வாழிதிருநாமங்கள் – மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார்

மணக்கால் நம்பி வைபவம்

மணக்கால் நம்பியின் இயற்பெயர் தாசரதி.  ஸ்ரீராமமிச்ரர் என்பது இவர் சிறப்புப் பெயர். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தமையால் மணக்கால் நம்பி என்று ப்ரசித்தமாக அறியப்படுகிறார். நம்பி என்றால் குண பூர்த்தியை உடையவர் என்று அர்த்தம். திருக்குறுங்குடி எம்பெருமான் நம்பி என்று அழைக்கப்படுகிறார்.  மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை குருகூர் நம்பி என்றே அழைத்தார்.  செல்வநம்பி என்பவர் பெரியாழ்வார் காலத்தில் பாண்டிய ராஜ்ய சபையில் மந்திரியாக இருந்தவர். இவ்வாறு எம்பெருமான், ஆழ்வார்கள். ஆசார்யர்களும் நம்பி என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியலாம். அந்த வரிசையில் மணக்கால் நம்பி என்று ஸ்ரீராமமிச்ரர் அழைக்கப்பட்டார்.  இவரது தனிச்சிறப்பு என்னவென்றால், நாதமுனிகளின் திருப்பேரனாரான யாமுனாசார்யர் என்ற ஆளவந்தாரை திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபடச் செய்தவர். யாமுனாசார்யர் சிறு வயதிலே ஞானியாக இருந்தவர்.  ராஜ போகத்தில் மூழ்கியிருந்த நாதமுனிகளின் திருப்பேரனாரை சம்பிரதாயத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று மணக்கால் நம்பி தமது பெருங்கருணையால் அவருக்கு ஸ்ரீபகவத் கீதையின் சாராம்சத்தை எடுத்துரைத்து அவரை திருத்திப் பணி கொண்டவர். உய்யக்கொண்டாரிடம் மிகுந்த ஆசார்ய பக்தி கொண்டவர்.

மணக்கால் நம்பி வாழி திருநாமம் 

தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

மணக்கால் நம்பி வாழி திருநாமம் விளக்கவுரை

தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே – இந்த வையகத்தை உய்விக்கச் செய்தவர் என்ற சிறப்புடைய உய்யக் கொண்டாரின் திருவடிகளை சிரம் மேல் தாங்கும் மணக்கால் நம்பி பல்லாண்டு வாழ வேண்டும்.

இதில் ஒரு சரித்திரம் காட்டப்படுகிறது.  உய்யக்கொண்டாரின் சிஷ்யரான மணக்கால் நம்பி அவருக்கு பல கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.  அவற்றில் உய்யக் கொண்டாரின் குமாரத்திகளை நதிநிலைக்கு அழைத்துச் சென்று அவர்கள் நீராடும் வரை காத்திருந்து அவர்களை ஒரு தமையனைப் போல் திரும்ப அழைத்துச் செய்யும் கைங்கர்யமும் ஒன்று.   அவ்வாறு ஒரு நாள் நதிக்குச் சென்று திரும்பும்போது ஓரிடத்தில் மழையினால் சேறாக இருக்க அதை எப்படித் தாண்டுவது என்று அந்தப் பெண் பிள்ளைகள் யாேசிக்க உடனே மணக்கால்நம்பி தான் கீழே படுத்துக் கொண்டு அந்தப் பெண் பிள்ளைகளை தன் முதுகின் மேல் நடந்து அந்தச் சேற்றுப் பகுதியைத் தாண்டச் செய்தார்.  இந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற உய்யக்கொண்டார் மணக்கால் நம்பியைக் கடிந்து கொள்ள அதற்கு மணக்கால் நம்பி இது என் ஆசார்யருக்காக உகப்புடன் செய்த கைங்கர்யம் என்று கூற உய்யக் கொண்டார் மகிழ்வுடன் தனது திருவடிகளை மணக்கால் நம்பியின் திருமுடியின் மேல் வைத்தார் என்று அறிகிறாேம்.   பொதுவாக சிஷ்யர்களின் அபிமானத்தைப் பாரத்து மகிழ்ந்தால் ஆசார்யர்கள் தாமாகவே தமது திருவடிகளை சிஷ்யர்களின் திருமுடியில் வைப்பார்கள் என்று சரித்திரத்தின் மூலம் அறிய வருகிறது.  அவ்வாறு உய்யக் கொண்டார் திருவடிகளை மணக்கால் நம்பியின் சிரத்தில் வைக்க “உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் எப்போதும் அடியேனுக்கு வேண்டும்” என்று மணக்கால் நம்பிகள் பிரார்த்தித்தார்.   அத்தகைய சிறப்புப் பெற்ற மணக்கால் நம்பி பல்லாண்டு காலம் வாழ்க.

தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே – தென் திசையில் இருக்கக்கூடிய ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானின் சிறந்த அருளைப் பெற்றிருக்கக் கூடிய மணக்கால் நம்பி வாழ்க.  எவ்வாறு இவர் பெரிய பெருமாளின் அருளைப் பெற்றிருக்க முடியும் என்றால் குருபரம்பரையின் முதல் ஆசார்யரான பெரிய பெருமாளுடைய அருள் இருந்தமையாலேயே அக்குருபரம்பரையில் மணக்கால் நம்பியும் ஒரு ஆசார்யராகக் கருதப்படுகிறார்.     அவர் வாழ்க.

தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே – தாசரதி என்பது தசரத மகாராஜாவின் குமாரன் என்னும் பொருள் படும்படி ஸ்ரீராமபிரான் தாசரதி என அழைக்கப்பட்டார்.  தாசரதி என்னும் பெயர் மணக்கால் நம்பிக்கு பெற்றோர்களால் சூட்டப்பட்டது.  அவ்வாறு தாசரதி என்ற திருநாமத்திற்கு ஏற்றத்தைக் கொடுத்த மணக்கால் நம்பி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே –  நாதமுனிகளின் உகப்பு (ஆசை) என்னவென்றால் தமது திருப்பேரனாரான ஆளவந்தாரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும்.  தமிழ் ப்ரபந்தங்களை இந்த உலகத்தில் பரவச்செய்த நாதமுனிகளின் ஆசைப்படி ஆளவந்தாரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வந்து நாதமுனிகளின் விருப்பத்தை நிலை நாட்டிய மணக்கால்நம்பி வாழ்க.

நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே – மிகுந்த பரிவுடன் தமக்கு அடுத்த ஆசார்யனாக (ஆர்யன் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது) ஆளவந்தாரை நியமித்த மணக்கால் நம்பி பல்லாண்டு காலம் வாழ்க.  ஆளவந்தாரிடம் தானே வலியச் சென்று உபதேசம் செய்து அவரை சம்பிரதாயத்தில் கொண்டு வந்தவர் மணக்கால் நம்பி.  பெரிய பெருமாளிடம் ஆளவந்தாரை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி பெரிய பெருமாளின் க்ருபை ஆளவந்தாருக்குக் கிடைக்குமாறு செய்தவர் மணக்கால் நம்பி.  ஆளவந்தாரிடம் “நம்மிடம் உமது பாட்டனார் கொடுத்த பெரிய புதையல் இருக்கிறது” என்று கூற ஆளவந்தாரும் “அது என்ன நிதி” என்று வினவ ஆளவந்தாரை பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று இவர்தான் நமது பெரிய நிதி என்று பெரிய பெருமாளை ஆளவந்தாருக்குக் காட்டிக் கொடுத்தார்.  அவ்வாறு ஆளவந்தாரை ஆசார்யராக நியமித்து நமது சம்பிரதாயம் வளரும்படிச் செய்த மணக்கால் நம்பி பல்லாண்டு வாழ வேண்டும் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே – இந்தப் பரந்த உலகில் பத்து ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் பரவும்படி செய்தவர் மணக்கால் நம்பிகள்.  நாதமுனிகளிடம் இருந்து ப்ரபந்தங்களைக் கற்றுக் கொண்ட உய்யக் கொண்டாரிடம் இருந்து மணக்கால் நம்பி கற்று தாம் கற்றதை ஆளவந்தாருக்கு உபதேசித்து குரு பரம்பரை வளர்ச்சியுறச் செய்தவர் மணக்கால் நம்பி.  அவர் வாழ்க.

மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே –  மாசி மாதம் மகம் நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் மணக்கால் நம்பி.  அவ்வாறு மாசி மகம் நக்ஷத்ரத்திற்கு தாம் அவதரித்தமையால் ஏற்றத்தைக் கொடுத்த மணக்கால் நம்பி வாழ்க.

மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே .  மால் என்றால் அன்பு.  எம்பெருமானிடம், உய்யக் கொண்டாரிடம், ஆளவந்தாரிடம் இவ்வாறு அனைவரிடமும் அன்பு கொண்ட மணக்கால் நம்பியின் திருவடிகள் இந்த உலகம் உள்ள அளவும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மணக்கால் நம்பியின் வாழி திருநாமம் முடிவுறுகிறது.

ஆளவந்தார் வைபவம்

ஆளவந்தார் இயற்பெயர் யாமுனன், பிற்காலத்தில் யாமுனாசார்யர் என்று ப்ரசித்தமாக அறியப்பட்டவர்.  இவர் சிறு வயதில் ஒரு பண்டிதரிடத்தில் பாடம் பயின்று கொண்டிருந்தபோது, அவ்வூர் அரசன் எல்லாப் பண்டிதர்களும் வரி கட்ட வேண்டும் என்று நிர்ப்பந்திக்க நம் ஆசார்யர் வரி கட்டுவதா என்று யாமுனன் தானே ராஜ்ய சபைக்குச் சென்று ராஜபண்டிதரிடம் வாதிட்டு அவரை வென்றார்.   அந்த சமயத்தில் அவ்வூர் அரசனுக்கும் அரசிக்கும் ஒரு பந்தயம் வைத்துக் காெள்கிறார்கள்.  அரசி ஐந்து வயதாகும் யாமுனன் தான் இவ்வாதத்தில் வெல்வான் எனவும் அப்படி யாமுனன் தோற்று விட்டால் தான் அரசருக்கு காலம் முழுவதும் அடிமையாக இருப்பதாகக் கூறினாள்.  அரசரும் ராஜபண்டிதர் தான் வெற்றியடைவார் அவர் தோற்று விட்டால் தான் யாமுனனுக்கு பாதி ராஜ்யத்தைக் கொடுத்து விடுவதாக பந்தயத்தில் ஒப்புக் கொண்டார். அதன்படி யாமுனன் வெல்லவே அரசி “எம்மை ஆளவந்தீராே” என்று தன் அன்பை யாமுனனிடம் வெளிப்படுத்தினாள்.  அன்று முதல் யாமுனன் “ஆளவந்தார்” என்று அழைக்கப்பட்டார்.

அரசன் ஒப்புக் கொண்டபடி அளித்த பாதி ராஜ்யத்தை பரிபாலனம் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் மணக்கால் நம்பி இவரை அணுகி தூதுவளைக் கீரையை ஆளவந்தாருக்கு கொடுக்க ஆளவந்தாருக்கும் அக்கீரை பிடித்துப் போனது.  அதன் பிறகு சிறிது காலம் அக்கீரையைக் கொடுக்காமல் இருக்க ஆளவந்தார் தன் மடப்பள்ளி நிர்வாகியை அணுகி “ஏன் தூதுவளைக் கீரை இப்போதெல்லாம் கொடுப்பதில்லை” என்று வினவ அதற்கு அவர்கள் “தூதுவளைக் கீரை கொடுக்கும் பெரியவர் இப்போது வருவதில்லை” என்று பதிலளித்தனர்.  மணக்கால் நம்பியைத் தேடி ஆளவந்தார் முன் நிறுத்த மணக்கால் நம்பி தூதுவளையை விடச் சிறந்த விஷயங்கள் உமது பாட்டனார் விட்டுச் சென்றிருக்கிறார்.  யாம் உமக்கு அவற்றை உபதேசிக்க வேண்டும் என்று சொல்ல ஆளவந்தாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.  மணக்கால் நம்பி கீதையை உபதேசித்தார்.   கீதோபதேச முடிவில் கீதையை உபதேசித்த எம்பெருமான் தான் உமது பாட்டானார் கொடுத்துப் போன செல்வம் என்று கூறி ஆளவந்தாரை திருவரங்கப் பெரிய பெருமாள் முன் நிறுத்தி, பெரிய பெருமாள் கருணைப் பார்வையை ஆளவந்தார் மீது கடாக்ஷிக்க, அன்று முதல் ஆளவந்தார் ராஜயத்தைத் துறந்து, திருவரங்கத்தில் சந்நியாசம் பூண்டு பல சிஷ்யர்களுடன் வாழ்ந்து வந்தார் என்பதை சரித்திரத்தின் மூலம் அறியலாம்.

ஆளவந்தார் நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார் கோயில் என்கிற வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார்.  நாதமுனிகள் பல காலம் வடநாட்டில் கைங்கர்யம் செய்த படியால் அவரது ஆசைப்படி யமுனைத்துறைவனான கண்ணன் திருநாமமான யாமுனன் என்ற பெயர் இவருக்கு பெற்றோரால் இடப்பட்டது.  இவருடைய திருநக்ஷத்ரம் ஆடி மாதம் உத்திராட நக்ஷத்திரம்.  இவர் பல க்ரந்தங்களை அருளியுள்ளார்.  கீதைக்கு சுருக்கமான அர்த்தத்தை ஸ்லோக வடிவில் “கீதார்த்த ஸங்க்ரஹம்” என்று அருளியுள்ளார்.  மேலும் ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம். சதுஶ்லோகி, ஶ்தோத்ர ரத்நம் என்ற க்ரந்தங்களையும் அருளியுள்ளார்.

ஆளவந்தார் வாழி திருநாமம்

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

ஆளவந்தார் வாழி திருநாமம் விளக்கவுரை

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே – பெரிய மேல்நிலைகளைக் கொண்ட மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கம் சிறப்புப் பெறும்படி செய்த ஆளவந்தார் வாழ்க.    இவரது ப்ரதாந சிஷ்யர்களான பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், திருவரங்கப் பெருமாள் அரையர் ஆகிய ஐவரும் திருவரங்கத்தில் இவரிடம் உபதேசம் பெற்றனர்.  பின் பெரிய திருமலை நம்பி திருமலை சென்று கைங்கர்யம் செய்யவும், திருக்கோஷ்டியூர் நம்பி திருக்கோஷ்டியூர் சென்று கைங்கர்யம் செய்யவும் தொடங்கினர்.  ஆளவந்தாரின் மற்றொரு சிஷ்யரான திருக்கச்சி நம்பிகளும் ஆளவந்தாரின் ஆணைப்படி காஞ்சிபுரம் தேவப் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார்.  இவ்வாறு பல சிஷ்யர்களைக் கொண்டு திருவரங்கப் பெருமையை வளரச் செய்த ஆளவந்தார் பல்லாண்டு வாழ்க.

மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே – மறை என்றால் வேதம்.   நான்கு வேதங்களையும் அவற்றின் சாரத்தையும் மணக்கால் நம்பியிடம் மிகுந்த பணிவுடன் கற்றார்.  வேதத்தின் சாரமான கீதோபதேசத்தையும் மணக்கால் நம்பியிடம் இருந்து ஆனந்தத்துடன் கற்ற ஆளவந்தார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே – பச்சையிடுவது என்றால் ஒருவருக்கு நன்மை செய்து அவரை நம் பக்கல் ஈர்ப்பது ஆகும்.  மணக்கால் நம்பி தானே வலியப் போய் இவருக்கு தூதுவளைக் கீரையைக் கொடுத்து இவரைத் திருத்திப்பணி கொண்டார்.  அவ்வாறு பச்சையிட்ட ராமமிச்ரர் எனப்பட்ட மணக்கால் நம்பியின் திருவடிச் சிறப்பைக் கொண்டாடும் ஆளவந்தார் பல்லாண்டு வாழ்க.

பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே – பாடியத்தோன் என்றால் ஸ்ரீபாஷ்யத்தை அருளிச்செய்த எம்பெருமானார் (ராமாநுஜர்).  அவர் இந்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆசார்யனாக வருவதற்காக தன்னுடைய கருணைப் பார்வையை கடாக்ஷித்தவர் ஆளவந்தார்.  ராமானுஜர் இளையாழ்வாராக காஞ்சீபுரத்தில் யாதவப்ரகாசரிடம் கல்வி பயின்று வரும் காலத்தில்  திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாருக்கு உயர்ந்த ஞானி அவதரித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.    ஏற்கனவே நாதமுனிகள் அளித்த பவிஷ்யதாசார்யர் விக்ரஹம் வழி வழியாக ஆளவந்தாரிடம் வந்து சேர, அந்த விக்ரஹத்தின் அமைப்பில் உள்ளபடி இளையாழ்வாரின் பொலிவு இருக்கக் கண்டு காஞ்சிபுரம் வந்து தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்தபின் இளையாழ்வாரை காஞ்சிபுரத்தில் வந்து சந்திக்கிறார்.

தேவப்பெருமாள் சந்நிதிக்கு அருகில் உள்ள கரியமாணிக்கம் சந்நிதியில் யாதவப்ரகாசரும் அவருடைய சிஷ்யர்களும் இருக்கக் கண்டு அவர்களில் இளையாழ்வாரைக் கண்டு வெகு தொலைவில் இருந்தே தமது கருணைப்பார்வையை இளையாழ்வார் மீது செலுத்தினார் ஆளவந்தார்.  அவ்வாறு ராமாநுஜர் நமது சம்பிரதாயத்திற்கு சிறந்த ஆசார்யனாக வரும் வகை செய்தவர் ஆளவந்தார்.  ராமானுஜரும் ஆளவந்தாரை முன்னிட்டு ஒரு தனியனைச் சமர்ப்பித்துள்ளார்.  யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாஶேஷ கல்மஷ:| வஸ்து தாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்ற தனியனில் அவஸ்துவாக இருந்த என்னை ஒரு வஸ்துவாக மாற்றினார் ஆளவந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.  அத்தகைய சிறப்புப் பெற்ற ஆளவந்தார் பல்லாண்டு வாழ்க.

கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே – கச்சிநகர் என்றால் காஞ்சிபுரம்.  ஆளவந்தார் ராமாநுஜர் மீது தான் கடாக்ஷித்தது மட்டுமன்றி காஞ்சிபுரம் தேவப்பெருமாளிம் சென்று ராமாநுஜரை குரு பரம்பரைக்கு ஒரு ஆசார்யனாக அருளும்படி வேண்டினார்.  அவ்வாறு காஞ்சிபுரம் தேவப் பெருமாளின் இரு திருவடிகளைத் தொழுது ராமாநுஜரை ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் ஆசார்யனாகச் சேர்த்தவர் ஆளவந்தார்.  அவர் வாழ்க.

கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே –  கடக மாதமான ஆடி மாதத்தில் உத்தராட நக்ஷத்ரத்தில் வந்து இப்பூவுலகில் அவதரித்த ஆளவந்தார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே –  தன்னுடைய அச்சம் நீங்கி மனதில் மகிழ்ச்சி அடைந்த ஆளவந்தார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.   ஆளவந்தாருக்கு ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவா.  ஆனால் எம்பெருமானுடைய திருவுள்ளமோ வேறு நோக்கில் இருந்தது.  இளையாழ்வாரை பெரிய நம்பி காஞ்சிபுரத்தில் இருந்து திருவரங்கத்திற்கு அழைத்து வருகிறார்.  திருவரங்கத்தின் எல்லைக்கு வரும்போதே அங்கு கூட்டமாக இருந்தவர்கள் சோகத்துடன் இருந்ததைக் கண்டு வினவ ஆளவந்தார் திருநாட்டிற்கு எழுந்தருளி விட்டார் என்று கூறினர்.  இளையாழ்வாருக்கு ஆளவந்தாரை ஆசார்யராக அடையும் பாக்கியம் கிடைக்கப் பெறாமல் போயிற்றே என்று மிகப் பெரிய வருத்தம்.   இளையாழ்வார் ஆளவந்தாரின் திருமேனியை சேவித்தார்.  அப்போது அவர் திருக்கரங்களில் மூன்று விரல்கள் மடங்கி இருந்ததைக் கண்டார்.   அங்கிருந்தவர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் ஆளவந்தாருக்கு இருந்த மூன்று ஆசைகள் பற்றிக் கூறினர்.

அவையாவன,                              1. ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை எழுத வேண்டும். 2. திவாய்மொழியின் அர்த்தங்களை உலகமறியச் செய்ய வேண்டும் 3.  வேத வ்யாசர், பராசரர் போன்ற ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதாகும்.   அந்த ஆசைகள் நிறைவேறப் பெறாமையால் விரல்கள் மடங்கி இருக்கின்றன என்று கூறினர்.  உடனே இளையாழ்வார் எம்பெருமானின் திருவுள்ளமும், ஆசார்யன் திருவுள்ளமும் இருக்குமானால் நாம் ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றுவோம் என்று சபதம் எடுக்க மடங்கி இருந்த விரல்கள் நீண்டன என்று அறிகிறோம்.  அதன் மூலம் ஆளவந்தாரின் மனதில் இருந்த அச்சம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தார்.  அப்படிப்பட்ட ஆளவந்தார் வாழ்க. சபதம் எடுத்தபடியே ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை அவரே எழுதினார்.  திருக்குருகைப் பிள்ளானைக் கொண்டு திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் இடும்படி அருளினார்.  கூரத்தாழ்வாரின் திருக்குமாரர்களுக்கு வேத வ்யாஸர், பராசரர் என்று ரிஷிகளின் பெயர்களை வைத்து அவர்களும் பெரிய வித்வான்களாக வளரும்படி கடாக்ஷித்தார்.

ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே – ஆளவந்தாரின் திருவடிகள் இரண்டும் எப்பொழுதும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று ஆளவந்தாரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment