எம்பெருமானார் வடிவழகு பாசுரம் விளக்கவுரையுடன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துரவாடை பதிந்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடும் முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற் சிகைமுடியும்
எப்பொதுழும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

எம்பார் இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திருமேனி அழகில் மிகவும் ஈடுபட்டு, அதை நாம் எல்லாரும் அனுபவிக்கும்படி வெளியிடுகிறார். அத்தோடு, தாம் எம்பெருமானாரின் வடிவழகில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பதால் தமக்கு ஒப்பானவர் ஆருமில்லை என்று துணிந்து அறிவிக்கிறார். இந்தப் பாசுரத்தைப் பெரிய பெருமாள் விஷயமாகத் திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் என்னும் அற்புத ப்ரபந்தத்தைப் போலே திருவடி முதல் திருமுடி வரை அனுபவிக்கும் விதமாக அமைத்துள்ளார்.

பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும் – எம்பெருமானாருடைய திருவடிகளும் அவற்றில் இருக்கும் விரல்களும், தாமரைப் புஷ்பங்களும் அவற்றின் இதழ்களும் போல அமைந்துள்ளன.

பாவனமாகிய பைந்துரவாடை பதிந்த மருங்கழகும் – எம்பெருமானாருடைய திருத்துடைகளில் சேர்ந்திருக்கும் புனிதமான காஷாய (காவி) வஸ்த்ரம் அழகாக அமைந்துள்ளன.

முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும் – எம்பெருமானாருடைய திருத்தோள்களில் சாற்றப்பட்டிருக்கும் மூன்று புரிகளையுடைய யஞ்ஜோபவீதமும் திருக்கையில் ஏந்திய மூன்று தண்டங்களையுடைய த்ரிதண்டமும் அழகாக அமைந்துள்ளன.

முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடும் முறுவல் நிலாவழகும் – எம்பெருமானாருடைய புன்முறுவலோடு இருக்கும் திருவதரங்களில் (உதடுகள்) ஆழ்வார்கள் மற்றும் முன்னோர்களின் திவ்யமான வார்த்தைகளே நிறைந்துள்ளன. இவையும் அழகாக அமைந்துள்ளன.

கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும் – எம்பெருமானாருடைய கற்பக மரத்தைப் போன்ற கருணையைப் பொழிந்து கொண்டிருக்கும் தாமரை போன்ற கண்களும் அழகாக அமைந்துள்ளன.

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற் சிகைமுடியும் – காரி என்கிற சிற்றரசரின் திருக்குமாரரான நம்மாழ்வாருடைய திருவடிகளைத் தம் திருமுடியில் (தலையில்) சூடியுள்ளார். அங்கிருக்கும் மிகவும் அழகான சிகை (குட்மி) அழகாக உள்ளது.

எப்பொதுழும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால் – இப்படிப்பட்ட எம்பெருமானாராகிய யதிகட்கு இறைவனின் திருமேனி அழகை நான் எப்பொழுதும் என் மனதில் சிந்தித்துக்கொண்டே இருப்பதால்

இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே – எனக்கு ஸமமாக யாரும் இல்லை என்பதை மூன்று முறை சொல்லி உறுதிப்படுத்துகிறேன்.

அதாவது எம்பெருமானாரின் திருமேனி அழகில் இடுபட்டிருப்பதால், தனக்கு எப்பொழ்தும் ஸத்வ குணம் நிறைந்திருக்கும் என்றும், அப்படி இருப்பதால் எப்பொழுதும் எம்பெருமான் மற்றும் எம்பெருமானார் விஷயத்தில் மட்டுமே ஈடுபட்டிருப்பார் என்றும் சொல்லி, இப்படித் தம்மைப்போலே இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை என்றும் “ஸாத்விக அஹங்காரத்துடன்” (ஸத்வ குணம் நிறைந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் பேருகப்புடன்) அறிவிக்கிறார். இதன் குறிக்கோளாவது, நாமும் இப்படி எம்பெருமானார் திருமேனி அழகிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்த.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment