வாழிதிருநாமங்கள் – நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார்

ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்

நாதமுனிகளின் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதமுனி.  பிற்காலத்தில் இப்பெயரே நாதமுனிகள் என்று வழங்கப்பட்டது. இவரது அவதார ஸ்தலம் காட்டு மன்னார் கோயிலில் என்கிற வீரநாராயணபுரம் ஆகும். இவரது திருநக்ஷத்ரம் ஆனி மாதம் அனுஷம் ஆகும்.  நியாய தத்துவம், யோக ரகஸ்யம், புருஷ நிர்ணயம் போன்ற க்ரந்தங்களை இவர் அருளிச் செய்துள்ளார்.  ஆனால் இவரது க்ரந்தங்கள் கிடைக்கப் பெறுவதில்லை.  யோக சாஸ்திரத்திலும் இசையிலும் மிகப் பெரிய வல்லுநராக இருந்துள்ளார் என்பதை அறிகிறோம்.  குழுவாக அமர்ந்து பல பேர் தாளம் போடும்போது யாரிடம் இருந்து எத்தனை முறை தாளம் வந்தது என்பதை துல்லியமாகக் காட்டியவர் இவர்.

நாம் ஏற்கனவே அறிந்தபடி நாலாயிர திவ்யப்ரபந்தங்களும் இவர் மூலமாகத் தான் நமக்குக் கிடைக்கப் பெற்றது.  இவர் வசித்த காட்டுமன்னார் கோயிலில் மேல் நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் திருக்குடந்தை ஆராவமுதன் பெருமான் பற்றிய பாசுரங்களை ஸேவிக்கிறார்கள்.  அவற்றை செவியுற்ற நாதமுனிகள், அவர்களிடமிருந்து அந்தப் பாசுரங்களைப் பெற்று அந்தப் பதிகத்தின் இறுதிப் பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன்” என்ற வார்த்தையையும் “ஆயிரத்துள் இப்பத்தும்” என்ற சொல்லையும் கொண்டு நம்மாழ்வாரைத் தேடி ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார்.  அங்கு இருந்தவர்களிடம் இந்தப் பாசுரங்களைப் பற்றி விசாரிக்க, அங்கு இருந்த மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தவர்கள் “நாங்கள் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்கள் தான் அறிவோம்” என்றனர். மேலும் அவர்கள் “எவர் ஒருவர் நம்மாழ்வார் வாஸம் செய்த திருப்புளியாழ்வாரின் அடியில் தியானத்தில் அமர்ந்து இந்தக் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை பன்னீராயிரம் முறை ஸேவிக்கிறார்களோ அவருக்கு நம்மாழ்வார் ப்ரத்யக்ஷமாக ஸேவை சாதிப்பார் என்பதை அறிவோம்” என்றனர்.    நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் வல்லவராதலால் திருப்புளியாழ்வார் மரத்தினடியில் அமர்ந்து பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை அநுஷ்டிக்க நம்மாழ்வார் அவர் முன் தோன்றி “என்ன வேண்டும்” என்று வினவ, அதற்கு நாதமுனிகள் “தேவரீர் இயற்றிய ஆயிரம் பாசுரங்களைத் தந்தருள வேண்டும்” என்றார்.  நம்மாழ்வார் தாம் இயற்றிய அனைத்து ப்ரபந்தங்கள் (முறையே திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி) மட்டுமன்றி ஏனைய ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களையும் சேர்த்து நாலாயிர திவ்ய ப்ரபந்தமாக ஆசார்யனாக இருந்து  நாதமுனிகளுக்குக் கொடுத்து அருளினார்.  மேலும் இந்த நாலாயிர ப்ரபந்தங்களுக்குமான விளக்கவுரையையும் நாதமுனிகளிடம் அளித்தார்.  இவ்வாறு நாதமுனிகள் நம்மாழ்வாருக்கு சிஷ்யனானார் என்பதை அறிகிறோம்.

இவர் கலியுகம் தோன்றி ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கப் பின் அவதரித்தவர்.  எவ்வாறு துவாபர யுகம் வரை ஒரே வேதமாக இருந்ததை வேத வ்யாஸர் நான்கு பிரிவுகளாகப் பிரித்தாரோ அதைப் போன்று நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற ப்ரபந்தங்களை நான்கு ஆயிரமாகப் பிரித்து நமக்கு அளித்தவர் நாதமுனிகள்.  கலியுகத்தில் ஞானமும், சக்தியும் குறைந்த மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ் வேதமான நாலாயிரம் பாசுரங்களைக் கொண்ட ப்ரபந்தங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார்.  மேலும் இவர் இசையில் வல்லவராதலால் இயற்பாவைத் தவிர மற்ற ப்ரபந்தங்களை தம்முடைய மருமக்களான கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் ஆகியோருக்கு இசையுடன் கற்றுக் கொடுத்து இந்தப் ப்ரபந்தங்கள் பரவும்படி செய்தவர்.   இன்றைக்கும், திருவரங்கம், திருநாராயணபுரம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவத்தின்போது  நடக்கும் அரையர் சேவையை முதன் முறையாகத்  துவக்கி வைத்தவர் நாதமுனிகள்.    திருவரங்கத்திலும் இவர் பல கைங்கர்யங்களைச் செய்திருக்கிறார். திருமங்கையாழ்வார் காலத்தில் நடத்தப்பட்ட அத்யயன உற்சவத்தை மீண்டும் திருவரங்கத்தில் நடக்கும்படி செய்தவர்.

