ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< 9ம் பாட்டு

பத்தாம் பாட்டு

azhwar-emperumanarநம்மாழ்வார்எம்பெருமானார்

முகவுரை:

ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. “திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.

இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து இவ்வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி மிகத் தெளிவாகக் கூறி முடிக்கப்படுகிறது.

இறையும் உயிரும் இருவர்க்குமுள்ள
முறையும் முறையே மொழியும்- மறையும்
உணர்த்து வாரில்லாத நாளொன்றல்ல ஆன
உணர்த்துவார் உண்டானபோது

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்

உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்

இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட) இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்

முறையே மொழியும் – இவ்வுறவையே சிறப்பாக உணர்த்தும்

மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்

உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்

ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)

உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை

உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது

ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

விளக்கவுரை:

இந்நூல் முதல் பாடலில் சொல்லப்பட்ட “அ’ காரத்தின் பொருளான நாராயணான இறைவனும் (உயிரும்) மேற்படி பாடலில் “மவ்வானவர்க்கு” என்று சொல்லப்பட்டதன் பொருளான ஆன்மாவும் “இருவருக்குமுள்ள முறையும்” இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உண்டான உறவு முறையும்.  இது “அ” காரத்தினுடைய நாலாவது வேற்றுமை உருபின் பொருளாகும். அதாவது, “அகாரத்திற்கு மகாரம்” “தகப்பனுக்கு மகன்” என்பது போல் சொல்லப்படுகிறது. இறைவனுக்கு ஆன்மா என்று உறவு முறையைத் தெரிவிக்கிறது.

“நான்காவதற்கு உருபாகும் கு வ்வே
கோடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது பொருளே”

என்ற நன்னூல் இலக்கண நூலில் நான்காம் வேற்றுமை உருபான “கு” உருபினுடைய பொருளை விவரிக்கையில் ‘முறை” என்று உறவு முறையைச் சொல்லி இருக்கிறது. ஆகவே அவ்விலக்கணப்படி “அவ்வானவர்க்கு மவ்வானவர்” என்ற தொடரில் உறவு முறை காட்டப்படுகிறது.

முறையே மொழியும் மறையும்: கீழ்ச் சொன்ன உறவு முறையையே முறைப்படி சொல்லுகின்ற வேத முடிவான திருமந்திரம் என்று பொருள். ஞான சாரம் முப்பத்தொன்றாம் (31ம் பாடலில்) “வேதம் ஒருநான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்” என்ற இடத்தில் வேதத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்று இத்திருமந்திரம் வேதத்தில் விழுமியதாகச் சொல்லப்பட்டது. இத்தகைய திருமந்திரமும்.

உணர்த்துவார் இல்லாநாள் ஒன்றல்ல: மேற்கூறிய இறைவனும் ஆன்மாவும் இருவருக்குமுள்ள முறைகளும் என்றைக்கும் இருந்து கொண்டிருந்தாலும் இவற்றை விளக்கி எடுத்துச் சொல்லும்பொழுது தான் இவையெல்லாம் இருக்கின்றனவாக ஆகின்றன. இவற்றை எடுத்துச் சொல்லாத பொது இருந்தும் இல்லாதன போல் ஆகின்றன.

ஆன உணர்த்துவார் உண்டான போது: “ஆன” என்பது வினைச் சொல். இவையெல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்தில் இருக்கின்றனவாக ஆகின்றன. இவற்றை உணர்த்துவார் ஆர் எனில்? அவரே ஆசார்யர் ஆவார். அதுதான் இந்நூல் முதற் பாடலில் “உவ்வானவர்   உரைத்தார்” என்று கூறப்பட்டது. இதுவே ஆசார்யன் செய்யும் பேருதவியாகும். இதையே “அறியாதன அறிவித்த அத்தா” என்றார் நம்மாழ்வார். “பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார் பெரியாழ்வார். இவ்வாறு ஆசார்ய வைபவம் பேசப்பட்டது.

==பிரமேயசாரம் நிறைவடைந்தது-===

===பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்====

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும்”

Leave a Comment