ஞான ஸாரம் 24- வண்டுபடி துளப

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                        24-ஆம் பாட்டு:

முன்னுரை:

ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும் மூன்று வகையாகக் கூறுகின்றன. அவற்றுள் முன்னைய வினைப்பற்றி சென்ற பாடலில் கூறினார். எதிர் வருகின்ற வினைகளை நினைத்துத் தளர்கின்ற மனதை நோக்கி தேற்றுகிறது போன்று கூறுகிற பாடல் இது. தன்னை அடைக்கலம் புகுந்த பக்தனிடம், அவனறியாமல் செய்யும் குற்றங்களில் இறைவன் கண் வைக்கமாட்டான் என்கிறது. அதாவது பார்த்தும் பாராமல் இருப்பான் என்று கருத்து. (இது) அனைவரும் அறியக் கூறப்பட்டது.

svayam11

“வண்டுபடி துளப மார்பனிடைச் செய்த பிழை
உண்டு பலவென்று உளந்தளரேல் – தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்திருந்தும் காணுங்கண்
இல்லாதவன் காணிறை”

பதவுரை:

வண்டுபடி தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கின்ற
துளப மார்பனிடை திருத்துழாயாலே அழகு செய்யப்பட்ட திருமார்பை உடைய பகவானிடத்தில்
செய்த பிழை இழைத்த குற்றங்கள்
பல உண்டு என்று அனேகங்கள் இருக்கின்றன என்று
உளம் ஏ மனமே
தளரேல் வருந்தாதே
இறை (அடைக்கலம் புகுந்தாரை அஞ்சேல் என்று அருளும்) நம் தலைவர்
தொண்டர் செய்யும் தன்னுடைய பக்தர்கள் செய்கின்ற
பல்லாயிரம் பிழைகள் அனேகமாயிரம் குற்றங்களை
பார்த்திருந்தும் தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தும்
காணும் பக்தர்களது பிழைகளைப் பார்க்கும் விஷயத்தில்
கண் இல்லாதவன் காண் பார்த்தும் பாராதவனாகவே இருக்கிறான்

விளக்கவுரை:

வண்டுபடி துளப மார்பனிடைச் செய்த பிழை – தேன் பருகுவதற்காக வண்டுகள் படிந்துள்ள திருத்துழாய் மாலையை மார்பில் அணிந்திருக்கும் இறைவனிடம் செய்த குற்றங்கள் என்று பொருள். இப்பொழுது மார்பின் அழகை அடைமொழி கொடுத்துச் சொன்னதின் கருத்து தன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பக்தர்களைத் தன் அழகின் இன்பத்தை நுகர்விப்பதற்காக எப்பொழுதும் தன்னை அழகுபடக் காட்டிக் கொண்டிருப்பவன் புகுந்த பிறகு குற்றம் எதையும் செய்யமாட்டார்கள். அவர்களையும் அறியாமல் ஏதேனும் குற்றம் செய்ய நேர்ந்துவிட்டால் அத்தகைய குற்றங்களைப் பாராமலேயே இருந்து விடுவான். இக்கருத்தை உணர்த்துவதற்காகவே திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டு அவ்வழகைக் காட்டிக் கொண்டிருக்கிறான் என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

உண்டு பல வென்று – சரணாகதி பண்ணியிருந்தாலும் ஐம்பொறிகள் அடங்கிய உடலோடு இருக்கையில் அவ்வுடல் தீய காரியங்களைச் செய்வதற்கு ஏதுவாகயிருக்கும். “உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்” என்ற திருக்குறளில் ஐம்பொறிகளையும் யானையாகவும் மனதை அவற்றை அடங்கும் அங்குசமாகவும் கூறியிருப்பதால் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது மிகவும் அரிது என்று தோன்றுகிறது. மேலும் “ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்” என்றும் ‘உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி’ என்னும் சொல்லப்பட்ட ஆழ்வார்கள் பாடலாலும் உணரலாம். ஆக அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி, வாழ்வது அரிதலால் குற்றங்கள் பலவும் புகுகின்ற குற்றங்களை நினைத்து உள்ளம் தளர்கின்ற பொழுது.

உளம் தளரேல் – அவ்வுள்ளத்தை நோக்கி ‘ஏ நெஞ்சே தளர வேண்டாம்’ என்று தேற்றுவதாயிருக்கிறது. உளம் – உள்ளம். இங்கு மகர ஈறு விளி வேற்றுமையில் வந்தது. ‘உள்ளமே’ என்றவாறு. தளராமல் இருப்பதற்கான காரணம் கூறப்படுகிறது மேல் தொடரால்.

தொண்டர் செய்யும் – தன்னுடைய பக்தர்கள் செய்யும் தொண்டர் என்றதற்கு (சபலர்) உழல்பவர் என்று பொருள் கொண்டு தன்னிடம் உழல்பவரான பக்தர்கள் என்று பொருள் காட்டப்பட்டுள்ளது. அல்லது தனக்கு அடிமைப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆக, தனக்கு அடிமைப்பட்டவரான தன்னுடைய பக்தர்கள் செய்யும்’ என்று இதற்குப் பொருளாகிறது.

பல்லாயிரம் பிழைகள் – முக்குண வயப்பட்ட உடல் காரணமாக மதி மயங்கி மனம், மொழி, மெய் என்பவனற்றால், தன்னை அறியாமல் நாள் தோறும் செய்யும் பாபங்கள் அளவு கடந்திருக்கின்றனவாதலால் “அநேகமாயிரம் பிழைகள்” என்று கூறப்படுகிறது. பிழை – குற்றம் (பாவம்) ஒரு ஜீவன் அரைக்கணத்தில் செய்யும் பாப பலன்களை பல்லாயிரம் நான்முகக் கடவுள்கள் ஆட்சி செய்யும் காலம் துய்த்தாலும் கழியாது என்று சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய குற்றங்களாவன:- சாஸ்திரம் விலக்கியவற்றை செய்தல், அதாவது பிறரைத் துன்புறுத்துதல், பிறர் புகழ்பாடல், பிறர் மனையாளை விரும்புதல், பிறர் பொருள் வவ்வல், பொய் கூறல், உண்ணக்கூடாதனவற்றை உண்ணுதல் முதலியன ஆகும். சாஸ்திரம் விதித்தனவற்றைச் செய்யாமை என்பது பகவானிடம் பிழை செய்தல். அதாவது உயர்ந்த தெய்வத்தை அற்பமான தேவர்களோடு ஒப்பிடுகை. அவனுடைய அவதாரங்களில் குற்றம் சாடுகை, அர்ச்சா உருவத்தை எடை போட்டுச் சோதித்து ஆராய்ச்சி செய்தல், பூஜை குறைபாடுகள், பூஜைக்குரிய பொருள்களை மறைவாகவோ வெளிப்படையாகவோ களவு செய்தல், தான் நேரில் களவு செய்யாமல் போனாலும், களவு செய்பவருக்கு உடந்தையாதல், அத்தகைய களவுப் பொருட்களை இரந்தோ உரிமையாலோ பெறுதல் முதலான பாபங்கள் தெய்வக் குற்றங்கள் எனப்படும். பொருள் இன்பம் முதலியவைகளுக்காக அடியார்களிடம் பகை கொள்ளுதல் இவ்வாறான பாவங்களும் ‘பிழைபல’ என்றதில் அடங்கும்.

இறை பார்த்திருந்தும் – எல்லாப் பொருள்களுக்கும் உள்ளிருந்தும் அவற்றின் செயல்களை எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பவன் இறைவன். அத்தகையவன் தொண்டர்கள் செய்யும் பிழைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் காணும் கண் இல்லாதவன் போல அவர்களது குற்றங்களைப் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பான் என்பதாம். இங்கு ‘கண்’ என்றது ஞானத்தை.

கண் இல்லாதவன் – என்பதால் ஞானமில்லாதவன் என்று பொருளாகும். இதனால் தன் அடியார் செய்யும் குற்றங்களை அறியாதவனாயிருப்பான் என்று பொருளாயிற்று. இறை என்பதற்குச் சிறிது என்று பொருள் கொண்டு அடியார்கள் செய்யும் பிழையைச் சிறிதளவு கூட அறிய மாட்டான் என்று கூறலாம். இக்கருத்து விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் அறியாதவன் என்ற பொருளில் “அவிஜ்ஞாதா” என்று கூறப்படுவதைக் காணலாம்.

ஆக, இறைவன் அடைக்கலம் புகுந்த பிறகு பாபங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. “இறைவன் தொண்டர்கள் செய்யும் பிழைகள் அறியாமல் இருந்து விடுவான்”. இக்கருத்துக்கு நூல்கள் கூறுவதே சான்றாகும் என்பதாம்.

Leave a Comment