வாழிதிருநாமங்கள் – திருமழிசை ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< முதலாழ்வார்கள்

திருமழிசை ஆழ்வார் பெருமை 

திருமழிசை ஆழ்வாருடைய அவதார ஸ்தலம் திருமழிசை.  இவருடைய  திருநக்ஷத்ரம் தை மாதம் மக நட்சத்திரம்.  இவர் பல ப்ரபந்தங்கள் அருளியிருக்கிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பது இரண்டு ப்ரபந்தங்கள் தான். நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் என்று இரண்டு  ப்ரபந்தங்கள். இவர் எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தில்  மிகவும் ஊன்றியவர். சிறந்த யோகிகள் மற்றும் பக்தர்களுக்கு, எம்பெருமான் தன் திருமேனியுடன்  அவர்களுடைய இதயத்தில் காட்சி கொடுப்பான். அப்படி இவருக்கு எம்பெருமான் காட்சி தர, அதிலேயே மிகவும் ஈடுபட்டிருந்தவர்.  அதற்கு மேலும் முக்கியமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பவர்கள், ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருக்க வேண்டும். வேறு எந்த எந்த தேவதையையும் மறந்தும் கூட நினைக்க கூடாது என்ற விஷயத்தை மிக ஆழமாக எடுத்துக் காட்டியவர்.

திருமழிசை ஆழ்வார் வாழி திருநாமம்.

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

திருமழிகை ஆழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை

சம்சாரிகள் மீது கொண்ட கருணையினால் அல்லது எம்பெருமான் மீது கொண்ட அன்பினால், தொண்ணூற்று ஆறு பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி என்று அழைக்கப்படும் ப்ரபந்தத்தை அருளிச்செய்தார்.  “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று தொடங்குவதால் இதற்கு “நான்முகன் திருவந்தாதி” என்று திருநாமம்.   இந்த ப்ரபந்தம் அந்தாதி க்ரமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எம்பெருமான் மீது கொண்ட அன்பினால் இந்த தொண்ணூற்றாறு பாசுரங்களை ஆழ்வார் அருளிச் செய்தார் என்றும் சொல்லலாம் அல்லது சம்சாரிகள் இவ்வுலகில் துன்பப்படுகிறார்கள். அவர்கள் எம்பெருமானை துதிப்பதற்கு ஒரு ப்ரபந்தத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அவாவுடன் சம்சாரிகள் மீது கொண்ட கருணையினால்/ அன்பினாலே இந்த ப்ரபந்தத்தை அருளினார் என்றும் சொல்லலாம்.

அழகு நிறைந்து இருக்கக்கூடிய திருமழிசை (மஹீஸார க்ஷேத்ரம்) என்ற க்ஷேத்ரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய செல்வன். அதாவது கைங்கரியம் என்ற செல்வத்தை கொண்ட செல்வன் வாழியே! அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

தை மாதம் மகம் நட்சத்திரம் ஆழ்வாருடைய திருநக்ஷத்ரம். அவர் உதித்ததனால் தை மாதம் மக நட்சத்திரம்  இன்பம் மிகுந்ததாக இருக்கிறது, அப்படிப்பட்ட இன்பம் அளிக்கக்கூடிய தை மாத மக நட்சத்திரத்தில் அவர். உலகத்திலே உதித்தார் /அவதரித்தார்.

அழகிய திருச்சந்த விருத்தம் என்ற ப்ரபந்தத்தை நமக்கு அருளியவர். ஈந்தான் என்பது வள்ளல் தன்மையுடன் கொடுத்ததைக் குறிப்பதாகும். நூற்று இருபது பாசுரங்களைக் கொண்ட “திருச்சந்த விருத்தம்” என்ற அற்புதமான ப்ரபந்தத்தை அளித்தார். சந்த விருத்தம் என்பதே ஒரு தனியான பா வகை.  பாசுரங்கள் இசையுடன் மிகவும் அனுபவித்து பாடக் கூடியதாக இருக்கும். அந்த ப்ரபந்தத்தை நமக்கு அளித்த திருமழிசை ஆழ்வார் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

முந்தின யுகத்தில் (அதாவது துவாபர யுகத்தில்) வந்து அவதரித்து கலியுகத்திலே பல ஆண்டுகள் யோக நிலையில் இருந்தவர். 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்று நாம் சரித்திரத்தின் மூலமாக அறியலாம்.   முனி என்றால் மனன சீலர்.  எப்பொழுதும் தியானம் செய்து கொண்டே இருப்பவர். எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்.  அப்படிப்பட்ட திருமழிசை ஆழ்வார் முன் யுகத்திலேயே பிறந்தவர். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

திருமழிசை ஆழ்வார் பல க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார்.  ஆனால்,  இதில் எதை நாம் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்காக விட்டுச் செல்வது என்று  அவருக்கு ஒரு திருவுள்ளம் ஏற்பட காவிரி நதியில் க்ரந்தங்கள் அனைத்தையும் போட்டுவிட, அதிலே இரண்டு ப்ரபந்தங்கள் அதாவது திருச்சந்த விருத்தம் மற்றும் நான்முகன் திருவந்தாதி ஓலைச் சுவடிகள் மட்டும் மிதந்து இவரிடத்தில் திரும்பி வந்து சேர்ந்தன. மற்ற எல்லா ப்ரபந்தங்களும் ஆற்றோடு போய் சேர்ந்தன என்று அறியலாம்.  காவிரி நதியை பொன்னி நதி என்றும் அழைப்பார்கள்.  அந்த பொன்னி நதியின் நீரோட்டத்தை எதிர்த்து மீண்டும் ஆழ்வார் கையிலே வந்து சேர்ந்த ப்ரபந்தங்கள் நாம் இப்போது அநுபவிக்கும் திருச்சந்த விருத்தமும் நான்முகன் திருவந்தாதியும்.  “சொல்லோன்” என்பது சொற்களை / பாசுரங்களை அருளிச் செய்தவர் என்பதைக் குறிக்கும்.  அப்படிப்பட்ட ஆழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

நல்ல பூலோகத்தில் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசையாழ்வார்.  அவர் பல்லாண்டு காலம் வாழ்க.

“பத்திசாரன்” என்று அழைக்கப்படும் திருமழிசை ஆழ்வாருடைய இரு திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

இவருக்குத் “திருமழிசைபிரான்” என்றும் ஒரு திருநாமம் உண்டு. திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் ஆராவமுதன் எம்பெருமானிடத்துத் திருமழிசை ஆழ்வாருக்கு மிகுந்த ஈடுபாடு. எம்பெருமானுக்குத் தான் பொதுவாக பிரான் என்ற திருநாமம் வழங்கப்படும்.  “பிரான்” என்றால் நமக்கு நன்மை செய்பவன் / உபகாரகன் என்று அர்த்தம், இவருக்கும் அந்த ஆராவமுதன் எம்பெருமானுக்கும் இருக்கக்கூடிய அன்னியோன்ய பாவம் / அளவில்லாத அன்பினால் எம்பெருமானுக்கு ஆராவமுதன் ஆழ்வார் என்ற திருநாமமும் ஆழ்வாருக்கு “திருமழிசைப் பிரான்” என்ற திருநாமமும் ஏற்பட்டது. எம்பெருமானுடைய திருநாமம் இவருக்கும் இவருடைய திருநாமம் எம்பெருமானுக்கு என்று ஒரு ரசமான வைபவமாக ஏற்பட்டது. அதனால் இவருக்கு “திருமழிசைப் பிரான்” என்றும் திருநாமம் உண்டு.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment