ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை
ஶ்லோகம் 21 –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார். மற்றொரு விளக்கம் – முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.
நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||
தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.
ஶ்லோகம் 22 –ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார். அல்லது – முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச்செய்கிறார் என்றும் சொல்லலாம்.
ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||
சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை; என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
ஶ்லோகம் 23 – எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்” என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||
மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள் சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில், வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.
ஶ்லோகம் 24 – ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்; ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.
நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||
தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.
ஶ்லோகம் 25 – எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு, நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’ (ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்) என்றபடி இருக்கவேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க, ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்கவில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால் அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப்பெயர்; அதைப் போக்கிக்கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.
அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||
ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது? இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை; ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால், அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.
ஶ்லோகம் 26 – ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கைவிட்டாலும், நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே) உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.
நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||
ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்; பால்குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமாபோலே.
ஶ்லோகம் 27 –ஆளவந்தார் “அநந்யகதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்? உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.
தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம், வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?
ஶ்லோகம் 28 – ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?” என்று அருளிச்செய்கிறார்..
த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||
காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச்சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கிவிடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.
ஶ்லோகம் 29 – இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும். அல்லது – 28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பரபக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.
உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||
உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும் காட்டுத்தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.
ஶ்லோகம் 30 – ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும், அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ” (என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார். அல்லது – ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார், திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்றுகொல் கண்கள்” (என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும் திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே” (அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.
விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||
என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும் உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-21-to-30-simple/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org