ஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     38-ஆம் பாட்டு

முன்னுரை:

ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை பல கோணங்களில் கூறப்பட்டது. அதாவது (26) குருவருளால் இறைவனிடம் சரணாகதி பண்ணினவர் வைகுந்தம் சென்று அங்கு இறை அடிமை செய்வர் என்றும் ,ஆசார்யனை (27) அணுகாதவர் வைகுந்தம் சேராமல் இடத் அழுந்துவார் எண்டும் (29) குருவின் அருள் பெற்றவர் இடரை வென்று எளிதில் வீடு அடைவர் என்றும்(30) குருவை அணுகாதவர் உறவை விடுகை சாஸ்திரக் கட்டளை என்றும்(31) வேதம் முதலிய நூல்கள் கூறுவதெல்லாம் குருவின் திருவடிகளே தஞ்சமாகும் என்றும்(32)குருவை மனிதனாக எண்ணுபவன் நரகு எய்துவான் என்றும்(33+34) அருகில் இருக்கும் குருவைப் புறக்கணித்துத் தொலைவில் இருக்கும் இறைவனைத் தொடர்வது அறியாமையாகும் என்றும்(35) குருவினிடம் அன்பு ஒழிந்தால் கருணையுடைய கடவுளே சுட்டு சாம்பலாக்கி விடிவான் என்றும்(36) கடவுள் குடியிருக்கும் திருத்தலங்களும் பிறவும் குருவே என்று இருப்பதுவுமே நர்சீடன் இலக்கணம் என்றும் தன்னுடைய செல்வம் உயிர் அனைத்தும் குருவுக்கு உடைமையாகும் என்று எண்ணுவனது   இதயம் கடவுள் உறையுமிடமாகும்  என்றும் சொல்லியதை நினவு கூர்தல் வேண்டும். பொருளும், உயிரும், உடம்பும், புகழும், தெருளும், குணமும், செயலும் மற்றும் வேண்டுவதை எல்லாம் ஆசார்யன் தன்னருளால் சீடனுக்குத் தேறுவான்.

“குலம் தரும் செல்வம் தந்திடும்
 அடியார் படுதுயராயின எல்லாம் 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா ஏன்னும் நாமம்”                       (திருமங்கை ஆழ்வார்)

இங்கு நாராயணா என்னும் இறைவன் நாமத்தைச் சொன்னவர்க்கு எல்லாம் கிட்டும் என்று சொன்னது போல குரு பக்தனுக்கு பொருள் முதலிய அனைத்தையும் அருளுவான் என்பதாம். ஆகையால் குரு பகவானுடைய தோற்றமே ஆவார் என்ற கருத்துப் புலனாகிறது. அதனால் அனைவருக்கும் குருவின் திருவடிகளை எப்பொழுதும் எண்ணியிருப்பதுவே பொருத்தமுடையது என்றும் கூறி நூலின் கருத்து இத்துடன் முடிக்கப்படுகிறது.H    
“தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
  தானே குருவாகித் தன்னருளால் – மானிடர்க்கா
 இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
  உண்ணுவதே சால வுறும்”
பதவுரை:
தேனார்                        – தேன் நிரம்பிய
கமலம்                         – கமலப்பூவை  இருப்பிடமாக உடைய
திருமாமகள்               – பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன                   – கணவனான பகவான்
தானே                          – மேலான தானே
குருவாகி                      – மனித உருவத்தில் குருவாகி வந்து
தன்னருளால்              – தன்னுடைய மிக்க கருணையினால்
மானிடர்க்கா               -திருந்ததக்க மனிதர்களைத் திருத்துவதற்காக
இந்நிலத்தே                – இப்பூவுலகத்தே
தோன்றுதலால்         – மனிதனாக அவதரித்ததனால்
யார்க்கும்                     – அனைத்துத் தரப்பினர்க்கும்
அவன் தாளிணையை   – தலைவனான குருவின் திருவடிகளை
உன்னுவதே                 – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே
சாலவுறும்                    – மிகவும்  பொருத்தமாகும்
விளக்கவுரை:
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்: பிரட்டி தாமரையில் இருப்பதால் அவளது உராய்தல் பட்டு அது அழகு பெற்றது. மேலும் தேன் இடையறாமல் ஒழுகுவதால் மேலும் அழகியதாய் உள்ளது.இவ்வாறு தாமரைக்கு அழகு கொடுக்கும் பெரிய பிராட்டியாருக்கு மணாளன் என்று பகவான் சிறப்பிக்கப்பட்டான் “திரு” என்று பெரிய பிரட்டியாருக்குப் பெயர். இது ஸ்ரீ என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல். திருப்பாவையில் ஸ்ரீ ஆண்டாள் “திருவே துயிலெழாய்” என்று கூறினாள்.தானே திருவுக்கு மணாளனானதால் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாதவன்.

 

“திருவுடையார் தேவரெனில் தேவர்க்கும் தேவன்
மருவு திருமங்கை மகிழ்நன் கொழுநன் -ஒருவனே
அல்லோர் தலைவரெனல், அன்பினால் மெய்மறந்து
புல்லோரை நல்லரேணல் போம்: 

(மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் திரு.நா. அப்பனையங்கார்)
இதனால் அனைவருக்கும் மேலானவன் திருமாமகள் கொழுநன என்பதாம்.

குருவாகி: தனது தெய்வ உருவத்தை மறைத்துக் கொண்டு மனித உருவத்தில் ஆசார்யனாய் இவ்வாறு உருவம் மாறிவரக் காரணம் என்னவெனில்.

தன்னருளால்: தன்னுடைய மிக்க பெரும் கருணை என்று சொன்னதால் இதற்கு வேறு காரணமில்லை என்பது கருத்து. இப்படி உருவம் மாறி வந்தது யாருக்காகவென்றால்

மானிடர்க்கா: மனித உடலிலே பிறந்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டு உபதேசத்திலே திருந்தி செமத்தைப் பெற உரியரான ஆன்மாக்களுக்காக என்பது பொருள்.

இந்நிலத்தே தோன்றுதலால்: குழந்தை கிணற்றிலே விழுந்தால் உடன் குதிக்கும் தாயைப் போல ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடக்கிற இப்பூமியில் பிறக்கையால்

யார்க்கும்: அந்தணர் முதலிய சாதி வேறுபாட்டாலும் பிரமச்சர்யம் முதலிய நிலை வேறு பாட்டாலும் ஆண், பெண்   என்ற வேறுபாட்டாலும் பலவகைப் பட்டிருக்கும் ஆன்மாக்கள் அனைவருக்கும்

அவன் தாளிணையை உன்னுவதே:  “அவன்” என்ற தில் இறைவனுடைய அனைத்துச் சிறப்புக்களும் அடங்கி உள்ளன. அதாவது ஆன்மாக்கள் அனைவருக்கும் தலைவனாய் புகளிடமாய்ப் பயனாய் இருக்கிறவன் என்பதும், அவனுடைய திருவடிகள் இரண்டையும் அடைவதே லட்சியமாகவும் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும் என்றிப்படிப்பட்ட சிறப்புக்களை எண்ணியிரு ப்பதுவே என்று பொருள். “உன்னுவதே”   என்ற ஏகாரத்தால் இது தவிர வேறு ஒன்று எண்ண வேண்டாம் என்பது குறிப்பு.

சாலவுறும்: மிகவும் பொருத்தம். சால- மிகவும். உறும்- பொருத்தம். இதனால் மேல் சொன்னபடி எண்ணியிருப்பது ஆன்மாவின் இயல்புக்கு மிகவும் பொருத்தமாகும் என்பதாம்.

“திருமாமகள் நாயகனான பகவானே இடர்கடலில் துவளும் மனிதர்களை உபதேசத்தால் கரைஎற்றுவதற்காகத் தன்னுடய மிக்க கருணை குணத்தால் குருவாகி மனித உருவத்தில் தோன்றுகிறான். அவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாயும் புகழையும் அடையத் தகுந்தவனாயும் இருக்கிறான். அத்தகையவனுடைய திருவடிகளே அனைத்துயிர்க்கும் அடைய வேண்டிய லட்சியப் பொருளாகவும் அவசியம் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும் எப்பொழுதும் மனதில் நினைத்த வண்ணம் இருப்பது தான் ஆன்மாக்களின் சேமத்திற்கு   மிகவும் பொருத்தமானதாகும்.”இப்படி எண்ணுவது தவிர வேறு காரியங்கள் செய்தால் பயனேதுமில்லை. ஆகவே “குரு” என்பவன் கடவுளுடைய தோற்றமாய் மனிதர்களின் நலத்திற்காகவே அவதரித்திருப்பவன் என்றும் அவன் திருவடிகளை நினைத்திருப்பதுவே ஆன்மாக்கள் அனைவருக்கும் தகுந்ததாகும் என்று உரைக்கப்பட்டது. இதை எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்ற பிக எளிய தொடரால் பண்டை தமிழர்கள் உணர்த்தினர்.

Leave a Comment