லோகம் 49 –எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல், என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’ (உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க, அதற்கு ஆளவந்தார் “சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை, ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால், இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால், உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.
அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.
ஶ்லோகம் 50 – ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும் என்னைவிட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.
ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||
ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே; உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்துவிட்டாய் என்றால், உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-41-to-50-simple/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org