பூர்வ திநசர்யை – 2 – மயிப்ரவிஶதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

                                                                                     2-ஆம் பாசுரம்
मयि प्रविशति श्रीमन् मन्दिरम् रन्गशायिनः |
पत्युः पदाम्बुजम् द्रष्टुम् आयान्तम् अविदूरतः ||

மயிப்ரவிஶதி ஸ்ரீமந்மந்திரம் ரங்கஶாயிந: |
பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: ||

அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள் தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய், அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கேட்பதும் அவரை ஸேவிப்பதும் அவரை துதிப்பதுமாகியவை தமக்குப் புருஷார்த்தமென்றும் ஸம்ஸார துக்கத்தைப் போக்குமதென்றும் கூறுமவராய்க் கொண்டு, ‘ஆசார்யர்களை அவர்களெதிரில் துதிக்கவேண்டும்’ என்று சொல்லுகிறபடியே நேராக ஆசார்யராகிய மாமுனிகளைத் துதிப்பவராய்க் கொண்டு தாம் செய்ய நினைத்த திநசர்யையின் பொருளைச் சுருங்கக்கூறுகிறார் – ‘மயி ப்ரவிஶதி’ என்று தொடங்கி ‘அநாஸ்பதம்’ (ஶ்லோகம் – 13) என்பதீறாக.

பதவுரை: –

ஸ்ரீமந் – கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!
ரங்கஶாயிந: – ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய,
மந்திரம் – கோயிலைக் குறித்து,
மயி – அடியேன்,
ப்ரவிஶதி ஸதி – சென்று புகும் போது,
பத்யு: – ஜகத்பதியான பெரியபெருமாளுடைய,
பதஅம்புஜம் – தாமரை மலர் போன்ற திருவடிகளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
அவிதூரத: – அருகில்,
ஆயாந்தம் – எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும். (இதற்கு 12ம் ஶ்லோகத்தில் உள்ள ‘த்வாமேவ’ என்பதனோடு அந்வயம். இப்படியே மேலுள்ள ஶ்லோகங்களிலும் அந்வயம் கொள்ளத்தக்கது)

கருத்துரை :- ‘ஸ்ரீமந்’ என்று பிரிக்காமல் ‘ஸ்ரீமத்’ என்று பிரித்து, இதனை மந்திரத்திற்கு அடைமொழியாகவும் ஆக்கலாம். அப்போது செல்வமாகிற பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு மிகவும் உரிய இடம் ஸ்ரீரங்கநாதன் கோவில் என்பது பொருளாகும். முதன்முதலில், முக்கியமான மாமுனிகளிடம் பராமுகமாயிருத்தலென்ற தோஷமுள்ளமையினால் அவரை ஸேவிக்க நினையாமல், அவ்வளவு முக்கியரல்லாத பெருமாளை ஸேவிப்பதற்காக அடியேன் கோவிலுக்குள் ப்ரவேஶிக்கும் போது, எதிர்பாராமல் அடியேனுக்கு அருகிலேயே மாமுனிகள் பெருமாளை திருவடி தொழுவதற்காக எழுந்தருளி நின்றார். இது அடியேனுடைய பெரிய லாபமென்கிறார் இதனால். ‘ ஆசார்யகடாக்ஷ வைபவத்தினால், முன்பு அவரிடம் பராமுகமாயிருந்ததற்குக் காரணமான பாவம் தொலைந்ததென்று, ‘நான் கோவிலுக்குள் புகும்போது மாமுனிகள் என் அருகிலே வந்துகொண்டிருக்கிறார்’ என்பதனால் குறிப்பாகக் காட்டப்பட்டதாயிற்று. பகவானை விட ஆசார்யர் மிகவும் உயர்ந்தவராகையால் அவனை வணங்கச்சென்றபோது ஆசார்யர் எதிர்பட்டமை, விறகு வெட்டி வயிறு வளர்ப்பவன் விறகு தேடிச்செலும்போது வழியில் எதிர்பாராமல் நிதி கிடைத்தது போலிருந்ததென்று இங்குக் கருத்துக்கூறுவர் உரையாசிரியர். எம்பெருமானார் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம். அதற்கு அவர் திருவடிகளே உபாயமென்று நினைத்த ஆசார்யநிஷ்டரான மாமுனிகள் கோவிலுக்குள் சென்று பெரிய பெருமாளைத் தொழுவது – பெருமாளுக்கு மங்களாஶாஸநம் செய்வதற்காகவேயன்றி, ஸித்தோபயமான பெருமாளைத் தம்முடைய புருஷார்த்தத்திற்கு உபாயமாகப் பற்றுதலாகிய ப்ரபத்தி செய்வதற்காக அன்று. ‘ தேவதாந்தரங்களையும் ஶப்தாதி விஷயங்களையும் உபாய பக்தியையும் உபாயமான எம்பெருமானையும் ஸமானமாக எண்ணியவனாய், ‘எம்பெருமான் நமக்கு ஸ்வாமி (அவனை ஸ்வயம்ப்ரயோஜநமாக ஸேவித்து மங்களாஶாஸநம் செய்யவேணும்) என்று நினைப்பவன் பரமைகாந்தி’ என்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே, மாமுனிகள் அத்தகைய பரமைகாந்தியாகையால் என்க. (2).

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment