வாழிதிருநாமங்கள் – நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< திருமழிசை ஆழ்வார்

நம்மாழ்வார் வைபவம்

நம்மாழ்வார் அவதார ஸ்தலம் ஆழ்வார் திருநகரி.  ஆழ்வார்திருநகரியில் அப்பன் கோயில் என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் நம்மாழ்வாரின் திருவவதாரம் ஏற்பட்டது. இன்றளவும் திருவேங்கடமுடையானுக்கு அங்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால் இவ்விடம் அப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அப்பன் என்பது  திருவேங்கடமுடையானைக் குறிக்கும். அங்கே ஒரு அறையில் ஆழ்வார் அவதரித்த இடம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.   அக்கோயிலில் உள்ள ஒரு திண்ணை தான் ஆழ்வார் அவதரித்த இடம் என்று வழங்கப்படுகிறது.  நம்மாழ்வாருடைய திருநட்சத்திரம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரம்.   இவர் நான்கு வேதங்களுக்கு சமமான நான்கு ப்ரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். திருவிருத்தம், திருவாசிரியம் பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி, ரிக் வேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம், ஸாம வேதம் என்று முறையே அறியலாம்.  வேதங்களுக்குச் சமமாக இந்தப் ப்ரபந்தங்கள் அழைக்கப்பட காரணம். நான்கு வேதங்களில் காட்டப்பட்ட அர்த்தங்கள் / சாராம்சம் சுருக்கமாக இந்த ப்ரபந்தங்களில் காட்டப்பட்டுள்ளது.

இவர் க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டவர். ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தலைவர் என்று கொண்டாடப்படுகிறார் ப்ரபந்நஜன கூடஸ்தர் என்று கொண்டாடப்படுகிறார். மாறன், சடகோபன் என்று பல திருநாமங்களைப் பெற்றவர்.   நம்முடைய ஆழ்வார் என்பதைக் குறிக்கும் வகையில் நம்பெருமாளால் நம்மாழ்வார் என்று அபிமானிக்கப்பட்டவர்.  ஆழ்வார்களுக்குத் தலைவராக இருக்கக் கூடியவர். அதாவது நம்மாழ்வார் அவயவி என்றும் ஏனைய ஆழ்வார்கள் அவருடைய அவயவங்கள் என்றும் கொண்டாடப்படுகிறார்.

நம்மாழ்வார் வாழி திருநாமம்

 ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்து ஒரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

நம்மாழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே – திருவிருத்தம் நூறு பாசுரங்களைக் கொண்டது. அதை அருளிச் செய்தவர் நம்மாழ்வார்.  அவர் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.  “ஆன” என்பது “மிகவும்  சிறந்ததான” என்பதைக் குறிக்கும். “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும், இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே ஆழ்வார் தம்மால் இந்த சம்சாரத்தில் தரித்திருக்க இயலவில்லை என்று தனக்கு மயர்வற மதிநலம் எம்பெருமான் அருளினான் என்பதை நன்றாக வெளிப்படுத்திய பாசுரமாக இது அமைந்தது. மிகவும் சிறந்ததாகவும் எம்பெருமானுடைய பெருமைக்கு தகுதியானதாகவும் திருவிருத்தம் அமைந்தது என்றும் கூறுவார்கள்.  திருவிருத்தம் மிகவும் கடினமான ப்ரபந்தம்.  ஒவ்வொரு பாசுரத்திலும் உட்கருத்துகள் (ஸ்வாபதேசம்) அமைந்திருக்கும்.  அப்படிப்பட்ட ப்ரபந்தத்தை அருளிய நம்மாழ்வார் வாழ்க.

ஆசிரியம் ஏழு பாட்டு அளித்த பிரான் வாழியே – ஏழு பாசுரங்கள் கொண்ட திருவாசிரியம் என்கிற ப்ரபந்தத்தில் எம்பெருமானின் திருமேனி வர்ணனை சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கும். எம்பெருமானுடைய பெருமை,  பெற்ற தாயான எம்பெருமான் இருக்க மற்றவர்களை தேடிப்போய் வணங்குவது நமக்கு உகந்தது அல்ல ஆகிய விஷயங்களை விளக்கிக் காட்டக் கூடிய பாசுரங்கள் கொண்டது திருவாசிரியம் என்ற ப்ரபந்தம்.   அதை நமக்குக் கொடுத்த பிரானாகிய நம்மாழ்வார் வாழ்க பல்லாண்டு வாழ்க.

ஈனமற அந்தாதி எண்பத்தேழு ஈந்தான் வாழியே – எண்பத்தி ஏழு பாசுரங்கள் கொண்டது பெரிய திருவந்தாதி என்னும் ப்ரபந்தம்.  அதை நமக்கு கொடுத்தவர் நம்மாழ்வார்.  ‘ஈனம்’ என்றால் ‘தாழ்ச்சி’ என்று பொருள்.  நம்முடைய தாழ்ச்சி நீங்க எண்பத்தி ஏழு பாசுரங்கள் கொண்ட பெரிய திருவந்தாதி அளித்த வள்ளலான நம்மாழ்வார். வாழ்க.  முன்பே அந்தாதி க்ரமத்தில் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி மற்றும் நான்முகன் திருவந்தாதி இருந்த போதிலும் இந்த ப்ரப்ந்தத்திற்கு எப்படிப்  பெரிய திருவந்தாதி என்று திருநாமம் வந்தது? மேலும் இந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களுக்கும் குறைவாக 87 பாசுரங்கள் தான் உள்ளன என்னும்போது இதற்கு ஏன்  பெரிய திருவந்தாதி என்ற பெயர் வழங்கப்பட்டது என்றால் நம்மாழ்வார் இந்த ப்ரபந்தத்தில் பல முக்கியமான சம்பிரதாய அர்த்தங்களை காட்டியுள்ளார்.  அதற்கும் மேலாக  ‘யான் பெரியன் நீ பெரியை’  என்று 75வது பாசுரத்தில் எம்பெருமானைப்  பார்த்துக் கேட்கிறார்.   நீ என்னுடைய காது வழியாக வந்து என் நெஞ்சில் உள்ளே புகுந்து இருக்கிறாய். உன்னை எல்லாரும் பெரியவன் / ஸர்வேச்வரன், உலகத்திலேயே உன்னை விட உயர்ந்தவனும் சமமானவனும் யாரும் கிடையாது என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட நீ என்னுடைய நெஞ்சுள் குடி கொண்டு  இருக்கிறாயே அப்படியானால் உன்னை விட நான் பெரியவன் தானே என்று ஆழ்வார் மிகவும் அனுபவித்து பாடிய பாசுரம்.  அதனாலும் இந்த ப்ரபந்தத்திற்கு “பெரிய திருவந்தாதி” என்று வழங்கப்பட்டது எனலாம்.  மேலும் நம்மாழ்வாருக்கு ஆழ்வார் திருநகரியில் “பெரியன்” என்று ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.  அருளப்பாடு காலத்தில் “நம் பெரியன்” என்று நம்மாழ்வாரைக் கொண்டாடுவார்கள்,  அவ்வாறு நம் தாழ்ச்சி நீங்குமாறு பெரிய திருவந்தாதி அளித்த ஆழ்வார் வாழ்க.

இலகு திருவாய்மொழி ஆயிரத்து ஒரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே – 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழி என்கிற அற்புத ப்ரபந்தத்தை அருளிச் செய்தவர் நம்மாழ்வார். இந்த ப்ரபந்தம் தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் முக்கியமான ப்ரபந்தம். இந்த ப்ரபந்தத்திற்குத்தான் நம்பிள்ளை “பகவத் விஷயம்” என்ற மிகச் சிறந்த ஈடு முப்பத்தாறாயிரப் படி வ்யாக்யானம் அருளியுள்ளார். அப்படிப்பட்ட மேன்மையைப் பெற்ற  திருவாய்மொழியை நமக்குக் கொடுத்தவர் நம்மாழ்வார்.  “இலகு” என்றால் எளிது என்று அர்த்தம்.  ஆயிரத்து நூற்றிரண்டு பாசுரங்கள் எளிதானவையா என்றால் நம்மால் வேதத்தைக் கற்றுக்காெண்டு அதில் காட்டப்பட்டிருக்கும் சாரத்தை கற்றுக் கொள்வது எளிதான விஷயம் அன்று.   1000 சாகைகள் கொண்ட சாம வேதமாகக் கருதப்படும் திருவாய்மொழியில்  வேதத்தின் ஆழமான அர்த்தங்களையும் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்.  பல அனுபவங்களை ஆழ்வார் இந்த ப்ரபந்தத்தில் காட்டியுள்ளார்.  தாய் பாசுரம், மகள் பாசுரம், தோழி பாசுரம், தானான தன்மையில் பாசுரங்கள், தூது விடுதல், மடல் எடுத்தல் இப்படிப்  பலவிதமான அனுபவங்கள் இந்தத் திருவாய்மொழியில் நிறைந்துள்ளன.  சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் முழுவதுமே காட்டப்பட்டுள்ளது. எம்பெருமானுடைய பரத்வம் எப்படிப்பட்டது,  நம்முடைய ஆத்ம ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வண்ணம் கீழ்க்கண்ட தனியன் அருளப்பட்டுள்ளது.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழின் இசை வேதத்தியல்

என்று அர்த்த பஞ்சக அர்த்தத்தையும் விளக்கும் வண்ணம் அமைந்த ப்ரபந்தமாக திருவாய்மொழி கருதப்படுகிறது.  “மிக்க இறைநிலை” என்பது “பரமாத்ம” ஸ்வரூபத்தையும் “மெய்யாம் உயிர்நிலை” என்பது “ஜீவாத்ம” ஸ்வரூபத்தையும் விளக்குவதாகும்.  “தக்க நெறி” என்பது “உபாய ஸ்வரூபம்”,  அதாவது எம்பெருமானை அடையக் கூடிய வழி எது,  அந்த வழியை அடைய விடாமல் நம்மைத் தடுப்பது எது என்றால் (ஊழ்வினை) நம்முடைய கர்மங்கள் தான் நம்மை எம்பெருமானை அடையவிடாமல் தடுத்துக்  கொண்டிருக்கின்றன.   அதற்கும் மேலாக எம்பெருமானை அடைந்து கைங்கர்யம் என்ற வாழ்ச்சியை நாம் பெற வேண்டும் என்று அர்த்த பஞ்சகம் என்ற ப்ரபந்தத்தை மிகவும் ஸ்பஷ்டமாக ஆழ்வார் எளிதில் புரியும் வண்ணம் இந்தத் திருவாய்மொழியில் நமக்குக் காட்டியுள்ளார்.   அப்படிப்பட்ட திருவாய்மொழி அருளியவர் என்று பெருமையைக் கொண்ட நம்மாழ்வார் வாழ்க என்று இந்த வரியில் விளக்கப்படுகிறது.

வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே –  நம்மாழ்வார் அவதாரத்திற்குப் பிறகு தான் திருக்குருகூர் எனப்படும் திவ்யதேசம் “ஆழ்வார் திருநகரி” என்று வழங்கப்பட்டது. நம்மாழ்வார் பாெலிந்து நின்ற பிரான் என்று திருநாமம் கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ப்ரசித்தி பெற்ற திவ்யதேசமான திருக்குருகூரில் தான் அர்ச்சாவதார மகிமையை அநுபவித்தார். ஆதிப்பிரான் பெருமாள் தான் பரதெய்வம் என்பதை

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதீரே

என்ற பாசுரத்தின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.  இவ்வளவு பெரிய பெருமான் நமக்காக இங்கே நின்று கொண்டிருக்கிறான். எல்லா தேவதைகளும், தேவர்களும், இந்த உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களும், அசேதனப் பொருட்களும் ப்ரளய காலத்தில் இந்த ஆதிப்பிரான் பெருமானிடம் வந்து ஒன்றுகின்றன. மீண்டும் ச்ருஷ்டி காலத்தில் தன்னை வந்து அடைந்த அனைத்து பொருட்களையும் வெளியே விடுகிறான். அப்படிப்பட்ட அந்த எம்பெருமான் இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள அழகை அநுபவிக்காமல் மற்ற தேவதைகளை வணங்குகிறீர்களே என்று மானிடர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு அர்ச்சாவதார எம்பெருமானை ஆழ்வார் இந்தத் திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி என்று தற்போதைய பெயர்) திவ்யதேசத்தில் அநுபவிக்கிறார்.  மேலும் நம்பிள்ளை மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் தமது வ்யாக்யானத்தில் “திருக்குருகூர்” என்ற பெயரைக் கேட்டவுடன் கை கூப்பி வணங்க வேண்டும் என்று திருக்குருகூரின் மேன்மையை விவரிக்கின்றனர்.  இந்த வழக்கம் இன்றளவும் கோஷ்டியில் பாசுரங்கள் ஸேவிக்கும்போது “குருகூர்ச் சடகோபன்” என்னும்போது அனைவரும் கை கூப்பும் வழக்கம் உள்ளது. மேலும் வ்யாக்யானங்களில் இது ஒரு விதியாகவே காட்டப்பட்டுள்ளது.  விசாலமான மாடங்களைக் கொண்ட திருக்குருகூருக்கு மன்னராகக் கருதப்படும் நம்மாழ்வார் வாழ்க.

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே – வைகாசி விசாகம் ஆழ்வாருடைய திருநட்சத்திர தினம்.   “உண்டோ வைகாசி விசாகத்திற்கு ஒப்பொரு நாள்” என்று உபதேசரத்தினமாலையில் மணவாள மாமுனிகள் காட்டக்கூடிய அளவிற்கு ஆழ்வார் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திரம் பிரசித்தமானது.  ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தை ஒட்டி பத்து நாட்கள் மிகவும் விமர்சையான முறையில் உற்சவம் கொண்டாடப்படும். வைகாசி விசாகம் அன்று ஆழ்வாரை  ஒரு திருமஞ்சன பலகையை  தாமிரபரணி நதியில் இட்டு நதியிலேயே ஆழ்வாருக்கு திருமஞ்சனம் நடக்கும்.  ஈடில்லாத அந்த தீர்த்தவாரி உற்சவம் வேறு எங்கும் நாம் காண முடியாது.  அப்படிப்பட்ட சிறப்பான வைகாசி விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர்.  இது போன்று ஆழ்வாரின்  ப்ரதிஷ்டை தினமான மாசி விசாகத்தன்றும்  தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடக்கும்.  தாமிரபரணி நதியைக் காய்ச்சி மதுரகவி ஆழ்வார் மாசி விசாகத்தன்று தான் நம்மாழ்வார் திருமேனியைக் கண்டு எடுத்தார்.  வைகாசி விசாகத்தில் அவதரித்த நம்மாழ்வார் வாழ்க.

சேனையர்கோன் அவதாரஞ் செய்த வள்ளல் வாழியே – “சேனை முதலியார்” என்று அழைக்கப்படும் விஷ்வக்ஸேனரின் அம்சமாகவே நம்மாழ்வார் கொண்டாடப்படுகிறார். எம்பெருமான் சம்சாரத்தில் இருக்கும் சேதநர்களைத் தேர்ந்தெடுத்து ஆழ்வார்களாக உருவாக்கினான் என்பது நாம் அறிந்ததே.  ஆனாலும் சில சமயங்களில் ஆழ்வாரைத் திருக்குறுங்குடி நம்பி அவதாரம் என்றும் சொல்லுவார்கள் ஒரு சமயம் விஷ்வக்ஸேனரின் அவதாரம் என்றும் கூறவார்கள். இவற்றை ஆழ்வாரின் வைபவத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  மேலும் எம்பெருமான் இவ்வுலகில் உள்ள ஒரு ஆத்மாவை தேர்ந்தெடுத்து விஷ்வக்ஸேனரின் அம்சத்தை அந்த ஆத்மாவில் புகுத்தி ஆழ்வாராக அவதரிக்கச் செய்தான் என்றும் பெரியவர்கள் விளக்குவார்கள்.  ஈடு இணையற்ற வேதத்தின் சாரமான பாசுரங்களை அருளிச் செய்தமையால் ஆழ்வாரை வள்ளல் என்று குறிப்பிடலாம்.  தாம் அருளிச் செய்த பாசுரங்கள் மட்டுமன்றி மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு வள்ளல் தன்மையுடன் அருளியவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் அருளிச் செய்த ஆயிரம் பாசுரங்களை வேண்டி நாதமுனிகள் ஆழ்வார் திருநகரில் உள்ள திருப்புளி ஆழ்வாரின் அடியில் அமர்ந்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரத்தை அநுஸந்திக்க, நம்மாழ்வார் அவர் முன் தாேன்றி தான் அருளிச் செய்த 1102 பாசுரங்கள் மட்டுமன்றி மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களையும் தொகுத்து 4000 பாசுரங்களை வழங்கினார்.  ஏனைய ஆழ்வார்கள் நம்மாழ்வாரின் அவயவங்களாக கருதப்பட்டமையாலும் நம்மாழ்வார் த்ரிகால ஞானியானபடியாலும் 4000 பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே தான் கொடுக்கிறார்.  அப்படித்தான் திவ்யப்ரபந்தங்கள் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது.  பாசுரங்கள் மட்டுமன்றி அவற்றிற்கான அர்த்தங்களையும் நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் அருளினார்.  அவற்றோடு நில்லாமலல் நாம் அனைவரும் எம்பெருமானை அடைவதற்கு வழி காட்டும் விதமாக ஸ்ரீசடாரியாக இருந்து அநுக்ரஹம் செய்கிறார்.  எம்பெருமானுடைய பார்வை ஸ்பர்சம் நம் மீது படும்படியாக தானே ஸ்ரீசடாரியாக இருந்து அநுக்ரஹிக்கிறார்.  அப்படிப்பட்ட வள்ளல் தன்மை கொண்ட நம்மாழ்வார் வாழ்க.

திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே – திருக்குருகூர்ச் சடகோபன் என்று சொல்லக்கூடிய நம்மாழ்வாருடைய திருவடிகள் நன்றாக வாழவேண்டும்.  அவர் அவதரித்த காலத்தில் எம்பெருமான் மயர்வற மதிநலம் அருளியதால் “சடம்” என்ற வாயுவை கோபித்துக் கொண்டவர்.  அதனால் சடகோபன் என்று வழங்கப்பட்டார்.   ஒரு ஆத்மா கர்ப்பத்தில் இருக்கும் பொழுது மிகுந்த துன்பம் அடையும். அந்த ஆத்மா கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்த உடனே நமக்கு எப்படியாவது எம்பெருமான் மோக்ஷத்தை கொடுக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கும். ஆனால் அந்த ஆத்மா பூமியில் வரும் காலத்தில் “சடம்” என்கிற வாயு ஆத்ம ஞானத்தை மறைத்துவிடும். அவ்வாறு ஞானத்தை மறைத்துவிடுவதால் அஞ்ஞானம் தலையெடுத்து அந்த ஆத்மா பிறவி எடுத்து இந்த சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும். ஆனால் நம்மாழ்வார் பிறந்த போது அந்த சடம் என்ற வாயு அணுகிய போது அதை உதைத்து விரட்டி விட்டார்.  அதனால்தான் அவருக்கு சடகோபர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட திருக்குருகைச் சடகோபன் வாழியே.

திருக்குருகூரின் பெருமை

திருக்குருகூர் நம்மாழ்வார் அவதரித்த ஸ்தலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதற்கு அப்பால் மற்றும் ஓர் பெருமையும் உண்டு.   எம்பெருமானாருடைய பவிஷ்யதாசார்ய  விக்ரஹமும் (திருமேனியும்) இந்த ஆழ்வார் திருநகரியில் தான் கிடைக்கப் பெற்றது.  மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீரைக் காய்ச்சும்பொழுது முதலில் கிடைத்த திருமேனி பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்) விக்ரஹம் கை கூப்பிய வண்ணம் கிடைத்தது.  மதுரகவி ஆழ்வார் ஆச்சர்யத்துடன் நம்மாழ்வாரிடம் நான் உமது விக்ரஹம் வேண்டினேன் ஆனால் கிடைத்திருப்பதோ கை கூப்பியபடி வேறு ஒரு விக்ரஹம் என வினவ, நம்மாழ்வார் இவர் என்னுடைய திருவடி ஸ்தானம் ஆனவர்.  பிற்காலத்தில், ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆசார்யர் தோன்றி வைணவ சம்பிரதாயத்தை சிறந்த முறையில் வளர்ப்பார் என்று உரைக்கிறார்.  மதுரகவி ஆழ்வார் உம்முடைய விக்ரஹம் வேண்டும் என வினவ, நம்மாழ்வார் மீண்டும் தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் என்று அருள, அதன்படி கிடைக்கப் பெற்ற விக்ரஹம் தான் நாம் இப்போது ஆழ்வார் திருநகரியில் தரிசிக்கும் நம்மாழ்வார் திருமேனி ஆகும்.  பவிஷ்யதாசார்யர் சந்நிதி இன்றளவும் ஆதிநாதப்பிரான் கோயிலின் மேற்குப்புறம் அமைந்துள்ளது. நம்மாழ்வார் விக்ரஹத்திற்கு முன்பு மதுரகவி ஆழ்வாருக்குக் கிடைக்கப் பெற்ற ஸ்ரீராமாநுஜர் (பவிஷ்யதாசார்யர்) விக்ரஹம் இங்கு வணங்கப்படுகிறது.

மேலும் மணவாள மாமுனிகளின் அவதார ஸ்தலமும் இந்தத் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரிதான்.  அவர் சிறிது காலம் தனது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்தில் இருந்தார்.  திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவத்தைக் கேள்விப்பட்டு மீண்டும் ஆழ்வார் திருநகரி வந்து அவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டு சம்பிதாய அர்த்தங்களை தெரிந்து கொண்டார்.  திருவாய்மொழிப்பிள்ளைக் காலத்தில் தான் பவிஷ்யதாசார்யர் சந்நிதி உருவானது.  திருவாய்மொழிப்பிள்ளை தான் சதுர்வேதி மங்கலத்தை ஏற்பாடு செய்து பலரையும் அங்கு குடி வைத்து சந்நிதி கைங்கர்யங்கள் குறைவின்றி நடக்குமாறு ஏற்பாடு செய்தவர். அவருடைய நியமனத்தின் பேரில் ஸ்ரீராமாநுஜரின் புனர் அவதாரமான மணவாள மாமுனிகள் பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்திற்கு திருவாராதனம் செய்துள்ளார்.  திருவாய்மொழிப் பிள்ளை காலத்திற்குப் பிறகு மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியை விட்டு ஸ்ரீரங்கத்திற்கு வருகிறார்.  அதன் பின் சந்யாச ஆச்ரமத்தை பெற்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற இயற்பெயர் நீங்கப் பெற்று மணவாள மாமுனிகள் என்ற திருநாமத்தைப் பெறுகிறார்.  ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானார் அவதரிப்பதற்கு முன்பே பவிஷ்யதாசார்யர் விக்ரஹம் கிடைக்கப் பெற்றமையால் ஆழ்வார் (நம்மாழ்வார்), எம்பெருமானார் (ஸ்ரீராமாநுஜர்) ஜீயர் (மணவாள மாமுனிகள்) ஆகிய மூவருடைய அவதார ஸ்தலமாக சிறப்பைப் பெற்றது ஆழ்வார் திருநகரி திவ்யதேசம்.

மதுரகவியாழ்வார் வைபவம்

ஆழ்வார் திருநகரி அருகில் இருக்கக்கூடிய “திருக்கோளூர்” என்ற ஸ்தலத்தில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார்.  இவர் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருடைய ப்ரபந்தம் “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற பதினொன்று பாசுரங்கள் அடங்கிய வியக்கத்தக்க ப்ரபந்தம். நம்மாழ்வார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  ஆசார்ய பக்தி என்பதை நம்மாழ்வார் மீது வைத்திருந்த அளவு கடந்த பக்தியின் மூலம்  இவ்வுலகிற்கு உணர்த்தியவர்.

மதுரகவியாழ்வார் வாழி திருநாமம்

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே – சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார்.  சித்திரை நட்சத்திரத்திற்கே ஏற்றம் அளிக்கும் வகையில் அவதரித்தவர்.  அவர்  வாழ்க.

திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே – வைத்தமாநிதி பெருமாள் எழுந்தருளியிருக்கக் கூடிய திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். அவரை செல்வனார் என்று சொல்கிறார்கள். கைங்கர்யச் செல்வத்தை, ஆசார்ய பக்தி என்கிற செல்வத்தை உடையவர் என்று நாம் அறியலாம்.  அவர் பல்லாண்டு வாழ்க.

உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே – மதுரகவி ஆழ்வார் வட தேசத்தில் பல காலம் வாழ்ந்து வந்தவர்.  அங்கே கங்கைக் கரையில் தவம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். அப்படிப்பட்ட மதுரகவி ஆழ்வார் வாழ்க.

ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே – அவ்வாறு வட தேசத்தில் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து வரும் பொழுது தெற்கிலிருந்து வந்த ஒரு பெரிய ஒளியினால் ஈர்க்கப்பட்டு அந்த ஒளியை நோக்கி தெற்குப்பகுதிக்கு உகப்புடன் ப்ரயாணம் மேற்கொள்கிறார்.  அந்த ஒளியானது ஆழ்வார் திருநகரி திவ்ய தேசத்தில் ஒரு புளிய மரத்தடியிலிருந்து அமர்ந்து யோகத்திலிருந்த நம்மாழ்வாரிடமிருந்து வருவதைப் பார்த்தார்.  அவர் நம்மாழ்வாரிடம்  ஒரு கேள்வி கேட்கிறார்.  “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்க, அதற்கு நம்மாழ்வார் “அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்” என்று பதில் சொல்கிறார். ஆத்மாவானது ஒரு உடம்புக்குள்ளே வந்து புகுந்தது  என்றால் எதை அனுபவித்துக் கொண்டு  எங்கே இருக்கும் என்று கேட்க அதற்கு நம்மாழ்வார் அந்த உடம்பில் ஏற்படும் அனுபவங்களை அனுபவித்துக் கொண்டு அந்த உடம்பையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மிகவும் பூரிப்படைந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் சிறந்த ஞானி என்பதை அறிந்து அவரிடம் மிகவும் ஈடுபட்டு அவருக்கு சிஷ்யராக அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்து வந்தார்.  அதைக் குறிக்கும் வகையில் தான் தெற்கு திசையில் கண்ட நம்மாழ்வார் என்னும் ஒளியினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கைங்கர்யம் செய்து வாழ்ந்த மதுரகவி ஆழ்வார் வாழ்க என்று உள்ளது.

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே – மிகுந்த பக்தியுடன் 11 பாசுரங்கள் கொண்ட கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற ப்ரபந்தத்தை அருளிச் செய்தவர் மதுரகவி ஆழ்வார்.  ஏனைய திவ்யதேசங்களில் திருப்பல்லாண்டு தொடக்கமாக பாசுரங்கள் அநுஸந்திக்கப்பட்டாலும், ஆழ்வார் திருநகரியில் மட்டும் கண்ணிநுண் சிறுத்தாம்பு தொடக்கமாகத்தான் பாசுரங்கள் அநுஸந்திக்கப்படும்.  கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தம் மூலமாக நாம் ஆசார்யனுக்கு அடிபணிந்திருக்க வேண்டிய அவசியத்தை மதுரகவி ஆழ்வார் வலியுறுத்தியுள்ளார்.  எம்பெருமானை அடைவதற்கான வழியே ஆசார்ய பக்திதான் என்பதை நம் முன்னோர்கள் காட்டியுள்ளனர்.  அவ்வாறு தன்னுடைய ஆசார்யரான நம்மாழ்வாரின் மீது கொண்ட பக்தியினால் அவரைப் பற்றி மட்டுமே பதினோரு பாசுரங்களைப் பாடிய மதுரகவி ஆழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே – நம்மாழ்வாரின் வேறு திருநாமங்கள் தான் சடகோபன், பராங்குசன் என்பது.  பராங்குசன் என்றால் எம்பெருமானையே அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தியவர் ஆழ்வார் என்று ஒரு அர்த்தம்.  மேலும் மற்ற மதத்தவர்களை அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி நெறிப்படுத்தியவர் என்றும் கொள்ளலாம்.  அப்படிப்பட்ட பராங்குசனான நம்மாழ்வாரே எனக்கு பர தெய்வம் அதாவது  எனக்கு நம்மாழ்வார் தான் தெய்வம் என்று அவருடைய திருவடியைப் பற்றி வாழ்ந்தவர் மதுரகவி ஆழ்வார்.  அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே –  மத்திம பொருள் என்றால் அஷ்டாக்ஷர மந்திரம் (ஓம் நம: நாராயணாய) – அதாவது ப்ரணவம், நமஸ்ஸு நாராணாய என்ற  மூன்றும் சேர்ந்தது அஷ்டாக்ஷர மந்திரம் – இதில் மத்திய பதம் என்பது நடுவில் இருக்கக்கூடிய நமஸ்ஸு என்ற சொல். அந்த நமஸ்ஸு என்ற சொல்லின் அர்த்தத்தை நமக்குப் புரியும்படி நன்றாக வாழ்ந்து காட்டியவர் மதுரகவியாழ்வார்.   நமஸ்ஸு என்றால் நான் எனக்காக இல்லை என்பது அர்த்தம்.  ம: என்றால் எனக்காக நம: என்றால் எனக்காக இல்லை என்று அர்த்தம். நான் என்பது எனக்காகவும் அல்ல பிறருக்காகவும் அல்ல.  எம்பெருமானுக்காக என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.  எம்பெருமானுக்காக என்பது அவனுடைய அடியார்கள் வரையில் நமது அடிமைத்தனமாவது இருக்க வேண்டும்.  அதுவே உயர்ந்த நிலை.  அடிமைத்தனம் இரண்டு வகைப்படும்.  ப்ரதம பர்வம், சரம பர்வம் என்பர்கள். ப்ரதம் பர்வம் என்றால் எம்பெருமானுக்கு அடிமையாக இருப்பது.  சரம பர்வம் என்றால் எம்பெருமானுடைய அடியவர்களுக்கு அடியவனாக இருப்பது. அந்த நிலையில் நம்மாழ்வாருக்கு அடிமையாக வாழ்ந்து காட்டியவர். அஷ்டாக்ஷரத்தின் நடுப்பதம்  நமக்கு இன்றைக்கு நன்றாக புரிகிறது என்றால் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடத்து கொண்ட ஈடுபாடு என்பதன் மூலம் அறியலாம்.  அப்படிப்பட்ட மதுரகவி ஆழ்வார் வாழ்க.

மதுரகவி திருவடிகள் வாழி வாழி வாழியே –  மதுரகவி திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்று இந்த வாழி திருநாமம் நிறைவடைகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “வாழிதிருநாமங்கள் – நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் – எளிய விளக்கவுரை”

Leave a Comment