வாழிதிருநாமங்கள் – எம்பார் மற்றும் பராசர பட்டர் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார்

எம்பார் வைபவம்

எம்பார் என்பவர் எம்பெருமானார் ராமாநுஜருக்கு சிறிய தாயார் குமாரர்.   எம்பெருமானாரின் தாயாரும் எம்பாரின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள்.  எம்பாரின் இயற்பெயர் கோவிந்தப் பெருமாள்.  இவர் அவதார ஸ்தலம் மழலை மங்கலம் என்று சொல்லப்படும் மதுர மங்கலம் ஆகும்.  ஸ்ரீபெரும்பூதூருக்கு அருகில் இருக்கக் கூடிய க்ஷேத்ரம்.  இவருடைய திருநக்ஷத்ரம் தை மாதம் புனர்பூசம் ஆகும்.  இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள் விஜ்ஞான ஸ்துதி மற்றும் எம்பெருமானார் வடிவழகு பாசுரம் (பற்பமெனத் திகழ் பைங்கழலும் என்று தொடங்கும் பாசுரம்). இவர் எம்பெருமானாருடைய திருவடி நிழலாகவே கருதப் படுகிறார்.  ராமானுஜ பதச்சாயா என்று இவர் தனியனில் கூறப்பட்டுள்ளது.  பகவத் விஷயத்தில் இருக்கும் ஆழமான கருத்துக்களை ரசித்து அநுபவித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கும் தன்மை பெற்றவர்.  உலக விஷயங்களில்  பரம விரக்தர்.  சிறிதளவும் ஈடுபாடு இல்லாதவர்.  இவர் எம்பெருமானாரைக் காப்பாற்றியவர் என்ற பெருமை கொண்டவர்.

சிறிய வயதில் எம்பெருமானார் இளையாழ்வாராகவும் எம்பார் கோவிந்தப் பெருமாளாகவும் யாதவப்ரகாசரிடம் கல்வி பயிலும் காலத்தில் யாதவப்ரகாசரும்  அவரது சிஷ்யர்களும் இளையாழ்வாரின் பெருமை பெருகுவதைக் கண்டு அவர் மீது பொறாமை கொண்டு அவரைக் காசி யாத்திரை கூட்டிக் கொண்டு போய் கங்கையில் மூழ்கடித்துக் கொன்று விடத் திட்டம் தீட்டினர்.   அவ்வாறு யாத்திரை சென்று கொண்டிருக்கும் போது கோவிந்தப் பெருமாள் இளையாழ்வாரிடம் “தேவரீர் இங்கு இருக்க வேண்டாம். இவ்விடத்தை விட்டுச் சென்று விடுங்கள்.  இவர்கள் உம்மைக் கொல்ல நினைக்கின்றனர்” என்று கூறினார்.  இளையாழ்வாரும்  காஞ்சீபுரம் திரும்ப நினைக்கிறார்.  தேவப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் அவருக்குத் துணையாக இருந்து வழிகாட்டினர்.  கோவிந்தப் பெருமாள் யாதவப்ரகாசர் கோஷ்டியுடன் காசிக்குச் சென்று கங்கையில் நீராடும்போது பகவத் சங்கல்பத்தின் படி அவர் கையில் ஒரு லிங்கம் கிடைத்தது.  அதைப் பார்த்த யாதவப்ரகாசர் “உமக்கு ருத்ரனின் அனுக்ரஹம் உள்ளது.   எனவே நீர் ருத்ர பக்தனாக மாற வேண்டும்” என்று கூற கோவிந்தப் பெருமாளும் மனம் கலங்கிப் போய் காளஹஸ்தியை அடைந்து அங்கு சிறந்த ருத்ர பக்தனாக சில காலம் வாழ்ந்து வந்தார்.  காலம் உருண்டோடியது.

இளையாழ்வார் ராமானுஜராக சந்நியாசம் பெற்று திருவரங்கத்தில் வாழ்ந்த காலத்தில், தமக்கு பகவத் கைங்கர்யத்தில் கோவிந்தப்பெருமாள் உறுதுணையாக இருப்பார் என்று எண்ணி தனது தாய்மாமனான பெரிய திருமலை நம்பியிடம் சிவ பக்தரான கோவிந்தப் பெருமாளை திருத்திப் பணி கொண்டு வருமாறு பணித்தார்.  பெரிய திருமலை நம்பி காளஹஸ்திக்குச் சென்று கோவிந்தப் பெருமாளுக்கு உபதேசங்கள் செய்து அவரை மீண்டும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வந்தார்.  பெரிய திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து ஆசார்யனாக இருந்து அவரை மீட்டு வந்தார்.  கோவிந்தப் பெருமாளுக்கு பெரிய திருமலை நம்பியிடம் மிகுந்த நன்றியுணர்வு ஏற்பட்டது.    அதனால் அவர் பெரிய திருமலை நம்பிக்குக் கைங்கர்யம் செய்வதை பெரும் பேறாக எண்ணினார்.

அந்த சமயத்தில் ராமானுஜர் திருமலை திருப்பதி வந்து பெரிய திருமலை நம்பிகளிடம் ஒரு வருட காலம் ராமாயண காலக்ஷேபம் கேட்டு வந்தார்.  காலக்ஷேபம் முடிந்து ராமானுஜர் திருவரங்கம் செல்ல ஆயத்தமான போது தன்னுடனிருந்த கோவிந்தப் பெருமாளை பெரிய திருமலை நம்பி ராமானுஜருடன் திருவரங்கம் சென்று பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு பணித்தார்.  கோவிந்தப் பெருமாளுக்கு ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிய மனமின்றி ஆசார்யர் ஆணையை மீற மனமில்லாமல் ராமானுஜருடன் சென்றார்.  செல்லும் வழியில் ஆசார்யரைப் பிரிந்து அவர் வாடியிருப்பதைக் கண்ட ராமானுஜர் “தேவரீர் இன்னும் சிறிது காலம் திருப்பதியில் பெரிய திருமலை நம்பியுடன் இருந்து வாரும்” என்று திருப்பி அனுப்பினார்.    பெரிய திருமலை நம்பி “உம்மை ராமானுஜருக்குக் கொடுத்து விட்டோம்.  இனி ஏற்க இயலாது” என்று கூற கோவிந்தப் பெருமாள் ஆசார்யரின் திருவுள்ளத்தைப் புரிந்து கொண்டு திருவரங்கம் வந்து ராமானுஜருக்கு மிகுந்த உகப்புடன் கைங்கர்யங்கள் செய்து வந்தார் என்று அறிகிறோம்.

திருவரங்கம் வந்த பின் ராமானுஜர் அவருக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்தார்.  ஆனால் அவருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை.   ராமானுஜர் அவரை “நீர் உமது மனைவியுடன் ஏகாந்தத்தில் இரும்” என்று அனுப்பினார்.  அன்று இரவு கோவிந்தப் பெருமாள் மனைவியுடன் தனிமையில் இருந்த போது காணும் இடமெல்லாம் எம்பெருமான் வடிவழகைக் கண்டார்.  அந்தக் காட்சியை மனைவியிடம் கூறினார்.  மறுநாள் காலை ராமானுஜரிடமும் அதைத் தெரிவித்து தமக்கு இல்லற வாழ்க்கையில் பற்று இல்லை என்று கூறினார்.  ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டு அவருக்கு சந்நியாச ஆச்ரமத்தை அருளிச் செய்தார்.   அவருக்கு எம்பார் என்ற திருநாமமும் வழங்கப்பட்டது.  எம்பார் குரு பரம்பரையில் ராமானுஜருக்கு அடுத்த ஆசார்யராக இருந்து சம்பிரதாயம் வளரப் பெரிதும் உதவினார் எனலாம்.

எம்பார் வாழி திருநாமம்

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே

பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன்   வாழியே

மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே

மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே

தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே

திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே

பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே

பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே – தாமரை மலரில் இருக்கக்கூடிய மஹாலக்ஷ்மித் தாயார்.  தாயாரின் அருளால் கைங்கர்யச் செல்வத்தில் சிறந்து விளங்கிய எம்பார் பல்லாண்டு வாழ்க.

பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன்   வாழியே – பொய்கையாழ்வார் முதலான பத்து ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப்ரபந்தங்களின் உட்கருத்துக்களை எடுத்துரைத்த எம்பார் வாழ்க.  இவ்விடத்தில் ஒரு சுவையான சம்பவம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் அரையர் சேவை நடக்கும்போது எம்பெருமானாருடன் கோஷ்டியார் அனைவரும் அதனை ரசிப்பர்.  அரையர் சேவை என்பது ஆழ்வார்களின் பாசுரங்களை அரையர் அபிநயம் பிடித்துக் காட்டுவார்.  எம்பார் அரையர்கள் காட்டும் அபிநயத்திற்கும் மேலாகச் சிறந்த அபிநயத்தை அவர்களுக்குச் சைகை முறையில் எடுத்துக்காட்ட அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு அடுத்தமுறை எம்பார் காட்டிய அபிநயத்தையே பிடித்துக் காட்டினர்.  இவ்வாறு அவர்கள் மறுமுறை அபிநயம் மாற்றிச் செய்யும் போது எம்பெருமானார் “இவை எம்பாரின் அபிநயங்களோ” என்று ரசித்துக் கேட்பாராம்.  மேலும் ஆழ்வாரின் பாசுரங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஐயமறத் தீர்த்து வைப்பாராம்.  உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து நான்காம் திருமொழி பலப் பாசுரத்தில் “சாயைப் போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே” வரும் வரிகளுக்கு எம்பார் எம்பெருமானாரின் திருவடிகளை சிரமேற்கொண்டு ஒரு சிறப்பான அர்த்தத்தை இவ்வரிகளுக்கு வெளியிடுகிறார்.  எம்பெருமானை விட்டுப் பிரியாமல் இருக்கக் கூடியவர்கள் நன்றாகப் பாடுவார்கள் என்று கூறினார்.  இவ்வாறு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அழகான அர்த்தங்களைக் கூற வல்ல எம்பார் வாழ்க.

மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே –  மா என்றால் விலங்குகள்.  அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூர் எழில் மிகுந்த சோலைகளால் சூழப் பெற்று மிருகங்கள் இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.  அவ்வாறு மிருகங்கள் வாழும் சோலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் மலர் போன்ற திருவடிகளை கருத்தில் கொண்ட எம்பார் பல்லாண்டு வாழ்க.

மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே – மகர மாதம் என்பது தை மாதத்தைக் குறிக்கும்.  தை மாதம் புனர்பூசத்தில் இப்பூவுலகில் அவதரித்த எம்பார் வாழ்க.

தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே  – காளஹஸ்தியில் கோவிந்தப் பெருமாள் சிவ பக்தராக இருந்த காலத்தில் பெரிய திருமலை நம்பி நம்மாழ்வாரின் திருவாய்மொழி இரண்டாம் பத்து, இரண்டாம் பதிகத்தில் உள்ள நான்காவது பாசுரமான

“தேவும் எப்பொருளும் படைக்க

பூவில் நான்முகனைப்  படைத்த

தேவன் எம்பெருமானுக்கல்லால்

பூவும் பூசனையும் தகுமே?”

என்ற பாசுரத்தை எடுத்துக் காட்டி பூக்களும் பூஜைகளும் தன் உந்தித் தாமரையில் பிரம்மனைப் படைத்த ஸ்ரீமந் நாராயணனுக்கல்லால் யாருக்கும் தகுதியில்லை என உபதேசம் செய்த பின் தான் கோவிந்தப் பெருமாள் மனம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு வந்தார்.  அவ்வாறு நம்மாழ்வாரின் “தேவும் எப்பொருளும் படைக்க” என்ற பாசுரத்தின் மூலம் மனம் திருந்திய எம்பார் பல்லாண்டு வாழ வேண்டும்.

திருமலைநம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே – பெரிய திருமலை நம்பிக்கு அயர்வின்றி அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்தவர் கோவிந்தப் பெருமாள்.  ஒரு சமயம், பெரிய திருமலை நம்பிக்குப் படுக்கையைச் சரி செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்த கோவிந்தப் பெருமாள் அதில் படுத்து உருண்டு பின் திருப்தியுடன் இறங்கி வருவதை எம்பெருமானார் கண்ணுற்றார்.  ஆசார்யன் படுக்கையில் படுத்து சிஷ்யன் எழுந்து வருவதைப் பார்த்த எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை அழைத்து “நீர் இவ்வாறு செய்யலாமா?” என்று வினவ கோவிந்தப் பெருமாள் “நான் படுக்கையில் படுத்துப் பார்த்தால் தான் ஒரு துரும்பும் கூட ஆசார்யாருக்கு உறுத்தா வண்ணம் சரி செய்ய முடியும்” என்று கூறினார்.  அவருடைய ஆசார்ய பக்தியைக் கண்ட எம்பெருமானார் வியப்படைந்தார் என்று அறிகிறோம்.  அவ்வாறு பெரிய திருமலை நம்பிக்கு அனைத்து கைங்கர்யங்களையும் சிறப்பாகச் செய்த எம்பார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே –  இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இன்றி சந்நியாசம் பூண்டவர் கோவிந்தப் பெருமாள்.    தன் மனைவியுடன் ஏகாந்தமாக இருக்கும் காலத்தில் எம்பெருமானைப் பிரகாசமாக அனைத்து இடங்களிலும் கண்டு இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்.  பெண்களுடன் கலப்பதை இருளாக நினைத்து உயர்ந்த நிலையை அடைந்த எம்பார் வாழ்க.

பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே – கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டருக்கு எம்பார் ஆசார்யன் ஆவார்.  கூரத்தாழ்வானின் இரட்டையாகப் பிறந்த திருக்குமாரர்களுக்குப் புண்ணியாகவசனம் நடக்கும் காலத்தில் எம்பெருமானார் அங்கு சென்று எம்பாரிடம் அக்குழந்தைகளைக் கொண்டு வருமாறு கூற, எம்பாரே அக்குழந்தைகள் காதில் அக்குழந்தைகளுக்கு காப்பாக இருக்கட்டும் என்று த்வய மந்திரத்தை ஓதுகிறார்.  அதை உணர்ந்த எம்பெருமானார் “தேவரீரே இக்குழந்தைகளுக்கு ஆசார்யராக இரும்” என்று கூறுகிறார்.  அதனால் கூரத்தாழ்வானின் திருக்குமாரர்களான வேத வ்யாஸ பட்டரும், பராசர பட்டரும் எம்பாரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டனர்.  அவ்வாறு பராசர பட்டர் தொழும் எம்பாரின் பொன் போன்ற திருவடிகள் இரண்டும் பல்லாண்டு வாழ்க என்று எம்பாரின் வாழி திருநாமம் நிறைவுறுகிறது.

பராசர பட்டர் வைபவம்

பராசர பட்டர் கூரத்தாழ்வானின் இரு குமாரர்களில் ஒருவர்.    பராசர பட்டர் பிறந்தவுடன் எம்பெருமானார் “இக்குமாரரை பெரிய பெருமாள், பெரிய பிராட்டியாருக்கு ஸ்வீகாரம் கொடுத்து விடவும்.  இவர் அவர்களின் புத்திரனாக வளரட்டும்” என்று கூற கூரத்தாழ்வானும் அவ்வாறே செய்ய இவர் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியின் புத்திரனாகவே வளர்ந்தார்.  ஸ்ரீரங்கநாத புத்திரன் என்று அறியப்பட்டார்.  திருவரங்கத்தில் வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  சிறு வயதிலேயே மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்தவர்.  இவர் சிறு வயதில் திருவரங்க வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இவரது திருத்தகப்பனாரான கூரத்தாழ்வான் “பாடசாலை சென்று சந்தை கற்றுக் கொள்ளவில்லையா?” என்று வினவ இவர் “நேற்று நடந்த பாடத்தையே இன்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள்” என்று தெளிவாக பதிலிறுத்தார்.  அதற்குக் கூரத்தாழ்வான் “நாலைந்து முறையாவது பாடங்களைக் கற்றுக் கொண்டால்தானே மனப்பாடம் ஆகும்” என பட்டர் “எனக்கு நேற்று சொல்லிக் கொடுத்ததே மனப்பாடம் ஆகிவிட்டது” என்று பாடங்களை சொல்லிக் காண்பித்தாராம்.  அவ்வாறு ஒரு முறை ஒரு விஷயம் கேட்டால் க்ரஹிக்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.  சாஸ்திரங்களில் மிகுந்த ஞானம் உடையவராக இருந்தார்.  ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், அஷ்டஶ்லோகீ, ஸ்ரீகுணரத்ந கோஶம், பகவத் குண தர்ப்பணம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார்.  அஷ்டஶ்லோகீ என்பது திருமந்த்ரம், த்வயம், சரம ஶ்லோகம் போன்றவற்றிற்கு சப்தங்களைச் சொல்லாமல் ஶ்லோக வடிவில் வெளியிட்டுள்ளார்.  அதாவது இந்த உயர்ந்த மந்த்ரத்தின் வார்த்தைகளைக் குறிப்பிடாமல் எட்டு ஶ்லோகங்களில் அழகாக அருளியுள்ளார்.  ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் என்பது பல சாஸ்திரங்களின் அர்த்தங்களைக் கொண்டாதான ஸ்தோத்ர க்ரந்தம்.  ஸ்ரீகுணரத்ந கோஶம் பெரிய பிராட்டியின் வைபவத்தைக் காட்டக் கூடியது.  பகவத் குண தர்ப்பணம் மூலம் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு அற்புதமான வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு பல அர்த்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.  இவருக்குப் பின் ஓராண் வழியில் வந்த பல ஆசார்யர்களும் இவர் அருளிய மேற்கோள்களைச் சொல்லி “பட்டர் நிர்வாஹம்” என்று காட்டியுள்ளனர்.  ஸ்ரீரங்க நாதரையும், ஸ்ரீரங்க நாயகித் தாயாரையும் தந்தை தாயாகவே பாவித்தவர்.  பிராட்டியே இவரைத் தூளியில் இட்டு வளர்த்தார் என்பதை இவர் தமது க்ரந்தங்களில் காட்டியுள்ளார்.  அத்தகைய ஞானமும் பெருமையும் பெற்றவர் பராசர பட்டர்.  ஸ்ரீரங்கநாதருக்குப் புரோகிதராக இருக்கும் கைங்கர்யத்தைச் செய்தவர்.  அதனால் ஸ்ரீரங்க புரோகிதர் என்றே அறியப்பட்டார்.

பராசர பட்டர் வாழி திருநாமம்

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே

திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே

அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே

அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே

மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே

வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே

பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே

பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

பராசர பட்டர் வாழி திருநாமம் விளக்கவுரை

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே – தெற்குத் திசையில் உள்ள திருவரங்க எம்பெருமான் ஸ்ரீரங்கநாதரின் மைந்தன் (புத்திரன்) எனச் சிறப்புப் பெற்ற பராசர பட்டர் வாழ்க.

திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே – திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வார் அருளிச் செய்த கடைசிப் ப்ரபந்தம்.  இந்த அற்புதமான ப்ரபந்தத்தில் சாஸ்திரங்களின் சாராம்சம் முழுவதையும் திருமங்கையாழ்வார் காட்டியுள்ளார்.  பெரியவாச்சான் பிள்ளை அருளிய திருநெடுந்தாண்டக வ்யாக்யானத்தில் முதல் மூன்று பாசுரங்களிலேயே அனைத்து சாஸ்திரங்களின் அர்த்தங்களும் காட்டப்பட்டு விட்டது என்று அருளிச் செய்துள்ளார்.  இந்தப் ப்ரபந்தத்தில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தார் பராசர பட்டர்.  திருநாராயணபுரத்தில் இருந்த மாதவாசார்யர் என்பவரை (பிற்காலத்தில் நஞ்சீயர், வேதாந்தி என்று அறியப்பட்டவர்) திருநெடுந்தாண்டகத்தை முன் வைத்து வாதத்தில் வென்றவர் பராசர பட்டர்.  அந்த வாதத்தில் வென்று அத்யயன உற்சவத்திற்கு முதல் நாள் திருவரங்கம் வருகிறார்.  பெரிய பெருமாளிடம் மேலை நாட்டில் வேதாந்தியை வெற்றி பெற்ற விவரத்தைக் கூற எம்பெருமான் உகந்து “நம் முன்னே திருநெடுந்தாண்டகத்தை விண்ணப்பம் செய்யவும்” என்று ஆணையிட அதன்படி பட்டர் நம்பெருமாள் முன்பு திருநெடுந்தாண்டகத்தைச் சேவித்தார் என்று அறிகிறோம்.  இவ்வழக்கம் இன்றளவும் அத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருவரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படுகிறது.  அவ்வாறு சிறப்புப் பெற்ற திருநெடுந்தாண்டகத்தின் கருத்துக்களை கற்றுத் தேர்ந்த பராசர பட்டர் பல்லாண்டு வாழ்க.

அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே – முற்காலத்தில் வயல்களும் வாவிகளும் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்திருக்கின்றன.  வயல்களால் சூழப்பெற்ற ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் திருவடிகளை பணிந்த பட்டர் வாழ்க. எம்பெருமானார் வாழ்ந்த காலத்தில் சிறு வயதில் இருந்த பட்டரை நம்பெருமாள் முன்பு நிறுத்தி சில ஶ்லோகங்களைச் சேவிக்கச் செய்தார்.  பட்டர் சிறப்பாக சேவித்தவுடன் உகப்படைந்த எம்பெருமானார் தம்முடைய கோஷ்டியினரிடம் “எனக்கு நிகரானவர் இந்த பராசர பட்டர், நான் வேறு அவர் வேறல்ல” என்று கூறினாராம்.  எனவே தான் எம்பெருமானாரின் சிஷ்யர்களான அனந்தாழ்வான், கிடாம்பியாச்சான் போன்றவர்கள் பராசர பட்டரை விட வயதில் மூத்தவர்களாக இருந்த போதும் எம்பெருமானாருக்குக் கொடுக்கும் சிறப்பான மரியாதையையும், மதிப்பையும் பராசர பட்டருக்கும் அளித்தனர் என்று அறிகிறோம்.  அவ்வாறு தன் மீது அன்பு கொண்ட எம்பெருமானாரின் அடி பணிந்த பராசர பட்டர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே –  பராசர பட்டரின் ஆசார்யர் எம்பார் என்று அறிந்தோம்.  எம்பாரிடமும், தனது திருத்தகப்பனாரான கூரத்தாழ்வானிடமும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவர் பராசர பட்டர்.  இருவரையுமே ஆசார்யராக நினைத்திருந்தனர் பராசர பட்டரும், அவரது சகோதரரான வேத வ்யாஸ பட்டரும்.  ஏனென்றால் திருமந்த்ர அர்த்தத்தை இருவருக்கும் எடுத்துரைத்தவர் கூரத்தாழ்வான்.  அவ்வாறு வாழ்நாள் முழுதும் எம்பாரின் அடிபணிந்த பராசர பட்டர் வாழ்க.

மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே – தமது தகப்பானாரிடம் மிகுந்த ப்ரதிபத்தி கொண்டிருந்தனர் பராசர பட்டரும் அவரது சகோதரர் வேதவ்யாஸ பட்டரும்.  ஒரு முறை கூரத்தாழ்வான் தமது சிஷ்யர்களுக்கு திருவாய்மொழி ஒன்றாம் பத்து, இரண்டாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமான “எண் பெருக்கந் நலத்து ஒண் பொருளீறில வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே” என்று திருமந்த்ரத்தின் அர்த்தமாக விளங்கும் பாசுரத்தை வ்யாக்யானம் செய்யும்போது பராசர பட்டரும், வேதவ்யாஸ பட்டரும் அந்தக் கோஷ்டியில் இருக்கக் கண்டு கூரத்தாழ்வான் “நீங்கள் உமது ஆசார்யரான எம்பாரிடம் சென்று இந்தப் பாசுரங்களின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.  அத்தகைய நேர்மை படைத்தவர்கள் நமது சம்பிரதாய ஆசார்யர்கள்.  அதைக் கேட்ட  பராசர பட்டரும், வேதவ்யாஸ பட்டரும் அந்தக் கோஷ்டியை விட்டு வெளியேறினர்.  அவர்களும் ஆசார்யர்கள் வார்த்தைக்குக் கீழ்படிந்தவராக இருந்துள்ளனர்.  அவர்கள் வெளியே சென்ற போதும் கூரத்தாழ்வானுக்கு மனக்கிலேசம் ஏற்பட்டது.  அதாவது திருவாய்மொழியின் பாசுரமான “மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்” என்னும்படி தமது திருக்குமாரர்கள் எம்பாரிடம் சென்று திருமந்த்ர அர்த்தத்தை அறிந்து கொள்ளுமுன் அவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று கலக்கம் அடைந்தார்.  உடனே வெளியே சென்ற தமது திருக்குமாரர்களை அழைத்து திருமந்த்ர அர்த்தத்தை அந்த கோஷ்டியிலேயே உபதேசித்தார்.  அதனால் கூரத்தாழ்வானும் பராசர பட்டருக்கு ஒரு ஆசார்யராகக் கருதப்பட்டார். அத்தகைய சிறப்புப் பெற்ற கூரம் என்னும் ஸ்தலத்தில் அவதரித்த கூரத்தாழ்வானின் பெருமைகளை எடுத்துரைக்கும் வல்லமை பெற்ற பராசர பட்டர் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.

வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே – வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பராசர பட்டர்.  ப்ரபந்ந ஜந கூடஸ்தரான நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்திற்கு அடுத்த நாள் அடுத்த நக்ஷத்திரமான அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பராசர பட்டர்.  அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே – ப்ரபந்தங்கள் மற்றும் நான்கு வேதங்கள் ஆகியவற்றின் கருத்துக்கள், குறிக்கோள் முதலியவற்றை தெளிவாக அறிந்தவரான பராசர பட்டர் வாழ்க.

பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே – ஆளவந்தாருக்கு கொடுத்த வாக்குறுதியின் படி (அதாவது பராசர முனிவர், வேதவ்யாஸ முனிவரின் பெருமைகளை ஏற்றம் பெறச் செய்ய வேண்டும்)  எம்பெருமானாரால் கூரத்தாழ்வானின் இரு திருக்குமாரர்களுக்கும் பராசர பட்டர், வேதவ்யாஸ பட்டர் என்று பெயரிடப்பட்டது.  அத்தகைய நற்குணங்கள் பொருந்திய பராசர பட்டரின் பெருமை இந்தப் பாருலகில் வாழ வேண்டும் என்று பராசர பட்டரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment