ஞான ஸாரம் 32- மானிடவன் என்னும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                           32-ஆம் பாட்டு:

முன்னுரை:

‘மாடும் மனையும் ‘ என்ற பாடலில் ;பெரிய திருமந்திரம்’ என்று சொல்லப்படும் திருவட்டாக்ஷற மந்திரத்தை உபதேசம்  பண்ணின ஆசார்யன் திருவடிகளே எல்லாப் பயனுமாகும் என்றறிந்து கொள்ளாத அறிவிலிகளோடு ஏற்படும் உறவை அறவே விட்டிடுகை சாஸ்திரக்கட்டளையாகும் என்று கூறப்பட்டது. ‘வேதம் ஒரு நான்கின் என்ற 31ம் பாடலில் அனைத்து சாஸ்திரங்களும்  கூறுவது ‘சரணாகதிப் பொருளை உள்ளடிக்கிய த்வய மந்திரத்தை உபதேசித்த ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் ‘ என்று கூறப்பட்டது. இப்படி ஆசார்யனின் சிறப்பு விளக்கப்பட்டது. இவ்வறு கீழ்ச் சொன்ன இரண்டு பாடல்களில் சிறப்பிக்கப்பட்ட ஆசார்யனை பகவானுடைய (இராமன், கண்ணன் முதலிய அவதாரங்கள் ) போல ஓர் சிறப்பு அவதாரம் என்று ஈடு படவேண்டும். அவ்வாறு ஈடு படாமல் மனிதத் தோற்றமாகவே எண்ணும் மூடர்களுக்கு வரக்கூடிய கேடுகளையும் , பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திருக்கோயில்களில் அமையப் பெற்ற இறைஉருவங்களை எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டது போன்ற ஆராச்சிகள் பண்ணும் மூடனுக்கும் வரக்கூடிய கேடுகளையும் இப்பாட்டு எடுத்துக் காட்டுகிறது.

“மானிடவன் என்னும் குருவை மலர் மகள் கோன்
தானுகந்த கோலம் உலோக மென்றும் – ஈனமதா
எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழாம் நரகு.”

பதவுரை:

குருவை தனக்கு மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆச்சார்யனை
மானிடவன் என்றும் சாதாரண மனிதர்களைப்போல் இவரும் ஒரு மனிதர் என்றும்
மலர்மகள் கோன் தாமரையாள் நாயகனான ஸ்ரீமன் நாராயணன்
தானுகந்த கோலம் தான் விரும்பி ஏற்றுக்கொண்டதான சிலை வடிவங்ககளை
உலோகம் என்றும் பஞ்சலோகம் முதலிய பொருட்கள் என்றும்
ஈனமதா கீழ்த்தரமாக
எண்ணுகின்ற நினைக்கின்ற
நீசர் கீழ்மக்களான
இருவரும் இவர்கள் இருவருமே
எக்காலும் காலம் உள்ளவரையும்
நரகு நரகத்தை
நண்ணிடுவர் அடைவார்கள்

விளக்கவுரை :
மானிடவன் என்றும் குருவை: பிறவிப்பெருங்கடலில் உழலும் ஆன்மாக்களை அக்கடலிலிருந்து கரையேற்றுவிப்பதற்காக தெய்வம் மனித உருவங்கொண்ட குரு வடிவத்தில் தோன்றி இருக்கிறான் என்ற நம்பிக்கை கொள்ள வேணும் . நாராயணனாகிற தேவனே மனித வடிவம் கொண்டான் என்று நூல்கள் பகர்கின்றன. இவ்வாறு தெய்வமாகக் கூறப்படும் குருவை மனிதன் என்று நினைக்கிறவனது எண்ணம் பொல்லாதது என்றும் அவன் கற்ற கல்வி எல்லாம் பயனற்றது என்றும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும்: திருமகள் நாயகனான பகவான் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட சிலை உருவத்தை பஞ்ச லோகங்கள் என்றும் மற்றும் வேற வேறு பொருட்கள் என்றும் அதாவது மரம் முதலிய பொருட்கள் என்று ஆராய்ச்சி செய்வது மிகவும் பாபகரமாகும். இந்த உருவங்களை “உமருகந்தவுருவம் நின்னுருவம்” (திருவாய்மொழி 8-1-4) என்ற பாடலில் நம்மாழ்வார் விளக்கி இருக்கிறார். அதாவது தன்னிடத்தில் அன்புடையவர்கள் எந்த உருவத்தில் தன்னை வழிபட என்று விரும்புகிறர்களோ  அந்த உருவமாகத் தான் ஆகிறான். அவ்வுருவத்தில் தனக்கே உரித்தான தெய்வீகத் திருவுருவத்தில் தான் செய்யும் விருப்பத்தை இந்த சிலை உருவத்திலும் செய்கிறான்.இந்த ‘உருவம்’ என்பது பக்தன் நிர்மாணித்த உருவம். அதனால் இதுவும் தெய்வீக உருவமாக ஆகிறது. இப்படி ஒரு பக்தன் நிர்மாணித்த விக்ரஹத்தில் தனக்கே உரித்தான தெய்வீக உருவத்தில் தான் செய்யும் விருப்பத்தைச் செய்வதால் அவனுடைய  விருப்பத்தைப் பொறுத்து இதுவும் தெய்வீகமகி விடுகிறது. அவ்வுருவத்திற்கு அணிவிக்கும்ஆபரணங்களும் மற்றும் அனைத்தும் உலகியலுக்கு மாறுபட்டு  தெய்வீகமாக ஆகிறது.  இதை “அப்ராக்ருதம்” என்று சாஸ்திரம் கூறும். இந்த சாஸ்திர நுட்பத்தை அறியாதார் மேலெழத் தோன்றுகிற பஞ்சலோகம் முதலான உருவத்தையே பார்த்து அதி அராய்ச்சி பண்ணுவது கொடிய பாபமாக சாஸ்திரம் கூறுகிறது. இப்பாபம் எது போரது எனில் ‘பெற்ற தாயிடம் தான் பிறந்த இடத்தைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பது போலும்” என்று சாஸ்திரம் மிகக் கொடூரமாக கூறியுள்ளது.

ஈனமதா:  தாழ்வாக – பாடி மிகவும் தாழ்வாக எண்ணுகின்ற நீசர்கள் அதாவது ‘குருவை மனிதன்’ என்றும் ;தெய்வ உருவத்தைப் பஞ்சலோகம் முதலியன என்றும் எண்ணுகின்ற கீழ்த்தரமானவர்கள் என்பதாம். கீழ்த்தரம் என்றால் இவர்களைக் காட்டிலும்தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கருத்து. அதாவது மந்திரோபதேசம் செய்த ஆசார்யனையும், வழிபாட்டிற்குரிய இறை உருவங்களையும் கீழ்க்கூறிய வண்ணம் தாழ்வாக நினைப்பவர்கள் கர்ம சண்டாளர்கள் என்று சொல்லப்படும் பாபிகள் ஆவர் என்பதாம். அதாவது எண்ணத்தால் தாழ்ந்தவராவர். ‘உள்ளுவதெல்லாம்  உயர்வுள்ளல்’ என்று கூறும் தமிழ் வழக்கு இங்கு காணத்தக்கதாகும். ‘உயர்வை எண்ணவேண்டிஅய் உள்ளத்தில் தாழ்வை எண்ணுவது பாபமாகும்.

இருவருமே: அதாவது கீழ்ச்சொன்ன குருவை மனிதனாக எண்ணுபவனும் இறைவனது திருவுருவங்களை  உலோகமாக எண்ணுபவனும் ஆக இவ்விருவரும்  ஓரி நிகரான பாபிகளாயிருப்பதால் மேல் கூறப்போகும் கேடு இவ்விருவருக்குமே உரித்தாகும். (இருவருக்கும் வரும் கேடாவது)

எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு: எல்லாக் காலத்திலும் அதாவது, காலம் என்கிற தத்துவம் உள்ளதனையும் கீழான நரகத்தை அடைவர் என்று பொருள். கீழாம் நரகு என்றால் இதுக்கு மேல் கீழான நரகம் என்று ஒரில்லை என்று சொல்லத்தகுந்த நரகம் என்பதாம். நரகம் என்பது இன்பம் கலவாது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் இடம் என்று பொருள். இத்தகைய ‘நரகத்தை எக்காலும் நண்ணிடுவர்’ என்றது. நரகத்திலேயே பிறந்து நரகத்திலேயே வளர்ந்து நரகத்திலேயே முடிவதாம். கரையேறுவதற்கு அரிதான கரை காண முடியாத பிறவிப் பெருங்கடலில் மாறி மாறி பல பிறப்புகளிலும் பிறந்து இங்கேயே உழன்று வரும் மூடர்கள் ஆவார்கள் என்றும் கூறலாம். ஆகவே மேற்கூறிய இரண்டு பாபிகளும் துன்பத்திலிருந்து விடுபடுதல் இல்லை என்றவாறாம் .குருவை மானிடன் என்று கருதுவோரையும் கடவுள் திருவுருவத்தை உலோகம் என்று கருதுவோரையும் உடன் கூறுவதால் ;இது உடன் நவிற்சிப் பொருள் என்ற இலக்கணத்தின் பால் படும்.

Leave a Comment