இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்

அநாதி காலமாக நான் சேர்த்த பாபங்களெல்லாம் போகும்படி மூங்கில் குடியிலே அவதரித்த அமுதனாரின் பொன்னைப்போன்ற விரும்பத்தக்க திருவடிகளை என்னுடைய தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டேன். இப்படிச் செய்தபின் தெற்குத் திக்கில் இருக்கும் யமனும் அவன் அடியார்களும் எனக்கு எவ்விதத்திலும் ஸம்பந்தம் உடையவர்களாக மாட்டார்கள்.

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தியிராமானுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறையந்தாதி ஓதவிசை நெஞ்சமே.

உலக விஷயங்களாலே வரும் சிற்றின்பங்களை எல்லாம் தாழ்ந்தவை என்று தெரிந்து கொண்டு, தன்னைச் சரணடைந்தவர்களிடத்தில் இந்த ஸம்ஸாரத்தை ஜயிக்கும் வெற்றியைக் கொடுக்கிறவர் எம்பெருமானார். நெஞ்சே! அந்த ராமானுஜ முனியின் திருவடிகள் விஷயமாக உயர்ந்த குணங்களை உடைய திருவரங்கத்து அமுதனார் பெருகிவரும் அன்பால் அருளிச்செய்த கலித்துறை அந்தாதி க்ரமத்தில் இருக்கும் இந்தப் ப்ரபந்தத்தைச் சேவிப்பதற்கு இசைவாயாக.

சொல்லின் தொகைகொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமாநுச இது என் விண்ணப்பமே.

இத்தனை பாசுரங்கள் சொல்லுவோம் என்று நிர்ணயித்து, தேவரீருடைய திருவடிகளுக்கு வாசிக கைங்கர்யமாகச் செய்யும் நன்மையை உடைய பக்தர்கள் அந்த பக்தியின் மிகுதியாலே சொல்லும் தேவரீரின் திருநாமங்கள் எல்லாவற்றையும் என்னுடைய நாவினுள்ளே பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் எப்பொழுதும் இருக்கும்படி க்ருபை பண்ண வேண்டும். பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களான ஆறு சமயங்களையும் வென்ற பெரியவரான ராமானுஜரே! இதுவே என்னுடைய ப்ரார்த்தனை.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment