ஞான ஸாரம் 30- மாடும் மனையும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                      30-ஆம் பாட்டு:

முன்னுரை:

தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம் ‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று குறிக்கோள் இல்லாதவர்களோடு கொண்டுள்ள உறவை அறவே விடுகை சாஸ்திரக் கட்டளையாகும் என்கிறது இப்பாடல்.

ramanuj

“மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் சென்னெறியும்- பீடுடைய
எட்டெழுத்தும் தந்தவனே என்று இராதருறவை
விட்டிடுகை கண்டீர் விதி”

பதவுரை :

மாடும் பாலைக்கொடுக்கும் பசுக்களும்
மனையும் இம்பா நுகர்ச்சிக்கு இடமான வீடும்
கிளையும் உறவினர்களும்
மறை முனிவர் தேடும் வேதம் பயின்ற முனிவர்கள் நாடுகின்ற
உயர் வீடும் மேலான வீட்டுலகமும்
சென்னெறியும் அவ்வீட்டுலகத்தை அடைவிக்கும் அர்ச்சிராதி வழியும்  எல்லாம்
பீடுடைய பெருமையுடைய
எட்டெழுத்தும் பெரிய திருமந்திரத்தை (அஷ்டாக்ஷர) மகா மந்திரத்தை
தந்தவனே உபதேசித்த ஆசார்யனே
என்று இராதார் என்று குறிக்கோள் இலாதாரின்
உறவை தொடர்பை
விட்டிடுகை சேராதபடி விட்டிடுகை
விதி சாஸ்திரக் கட்டளையாகும்
கண்டீர் காணுங்கோள் (நன்றாக அறிவீர்களாக)

 விளக்கவுரை:

மாடும்: தனக்குச் சுவையான பால், தயிர் முதலிய சத்துணவுகளை கொடுப்பவை என்றதால் பேணப்படும் கறவைகளும் (செல்வமும்)

மனையும்: இன்ப நுகர்ச்சிக்கு (ஏதுவான) அடிப்படையான வீடும் கிளையும்:   கூடியிருந்து குலிர்தலே ஆனந்தம் என்றிருக்கும் உறவினர்களும் இங்குச் சொன்ன இவை மற்றும் இம்மை சுகத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களுக்கும் குறிப்பாகும்.

மறைமுனிவர்:  வேதவிற்பன்னர்களான பெரியோர்கள் அதாவது எப்பொழுதும் பகவானை மனதிலே எண்ணிக்கொண்டிருப்பவர்கள்

தேடும்  உயர் வீடும்:  இதுவே நமக்கு அடையத் தகுந்தது என்று விரும்பி நாடி நிற்கும். இங்கு உயர் வீடு என்றதால் தாழ்வான வீடு ஒன்றுண்டு என்று குறிக்கப்படுகிறது. அது கைவல்யம் எனப்படும். அது தன்னை தானே அனுபவித்தலாகும். அது தாழ்வான மோக்ஷம் என்று அறிவாளிகள் கூறுவர். அதனால் அதை கழித்து உயர்வீடி என்று “வைகுந்த வான் போகம் ” இங்கு கூறப்படுகிறது. சிறப்பாக கூறப்படும் வைகுந்தத்தை அடைதலாகிற மோக்ஷமும் சென்நெறியும் அந்த மோட்ஷத்தை அடைவதற்கு வழியாக சொல்லப்படும் அர்ச்சிராதி வழிகளும் அல்லது மோட்ஷத்தை அடைவதற்கு காரணமான சாதனங்களும் புண்ணியங்களும் என்று சொல்லலாம்.

பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதார் உறவை:  கீழ்ச்சொன்னவை எல்லாம் பிறவித் துன்பத்தை வளர்ப்பனவாய் அற்பங்களுமாய் இருப்பன.என்றும் பெரிய திருமந்திரம் மற்ற மந்திரங்கள் போலில்லாமல் பிறவிக் கடலைத் தண்டிவிப்பதற்குஉரியதான ஏற்றத்தை உடையதாய் இருப்பதால் அம்மந்திரத்தை உபதேசித்தருளின ஆசார்யனே எல்லாம் என்ற குறிக்கோள் இல்லாதவர்களோடு ஏற்படும் உறவுகளை

விட்டிடுகை:  அறவே விட வேண்டியது

விதி:  இது சாஸ்திரக் கட்டளையாகும்.

கண்டீர்: காண்பீர்களாக., அறிவீர்களாக.இதனால் திருமந்திரோபதேசம் செய்த ஆச்சர்ய சம்பந்தம் இல்லாதவரோடு உறவு கொள்ளலாகாது.அவர்களை அவசியம் விட்டுவிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment