ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhRpndQmGte2xWYCa?e=b32Fca

எந்த ஒரு ப்ரபந்தத்தை அநுபவித்தாலும் மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.   அந்த ப்ரபந்தத்தில் 1) சொல்லப்படும் கருத்து என்ன? 2)  அந்த ப்ரபந்தத்தை இயற்றியவருடைய பெருமை என்ன? 3) அந்த ப்ரபந்தத்தின் பெருமை என்ன?   பொதுவாக எந்த ஒரு ப்ரபந்தமாக இருந்தாலும், கீழ்ச்சொன்ன மூன்று விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 1. வக்த்ரு வைலக்ஷண்யம்
 2. ப்ரபந்த வைலக்ஷண்யம் மற்றும்
 3. விஷய வைலக்ஷண்யம்

என்று இவை கூறப்படும்.

வக்த்ரு வைலக்ஷண்யம் என்பது அந்த ப்ரபந்தத்தை இயற்றியவருடைய பெருமையைக் கூறுவதாகும்.  ப்ரபந்த வைலக்ஷண்யம் என்பது அந்த ப்ரபந்தத்தின் பெருமையைக் கூறுவதாகும்.  விஷய வைலக்ஷண்யம் என்பது அந்த ப்ரபந்தத்திலே சொல்லப்பட்ட விஷயங்களின் பெருமையாகும்.  இந்த மூன்றுமே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாழி திருநாமங்கள் எளிய தமிழில், நாம் எளிதில் அர்த்தம் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கின்றன.  பெரும்பாலான வாழி திருநாமங்கள் அப்பிள்ளை என்ற ஆசார்யரால் இயற்றப்பட்டது.

அப்பிள்ளையின் வைபவம் (வக்த்ரு வைலக்ஷண்யம்):-

அப்பிள்ளையினுடைய இயற்பெயர் ப்ரணதார்த்திஹரர். இவர் மணவாளமாமுனிகளுடைய அஷ்டதிக்கஜங்களில் ஒருவர்.   மணவாள மாமுனிகளுக்கு முக்கியமான எட்டு சிஷ்யர்கள் இருந்தார்கள்.  அவர்கள் அஷ்டதிக்கஜங்கள் என்று கொண்டாடப்பட்டார்கள். பெரிய சிம்மாஸனாதிபதிகளாக இருந்து சம்பிரதாயத்தைப் பெரிதும் வளர்த்தவர்கள் இந்த அஷ்டதிக்கஜங்கள். அதில் அப்பிள்ளையும் ஒருவர்,  அப்பிள்ளை என்பவர் அப்பிள்ளார் என்பவரைப் பிரியாமல் இருந்திருக்கிறார்.  இவர்கள் இருவருமே எப்பொழுதும் சேர்ந்து இருந்திருக்கிறார்கள் என்று சரித்திரங்கள் மூலம் தெரிகிறது.    இவர்கள் இருவருமே மணவாளமாமுனிகளை வந்து அடைந்தது ஒரு ஆச்சரியமான வைபவம்,  இவருடைய சிறுவயது சரித்திரங்கள் அவ்வளவாகத் தெரிய வரவில்லை.  யதீந்த்ரப்ரவணப்ரபாவம் என்ற க்ரந்தத்தில் இவர் எப்படி மணவாளமாமுனிகளை வந்து அடைகிறார், அவருடன் சேர்ந்து இருந்து கைங்கர்யங்கள் செய்தார் என்பதுதான் காட்டப்பட்டிருக்கிறது.

மணவாள மாமுனிகள் திருவரங்கத்தில் இருந்த காலத்தில், அப்பிள்ளையும், அப்பிள்ளாரும் திருவரங்கத்தை வந்தடைகிறார்கள்.   ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் சிறப்பாக வளர்ந்து வந்த காலம் அது.  பல  சிஷ்யர்களுடன் மணவாளமாமுனிகள் திருவரங்கத்தில் வாழ்ந்த காலம்.  பல ஆசார்ய புருஷர்கள் வந்து மணவாள மாமுனிகளை ஆசாரியனாக ஏற்றுக்கொண்டு அவருடைய பெருமையைத் தெரிந்து அவரிடம் ப்ரதிபத்தியுடன் இருந்து வாழ்ந்த நல்லடிக் காலம். சிறந்த காலமாக இந்தக் காலம் பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் பல வாதங்கள் செய்து பல மதத்தவர்களையும் ஜெயித்து ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை நிலைநாட்டினார்கள்.

அப்பிள்ளைக்கும், அப்பிள்ளாருக்கும் ஸ்ரீ எறும்பியப்பா மிகவும் நெருக்கமானவர்.  எறும்பியப்பாவும் மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர்.  இவர் எறும்பி என்ற கிராமத்திலிருந்து வந்து மணவாள மாமுனிகளை ஆச்ரயித்தவர்.  இவர் ஸ்ரீவரவரமுநி தினசர்யை என்ற க்ரந்தத்தை இயற்றியவர்.   விலக்ஷண மோக்ஷ அதிகார நிர்ணயம், ஸ்ரீவரவரமுநி  சதகம் போன்ற பல நூல்களை எழுதியவர்.  எறும்பியப்பா மூலமாக மணவாள மாமுனிகளுடயை பெருமைகளை அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார்  நன்றாக தெரிந்து கொள்கிறார்கள். அப்பிள்ளைக்கும், அப்பிள்ளாருக்கும் மணவாள மாமுனிகளை ஆச்ரயிக்க  வேண்டும் என்ற அவா துளிர் விடுகிறது.   அதற்குப் பிறகு பொன்னடிக்கால் ஜீயர் இவர்கள் இருவரையும் வந்து சந்திக்கிறார். மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர் பொன்னடிக்கால் ஜீயர். அவர் இவர்கள் இருவரையும் சந்தித்து மணவாள மாமுனிகளின் பெருமைகளையெல்லாம் எடுத்துக்கூறி நீங்கள் மிகப் பெரிய வித்வான்கள் எளிதில் புரிந்துக் கொள்வீர்கள்.  இவர் ஆதிசேஷனின் அவதாரம், எம்பெருமானாருடைய புனர் அவதாரம் என்றெல்லாம் சொல்லி அவர்கள் இருவரையும் கோயில் அண்ணன் திருமாளிகைக்கு வரவழைத்து அங்கே அவர்களுக்கு மேலும் மாமுனிகளின் பெருமைகள் எல்லாம் எடுத்துக் கூறி அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் வந்து மணவாள மாமுனிகளைச் சரணடைந்து அவரை ஆசாரியனாக ஏற்றுக்கொள்கிறார்கள்.  அது முதல் மணவாள மாமுனிகளுடைய அஷ்டதிக்கஜங்களில்  இவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.

அப்பிள்ளை என்பவர் ஆழ்வார்கள் மற்றும் ஓராண் வழி ஆசார்யர்கள் வாழித் திருநாமங்களை இயற்றி இருக்கிறார்.  திருவந்தாதிகளுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.  மேலும் சில ப்ரபந்தங்களையும், க்ரந்தங்களையும் அருளியுள்ளார். அதிலே முக்கியமாக இவர் அருளிச் செய்தது வாழி திருநாமங்கள். மணவாள மாமுனிகளிடம் மிகவும் ப்ரதிபத்தியுடன் இருந்து சம்பிரதாயத்தை வளர்த்தவர் அப்பிள்ளை.

வாழி திருநாமங்களில் அனைத்து வாழி திருநாமங்களும் இவர் அருளியது என்றில்லை.  பல வாழி திருநாமங்களை இவர் அருளியுள்ளார்.  சில வாழி திருநாமங்களை வேறு சில ஆசார்யர்களும் அருளியுள்ளார்கள். உதாரணத்துக்கு எம்பெருமானாருடைய வாழிதிருநாமம்.  பொதுவாக சன்னிதிகளில் ஸேவிக்கப்படும் “சீராரும் எதிராசர்  திருவடிகள் வாழி” என்ற வாழி திருநாமம். இதை அருளிச் செய்தவர்  மணவாள மாமுனிகள். ஆனால் இதற்கு முன்பே எம்பெருமானார் வாழி திருநாமங்கள் இருந்திருக்கின்றன. அதைத்தவிர அப்பிள்ளையும் எம்பெருமானாருக்கு வாழி திருநாமங்கள் அருளியுள்ளார், இப்படி வாழி திருநாமங்கள் பெரும்பாலும் அப்பிள்ளை அருளிச் செய்தவை என்று நமக்குத் தெரிகிறது,   வாழி திருநாமங்கள் இயற்றிய அப்பிள்ளையின் கீழ்ச்சொன்ன வைபவம் வக்த்ரு வைலக்ஷண்யம்.

ப்ரபந்த வைலக்ஷண்யம்:-

வாழி திருநாமங்கள் என்பது என்ன,  அவற்றினுடயை முக்கியத்துவம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம். வாழி என்பது மங்களாசாசனத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சப்தம் / ஒரு வார்த்தை,   வாழி, நம:, போற்றி, ஜய, இதெல்லாமே ஒருவருக்கு நாம் மங்களாசாசனம் செய்வது என்று குறிப்பிடப்படுகிறது. மங்களாசாசனம் என்பது ஒருவரைக் குறித்து நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்! என்று ஆசைப்பட்டு வாழ்த்துவது. அதாவது, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும் என்று சொல்வது. இதை பூர்வாசார்யர்கள், முக்கியமாக பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷணம் என்ற க்ரந்தத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

மங்களாசாசனம் யார் செய்யலாம்

பெரியவர்களுக்கு சிறியவர்கள் மங்களாசாசனம் செய்யலாமா? “சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி” என்று எம்பெருமானாருக்கு  மங்களங்கள் கிட்டட்டும் என்று நாம் வாழ்த்துவதற்கு நமக்கு யோக்கியதை இருக்கிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷணத்தில் விளக்கங்கள் கொடுத்துள்ளார்.

இது அன்பினாலே வருவது,  உதாரணமாக எம்பெருமான் விஷயத்திலே பெரியாழ்வார் எம்பெருமானுக்கு “பல்லாண்டு பல்லாண்டு” என்று பாடியிருக்கிறார். எம்பெருமானுக்கு பல்லாண்டுப் பாடி நாம் “எம்பெருமானே நீ நன்றாக இரு!” என்று சொல்லலாமா என்று தாமே கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். ஞான தசையிலே நாம் ஞானத்தின் நிலையில் இருக்கும் பொழுது அவர் பெரியவர் நாம் சிறியவர் என்ற நிலையிலே இருந்து கொண்டு அவரை வேண்டுவோம் / பிரார்த்திப்போம், மற்றும் அவருக்குத் தொண்டுகள் செய்ய ஆசைப்படுவோம். இவையெல்லாம் ஞான தசையில் இருக்கும்போது, அதாவது, அவர் பெரியவர் நாம் சிறியவர் என்ற எண்ணத்திலேயே இருக்கும் பொழுது அந்த நிலையிலேயே நாம் பார்ப்போம்.

அதே பிரேமதசையிலே எம்பெருமான் விஷயத்தில் பெரியாழ்வாருக்கு இருந்தது பேரன்பு. அதாவது கண்ணனை எப்படி  யசோதை பார்த்தாளோ, அதே போல பெரியாழ்வார் எம்பெருமானைப் பார்த்தார். அந்த பிரேமதசையிலே அவர் எம்பெருமானைப் பார்த்துப் பல்லாண்டு பல்லாண்டு நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்வது மிகவும் பொருத்தமே. ஒருவர் இடத்தில் இருக்கக் கூடிய அன்பினாலே, நாம் அவரைப் பார்த்து நீர் நன்றாக இருக்கவேண்டும்! என்று சொல்வது மிகவும் பொருத்தம் தான். அது அன்பின் வெளிப்பாடு தானே தவிர நாம் பெரியவர் அவர் சிறியவர் என்று ஆகிவிடாது.  சிறியவர் சிறியவர்தான், பெரியவர் பெரியவர்தான். ஆனால் நமக்கு அவரிடத்தில் இருக்கக்கூடிய பொங்கும் பரிவால் நாம் அவரை பார்த்துப் பல்லாண்டு என்று சொல்கிறோம்.  பெரியாழ்வார் எம்பெருமானிடத்தில் பொங்கும் பரிவால் பல்லாண்டு பாடுகிறார்,  இது எல்லாவிடத்திலும் பொருந்தும்.

எந்த ஒரு பெரியவரை நாம் பார்த்தாலும் தேவரீர் நூறாண்டு காலம் வாழி! வாழ்க! போற்றி! என்று சொல்வது நம்முடைய ஸ்வரூபத்திற்கு மிகவும் பொருத்தமே. அவர் நன்றாக இருந்தால் ஜகத்தில் இருக்கும் பலரும் வாழ்ச்சி பெறுவார்கள். அதனால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்.  அதனால் அனைவரும் மங்களாசாசனம் செய்யலாம்.  அதற்கு ஒரு தடையும் இல்லை.  அப்பிள்ளை அருளிச்செய்த வாழி திருநாமங்களை அந்தந்த காலத்தல் அநுசந்தித்து  அந்த மங்களாசாசனத்தை நாம் தினமும் செய்யும்படி நம் பெரியவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

எம்பெருமானுக்கு எப்படி மங்களாசாசனம் செய்வது, ஆழ்வார்/ ஆசார்யர்களுக்கு எப்படி மங்களாசாசனம் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பெரியோர்கள் சன்னிதிக்குப் போய் வந்தால் கூடப் பெருமாளைச் சேவித்து வந்தீர்களா? நல்ல சேவை கிடைத்ததா?  என்று கேட்கக் கூடாது, நன்றாக எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்தீரா? என்றுதான் கேட்கவேண்டும். அந்த மங்களாசாசனம் செய்வதை எளிமைப்படுத்திப் பெரியவர்கள் காட்டி உள்ளனர். இந்த வாழி திருநாமங்கள் சொல்வதன் மூலம் நாம் அவர்களுக்கு தினமும் மங்களாசாசனம் செய்யலாம். அது எம்பெருமான் தொடக்கமாக ஓராண் வழி ஆசார்யர்களுக்கும் மற்றும் ஆழ்வார்களுக்கும் இந்த வாழி திருநாமங்கள் அமைந்திருக்கின்றன.

வாழி திருநாமங்களில் என்ன இருக்கும் என்று பார்த்தால் பொதுவாக யாரைக் குறித்து அந்த வாழி திருநாமம் இருக்கிறதோ, அவர்களுடைய திருமேனி, வடிவழகு,  அவர்களுடைய க்ரந்தங்கள், அவர்கள் செய்த கைங்கரியங்கள் இவை எல்லாம் பொதுவாக காட்டப்படலாம்.   ஒவ்வொரு ஆசார்யனுடைய/ ஆழ்வாருடைய திருமேனியோ, அவர்கள் செய்த கைங்கரியங்களையோ நாம் நினைத்துப் பார்க்கும் பொழுது நமக்கும் அவர்கள் இடத்திலே ஒரு நன்றிப் பெருக்கு ஏற்படும். இப்படிப்பட்ட உயர்ந்த ஆழ்வார்கள்/ ஆசார்யர்கள், இவர்களுடைய சம்பந்தம் நமக்கு கிடைத்தது என்று ஒரு க்ருதக்ஞதை/ நன்றி உணர்வு ஏற்படும். அவர்களுக்கு உரிய மதிப்பும் நன்றாகப் புரியும். இவர்கள் எவ்வளவு கைங்கர்யம் செய்து இருக்கிறார்கள் என்பதும் தெரியவரும். அதனால், மங்களாசாசனம்/வாழி திருநாமங்கள் ஸேவிப்பது என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

வாழி திருநாமங்களை எப்பொழுது ஸேவிக்கலாம் என்றால் தினமும் அந்த நாளில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார்களோ/ஆசார்யர்களோ யாராக இருந்தாலும் அவர்களின் வாழி திருநாமங்களை அன்றாடம் நாம் ஸேவிக்கலாம்.  உதாரணமாக திருவாதிரை நட்சத்திரம் என்றால் எம்பெருமானாருடைய வாழி திருநாமங்களை ஸேவிக்கலாம்.  புனர்பூசம் என்றால் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த குலசேகராழ்வார், முதலியாண்டான், பொன்னடிக்கால் ஜீயர் போன்றவர்களின் வாழி திருநாமங்களை தெரிந்து கொண்டு அவற்றைச் சேவிக்கலாம்.  இப்படி அந்தந்த நாளிலே வரும் நட்சத்ரங்களில் அவதரித்த ஆழ்வார்கள் / ஆசார்யர்கள் வாழி திருநாமங்களை மாதந்தோறும் ஸேவிக்க வேண்டும்.  சில சன்னிதிகளில் இந்த பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வருடாந்திர திருக்ஷத்ரம் வரும் பொழுது எல்லா சந்நிதிகளிலும் அந்தந்த ஆழ்வார்களின் வாழி திருநாமங்களை கண்டிப்பாக இரண்டு முறை ஸேவிப்பது என்ற க்ரமம் வைத்துள்ளனர்.  அதே க்ரமத்தை இல்லத்திலும் வைத்துக்கொள்ளலாம். இல்லங்களிலும் திருவாராதனப் பெருமாளைச் சேவித்து சாற்றுமுறை செய்யும்போது அன்று யாருடைய திருநட்சத்திரம் இருக்கிறதோ அவர்களுடைய வாழி திருநாமங்களை ஸேவிக்கலாம்.  அப்படிச் செய்யும்போது அவை எளிதில் மனதில் பதிந்து விடும்.  வருட திருநட்சத்ரத்தன்று இரண்டு முறை ஸேவிக்கலாம்.    இது ப்ரபந்த வைலக்ஷண்யம்.  இவை வாழி திருநாமங்களின் பெருமையாகும்.

விஷய வைலக்ஷண்யம்:-

பொதுவாக, நாம் ஆழ்வார்கள்/ஆசாரியர்கள் வாழி திருநாமங்களைத்தான் அநுஸந்திக்கிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பெரிய பெருமாள் தொடக்கமாக மணவாள மாமுனிகள் இறுதியாக என்று பெரியோர்கள் காட்டியுள்ளனர்.  அதே போல் ஆழ்வார்கள் என்றால் பன்னிரு ஆழ்வார்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பது என்று வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

ஆழ்வார்கள் மற்றும் ஓராண் வழி ஆசார்யர்கள் :-

ஓராண் வழி ஆசார்யர்கள் என்பது ஒரு ஆசாரியன் ஒரு சிஷ்யன் என்று ஒரு பரம்பரையாக இந்த சம்பிரதாயம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் ஒராண் வழி ஆசார்யர்கள் என்று பெரியோர்கள் காட்டுகிறார்கள். முதல் ஆசார்யன் பெரிய பெருமாள். பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், சேனை முதலியார் இவர்கள் மூவருமே பரமபதத்தில் வசிக்கக்கூடியவர்கள். அதற்குப்பிறகு இந்த உலகத்தில் வந்து அவதரித்த ஆசார்யர்கள் பலர்.

ஓராண் வழி ஆசார்யர்கள்:-

 1. பெரிய பெருமாள்
 2. பெரிய பிராட்டி
 3. விஷ்வக்ஸேனர் (ஸேனை முதலியார்)
 4. ப்ரபந்நஜநகூடஸ்தர் என்று அறியப்பட்ட நம்மாழ்வார், சரணாகதி செய்யக் கூடியவர்களுக்கு தலைவராக இருப்பவர் என்று பெருமை கொண்டவர்
 5. நாதமுனிகள் (ஸ்ரீரங்கநாத முனி)
 6. உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்)
 7. மணக்கால் நம்பி
 8. ஆளவந்தார் (யாமுனாசார்யர்)
 9. பெரிய நம்பி (மஹா பூர்ணர்)
 10. எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர்)
 11. எம்பார் (கோவிந்தப் பெருமாள்)
 12. பராசர பட்டர்
 13. நஞ்சீயர் (வேதாந்தி)
 14. நம்பிள்ளை (லோகாசார்யர்)
 15. வடக்குத் திருவீதிப் பிள்ளை (ஸ்ரீ க்ருஷ்ண பாதர்)
 16. பிள்ளை லோகாச்சார்யர்
 17. திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீ சைலேசர்)
 18. மணவாள மாமுனிகள் (ரம்யஜாமாத்ரு முனி)

கீழ்ச்சொன்ன ஆசார்யர்கள் ஓராண் வழி ஆசார்யர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

இவை தவிர நம் குருபரம்பரை, அவரவர்கள் ஆசார்யன் மடம்/திருமாளிகை க்ரமத்தின்படி விரிந்திருக்கிறது.  உதாரணமாக, பெரிய நம்பி திருமாளிகையில் பெரிய நம்பி தொடக்கமாக அந்த வம்சாவழியாக இருக்கக்கூடியவர்கள் வாழி திருநாமங்கள் மற்றும் அவர்களுடைய பெருமைகளை அவர்கள் அநுசந்திப்பார்கள். அதேபோல எம்பார் வம்சத்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதேபோல கூரத்தாழ்வான் வம்சத்தவர்கள் இருக்கிறார்கள். அவரவர்கள் திருமாளிகைகளில் அந்த வாழி திருநாமங்கள், தனியன்கள் அநுஸந்தாநத்தில் இருக்கும்.  பொதுவாக அனைவரும் அநுஸந்திப்பது ஆழ்வார்கள் மற்றும் ஒராண் வழி ஆசாரியர்களுடைய வாழி திருநாமங்கள்.

ஆழ்வார்கள் என்பவர்கள் இந்த சம்சாரத்தில் இருந்த ஜீவாத்மாக்கள் சிலரை எம்பெருமான் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயர்வற மதி நலம் அருளி, அதாவது செறிந்த ஞானத்தையும், உயர்ந்த பக்தியையும் அளித்து இவர்களைக் கொண்டு இந்த உலகத்தில் இருப்பவர்களை திருத்துவோம் என்று அவர்களை எம்பெருமான் ஆழ்வார்கள் ஆக்கினார். ஒரு மானைக் கொண்டு மானைப் பிடிப்பார் போலே என்று சொல்வார்கள். ஒரு காட்டில் மானைப் பிடிக்க வேண்டிய வேடுவன் முதலில் ஒரு மானை பிடித்து அந்த மானுக்கு வேண்டிய தீனி எல்லாம் கொடுத்து நன்றாக பழக்கி, அந்த மானைக் கொண்டு மற்ற மான்களை பிடித்து வருவான். அதேபோல எம்பெருமானும் “இந்த உலகத்தில் இருப்பவர்களை ரக்ஷிக்க வேண்டும்,  நாம் சொல்லக்கூடிய உபதேசங்களை சிலர் கேட்கிறார்கள் சிலர் நம்மைக் கண்டு பெரியவன் என்று பயந்து போகிறார்கள்/ விலகுகிறார்கள்” என்ற எண்ணத்துடன் ஒரு சில ஜீவாத்மாக்களைத் தேர்ந்தெடுத்து அதாவது இந்த உலகத்தில் இருக்கக்கூடிய சம்சாரியாக இருந்த சேதநர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து அவர்களை ஆழ்வார்களாக ஆக்கினான். ஆழ்வார்கள் ஆன பிறகு அவர்களுக்கு பக்தியானது பெருகி அவர்கள் பாசுரங்கள் அருளிச் செய்தார்கள். அவை தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்று அறியப்படுகிறது. திவ்ய ப்ரபந்தங்கள் மூலமாக சம்பிரதாய அர்த்தங்களை எல்லாம் வெளியிட்டார்கள், வேதத்தில் உள்ள கருத்துக்களை மிக எளிய தமிழில் சுருக்கமாகவும் எவ்வளவு தெளிவாக அருள முடியுமோ அவ்வளவு தெளிவாகவும் அவர்கள் ப்ரபந்தங்களில் அருளிச் செய்தார்கள். அந்த ப்ரபந்தங்களைக் கொண்டுதான் பிற்காலத்திலே ஆசார்யர்கள் வியாக்கியானங்களை எழுதினர். முக்கியமாக எம்பெருமானார் ஒரு பெரிய பங்கு வகித்து இந்த சம்பிரதாயத்தை நன்றாக நிலைநாட்டி ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 74 சிம்ஹாசனாதிபதிகளை ஏற்படுத்தி பலப்பல ஆசார்யர்களை நியமித்து அவர்கள் வம்சாவழியாக இருந்து பரம்பரையாக இந்த சம்பிரதாயத்தை வளர்ப்பார்கள் என்று ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்த சம்பிரதாயத்தை ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.  மேலும்  எம்பெருமான் திருவுள்ளப்படி வைணவ சம்பிரதாயம் அனைவருக்கும் சென்று சேரும்படியும், அனைவருக்கும் மோக்ஷத்திற்கு அதிகாரம் உண்டு, அனைவரும்  எம்பெருமானுக்கு நித்யமாக கைங்கரியம் செய்யலாம் போன்ற உயர்ந்த விஷயங்களை எல்லாம் மிக எளிய முறையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க எம்பெருமானார் முயற்சி மேற்கொண்டார். அனைவரும் ஆத்மாவின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வைக்க எம்பெருமான் எடுத்த முயற்சியால்தான் ஆழ்வார்கள்/ஆசாரியர்கள் மற்றும் சம்பிரதாயம் என்ற ஒரு கட்டுக் கோப்பு எல்லாம் ஏற்பட்டது.  இவையெல்லாம் க்ரமப்படி  நடந்ததனால் நாமும் இன்றைக்கும்  இந்த சம்பிரதாயத்தை ஒரு தொடர்புடன் இருந்து அனுபவித்து வருகிறோம்,  இது விஷய வைலக்ஷண்யம் ஆகும்.

இனி, ஒவ்வொரு வாழிதிருநாமத்தின் அர்த்தத்தை மேல் வரும் கட்டுரைகளில் அனுபவிக்கலாம்.

இந்தக் கட்டுரைத் தொடர், முன்பே இத்தலைப்பில் அடியேன் செய்த உபந்யாஸத் தொடரிலிருந்து ஸ்ரீமதி கௌஸல்யா துரையால் ஏடுபடுத்தப்பட்டு, அடியேனால் முறைப்படுத்தப்பட்டு கட்டுரைகள் வடிவில் அளிக்கப்படுகின்றன.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment