1-ஆம் பாட்டு
अङ्के कवेरकन्यायाः तुङ्गे भुवनमङ्गले।
रङ्गे धाम्नि सुखासीनं वन्दे वरवरं मुनिम् ॥ १
அங்கே கவேரகந்யாயாஸ் துங்கே புவநமங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வரவரம் முநிம்||
பதவுரை: –
துங்கே – மிகவும் உயர்ந்த,
புவந மங்களே – உலகோரின் மங்களங்களுக்கு (எல்லாவகையான நன்மைகளுக்கும்) காரணமான,
கவேரகந்யாயா – அங்கே – காவேரி நதியின் மடியில் (நடுவில்) இருக்கும்,
ரங்கேதாம்நி – திருவரங்கமென்னும் திருப்பதியில்,
ஸுக, ஆஸீநம் – ஸுகமாக (உபத்ரவமேதுமில்லாமல்) எழுந்தருளியிருப்பவரும்,
வரவரம் – (உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழ்கியமணவாளப்பெருமாளை ஒத்திருக்கையால்) அழகியமணவாளர் என்ற திருநாமத்தை தரித்திருப்பவரும்,
முநிம் – ஆசார்யனே ஶேஷியென்ற உண்மையை
மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,
வந்தே – வணங்கித் துதிக்கின்றேன்.
கருத்துரை :-
“மகி ஸமர்ப்பணே” (கதௌ) என்னும் தாதுவடியாகப் பிறந்த மங்களம் என்னும் சொல் கம்யம் (அடையப்படும் பயன்) என்ற பொருளையும், இலக்கணையினால் அதற்கு ஸாதனமான உபாயத்தையும் காட்டுகிறது. இது “கவேர கந்யாயா: அங்கே” என்றவிடத்திலும், “ரங்கேதாம்நி” என்கிறவிடத்திலும் பொருந்துகிறது. இரண்டும் நமக்கு அடையப்படும் பயனாகவும் மற்றுமுள்ள பயன்களுக்கு உபாயமாகவும் ஆகக் குறையில்லையல்லவா?
‘ரங்கம்’ என்ற சொல் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்குமிடம் என்னும் பொருளைத் தரும். ‘ஸுகாஸீநம்’ என்பதனால், மணவாளமாமுனிகளின் அவதாரத்திற்குப்பின்பு துலுக்கர் முதலியோரால் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வகையான உபத்ரவமுமில்லை என்பது ஸூசிப்பிக்கப்பட்டது. எம்பெருமானார் காலத்தில் சைவர்களாலும், பிள்ளைலோகாசார்யார், வேதாந்ததேசிகர் ஆகியவர் காலத்தில் துலுக்கர்களாலும் உபத்ரவம் நேர்ந்ததுபோல் மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.
‘வதி – அபிவாதந ஸ்துத்யோ’ என்று தாதுவடிவாகப் பிறந்த ‘வந்தே’ என்னும் வினைச்சொல், உடலால் தரையில் விழுந்து வணங்குதலையும், வாயினால் துதித்தலையும் நேராகக் குறிப்பிட்டு, இவ்விரண்டும் மணவாளமாமுனிகளைப் பற்றிய நினைவில்லாமல் நடவாதாகையால், பொருளாற்றலால் நினைத்தலையும் குறிப்பிட்டு, காயிக வாசிக மாநஸிகங்களான மூவகை மங்களங்களையும் தெரிவிப்பதாகும்.
We are able to understand the Sanskrit slokas with equivalent meaning in Tamil.
One can understand easily because ,word by word meaning given for Sanskrit slokas in Tamil.