ஞான ஸாரம் 28- சரணாகதி மற்றோர்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                       28-ஆம் பாட்டு:

முன்னுரை:

கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர் ஆசார்யன் காட்டிக்கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி அவ்வழியில் வீடு பேறு அடைவர் என்றும் “நெறி அறியாதார்” என்ற அடுத்த பாடலில் சரணாகதியை குரு முகமாக அறியாதவரும் கீதையில் சொன்ன கண்ணன் வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவரும் வீடு பேறு அடையமாட்டார்கள், பிறவிப்பிணியில் அழுந்தி துன்புறுவர் என்றும் இவ்விரண்டு பாடல்களினால் வீடு செல்வாரது நிலையம் வீடு செல்லமாட்டாதார் நிலையம் உரைக்கபட்டன.  இனி இப்பாடலில் வீடு பேறு அடைவார்க்குச் சொல்லப்பட்ட நல்வழியான சரணாகதியின் உண்மைகள் கூறப்படுகின்றன. “சரணாகதி” என்பது பிராட்டியோடு கூடிய பகவானுடைய திருவடிகளில் “உன் திருவடிகளே சரணம் எனக்கு தஞ்சம் வேறு புகல் இல்லை” என்று அடி வீழ்ந்து வேண்டுவது. “ஊழி வினைக்குறும்பர்” என்ற 23 ஆம் பாடலில் சரணாகதி பற்றிச் சொல்லப்பட்டது (அதை இங்கு நினைவு கூர்க). இவ்வாறு பகவான் திருவடிகளே தஞ்சம் என்று அடைந்த பிறகு இப்பற்றுதல் நம் சேமத்திற்கு போதுமோ போதாதோ என்று மனதில் சஞ்சலம் பிறந்து உறுதி நிலை ஏற்படாமல் தன முயற்சியில் வேறு வேறு புண்ணியங்களையும் செய்வானேயானால் பகவான் இவன் செய்த சரணாகதியை மதிக்கமாட்டான், கை விட்டு விடுவான், நெறி இவனை கை விட்டு விடும் என்கிற சரணாகதியின் சிறப்பு தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துறைக்கபடுகிறது.

10527557_834046386613354_7891795563582297209_n

“சரணாகதி மற்றோர் சாதனத்தை பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை
முரண் அழியக்கட்டிய வேறோர் கயிறு கொண்டார்பதன்முன்
விட்ட படைபோல் விடும்”

பதவுரை:

சரணாகதி பகவான் திருவடிகளில் நம்பிக்கையுடன் செய்யும் அடைக்கலம்
மற்றோர் சாதனத்தை அடைக்கலத்தில் நம்பிக்கை குறைந்து தன்னால் செய்யப்படும் வேறு வேறு முயற்சிகளை
பற்றில் தனக்கு பலன் கொடுக்கும் புண்ணியமாகக் கருதினால்
அரணாகாது முதலில் செய்கிற அடைகலமாகிற சரணாகதி இவனைக்காவாது விட்டு விடும்
அஞ்சனை தன் சேயை அஞ்சனை தேவியின் மகனான அனுமனை
முரண் அழிய அவனது பலம் தொலையும்படி
கட்டியது இந்திரஜித்தாகிற அரக்கனாலே கட்டப்பட்ட பிரம்மாஸ்திரமான ஆயுதம்
வேறோர் கயிறு கொண்டு பிரம்மாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் வேறு வேறு சணல் கயிறு முதலிய கயிறுகளை (முயற்சிகளைக்)  கொண்டு
ஆர்ப்பதன் முன் கட்டும் பொழுதே
விட்ட படைபோல் அனுமனை கட்டிலிருந்து விட்ட பிரம்மாஸ்திரம் போல
விடும் சரணாகதி இவனைக்காவாது கை விட்டு விடும்

விளக்கவுரை :

பகவானை அடைவதற்கு சாஸ்திரங்கள் பல புண்ணியங்களைச் சொல்லியிருகின்றன. அவற்றுள் “சரணாகதி” என்ற ஒரே புண்ணியம் தான் பகவானை அடைவதற்கு சரியான புண்ணியமாகும். வேறு வேறு புண்ணியங்கள் எல்லாம் ஒருவரால் செய்யப்படும்போது உண்டாகிறது. செய்யாதபோது அவைகள் இருப்பதில்லை. சரணாகதி என்ற புண்ணியம் மற்ற புண்ணியங்கள் போல் ஒரு காலத்தில் உண்டாவதோ ஒரு காலத்தில் இல்லாமல் போவதோ இல்லை. எப்பொழுதும் தயாராக இருந்து கொண்டிருகிறது. மேலும் பகவனாகிய புண்ணியம் அறிவு ஆற்றல் முதலிய சிறப்புகளைக் கொண்டது. இத்தன்மை மற்ற புண்ணியங்களுக்கு இல்லை. அனைத்து புண்ணியங்களின் உருவமாய் இருப்பதால் சாஸ்திரம் ஆகுமென்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தன்னையே நம்பித் தன் திருவடிகளைப் பற்றுவார்களுக்கு தானே புண்ணியமாக இருந்து அருள் செய்கிறான் என்று கருத்து. இத்தகைய பகவானாகிற புண்ணியத்தை நீயே எனக்கு வேறில்லை என்று சொல்லி அவன் திருவடிகளில் தலை சாய்ப்பதே சரணாகதி என்று சொல்லப்படுகிறது. இதுவே “அடைக்கலம்” எனப்படும் இதற்க்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியமாகும். இந்த நம்பிக்கையை “மகா விசுவாசம்” என்றும் “அத்யாவசாயம்” என்றும் சாஸ்திரம் கூறும். மகா விசுவாசமாகிற நம்பிக்கை குறைந்தால் பகவானாகிற புண்ணியம் பலன் அளிக்காது. மேலும் இதனைச் செய்பவன் “யான்” “எனது” என்னும் செருக்குகளை அறவே விட்டவனாகவும் இருக்க வேண்டும். தன்னை வறியவனாகவும் துணை அற்றவனாகவும் உணர வேண்டும். இவற்றை உடையவனே சரணகதி செய்து கொள்வதற்கு தகுதி உடையவனாவான். இதையே “புகலொன்றில்லா அடியேன்” என்று கூறினார் ஆழ்வார். இம்மை வாழ்வில் வேதனைப்பட்டு உடனடியாக இறைவனை அடையவேண்டும் என்ற நோக்குடன் இறைவன் அடி வீழ்ந்தால் அப்பொழுதே அவனுக்கு வீடு பேறு கிடைக்குமென்றும் கீழே கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நுல்கள் சரணாகதி பற்றி விளக்கி உள்ளன.

மற்றோர் சாதனத்தைப் பற்றில்: சரணாகதியின் சிறப்பை அறிந்து இதுவே நமக்கு தஞ்சமென்று நம்பிக்கைக் கொண்டு அடைக்கலம் புகுந்தபின் இறுதிவரை இக்குறிகோளில் இல்லாமல் “இதுக்குத் துணையாக நாமும் சில செய்வோம்” என்று தன் முயற்சியால் செய்யப்படும் எதாவது ஒன்றைச் செய்தால் அது அரணாகாது. இவன் செய்த சரணாகதி இவனுக்கு துணை நில்லாமல் இவனை கை விட்டுப் போய்விடும். அகவே பகவானிடம் சரணகதி செய்தவன் ஒரே நம்பிக்கையில் இருக்க வேண்டுமேயொழிய சரணாகதியில் அவநம்பிக்கை கொண்டு வேறு வேறு புண்ணியங்கள் செய்யக் கூடாது. ஏதாவது செய்தால் சரணாகதி பலிக்காது என்று கருத்து. இதற்க்கு உதாரணமாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

அஞ்சனை தன் சேயை: அஞ்சனாதேவியின் புதல்வனான அனுமனை

முரண் அழியக்கட்டியது: முரண்: பலம்; அது அழியும்படி கட்டின பிரம்மாஸ்திரம்

வேறோர் கயிறு கொண்டார்பதன்முன்: அதனிடம் அவநம்பிக்கை வைத்து வேறு ஒரு சணல் கயிற்றைக்கொண்டு கட்டுவதற்குத் தொடங்கும் பொழுதே (ஆர்த்தல் – கட்டுதல்)

விட்ட படைபோல் விடும்: விட்டுப்போன பிரம்மாஸ்திரம் போல சரணாகதி இவனை விட்டு விடும் என்பதாம்

குறிப்பு: இராமாயணத்தில் அனுமன் இராம தூதனாக இலங்கை சென்ற போது அசோகவனத்தை முறித்து பாழ் படுத்தினான். இராவணன் புதல்வனான இந்திரஜித் அனுமனோடு போர் புரிந்து பிரம்மாச்திரதினால் அவனைக் கட்டினான். அனுமன் செய்த வீரச்செயல்களும் அரக்கர்கள் பலர் அவனால் அழிக்கப்பட்டதையும் கண்டு பயந்து, “இவனைக் கட்டுவதற்கு ப்ரஹ்மாச்த்ரதுக்கு வலி போதுமோ?” என்று பிரம்மாஸ்திரத்தை குறித்து அவநம்பிக்கை கொண்டான். அதனால், சணல் கயிறுகளைக் கொண்டு வந்து கட்டினான். கட்டும்போது பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு விட்டது. இது போல பகவானிடம் சரணாகதி பண்ணினபிறகு சரணாகதியில் அவநம்பிக்கை வைத்து வேறு வேறு புண்ணியங்களையும் முயன்று செய்வானேயானால் முன்னம் பண்ணிய சரணாகதி பலனை அளிகாது அவனை விட்டு விடும் கை விட்டு விடும் என்பதாகும்.

சரணாகதிக்கு பிரம்மாஸ்திரமும் வேறு புண்ணியங்களுக்கு சணல் கயிறும் இங்கு எடுதுக்காட்டாகும்.

Leave a Comment