13-ஆம் பாட்டு:
முன்னுரை:
பகவானிடத்தில் வேறு பயன் எதையும் விரும்பாமல் தொண்டு செய்யும் தன்மை உண்டானாலும், ஆன்ம விவேகமில்லாமல் உடலில் பற்றுதல் உடைய உலகியல் மக்களோடு, (உண்ணல், உடுத்தல், திரிதல்) இவற்றையே லட்சியமாகக் கொண்டவர்களோடு தொடர்புடையவராயிருந்தால், இறைப் பணியையே இலக்காகக் கொண்ட அவ்வடியார்க்குப் பழுதாகுமன்றோ? என்று வினா எழும். அதற்கு விடையளிக்கப்படுகிறது இப்பாடலில். அதாவது, ஆன்மாவின் உண்மை நிலையான இறைப்பணியைக் கண்டறிந்தவர்களுக்கு உலகியல் மக்களோடு உறவு ஏற்படாது என்பதாகும்.
“பண்டேயுயிரனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாமெனத் தெளிந்த தூமனத்தார்க்கு உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்தபிமானிக்கும்
உலகத்தவரோடுறவு”
பதவுரை:
பண்டே | தொன்று தொட்டே |
உயிரனைத்தும் | அனைத்து உயிர்களும் |
பங்கயத்தாள் நாயகற்கே | லக்ஷ்மீ நாதனுக்கே |
தொண்டாம் | அடிமையாகும் |
எனத்தெளிந்த | என்ற உண்மையை அறிந்த |
தூமனத்தார்க்கு | தூயமனம் படைத்தார்க்கு |
பலவும் கற்று | சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று |
தம் உடம்பைப் பார்த்து | தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து |
அபிமானிக்கும் | செருக்கித்திரியும் |
உலகத்தவரோடு | உலகியல் மக்களோடு |
உறவு உண்டோ | தொடர்பு உண்டாகுமோ? |
விளக்கவுரை:
பண்டே, உயிர் தொண்டாம் (என்று கொண்டு கூட்டிப் பொருள் சொல்லப்படுகிறது) அதாவது உயிர்கள் எல்லாம் இயல்பாகவே இறைவனுக்கு அடிமையாயிருத்தல் அநாதியாகும் என்பதை உணர்த்துகிறது.
உயிர் அனைத்தும் என்று கூறுவதால், ஆன்மாக்களுக்குரிய அவ்வடிமைத் தன்மைதான் சிலருக்கு உண்டாய், சிலருக்கு இல்லையாய், இல்லாமல் அனைத்து ஆன்மாக்களுக்கும் பொதுவாகும் என்று உணர்த்தப்படுகிறது.
பங்கயத்தாள் நாயகற்கே மேற்கூறிய அவ்வடிமை தான் யாருக்கு என்பதைத் தெளிவாக்குகிறது இத்தொடர். தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனான ஸ்ரீயபதிக்கு என்று பொருள். உயிர்கள் திருமாலுக்கே அடிமையாகும் என்றதாயிற்று. இதனால் அடியவர்களான ஆன்மாக்களுக்குத் தலைமையாயிருப்பவர். பிராட்டியும் பெருமாளுமான இருவருமாவர் என்னும் கருத்துப் புலனாகிறது. மேலும் நாயகற்கு என்ற நான்காம் வேற்றுமை உருபாலும் “ஏ” என்ற தேற்றேகாரம் இடைநிலையாலும், ஆன்மாக்கள் அவ்விருவருக்கு மட்டுமே அடிமை, பிறர்க்கு அடிமையானவரில்லை என்ற கருத்தும் அறியப்படுகிறது.
தொண்டாம் எனத் தெளிந்த தூமனத்தார்க்கு – மேற்சொன்ன ‘பங்கயத்தாள் நாயகற்கே இவ்வான்மா அடிமை’ என்று சாஸ்திரங்களால் தெளிவடைந்த தூயமனத்தரான தொண்டர்களுக்கு, திருமந்திரம் சகல வேதங்களுடையவும் திரட்சியாகும். இக்கருத்து திருமந்திரத்தை உணர்ந்தவர்க்கு நன்கு தெரியும். திருமந்திரத்தின் பொருளுணர்ந்தவர்கள் தான் “தூமனத்தர்”.
உண்டோ – கிடையாது. இவ்வினைச்சொல்லுக்கு மேல் வரும் உறவு என்ற சொல்லோடு கொண்டு கூட்ட வேணும். உறவு உண்டோ என்பதால் உறவு கிடையாது என்பது பொருளாகும்.
பல கற்றும் தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும் – பல கற்றல் – அதாவது வேதம், மனு முதலிய ஸ்மிருதிகள், தர்க்கம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றலாம். (தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும்) – என்ற தொடரில் ‘தம் உடம்பு’ என்றது அந்தணர் முதலிய வர்ணங்களுக்கு பிரம்மசரியம் முதலிய நிலைகளுக்கும் எல்லாம் இருப்பிடமாயிருக்கும். தங்கள் தங்கள் உடம்பைப் பார்த்து ‘நாம் இன்ன சாதி அன்றோ நாம் இன்ன வர்ணம் அன்றோ, நாம் இன்ன நிலை (பிரம்மசரியம்) முதலிய நிலைகள் இருப்பவர் அன்றோ என்று இவற்றை குறியிட்டுத் தங்களை மிக உயர்வாக எண்ணி இருக்கும்’ என்று பொருள்.
உலகத்தவரோடு உறவு – இப்படித் தங்களைச் சாதி முதலியவற்றால் உயர்வாக எண்ணியிருக்கும் உலகத்தவரோடு.
தூமனத்தார்க்கு – தொடர்பு உண்டாகுமோ என்று வினை கூட்டிப் பொருள் முடிக்க,
உட்கருத்து:
“ஓம்” என்ற ப்ரணவத்தில் அகாரத்தின் பொருளான நாராயணனுக்கே ஆன்மாக்கள் அனைவரும் அடிமை ஆவார் என்று சொல்லப்பட்டது. இவ்வாறு சொல்லப்பட்ட அடிமைக்கு நிலைக்களமான ஆன்மாவை ‘ம’ காரத்திற்கு அர்த்தமாகக் காணவேண்டும். அவ்வான்மா அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய் ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய், ஞான வடிவமாய் என்றும் இருப்பதாய், இவ்வாறான இலக்கணங்களோடு கூடியிருக்கும் ஆன்மாவைப் பற்றித் தெரிந்திருக்கும் தூய மனத்தினருக்கு, இத்தெளிந்த அறிவில்லாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ? அதாவது உலகத்தவர் உடலையே முக்கியமாகக் கொண்டு அவ்வுடலைப் பற்றி வரும் சாதி முதலியவற்றைக் குறித்துத் தங்களை மிக மதிப்பாக நினைத்து செருக்கித் திரியும் உலகத்தவர்’ என்று உலகர்களை அறிந்தால் ஆன்மாவின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு அதை அறியாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ? உண்டாகாது என்றவாறாம். அவர்களைக் கண்டால் உறவற வார்த்தை சொல்லிப் போதல் இத்தனை அன்றோ உள்ளது காண்க.
இதற்கு உதாரணமாக ஒரு பழைய வரலாறு இங்குச் சொல்லப்படுகிறது. திருவயிந்திபுரம் என்ற ஊரிலே வில்லிபுத்தூர்ப் பகவர் என்று பிரபலமாய் இருப்பார் ஒரு சன்னியாசி (துறவி). பிராமணர்கள் எல்லோரும் நீராடிக் கடன் செய்யும் துறையை விட்டிட்டு தாம் வேறு ஒரு படித்துறையில் தம்முடைய கடன்களைச் செய்து வருகையில் ஒரு நாள் பிராமணர்கள் அவரை நோக்கி, ‘எங்கள் துறையில் உமக்கு நீராட்டம் பண்ணக் கூடாதா? என்று கேட்க’ அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார். ஓ அந்தணர்களே! நாங்கள் விஷ்ணுவின் அடியார்கள். நீங்கள் சாதி, தர்மங்களைக் கடைபிடிக்கும் பிராமணர்கள். விஷ்ணு தாசர்களான எங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு கிடையாது. நீங்கள் சரீரத்திற்கு அடிமைப்பட்டவர்கள். நாங்கள் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள். நம் இருவருக்கும் உறவு ஏற்படுவதற்கு வழியில்லை என்று உறவற வார்த்தை சொல்லிப்போனார் அன்றோ என்ற இவ்வரலாறு இப்பாடல் உரையில் மாமுனிகளால் கூறப்பட்டுள்ளது. இதனால் ஞானிகளுக்கு உலகத்தவர்களோடு தொடர்பு உண்டாகாது என்பதாம்.