ப்ரமேய ஸாரம் – 8 – வித்தம் இழவு

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< 7ம் பாட்டு

8ம் பாட்டு

paramapadhanathan

முகவுரை:

இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை “அவ்வானவர் ” குலம் “ஒன்று” “பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை “கருமத்தால்” “வழியாவது” “உள்ளபடி உணரில்” ‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக் கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப்பாடலால் கூறுகிறார்.

“நாராயணாய” என்னும் இச் சொல்லுக்குப் பொருளை “நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெருவாழ்வு” என்று சொல்லப்படுகிறது. நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும் அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம் என்றிருப்பதுவும், அவனுக்குச் செய்யும் பணியின் முறைகளை விவரிப்பதுவும், நாராயணாய என்னும் பதத்தில் சொல்லப்படும் பொருட்களாகும். இக்கருத்தை இப்பாடல் சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறது.

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய்வீகாலம்
தத்தமவையே தலையளிக்கும் – அத்தை விடீர்
இச்சியானிச்சியாதேத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானால்

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய

இழவு  – அழிவும்

இன்பம் – சுகமும்

துன்பம் – துக்கமும்

நோய் – நோய்களும்

வீகாலம் – மரண காலமும்

தத்தம் அவையே – தத்தமது வாழ்வினைப்படியே

தலையளிக்கும் – பயன் தரும்

அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை

விடீர் – விட்டுவிடுவீராக

இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்

இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்

ஏத்த – அவனைத் துதி செய்ய

எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்

உச்சியான் – மேல்நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு

உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

விளக்கவுரை:

“நாராயணாய” என்னும் பதத்திற்குக் கருத்துக் கூறுகையில் “இளைய பெருமாளைப் போல இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை” என்றும்” அதை நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேணும்” என்றும் “உனக்கே  நாம் ஆட்செய்யவேணும்” என்னும்படி வேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கைங்கர்யம் என்னும் லட்சியத்தை இராமாயணத்தில் இளைய பெருமாள் கடைப் பிடித்துக் காட்டினார். இராமனை உடன் பிறந்த வகைக் கருதாமல் தெய்வமாக எண்ணிப் பணிவிடைகள் செய்தான். இதைக் கம்பன் வாக்கில் காண்போம்.

எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெங் கொடுந்துயர் தீர்கிலேன் “என்பது இலக்குவன் மொழி.

(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – பள்ளிப்படலம்-58)

அனைத்து உறவும் ராமனே என்றும் அவனுக்குப் பணிவிடை செய்வதே தன கடமை என்ற குறிக்கோளுடன் இலக்குவன் இராமன் பின் சென்றான்.

“ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை- என்றே
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் ‘ என்றும்

(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் -146)

“பின்னும் பகர்வாள்,”மகனே!இவன் பின் செல்: தம்பி
என்னும்படி அன்று.அடியாரின் இவள செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி” என்றனள் வார் விழி சோர நின்றாள்”

(கம்பராமாயணம் -அயோத்திய காண்டம் -நகர் நீங்கு படலம்- 147)

என்றும் அவன் தாய் சுமித்திரை கூறினால் என்பது கம்பனின் வாக்கு.

இதில் ‘அடியாரினின் ஏவல் செய்தி” என்று அறிவுறுத்தியது குறிப்பிடித்தக்கது.

அவ்வறிவுரையின்படி அனைத்து உறவுகளையும் துறந்து விட்டு இராமன் பின் சென்று பதினான்கு ஆண்டுகளும் பற்றும் வாழ்நாள் முழுவதும் அடிமையே செய்து வாழ்ந்தான். இதுவே ஒரு ஆன்மா அடைய வேண்டிய லட்சியமாகும். இவ்வடிமையை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும். வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழான திருப்பாவையில் முடிந்த பொருளாக “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கூறப்பட்டுள்ளது.’உனக்குப் பனி செய்திருக்கும் தவமுடையேன் “என்றார் பெரியாழ்வார். “ஒழிவில் காலமெல்லாம் உடனை மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றார் நம்மாழ்வார். “ஆளும் பணியும் அடியேனை கொண்டான்” “உனக்காகத் தொண்டுபட்ட நல்லேனை” என்று கூறினார் திருமங்கை ஆழ்வார்.

ஆகவே ஞானிகளான பெரியார்கள் இவ்வாறு இறைத்தொண்டையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார்கள். இவர்களுக்கு இங்கு வாழ்ந்துவரும் நாட்களில் செல்வத்தால் வரும் லாபமும் அதை இழத்தலால் வரும் துன்பங்களும் அவர்களுக்கு இல்லை.”வேண்டேன் மனை வாழ்க்கையை” என்றும் “கூரை சோறு இவை வேண்டுவதில்லை” என்றும் “நீள் செல்வம் வேண்டாதான்” என்றும் ஆழ்வார்களால் துறக்கப்பட்டவைகள். எல்லாம் கண்ணன் என்பது அவர்கள் லட்சியம். அவர்களது லட்சியமான இறைத்தொண்டில் ஈடுபட்டுள்ள மனதை பணம் முதலியன வேதனைக்கு உள்ளாக்கும் அன்றோ. அவற்றால் மனது கலங்காமல் இருந்தால் அன்றோ அடிமையைச் செவ்விதமாகச் செய்ய முடியும்.இந்நிலையில் லட்சியவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலே கூறுகிறார்.

வித்தம் – பணம் அதாவது தங்கம், வெள்ளி முதலியன
இழவு – அவற்றின் அழிவு .அதாவது நிலையில்லாததால்

அவற்றிற்கு வரும் விநாசம்.

திருவள்ளுவரும்

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை” என்று இகழ்ந்து பேசினார்.

இன்பம் – இன்பம் தரும் துன்பம் தரும் பொருட்களால் கிடைக்கும் சுகம்
துன்பம் – துன்பம் தரும் பொருட்களின் சேர்க்கையால் வருகின்ற துக்கம்
நோய் – உடலைப் பற்றி வருகின்ற நோய்கள்
வீகாலம் – சரீரத்தினுடைய (உடல்) முடிவு காலம். (வீதல் – முடிதல்) இவை எல்லாவற்றையும்
தத்தம் அவையே – அதற்குக் காரணமான ஊழ்வினைகளே
தலை அளிக்கும் – பக்குவ காலத்தில் பலன் கொடுக்கும். பிறக்கும் பொழுது உடன் வந்ததான வினைகளின் பயன்களைத் துய்க்காமல் எவரும் தப்ப முடியாது அல்லவா. திருவள்ளுவர் ஊழ் என்னும் ஓர் அதிகாரத்தில் கூறினார்.

ஆகூழாழ் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழாற் தோன்றும் மடி”

இதில் செல்வம் கிடைப்பதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி உண்டாகும். அச்செல்வம் அழியும்போது அதற்குக் காரணமான ஊழ்வினையால் அழிவு உண்டாகும் என்றும்

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ்   உற்றக் கடை”

இதில் ஒருவன் எல்லா அறிவையும் பெற்றிருந்தாலும் கைப்பொருளை பறி கொடுக்கும்போது அதற்குக் காரணமான ஊழ்வினை அவனை அந்த நேரத்தில் அறியாதவனாக்கி விடும். ஒருவன் அவ்வளவு அறியாதவனாக இருந்தாலும் பொருள் சேரும் காலம் வரும்போது அவனுடைய அறியாமையை அகற்றிப் பொருள் சேர்வதற்குக் காரணமாகிற அறிவை விரிவு படுத்தும் என்றும், இவ்வாறே கல்வியறிவு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஊழ்வினையே காரணம் என்றும், செல்வத்திற்கான ஊழ்வினையும் கல்விக்கான ஊழ்வினையும் வெவ்வேறாகும் என்றும், ஊழ்வினை நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் மாறும் என்றும், இவ்வாறு ஊழ்வினையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆகவே வினைப்பயனால் வருவனவான நன்மை தீமைகளைப் பற்றி அறிவாளிகள் கவலை கொள்ளக் கூடாது

அத்தை விடீர்:

அவற்றில் மனம் வைக்க வேண்டாம் என்று மனதைத் தேற்றுவிக்கிறார். ஊழ்வினைக்குக் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் எவ்வாறு இறைத்தொண்டை செய்வார்கள் என்பதைப் பற்றி மேல் தொடர் கூறுகிறது.

இச்சியான்:

செல்வம் முதலிய வேறு பயன்களில் ஒன்றையும் விரும்பாதவன் (இத்தகையவனே இறைத் தொண்டுக்குத் தகுதியுடையவனாவான். “அடக்கரும் புலன்கள் இய்ந்தடக்கி ஆசையாமவை, தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை” என்று இக்கருத்தைத் திருமழிசை ஆழ்வார் எடுத்துரைத்தார்.

இச்சியாதேத்த:   இறைவனைத் துதிப்பவர் அதற்குப் பயனாக வீடு பேற்றையோ,இறைத்தொண்டு முதலியவற்றையோ ஒன்றையும் பயனாகக் கருதாமல் துதிப்பதையே பயனாகக் கருதித் துதிக்க வேண்டும் . “பாவின் இன்னிசை பாடித் திரிவன்” என்று கூறியது போல துதிப்பவர்க்குப் பயன்  வேறொன்றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாளெல்லாம் , கரந்துருவில் அம்மானை அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தாது அயர்த்து “(திருவந்தாதி) இவற்றால் இறைவனை ஏத்துதல் கூறப்பட்டன. இங்கு “ஏத்துதல்” என்று வாய்க்குச் சொன்ன பணிபோன்று மனத்தாலும், காயத்தாலும் (உடல்) செய்யும் பணிகட்கும்  ஏற்பப் பொருள் கொள்க. ஆக மனம் முதலிய முக்கரணங்களாலும் அடிமை செய்ய வேண்டும் என்பதாம்.

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்: வைகுண்ட மாநகர் என்று சொல்லப்படுகின்ற அழகிய திருநாட்டில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய தலையால் தாங்கப் படுபவன் ஆவான். எழில் வானம் என்பது பரமபதத்தை. அது விண்தலை என்று சொல்லப்படும். அங்கிருக்கும் வைகுந்தநாதன் “விண்மீது இருப்பாய்” என்று அழைக்கப்படுவான். அத்தகையவன் இங்கு எழில் வானத்து உச்சியான் என்று சொல்லப்படுகிறான். எழில் வானம் என்பது வேதாந்தத்தில் “பரமாகாசம்” என்ற சொல்லால் சொல்லப்படும் மோட்ச பூமி. அதில் உயர்ந்த நிலம். அவ்வானத்து உச்சி.அதிலிருப்பவன் உச்சியான். எழில் வானத்து உச்சியான் அவ்வைகுண்டநாதன். அவனுடைய தலையால் தாங்கப்படுபவன் தொண்டன். அத்தொண்டனை “உச்சியானுக்கு உச்சியான்” என்று இங்கு நான்காம் வேற்றுமைத் தொகையில் “உச்சியான் உச்சியான்” என்று கூறப்பட்டது.

இறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள் செல்வத்தின் லாப நஷ்டங்கள்,இன்ப துன்பங்கள், நோய்,மரணம் இவற்றை அந்தந்த வினைப் பயனால் வருகின்றன என்று எண்ணிஅவற்றைப் பற்றி சிறிதும் நினையாமல் அவற்றை  உதறி விடுவார்கள். அதனால் அவர்கள் மனம் தூயதாய் இருக்கும். அத்தூய மனத்தில் வேறு பயனை எதையும் விரும்ப மாட்டார்கள்வேறு பயனை எதையும் விரும்பாமல் துதிப்பதையே பயனாகக் கொண்டு துதிப்பார்கள். இத்தகைய அடியார்கள் அழகிய பரமபதத்திற்குச் சென்று அங்கு பரமபதநாதனுடைய தலையால் தாங்கப்படுவர் ஆவார் என்பது கருத்து. இதனால் தொண்டு செய்பவர் ஊழ்வினையால் வரும் நல்லன தீயனவற்றில் மனம் வைக்காமலும் தொண்டையே பயனாகக் கருதித் தொண்டு செய்ய வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

துதிப்பதற்காகவே இருக்க வேண்டும், வேறு பயன் இருக்கலாகாது என்பது தான் பொருள் . இறைவனைத் துதிப்பது, இறைத் தொண்டாகும். மனம் மொழி மெய் என்னும் முக்காரணங்களாலும் செய்யும் தொண்டுகளில் துதித்தல் வாய்மொழித் தொண்டாகும். வாய்க்கு இதுவே பயனாக இருக்க வேண்டும். செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் திருக்குறள் தொடரில் “வாய்ச்சொல்” என்பதற்கு “வாய்” என வேண்டாது கூறினார். “தீயசொல் பயிலாமை என்பது அறிவித்தற்கு “என்று பொருள் கூறியது காண்க. தற்கு உதாரணமாக நாலாயிர திவ்யப்ப்ரபந்தப் பாடல்கள் காணலாம்.

பாட்டு – பாட்டு எண்

  1. வாய் அவனையல்லது வாழ்த்தாது – 209
  2. நாக்கு நின்னையல்லால் அறியாது – 433
  3. எத்துகின்றோம் நாத்தழும்ப – 1863
  4. நாத்தழும்ப நாராயணா என்றழைத்து – 561
  5. இரவு நண்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 2954
  6. பேசுமின் கூசமின்றி – 3681
  7. வாயினால் பாடி – 478

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment