யதிராஜ விம்சதி – ச்லோகம் – 13

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 12                                                                                                                    ச்லோகம் 14

ச்லோகம் 13 

तापत्रयीजनितदुःखनिपातिनोSपि देहस्थितौ मम् रुचिस्तु न तन्निव्रुत्तौ ।
एतस्य कारणमहो मम पापमेव  नाथ! त्व्मेव हर तध्यतिराज! शीघ्रम् ॥ (13)

தாபத்ரயீஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே, தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும், மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் , தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில், ருசி: – ஆசையானது, பவதி – உண்டாகிறது, தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில், ந ருசி: – வெறுப்பு, பவதி – உண்டாகிறது. ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு, காரணம் – காரணமானது, மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும். நாத – ஸ்வாமீ!, த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே, தத் – அப்பாவத்தை, ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே, ஹர – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம், நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும். அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை, நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால். தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள், (1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன, (2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன. (3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன. இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு. உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும் ‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க. ‘தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் ந என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது. ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால். இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம், இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment