ஞான ஸாரம் 29- மந்திரமும் ஈந்த குருவும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                             29-ஆம் பாட்டு:

முன்னுரை:

எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும் அம்மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும் மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும் ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள் பிறவித்துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப்பாடல்

lakshmi_narayan_py94_l

“மந்திரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் – நந்தலிலாது
என்றும் அருள் புரிவர் யாவர், அவர் இடரை
வென்று கடிதடைவர் வீடு”

பதவுரை:

மந்திரமும் திருமந்திரமும்
ஈந்த குருவும் அம்மந்திரத்தை உபதேசித்த ஆச்சர்யரும்
அம் மந்திரத்தால் அத்திருமந்திரதால்
சிந்தனை செய்கின்ற மனனம் செய்கின்ற
திருமாலும் ஸ்ரீமன் நாராயணனும்
நந்தலிலாது (இடைவிடாமல்) – கேடில்லாமல்
என்றும் எப்பொழுதும் (செய்யும்)
அருள் புரிவர் அருளுக்கு இலக்காவார்
யாவர் யாவரோ
அவர் அவர்களே
இடரை வென்று பிறவித் துன்பத்தை வெற்றி கண்டு
கடிது விரைவில்
வீடு அடைவர் வீடு பேற்றை அடைவார்கள்

விளக்கவுரை:

மந்திரமும்: தன்னை உருச்சொல்பவரைக் காப்பாற்றுவது மந்திரமாகும். உருவாவது திரும்பத் திரும்பச் சொல்லுவது. ஆர்வத்துடன் சொல்லுவதும் ஆகும். இங்கு “மந்திரம்” என்று சொன்னது எட்டுழுத்தைக் கொண்ட திருமந்திரமாகும். “எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் அளவே” என்பர் திருமழிசைப்பிரான்.

ஈந்த குருவும்: அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனும்

அம் மந்திரத்தால் சிந்தனை செய்கின்ற திருமாலும்: அம்மந்திரத்திற்குப் பொருளாய் மனனம் செய்யப்படுகின்ற ஸ்ரீமன் நாராயணன் ஆகிய மூவரும்.

நந்தலிலாது: நந்துதல் – கேடு அது இல்லை என்றது. தடையில்லாமல் என்று பொருள்.

என்றும் அருள் புரிவர் யாவர்: எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் போது அதற்கு இலக்காய் இருப்பார் யாவர் சிலரோ

அவர் இடரை வென்று கடிதடைவர் வீடு: அம்மூவரது அருளுக்கும் இலக்காயிருப்பவர் பிறவித்துன்பத்தை வென்று விரைவில் அந்தமில் பேரின்பத்து அழிவில் விட்டுலகத்தை அடைவார்கள். இக்கருத்தை முமூக்ஷுபடியில் “மந்திரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கணக்க உண்டானால் கார்ய கரமாவது” என்று கூறியதை ஒப்பு நோக்குக.

Leave a Comment