நாதமுனிகள் வாழி திருநாமம்

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

நாதமுனிகள் வாழி திருநாமம் விளக்கவுரை

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே –  ஆனி மாதம் அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் நாதமுனிகள்.  அவர் பல்லாண்டு வாழ்க.

ஆளவந்தார்க்கு உபதேசமருளிவைத்தான் வாழியே – நாதமுனிகளின் திருப்பேரனார் தான் யாமுனாசார்யர் என்று சொல்லக்கூடிய ஆளவந்தார்.    ஆளவந்தார் பிற்காலத்தில் பெரிய ஆசார்யராக உருவாகி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை நன்றாக வளர்ப்பார் என்று முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார் நாதமுனிகள்.  உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள் மூலமாக ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து சிறந்த ஆசார்யராக உருவாகும்படி பணித்தார்.

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே – பானு என்றால் சூரியன்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பானு என்ற சொல் எம்பெருமானைக் குறிக்கும்.  சேதநர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து சம்சாரம் என்னும் இருளை அகற்றுவதால் எம்பெருமான் சூரியனாகக் கருதப்படுகிறார்.    நம்மாழ்வாரும் வகுள பூஷண பாஸ்கரன் என்று கொண்டாடப்படுகிறார்.  வகுள மாலையை அணிந்து இப்பூவுலகத்தினருக்கு அஞ்ஞானம் என்ற இருளை நீக்கி ஞானத்தை அளித்தவர் நம்மாழ்வார். அந்த நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் திருப்புளி ஆழ்வார் கீழே அமர்ந்திருந்தார்.  வட திசையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் ஒளியால் ஈர்க்கப்பட்டு தென்திசை நோக்கி பயணித்து ஆழ்வார் திருநகரியை வந்து நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒன்று எண்ணாதவராய் அவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தார்.  அவ்வாறு தெற்கில் சூரியனான நம்மாழ்வாரைக் கண்டு வந்த மதுரகவி ஆழ்வாரின் ப்ரபந்தமான கண்ணிநுண் சிறுத்தாம்பை 12000 முறை  ஸேவித்தவர் நாதமுனிகள் என்னும் பொருள் இவ்வரியில் காட்டப்படுகிறது.  மேலும் நாதமுனிகள் திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் நின்று போயிருந்த அத்யயன உற்சவத்தையும், நம்மாழ்வார் பரமபதம் செல்லும் உற்சவத்தையும் மிகச் சிறப்பாக திவ்ய தேசங்களில் நடக்கும்படி செய்தவர்.  மதுரகவி ஆழ்வாருக்கு ஈடான சிறப்புப் பெற்றவர் நாதமுனிகள். அத்தகைய சிறப்பு மிகுந்த நாதமுனிகள் பல்லாண்டு காலம் வாழ்க.

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே –  பராங்குசன் என்றால் நம்மாழ்வார்.   நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகியவற்றை மிகவும் ஆசையுடன் கற்றுத் தேர்ந்த நாதமுனிகள் வாழ்க.

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே –  திவ்ய ப்ரபந்த பாசுரங்களை தாளம் கொண்டு இசை வடிவில் அமைத்து அவற்றை பிறர் அறியச் செய்தவர் நாதமுனிகள்.  அவர் பல்லாண்டு வாழ்க.

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே – ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமானது பெரிய வ்ருக்ஷம் போல வளர வேண்டும் என்று தனது உபதேசங்களினால் அனைவருக்கும் அருளிச்செய்தார்.  நம்மாழ்வாருக்குப் பின் முடங்கி இருந்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குப் புத்துயிர் அளித்து மிகுந்த கருணையுடன் தனக்குக் கிடைத்த அநுபவமானது இவ்வுலகத்தாருக்கும் கிடைக்கும்படி வழி செய்தார்.

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே – நானிலம் என்றால் நான்கு நிலங்களைக் (குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல்) கொண்ட இப்பூவுலகம்.  இப்பூவுலகத்தில் குருபரம்பரையை நிலைநாட்டியவர் நாதமுனிகள்.   அவர் பல்லாண்டு வாழ்க.

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே – நல்ல குணங்களைக் கொண்ட நாதமுனிகளின்  திருவடிகள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நாதமுனிகளின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

உய்யக் கொண்டார் வைபவம்

உய்யக்கொண்டாரின் இயற்பெயர் புண்டரீகாக்ஷர்.  நாதமுனிகளிடம் சிஷ்யராக இருந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களைக் கற்றவர்.  இவரது அவதார ஸ்தலம் திருவெள்ளறை.  இவர் சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் என்பதை அறிந்தோம்.  நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்கள் உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் ஆகியோர்.   நாதமுனிகள் யோகசாஸ்திரத்தை மேற்கூறிய சிஷ்யர்களுக்கு பயிற்றுவிக்க விரும்பியபோது, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?” என்று கூறினார்.    இறந்து போனவர்கள் வீட்டில் திருமணம் போன்ற மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.  இந்த சம்சாரத்தில் இருப்பவர்கள் அல்லலுறும்போது நான் மட்டும் யோக சாஸ்திரத்தைக் கற்று எம்பெருமானை அனுபவிக்கலாகுமா? என்று உய்யக்கொண்டார் வினவினார்.  நான் நாலாயிர பாசுரங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இவ்வுலகத்தவர்க்கு அறிவித்து அவர்கள் உய்யும் வழி செய்வேன் என்று சூளுரைத்தார். மற்றவர்கள் உஜ்ஜீவனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்ற பொருள்படும்படி உய்யக் கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

உய்யக் கொண்டார் வாழி திருநாமம்

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

உய்யக் கொண்டார் வாழி திருநாமம் விளக்கவுரை

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே – இவ்விடத்தில் பால வெய்யோன், இளம் சூரியன் என்று பொருள்படும்படி கூறப்பட்டுள்ளது.  இளம் சூரியனின் பிரகாசத்தையும் வெல்லும் வண்ணம் சிறந்த வடிவழகு கொண்ட உய்யக் கொண்டார் வாழ்க.

மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே – மால் என்றால் அன்பு என்று பொருள்.  உய்யக் கொண்டாரின் சிஷ்யர் மணக்கால் நம்பி.  உய்யக் கொண்டாரிடத்தில் அன்பு கொண்ட மணக்கால் நம்பி தொழும் மலர் போன்ற திருவடிகளை உடைய உய்யக் கொண்டார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரிகளில் காட்டப்பட்டுள்ளது.  சிஷ்யரின் பெயரைச் சொல்லி ஆசார்யனைக் கொண்டாடும் இவ்வரி உய்யக் கொண்டாரின் வாழி திருநாமத்தின் சிறப்பம்சமாகும்.

சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே – மிகச் சிறந்த குணங்களை உடைய நாதமுனி அவர்களின் பெருமையை உலகோர் அறிய எடுத்துரைத்த உய்யக் கொண்டார் வாழ்க.

சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே – சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தமையால் அந்தக் கார்த்திகை நக்ஷத்திரமே சிறப்புப் பெற்றது என்று இவ்வரியில் காட்டப்பட்டுள்ளது.  அவ்வாறு சித்திரையில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்த உய்யக் கொண்டார் வாழ்க.

நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே – இவ்வரியும் அடுத்த வரியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது.  நாலிரண்டு என்பது எட்டு எழுத்துகளைக் கொண்ட (அஷ்டாக்ஷரம்) நாராயண மந்திரம்.  ஐயைந்து என்பது இருபத்தைந்து எழுத்துகளைக் கொண்ட த்வய மஹா மந்திரத்தைக் குறிக்கும்.  திருமந்திரத்தையும், த்வய மஹா மந்திரத்தையும் நமக்கு எடுத்து உரைத்தவர் உய்யக் கொண்டார்.  அவர் பல்லாண்டு வாழ்க.

நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே – நாலெட்டு என்பது முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்ட சரம ஶ்லோகத்தைக் குறிப்பதாகும்.  எம்பெருமான் கீதோபதேசத்தில் உரைத்த “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:||” சரம ஶ்லோகம் முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்டது.  ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்பிரதாயத்தில், திருமந்திரம், த்வய மஹா மந்திரம் மற்றும் சரமஸ்லோகம் முக்கியமான உபதேசங்களாகக் கருதப்படுகிறது.  இவை பஞ்சசம்ஸ்காரத்தின் போது ஆசார்யரால் உபதேசிக்கப்படும் மந்திரங்கள் ஆகும்.  இம்மந்திரங்களின் உட்கருத்துகளை உணர்ந்து அதன்படி இவ்வுலகத்தை உய்வித்த உய்யக் கொண்டார் வாழ்க.

மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே – திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீமந் நாரயணன், அழகிய மணவாளர் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர்.  பெரிய பெருமாள் எனப்படும் அந்த எம்பெருமானின் பெருமையை அறிவித்த உய்யக்கொண்டார் பல்லாண்டு வாழ்க.

வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே – இந்த உலகமே உஜ்ஜீவிக்கும் வகையில் வழி நடத்திய உய்யக்கொண்டாரின் திருவடிகள் இந்த பூவுலகத்தில் பல்லாண்டு வாழ வேண்டும் என்று உய்யக் கொண்டாரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment