ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< 8ம் பாட்டு

9 ம் பாட்டு

emperumAnAr-embAr உடையவர்எம்பார்

முகவுரை:   கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.  இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது.     அவ்வாறில்லாமல் ஆசார்யன் நம்மைப்போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும் ஆச்சர்யனின் பெருமையறிந்து பெருமைக்குத்தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும் உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன. இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.

தத்தம் இறையின் வடிவு என்று தாளிணையை
வைத்தவரை வணங்கியராப் – பித்தராய்
நிந்திப்பார்க்குண்டு ஏறா நீணிரயம் நீதியால்
வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின

அவரை – அவ்வாச்சர்யனை

தத்தம் இறையின்  –  “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய

வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)

வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத

பித்தராய் – உண்மை அறியாதவராய்

நிந்திப்பார்க்கு  – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு

ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்

உண்டு – கிடைக்கும்

நீதியால் – முறை தவறாமல்

வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு

இழியாவான்   – மறு பிறவி இல்லாத

வான் உண்டு  – வைகுந்த நாடு கிடைக்கும்

விளக்கவுரை:

தத்தம் இறையின் வடிவு என்று: “தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள். அதாவது நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது “நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம். இதனால் நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும் அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும், அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும் சாஸ்திரங்கள் ஆசார்யனைப்  பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும். ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.

தாளிணையை வைத்தவவரை: “வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில் “மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம் தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும் அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.

வணங்கியிராப் பித்தராய்: அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய் அதாவது அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பகும். ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம். “சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே”  “எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்?” என்று கேட்க, நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன். ஆகிலும் நீங்கள் கேட்ட  அர்த்தம் போராதென்ன வொண்ணாது”. இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார். ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத் தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று ‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.

குருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும் பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.

ஏறாநீணிரயம் உண்டு:  (ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்) அதாவது குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும். இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம்.  எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது. எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.

இதனால் ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும்பாவிகள் எக்காலத்திலும் உய்ய மாட்டார்கள். உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள். இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம். இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.

நீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்: கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.

(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை. வந்தித்தல்-வணங்குதல். (இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர்.  இதனால் ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய் “தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும் பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம். இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தியுடையவர்களான அடியார்கள் மீண்டும் பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment