5-ஆம் பாட்டு:
“தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை
மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின்
என்ன குறை வேண்டு மினி”
முன்னுரை:
த்வய மந்திரத்தில் முதற்கூற்றினால் சொல்லப்படுகிற அர்த்தம் பகவானுடைய திருவடிகளையே பற்றுவதாகும். இதற்கு ‘ஸித்தோபாய வரணம்’ என்று பெயர். ‘ஸித்தோபாயம்’ என்றால் எப்பொழுதும் தயாராக இருக்கும் உபாயம் என்று பொருள். பகவான் எப்பொழுதும் தயாராக இருப்பதால் அவனுக்கு ஸித்தோபாயம் என்று பொருள். இத்தகைய எம்பெருமானை “நீயே உபாயமாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிற போது வேறு எந்த உபாயத்திலும் தொடர்பு கொள்ளலாகாது. ஏதாவது உபாயங்களில் தொடர்புகள் இருந்தால் அத்தொடர்புகளை முற்றிலும் விட்டு விட்டே பற்ற வேணும். இதனால் எம்பெருமானை உபாயமாகப் பற்றுமவனுக்கு மற்ற உபாயங்களை அறவே விட்டு விட்டுப் பற்றவேண்டும் என்கிற நியதி ஏற்படுகிறது.
அதனால் மற்ற உபாயங்களை விடுவது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. இவ்விஷயங்கள் கீதையின் சரமஸ்லோகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. சரமஸ்லோகத்தை நன்றாக அறிந்து எம்பெருமான் திருவடிகளைப் பற்றும் போது வேறு எந்த உபாயங்களிலும் ஈடுபாடு வராது. தன்னுடைய அடிமைத் தன்மைக்கேற்ப தன்னுடைய எல்லாப் பொறுப்புக்களையும் அவனிடத்திலேயே ஒப்படைத்து நிம்மதியாயிருப்பார். “நம்முடைய சகல க்ஷேமங்களுக்கும் எம்பெருமானே பொறுப்பாய் இருப்பவன்.
அதில் நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை” என்ற உண்மையை எண்ணிக் கொண்டு நிம்மதியாய் இருக்கும் அவர்கள் நிலையை எண்ணித் தாமும் அவர்களில் ஒருவராகத் தம்மை நினைத்துத் தம் நிலையைத் தாமே கூறுகிறார் இந்தப் பாடலில்.
பதவுரை:
முன் | – | மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை |
காத்தபிரான் | – | கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான் |
பார்ப்பதன் முன் | – | திருக்கண்களால் நோக்குவதற்கு முன்பு |
தீர்த்தம் | – | புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக) |
முயன்று | – | முயற்சிகள் செய்து |
ஆடுவதும் | – | முழுகிக் குளிப்பதுவும் |
செய்தவங்கள் | – | உடல் வருந்தச்செய்யும் நோன்புகளும் |
செய்வனவும் | – | மற்றும் செய்யும் புண்ணியங்களும் |
சீர்த்துவரை | – | சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன் |
நமக்கு | – | அவனுடைய அடியவர்களான நமக்கு |
அடியோம் என்னும் வாழ்வு | – | அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை |
ஈந்ததற்பின் | – | அருளின பின்பு |
இனி | – | இனி வரும் காலமெல்லாம் |
வேண்டும் குறை என்ன | – | சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபடவேணுமோ? (எதைப் பற்றியும் குறைபடவேண்டாம் என்பதாம்) |
விளக்கவுரை:
தீர்த்தம் முயன்று ஆடுவதும் – கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய தீர்த்தங்களிலே பாபத்தைக் கழிப்பதற்காகப் பெரிய முயற்சியோடே குடைந்து நீராடுவதும் அதாவது உடம்பு முழுவதும் நனையும்படி நீரில் முழுகுதல் (தீர்த்தங்கள் புண்ணிய ஜலங்கள்)
செய்தவங்கள் செய்வனவும் – ஊன்வாட உண்ணாது… பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நின்றும் வீழ்கனியும், ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து உடலம் தான் வருந்தி என்பது முதலான ஆழ்வார்கள் பாசுரங்களில் சொல்லுகிறபடி உடலை வருந்துவதற்காகச் செய்யப்படும் நோன்புகள் பலவற்றைச் செய்வனவும். இங்குச் சொல்கிற தவங்கள் என்னும் பன்மையினால் தானம், யாகம் முதலிய புண்ணியங்களும் அடங்கும்.
பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன் முன் – அதாவது அர்ஜுனனுக்கு கண்ணபிரான் பகவத் கீதயில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலான வேறு வேறு உபாயங்களையெல்லாம் உபதேசித்தான். அவற்றை எல்லாம் கேட்ட அர்ஜுனன் அவற்றை செயலாற்றுவதில் உண்டாகும் அருமையையும் எம்பெருமானுக்கு ஆன்மா அடிமையாய் இருத்தலால் அடிமையாய் இருப்பவன் ஒரு உபாயத்தைச் செய்வதற்கு உரிமையில்லாதவனாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து, கண்ணன் சொன்ன கர்ம, ஞான, பக்தியாகிற இவ்வுபாயங்களை நாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்று எண்ணி துன்பப்பட்ட அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் இவ்வாறு சொன்னான். “அர்ஜுனா, கீழே நான் உபதேசித்த கர்மயோக, ஞானயோக, பக்தியோகமாகிற உபாயங்கள் ஒன்றையும் நீ செய்ய வேண்டாம். நான் சொன்ன அவற்றை அறவே விட்டுவிடு. அவற்றை நெஞ்சாலும் நினையாதே. நான் நற்குணக் கடலாயிருப்பவன். அடியவர்க்கு எளியவன். அடியவர் பிழை பாராதவன் பிழை பொறுப்பவன். நுண்ணறிவுடையவன். மிக்க ஆற்றல் உடையவன். பலம் உடையவன். இவ்வாறான குணங்கள் பலவுமுடைய என்னையே நீ உபாயமாகப் பற்றுவாயாக. என்னைப் பற்றும் போது “கண்ணன் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். அவனுக்கு எதையும் கொடுக்க வேண்டாம், என்று என்னைப் பரிபூர்ணனாக நினைத்துப் பற்றவேண்டும்.”இவ்வாறு என்னைப் பற்றினால் அறிவு, ஆற்றல் முதலிய குணங்களையுடைய முழுமுதற் கடவுளாகிற நான் உன்னுடைய அறியாமை, சோர்வு, திறலின்மை முதலிய குணங்களை எண்ணுவேன். என்னிடத்தில் உன்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த நிலையும் எண்ணுவேன். “இந்த நிலையில் இருக்கும் உன்னை ஒருபொழுதும் நான் கைவிட மாட்டேன்.” என்னை அடைவதற்குத் தடையாக என்னென்ன பாபங்கள் உன்னிடத்தில் இருக்கின்றனவோ அந்தந்த பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிப்பேன். ஆகையினால் நீ கவலைப்பட வேண்டாம்” என்று அர்ஜுனனுக்கு உபதேசித்து அவனுடைய சோகத்தைத் தீர்த்து அவனைக் காத்தருளினான். இத்தகைய பேருபகாரம் செய்த பகவானுடைய அருள் கண் நோக்கம் பெறுவதற்கு முன்பு என்று (இவ்வாறு கூறிய அதனால் கண்ணன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பு என்றவாறு).
சீர்த்துவரை மன்னன் – “பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடி வேறு ஒருவர்க்கு அன்றி தனக்கே உரியராய்த் தன்னை அன்றி வேறு உபாயத்திலோ வேறு பலன்களிலோ தொடர்பு இல்லாதவராய் இருக்கும் தன் மனைவியர்க்கு மணாளனாய்க் கொண்டு ஸ்ரீமத் துவாரகாபுரிக்கு தலைவனாயிருக்கிறவன்” என்று பொருள்.
அடியோம் என்னும் வாழ்வு – மேற்படி அவனுக்கு நாம் அடிமைப்பட்டவர் என்றறிந்து ‘தன்னைக் காத்துக் கொள்வதற்காகத் தன் முயற்சியில் ஈடுபடாமலிருக்கும் அதாவது அவனையே எதிர்நோக்கி இருக்கும் நற்செல்வத்தை நமக்குக் கொடுத்துவிட்ட பிறகு என்பது இதன் பொருள். இத்தொடரில் அடியோம் என்று கூறியதால் ஆன்மா ஞான ஆனந்த குணங்களுக்கு இருப்பிடமாயிருந்தாலும் அவற்றைக் காட்டிலும் அடிமைத் தன்மையே அதற்கு உண்மை இலக்கணமாகத் தெரிய வருகிறது. ஆன்மாவுக்கு இதுவே முக்கிய அடையாளமாகும். ‘வாழ்வு’ என்பதால் இவ்வடிமைத் தன்மையை அறியும்போது தன் முயற்சி ஒழிதல், தன் நலம் ஒழிதல் முதலிய நற்பண்புகள் உண்டாகின்றன. இவையே ஆன்மாவுக்குரிய செல்வமான வாழ்வு என்பதாம்.
நமக்கு ஈந்ததற்பின் – எப்பொழுதும் இவ்வடிமைத் தன்மை ஆன்மாவுக்கு இருந்தாலும் அதை இழந்திருந்த என்று பொருள். ஈந்ததற்பின் என்றது – இவ்வுண்மை அறிவு உண்டானதும் அவனருளாலே என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அவன் நமக்கு அடிமைச் செல்வமாகிற இந்நல்வாழ்வைக் கொடுத்து விட்டபிறகு.
என்ன குறைவேண்டுமினி – அதாவது, இனிமேல் வரும் காலங்களில் உபாயத்தைப் பற்றியோ எந்தக் குறையும் படவேண்டியதில்லை. இதனால் பகவான் ‘கவலைப்படாதே’ என்று அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னதில் நாமும் நம் காரியங்களில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் பொறுப்பு ஏதுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று பொருள் சொல்லப்பட்டது.