திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி
திவ்ய ப்ரபந்தம் என்றால் என்ன ?
திவ்ய ப்ரபந்தங்கள் அருளிச்செயல் என்றும் வழங்கப்படும். அருளிச்செயல் என்றால், எம்பெருமானின் அருளாலே வந்தவை. ப்ரபந்தம் என்றால் கட்டுப்படுத்தக் கூடியது. திவ்ய ப்ரபந்தங்கள் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனையே, அவனது அடியார்களோடு கட்டுபவை. அது மட்டும் அல்ல, இவை அடியார்களையும் ஸத் விஷயங்களில் ஈடுபடுத்தி, அவர்களையும் பெருமாளுடன் கட்டுபவை. ஆகையால் இது ப்ரபந்தம் என்ற திருநாமத்தை பெற்றது.
மேலும் இவை இவ்வுலகில் இருக்கும் ப்ராக்ருதமான விஷயங்களைப் போல் இல்லாமல் பகவத் விஷயமாக இருப்பதனால், இவை திவ்ய ப்ரபந்தங்கள் என்று கொண்டாடப்படுகின்றன. இவை நம்மையும் நல்வழிப்படுத்தி பெருமாளிடம் ஈடுபடச் செய்கின்றன.
ஆழ்வார்கள் யாவர் ?
எம்பெருமான் இவ்வுலகத்தில் ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு “மயர்வற மதிநலம்” (அதாவது ஐயப்பாடின்றி தெளிந்த ஞானத்தையும் அதன் பரிபக்குவமான நிலையான பக்தியையும்) அருளி, அவர்களை ஆழ்வார்களாக ஆக்கினான். ஆழ்வார்கள் என்றால், எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்து இருப்பவர்கள். பக்தி பாரவச்யத்தாலே எம்பெருமானுடைய திருமேனி அழகிலும், கல்யாண குணங்களிலும் எப்பொழுதும் மூழ்கி இருப்பவர்கள். எனவே நம் பூர்வாசார்யர்கள் இவர்களை பக்தி பாரவச்யர்கள் என்றும் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆழ்வார்கள் பதின்மர் என்றும் பன்னிருவர் என்றும் இரு வகையாக பார்க்கிறோம்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் என்று பத்து ஆழ்வார்கள். இவர்களுடன், மதுரகவி ஆழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய இருவரையும் சேர்த்தால் பன்னிருவர் ஆவர்.
மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் ஆசார்ய நிஷ்டையிலே இருந்தவர்கள். அதாவது, அவர்கள் தங்களுடைய ஆசார்யரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். மதுரகவி ஆழ்வார் அவருடைய ஆசார்யரான நம்மாழ்வாரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரம்; அவளுடைய தந்தையும் ஆசார்யருமான பெரியாழ்வாரின் உபதேசங்களைக் கேட்டு அவள் எம்பெருமான் மீது மிகுந்த காதல் கொண்டிருந்தாள். இவர்கள் இருவரையும் சேர்த்து, ஆ்வார்கள் பன்னிருவர் என்றும் பார்க்கிறோம்.
மணவாள மாமுனிகள், அவருடைய உபதேசரத்தினமாலை என்னும் நூலிலே ஆழ்வார்களையும் அவர்களது திவ்ய ப்ரபந்தங்களையும் இவ்வாறாக போற்றுகிறார்:
(உபதேச ரத்தின மாலை – பாசுரம் 3)
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
ஆழ்வார்களும் அவர்களுடைய அருளிச்செயல்களும் வாழி என்றும், ஒரு தாழ்வும் இல்லாத குரவர்களாகிய ஆசார்யர்கள் வாழி என்றும், ஏழு உலகங்களும் உய்ய அவர்கள் உரைத்த வ்யாக்யானங்கள் வாழி என்றும், செய்ய மறையான வேதத்துடன் இவைகளும் சேர்ந்து என்றும் வாழி என்றும் மங்களாசாஸனம் செய்கிறார் மாமுனிகள்.
நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களாகிய தமிழ் மறையும், வடமொழி வேதமும்
இந்த திவ்ய ப்ரபந்தங்கள் எப்படிப்பட்டவை என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், ஆசார்ய ஹ்ருதயம் என்னும் ரஹஸ்ய க்ரந்தத்திலே அழகாக விளக்கியுள்ளார். நம்மாழ்வாரே ஆழ்வார்களின் தலைவர் என்று கொண்டாடப்படுகிறார். அவருடைய நான்கு ப்ரபந்தங்களும் நான்கு வேதங்களுக்கு ஒப்பாக கருதப்படுகிறது என்பதை விளக்கி காட்டுகின்றார் நாயனார் :
- திருவிருத்தம் 100 பாசுரங்கள் ருக் வேதத்திற்கு ஸமம்
- திருவாசிரியம் 7 பாசுரங்கள் யஜுர் வேதத்திற்கு ஸமம்
- பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள் அதர்வண வேதத்திற்கு ஸமம்
- திருவாய்மொழி 1102 பாசுரங்கள் ஸாம வேதத்திற்கு ஸமம்
எப்படி வேதத்திற்கு அங்கங்கள் உண்டோ, அதே போல், நம்மாழ்வாரின் 4 ப்ரபந்தங்களுக்கு திருமங்கை ஆழ்வாரின் 6 ப்ரபந்தங்கள் அங்கங்களாக திகழ்கின்றன. (1) சிக்ஷா (2) வ்யாகரணம் (இலக்கணம்), (3) சந்தஸ் (செய்யுள் அளவீடுகள்), (4) நிருக்தம் (சொற்பிறப்பியல்), (5) ஜ்யோதிஷம், (6) கல்பம் (சடங்குகள்) என்று ஆறு அங்கங்கள் வேதத்திற்கு உள்ளது. அதே போல், (1) பெரிய திருமொழி, (2) திருக்குறுந்தாண்டகம், (3) திருவெழுக்கூற்றிருக்கை, (4) சிறிய திருமடல், (5) பெரிய திருமடல், (6) திருநெடுந்தாண்டகம் என்று திருமங்கை ஆழ்வாரின் ஆறு ப்ரபந்தங்கள் நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு அங்கமாக உள்ளன.
மேலும், வேதங்களுக்கு எப்படி உப அங்கங்கள் உள்ளனவோ, அதே போல் மற்றைய ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள், நம்மாழ்வாரின் 4 ப்ரபந்தங்களுக்கு உப அங்கங்களாக உள்ளன என்றும் எடுத்துக்காட்டுகின்றார்.
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் நம்மாழ்வாரின் பாசுரங்களை வைத்து எப்படி திவ்யப்ரபந்தங்கள் வேதத்திற்கும், உபநிஷத்திற்கும், இதிஹாஸ, புராணங்களும் இணையாக உள்ளது என்பதையும் அற்புதமாக விளக்குகின்றார். இது, எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் பொருந்தும்.
இதை விளக்கும்போது, மேலும் ஒரு விஷயத்தை எடுத்துக்காட்டுகின்றார் நாயனார். ஸ்ரீராமாயணத்தில் ஒரு ச்லோகம் “எம்பெருமான் பரமபதத்திலிருந்து ஸ்ரீராமனாக பூமியில் திரு அவதாரம் செய்யும்போது, வேதம் ஸ்ரீராமாயணமாக அவதரிக்கின்றது” என்ற பொருள்பட இருக்கின்றது. இதன் அடிப்படையில், அவர் எம்பெருமானின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு ப்ரமாணம் இருக்கின்றது என்று விளக்குகின்றார்.
பெருமாள், ப்ரமாணம் – ஐந்து நிலைகள்
ப்ரமேயம் – எம்பெருமான் – அடைந்து அனுபவிக்க வேண்டியவன்
ப்ரமாணம் – எம்பெருமானைக் காட்டக் கூடியது
ப்ரமாதா – ப்ரமாணத்தைக் கொண்டு ப்ரமேயத்தை விளக்கிக் காட்டும் ஆசார்யர்கள்
எம்பெருமான் பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து நிலைகளில் இருக்கிறான். இந்த ஐந்து நிலைகளுக்கும் ஒவ்வொரு ப்ரமாணம் உண்டு.
- பரத்வத்திலே எம்பெருமானைக் காட்டக் கூடியது வேதம்.
- வ்யூஹ நிலையில் திருப்பாற்கடலிலே எம்பெருமான் எப்படி இருக்கிறான் என்று காட்டக் கூடியது பாஞ்சராத்ர ஆகமம்
- விபவத்திலே எம்பெருமான் அவதாரங்களில் வருவதைக் காட்டக் கூடியது இதிஹாஸ புராணங்கள்
- அந்தர்யாமியாக பெருமாள் எப்படி இருக்கிறான் என்பதை விளக்கக் கூடியது மனு ஸ்ம்ருதி முதலான ஸ்ம்ருதிகள்
- அர்ச்சையிலே எம்பெருமான் எப்படி இருக்கிறான் என்பதை நமக்கு காட்டக் கூடிய ப்ரமாணம் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் – அருளிச்செயல்கள் என்கிற திவ்யப்ரபந்தங்கள்
இவ்வாறாக நமக்கு அற்புதமாக எடுத்துக்காட்டுகிறார் நாயனார்.
எம்பெருமானுடைய அர்ச்சாவதாரத்தில் மூழ்கி இருந்தவர்கள் ஆழ்வார்கள். அவர்களது திருவுள்ளத்தை ஒரு கண்ணாடியைப் போலே நமக்கு காட்டுபவை திவ்யப்ரபந்தங்கள். எத்தனையோ கோயில்களும், ஸ்தலங்களும் பெருமாளுக்கு இருக்க, நம் பூர்வாசார்யர்கள், இப்படி ஆழ்வார்களின் ஈரச்சொற்களால் (திவ்யப்ரபந்தங்கள் மூலம்) மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸ்தலங்களையே திவ்யதேசம் என்று கொண்டாடுகின்றனர். திவ்யப்ரபந்தங்கள், ஆழ்வார்கள் எப்படி எம்பெருமானை அர்ச்சாவதாரத்தில் அனுபவித்தார்கள் என்று அழகாகக் காட்டுகின்றன.
திவ்யப்ரபந்தங்களில் சொல்லப்படும் கருத்து என்ன?
ஸ்ரீ வரவரமுனி தினசர்யா என்கிற ஸம்ஸ்க்ருத க்ரந்தத்தில் எறும்பியப்பா மணவாள மாமுனிகளின் தினசரி செயல்களை (கர்மாநுஷ்டானங்களை) விவரிக்கிறார். எறும்பியப்பா மணவாள மாமுனிகளின் முக்கிய சிஷ்யர்களான அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இந்த க்ரந்தத்தில், மணவாள மாமுனிகள் தினமும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு சயனத்திற்குச் செல்லும் வரை என்னென்ன அனுஷ்டானங்களைச் செய்கிறார் என்று விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் மாமுனிகளை நான் வணங்குகிறேன்” என்று ச்லோகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பூர்வ தினசர்யா மாமுனிகளின் காலை அனுஷ்டானங்களை விளக்குகின்றது. உத்தர தினசர்யா, மாமுனிகளின் மாலை அனுஷ்டானங்களை விளக்குகின்றது.
பூர்வ தினசர்யாவில் 27ம் ச்லோகம்
தத்த்வம் திவ்யப்ரபந்தானாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணாம் நமாமி தம் ||
இந்த ச்லோகத்தின் வாயிலாக திவ்யப்ரபந்தத்தின் முக்யத்துவத்தை அருளுகின்றார் எறும்பியப்பா. திவ்யப்ரபந்தங்களின் ஸாரமாக இருக்கும் விஷயம் ஸம்ஸாரத்தில் (உலக வாழ்க்கையில்) விரக்தி. மற்றும் ரஹஸ்ய த்ரயத்தின் (திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம்) ஸாரம். இப்படிப்பட்ட திவ்யப்ரபந்தங்களின் வ்யாக்யான அர்த்தத்தை காலக்ஷேபமாக அருளுகின்றார் மாமுனிகள் – அப்படிப்பட்ட மாமுனிகளை நான் வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் அமைக்கப்பட்டுள்ளது.
திவ்யப்ரபந்தங்களை நாம் அனுஷ்டிப்பதனால் நமக்கு ஸம்ஸாரத்தில் விரக்தி ஏற்படுகின்றது. ரஹஸ்யத்ரய ஸாரமும் நமக்கு புலப்படுகின்றது. இதையே எறும்பியப்பா இந்த ச்லோகத்தின் வாயிலாக நமக்குக் காட்டுகின்றார்.
ஸம்ஸாரத்தில் விரக்தி ஏற்படுவது போல் ஏதேனும் பாசுரம் உள்ளதா என்னில், ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரின் முதல் ப்ரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திலேயே இதைக் காட்டுகின்றார்.
பொய் நின்ற ஞானமும்* பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்*
இந்நின்ற நீர்மை* இனி யாம் உறாமை* உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!*
மெய்ந்நின்று கேட்டருளாய்* அடியேன் செய்யும் விண்ணப்பமே.
எளிய விளக்கம்:
இந்த பாசுரத்தில், ஆழ்வார் எம்பெருமானை நோக்கி “ஸ்வாமி! அடியேனுடைய ஸம்ஸாரபந்தம் தொடர்ந்து வராமல் இவ்வளவோடு அற்றுப் போகுமாறு தேவரீர் அருள்செய்யவேண்டுமென்று அடியேன் வணக்கத்துடன் சொல்லிக்கொள்ளும் வார்த்தையைத் திருச்செவி சாத்தியருளவேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
பதவுரை
உயிர் அளிப்பான் – எல்லாப் ப்ராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
எந்நின்ற யோனியுமாய்ப் – பல வகைப் பட்ட பிறப்புக்களையும் உடையனாய்
பிறந்தாய் – திரு அவதரித்தவனே
இமையோர் – நித்யஸூரிகளின் (வைகுந்தத்தில் நித்ய வாசம் செய்பவர்கள்)
தலைவா – தலைவனே!
பொய் நின்ற ஞானமும் – பொய்ம்மை நிலை பெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கும் – தீய நடத்தையும்
அழுக்குடம்பும் – அழுக்குடன் (ரத்தம், சதை, சீழ் போன்ற சகிக்க முடியாத இருக்கும்) கூடிய ஸரீரம்
இந்நின்ற நீர்மை – இப்படிப்பட்ட தன்மை (பிறப்புத் துன்பத்தை)
இனி – இனிமேல்
யாம் – நாங்கள்
உறாமை – அடையாதபடி
அடியேன் – உன் அடியவனாகிய யான்
செய்யும் – செய்கின்ற
மெய் விண்ணப்பமே – உண்மையான விஜ்ஞாபநத்தை
நின்று கேட்டருளாய் – நின்று நீ கேட்டருள வேண்டும்
இது போல் பாசுரங்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்க நமக்கு இந்த உலக விஷயங்களில் விரக்தி தானே உண்டாகிவிடும். அதே சமயத்தில் பகவானின் கல்யாண குணங்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையும் வரும். அவன் குணங்களில் ஈடுபடும்போது ஏற்படும் ஆனந்தம், அவனுக்கு நாம் அடிமை என்ற நம் ஸ்வரூபத்தை நமக்கு உணர்த்தும்.
நாம் இந்த அழுக்கு உடம்பு அல்ல, ஆத்மா என்ற புரிதல் ஏற்படும் போது நம்மால் ஆண்டாள் நாச்சியார் சொல்வது போல் “வையத்து வாழ்வீர்காள்…” என்று இந்த பூலோகத்திலேயே எம்பெருமானுக்கு ஆனந்தமாக கைங்கர்யம் செய்ய முடியும். மேலும் இங்கு வாழ்க்கை முடியும் போது, வைகுந்தத்தில் சென்று மிகவும் ஆனந்தமாக கைங்கர்யம் தொடர்ந்து செய்வோம்.
இவ்வுலகிலும், இவ்வுலகை விட்டு நாம் அடையும் ஸ்ரீ வைகுந்தத்திலும் நம்முடைய (ஆத்மாவின்) குறிக்கோள் என்ன என்பதை திவ்யப்ரபந்தம் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகின்றது. இதையேதான் ரஹஸ்ய த்ரயமும் விளக்குகின்றது.
- திருமந்த்ரத்தில் – ஆத்மா எம்பெருமானுக்கே அடிமை, அவனையே சரணம் பற்ற வேண்டும், அவன் திருவடிகளுக்கே நாம் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது
- த்வய மஹா மந்த்ரத்தில் – தாயாரை முன்னிட்டு நாம் எம்பெருமானைச் சரணம் அடைகிறோம். அந்தப் பிராட்டியோடு சேர்ந்து இருக்கும் எம்பெருமானுக்கு, நாம் அவனுடைய ப்ரீதிக்காக கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறோம்
- சரம ச்லோகத்தில் – கண்ணன் எம்பெருமான் – “எல்லா தர்மங்களையும் விட்டு நீ என்னையே உபாயமாகப் பற்று. மிகப்பெரியவனான நான், உன்னை எல்லாப் பாபங்களில் இருந்தும் மோக்ஷம் அளிக்கிறேன். கவலைப் படாதே!” என்று நமக்கு ஆணை இடுகிறான்.
ஆக, ரஹஸ்ய த்ரயமும் ஆத்மாவிற்கு உகந்ததான பரமபதத்தில் செய்யும் நித்ய கைங்கர்யத்தையே எடுத்துக் காட்டுகின்றன. இதையே நமக்கு திவ்யப்ரபந்தங்களும் விளக்குகின்றன. இந்த அர்த்தத்தையே எறும்பியப்பா அவருடைய பூர்வ தினசர்யா 27வது ச்லோகம் மூலமாக நமக்கு விளக்கியுள்ளார்.
இதுவரையில் திவ்யப்ரபந்தங்கள் என்ன என்பதையும், யாரால் அருளப்பட்டது என்பதையும், அருளியவர்கள் எத்தகையவர்கள் என்பதையும், அருளப்பட்ட அர்த்தங்கள் என்ன என்பதையும் பார்த்தோம். இனி, திவ்யப்ரபந்தங்கள் எவ்வாறாக பிரித்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
திவ்யப்ரபந்தங்கள் எவ்வாறு பிரிக்கப் பட்டுள்ளது?
முன்பு ஒரு காலத்தில், வேதவ்யாஸர் ஒன்றாக இருந்த வேதத்தை, இனி வரும் மனிதர்களுக்கு இதை இப்படியே கற்க இயலாது என்று, நாம் எளிமையாகக் கற்பதற்காக நான்காகப் பிரித்து வகைப்படுத்திக் கொடுத்தார். அதே போல், ஸ்ரீமந் நாதமுனிகள் தமிழ் வேதமாகிய ப்ரபந்தங்களை, நான்கு ஆயிரமாக பிரித்து, வரிசைப் படுத்தியுள்ளார். முதலாயிரம், இரண்டாம் ஆயிரம், இயற்பா, திருவாய்மொழி என்று நான்கு பிரிவுகளாக தொகுத்துள்ளார் ஸ்ரீமந் நாதமுனிகள்.
எதற்காக ஸ்ரீமந் நாதமுனிகள் இவ்வாறு பிரித்தார் என்றால், ஒரே விதமாக தொடர்புடைய அர்த்தங்களைக் கொண்ட ப்ரபந்தங்களைச் சேர்த்து ஒரு பிரிவில் தொகுத்து வழங்கியுள்ளார்.
- முதலாயிரம் என்பது பெரியாழ்வார் பாசுரங்கள், ஆண்டாள் நாச்சியார் பாசுரங்கள், திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தம், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் மதுரகவியாழ்வாரின் பாசுரங்களைக் கொண்டது.
- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் – இம்மூன்றையும் இரண்டாம் ஆயிரமாகச் சேர்த்தார்.
- இயற்பா என்பது இசை இல்லாமல் பாடக்கூடிய பாசுரங்கள். தமிழ் இலக்கியத்தில், இயல், இசை, நாடகம் என்று மூன்று விதமான நிலைகள் உண்டு . இயல் என்பதை கட்டியம் என்றும் சொல்லுவார்கள். இது கவிதை போல் இல்லாமல் உரைநடையில் இருப்பது. இந்த தொகுப்பில், முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள், திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி, நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருமங்கையாழ்வாரின் திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் – ஆகியவை எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது.
- திருவாய்மொழி முழுவதும் நம்மாழ்வாரின் பாசுரங்கள், ஆகையால் அவற்றை எல்லாம் சேர்த்து நான்காம் ஆயிரமாகத் தொகுத்தார்.
முற்காலத்தில், நாலாயிரம் பாசுரங்கள் இருக்கும் புத்தகங்களில், ஒவ்வொரு பதிகத்திற்கும், ராகம், தாளம் போன்றவை காட்டப்பட்டிருக்கும். அதில் இயற்பாவிற்கு மட்டும் இவை இருக்காது. ஆயினும் நம் கோயில்களில் நாம் இயற்பாவையும் ராகமாகத் தான் சேவிப்போம். வெறும் உரைநடையாக படித்துவிடுவதில்லை. ஆழ்வார்கள் இசையை நினைத்து பாடவில்லை. எம்பெருமானின் அருள் பெற்று, பாசுரங்கள் ஆழ்வார்கள் மூலமாக ஒரு அழகிய விதமாக வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நாலாயிரம் என்று கூறுகிறோமே, இதில் சரியாக நான்காயிரம் பாசுரங்கள் இருக்கின்றனவா ?
நாலாயிரம் பாசுரங்கள் என்று சொன்னாலும், இதில் சரியாக நான்கு ஆயிரம் என்ற கணக்கு இல்லை.
பத்து, பதிகம் / சதகம், தசகம் என்றால் என்ன ?
நம்மாழ்வார் தமது பதிகம் தோறும், ஆயிரத்துள் இப்பத்து என்று கூறுகின்றார். ஆனால் திருவாய்மொழியில் சரியாக 1102 பாசுரங்கள் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலும் 11 பாசுரங்கள் பாடியுள்ளார் நம்மாழ்வார். கேசவன் தமர் என்ற பதிகத்தில் (திருவாய்மொழி 2.7) மட்டும் நம்மாழ்வார் 13 பாசுரங்களை அருளியுள்ளார். எனவே 1102 பாசுரங்கள் அமைந்துள்ளது திருவாய்மொழியில். ஆயினும், ஆயிரம் பாசுரங்கள் என்றே நாம் வழக்கத்தில் கூறுகின்றோம்.
அதே போல், நாலாயிரம் என்று சொல்வதற்கு சரியாக நான்கு ஆயிரம் பாசுரங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆயினும், சில இடங்களில் பெரியோர்கள் ஒரு விதமாக கணக்குக் காண்பித்து நான்கு ஆயிரம் பாசுரங்கள் இருக்கின்றது என்றும் கூறுவார்கள்.
பதிகம் என்றால் என்ன?
சில ப்ரபந்தங்களில் பத்து பாசுரங்கள் உள்ளன, சிலவற்றில் 11 அல்லது 12 பாசுரங்கள் உள்ளன. பெரியாழ்வார் திருமொழியில் 461 பாசுரங்கள் உள்ளன. பொதுவாக நூறு பாசுரங்களுக்கு மேல் உள்ள ப்ரபந்தங்களை பத்துப் பத்தாகப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கும் 10 / 11 பாசுரங்கள் கொண்ட தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். ஸம்ஸ்க்ருதத்தில் தசகம் என்று பெயர்.
பத்து என்றால் என்ன?
பலருக்கும் ஏற்படும் குழப்பம் இது. பத்து என்றால் பத்து பாசுரங்கள் என்று நினைத்து விடுவார்கள். அப்படியல்ல! பதிகம் என்பதே பத்துப் பாசுரங்களின் தொகுப்பு. நூறு பாசுரங்கள் கொண்ட தொகுப்பிற்கே பத்து என்று பெயர். ஸம்ஸ்க்ருதத்தில் சதகம் என்று பெயர்.
திருவாய்மொழியில் 10 பத்துக்கள் இருக்கின்றன. பெரிய திருமொழியில் 11 பத்துக்கள் உள்ளன. பத்து என்றால் சரியாக 100 பாசுரங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, பெரியாழ்வார் திருமொழியில் 5 பத்துக்கள் உள்ளன; ஆயினும், மொத்தமாக இதில் 461 பாசுரங்களே உள்ளன.
பாசுரம் என்பதைப் பாட்டு என்றும் சொல்லுவோம். பத்துப் பாசுரங்கள் சேர்ந்தால் பதிகம். நூறு சேர்ந்தால் பத்து.
திவ்யப்ரபந்தங்கள் எப்படி நமக்கு வந்து சேர்ந்தன ?
ஆழ்வார்கள் த்வாபர யுகத்தின் கடைசியிலே, கலி யுகத்தின் தொடக்கத்திலே வந்து தோன்றியவர்கள். முதல் நான்கு ஆழ்வார்கள் த்வாபர யுகத்தில் அவதரித்தனர். நம்மாழ்வார் தொடக்கமாக திருமங்கை ஆழ்வார் வரை கலி யுகத்தில் தோன்றினார்கள்.
ஆழ்வார்கள் அருளியவையே இந்த நாலாயிர திவ்யப்ரபந்தங்கள். இந்தப் பாசுரங்கள் ஆழ்வார்கள் காலத்தில் நடையாடிக் கொண்டிருந்திருக்கின்றன. திருமங்கையாழ்வார் காலத்திலும் கூட பாசுரங்கள் கோயில்களிலே சேவிக்கப்படும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இதை நாம் திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவத்தை தொடக்கி வைத்ததிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் சென்றதை நினைத்துப் பார்த்து, அதற்கு ஒரு கெளரவத்தைக் கொடுக்க வேண்டும், ஆழ்வாரின் பாசுரங்களுக்கு ஒரு பெருமை கொடுக்க வேண்டும் என்று நம்பெருமாளிடம் ப்ரார்த்தித்து வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக பத்து நாட்கள் நம்மாழ்வாரின் பாசுரங்களை உத்ஸவமாக கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார்.
எனவே திருமங்கையாழ்வாரின் காலம் வரை திவ்யப்ரபந்த பாசுரங்கள் நன்கு வழக்கத்தில் இருந்திருப்பது நமக்குத் தெரிகின்றது. அவர் காலத்துக்குப் பின், சிறிது சிறிதாக வழக்கத்திலிருந்து மறைந்து, பின் 8ம் நூற்றாண்டில், ஸ்ரீமந் நாதமுனிகள் வாழ்ந்து வந்த காலத்தில் திவ்யப்ரபந்தங்கள் கிட்டத்தட்ட மறைந்தே போயின என்று சொல்லலாம். ஏனெனில், வெகு சிலரே பாசுரங்கள் தெரிந்தவர்களாக இருந்தனர். அதிலும், யாருக்குமே முழுவதுமாக 4000 பாசுரங்களும் தெரிந்திருக்கவில்லை. ஒரு சில பாசுரங்களே தெரிந்திருந்தது. பிறகு நாதமுனிகள், தாமே நம்மாழ்வாரிடமிருந்து அனைத்துப் பாசுரங்களையும் மீண்டும் பெற்றார் என்பது சரித்திரம். அந்தச் சரித்திரத்தை நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
மறைதலும் வளர்தலும்
அதற்கு முன், ஒரு கேள்வி வரலாம். “அப்படியும் கூட பாசுரங்கள் மறைந்து விடுமா என்ன? இப்பொழுதும் கூட நாம் சில திவ்யதேசங்களில் ஸ்ரீவைஷ்ணவர்களையே பார்ப்பதில்லை. ஆனால் மற்ற திவ்யதேசங்களில் உள்ளனர். சில திவ்யதேசங்களில் – திருவல்லிக்கேணி போன்ற இடத்தில், கோயில்களும், உத்ஸவங்களும், பாசுரங்களும் மிகவும் வளம் பெற்றுச் சிறப்பாக இருக்கின்றனவே! அப்படியும் மொத்தமாக மறைந்திருக்குமா என்ன?” என்று தோன்றலாம்.
இது போன்று வளர்ச்சியும், தேய்தலும் மாறி மாறி வருவது உலக இயல்பு. இதை நாம் பகவத் கீதையிலும் கூட காணலாம்.
அர்ஜுனனுக்கு என்ன தான் கண்ணன் மீது அன்பும் மரியாதையும் இருந்தாலும், கண்ணனின் ப்ராமாணிகத்வத்தில் முழு நம்பிக்கை இன்னும் வரவில்லை. அர்ஜுனன் மனத்தில் “இந்தக் கர்ம யோகம், ஞான யோகம் – இவற்றையெல்லாம் கண்ணன் நமக்குச் சொல்கிறானே, இவனுக்கு எப்படி இத்தனையும் தெரியும்? நம்முடன் ஸமமாகத் தானே பழகிக் கொண்டு வருகிறான். இவன் உண்மையில் யார்?” என்று சந்தேகம் எழுந்தது. இதைப் புரிந்து கொண்ட கண்ணன் எம்பெருமான், 4ம் அத்தியாயத்தில், தன்னுடைய மாஹாத்ம்யத்தை எடுத்து விளக்குகிறான்.
கண்ணன் எம்பெருமான், “நான் இப்பொழுது உனக்குச் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த உபதேசத்தை, முன்னமே விவஸ்வானுக்கு (சூரியன்) உபதேசித்தேன். அதன் பிறகு விவஸ்வான் அதை மனுவிற்கு உபதேசித்தார், மனு இதையே இக்ஷ்வாகுவிற்கு உபதேசித்தார்” என்று உபதேச பரம்பரையை விளக்கினான். “இப்படி வந்து கொண்டிருந்த பரம்பரையம் இந்த ஞானமும் ஒரு காலத்தில் மறைந்து போயிற்று. ஆகையால் நானே இதை மீண்டும் உனக்கு உபதேசிக்கிறேன்” என்று எடுத்துக் காட்டினான்.
“விவஸ்வான் இருந்த காலத்தில், நீ எப்படி இருந்தாய்?” என்று அர்ஜுனன் மேலும் குழம்ப, க்ருஷ்ணன் மேலும் பல ச்லோகங்கள் மூலமாக அதற்கு விடை அளிக்கிறான்:
ச்லோகம் 4.5
ஶ்ரீப4க3வானுவாச1|
ப3ஹூனிமே வ்யதீ1தா1னி ஜன்மானி த1வசா1ர்ஜுன |
தா1ன்யஹம் வேத3 ஸர்வாணி ந த்1வம் வேத்1த2 ப1ரந்த1ப1 ||
எதிரிகளை தபிக்க வைப்பவனே! உனக்கும் எனக்கும் பல பிறவிகள் கடந்துள்ள. அவற்றையெல்லாம் நான் நினைவில் வைத்துள்ளேன். ஆனால் நீ மறந்துவிட்டாய்!
ச்லோகம் 4.7
யதா3 யதா3 ஹி த4ர்மஸ்ய க்3லானிர்ப4வதி1 பா4ரத1 |
அப்4யுத்1தா2னமத4ர்மஸ்ய த1தா3த்1மானம் ஸ்ருஜாம்யஹம் ||
எப்பொழுதெல்லாம் அதர்மம் தலையெடுக்கிறதோ, தர்மம் சரிகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் பூமியில் அவதரிக்கின்றேன்.
ச்லோகம் 4.7
ப1ரித்1ராணாய ஸாதூ4னாம் வினாஶாய ச1 து3ஷ்க்1ருதா1ம் |
த4ர்மஸம்ஸ்தா2ப1னார்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3 ||
எப்பொழுதெல்லாம் துஷ்டர்களை நிரஸிக்க வேண்டுமோ, ஸாதுக்களை ரக்ஷிக்க வேண்டுமோ, தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் நான் அவதரித்து அதைச் செய்கிறேன்.
என்று கண்ணன் எம்பெருமான் தன்னுடைய மாஹாத்ம்யத்தையும் அவதார ரஹஸ்யத்தையும் அர்ஜுனனுக்கு விளக்குகிறான். ஆக, கீதையின் 4வது அத்தியாயத்தில், எம்பெருமான் ஆத்மஞான உபதேசம் சில காலம் மறைந்து போனதையும், தானே அதை மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து பிறப்பிப்பதையும் நாம் பார்க்கிறோம். அதே போல், திவ்யப்ரபந்தங்களும் சில காலம் முழுவதுமாக மறைந்து போய், பின்னர் எம்பெருமான் ஸ்ரீமந் நாதமுனிகள் மூலமாக அதை மீட்டுக் கொடுக்கிறான்.
ஸ்ரீமந் நாதமுனிகள் எவ்வாறு நமக்கு திவ்யப்ரபந்தங்களை மீட்டுக் கொடுத்தார் ?
ஒருமுறை, நம் ஸ்ரீமந் நாதமுனிகள் காட்டுமன்னார் கோவிலில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும்போது, மேல் நாட்டிலிருந்து (திருநாராயணபுரம்) சில அடியார்கள் வந்தனர். அவர்கள், “ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” என்று திருக்குடந்தை எம்பெருமானின் விஷயமாக 10 பாசுரங்களைப் பாட, அதில் கடைசி பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன்” என்றும் “ஓராயிரத்தில் இப்பத்தும்” என்றும் வருவதைக் கேட்டு, மிக்க ஆர்வத்துடன் “இந்தச் சடகோபன் என்பவர் யார்? உங்களுக்கு 1000 பாசுரங்களும் தெரியுமா?” என்று ஸ்ரீமந் நாதமுனிகள் அவர்களை வினவ, அவர்களோ “எங்களுக்கு இந்த 10 பாசுரம் மட்டும் தான் தெரியும். நீங்கள் வேண்டுமானால் குருகூரில் சென்று கேளுங்கள்!” என்று சொல்லிவிடுகிறார்கள்.
பின்பு, ஸ்ரீமந் நாதமுனிகள் குருகூரைக் கண்டுபிடித்து, அங்குள்ள மதுரகவி ஆழ்வாரின் திருவம்சத்தவரைக் கேட்க, அவர்கள் “எங்களுக்கு நம்மாழ்வரின் பாசுரங்கள் தெரியாது, அவையெல்லாம் மறைந்து போயின! ஆனால் மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு தான் தெரியும். எங்கள் பெரியோர்கள், இந்தக் கண்ணிநுண் சிறுத்தாம்புப் பாசுரங்களை 12,000 முறை, ஆழ்வார் இருந்த திருப்புளியாழ்வார் அடியில் சென்று விண்ணப்பித்தால், நம்மாழ்வார் ப்ரத்யக்ஷமாகத் தோன்றி வரமளிப்பார் என்று கூறியுள்ளனர். நீங்கள் வேண்டுமானால் அதைச் செய்து பாருங்கள்” என்று கூறி, ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு கண்ணிநுண் சிறுத்தாம்புப் பாசுரங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.
ஸ்ரீமந் நாதமுனிகள் அஷ்டாங்க யோக நிபுணராக இருந்ததால், அவர் அந்த திருப்புளியாழ்வார் அடியில் அமர்ந்து அவர்கள் கூறியது போல், 12000 முறை இடைவிடாது நம்மாழ்வாரை த்யானித்துக் கொண்டு அந்த பாசுரங்களைச் சொல்ல, நம்மாழ்வாரும் அவர் முன் ப்ரத்யக்ஷமாகத் தோன்றி, தான் பாடிய 1000 பாசுரங்கள் மட்டுமல்லாமல், மற்ற 3 ப்ரபந்தங்களையும் கொடுத்து, மற்ற ஆழ்வார்கள் பாடிய எல்லா ப்ரபந்தங்களையும் கொடுத்து, அதற்கு வ்யாக்யானமான அர்த்தங்களை எல்லாம் இவர்க்கு உபதேசம் செய்து, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நேரே ஆசார்யன் ஆனார்.
இப்படியாக ஸ்ரீமந் நாதமுனிகள் மூலமாக நம் ஆசார்ய பரம்பரை, ஆழ்வாருக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்தது. நாதமுனிகள் மிகச் சிறந்த யோகியாக இருந்ததாலும், ஆழ்வாரின் அனுக்ரஹத்தாலும் அவருக்கு அனைத்து பாசுரங்களும் அதன் அர்த்தங்களும் மனத்திலே அப்படியே தங்கின. அவர் மீண்டும் காட்டு மன்னார் கோவிலுக்கு எழுந்தருளி, எம்பெருமான் திருமுன்பு அந்தப் பாசுரங்களை எல்லாம் பாடி மகிழ்வித்தார். எம்பெருமான் மிகவும் மகிழ்ந்து அவரை திவ்யப்ரபந்தங்களைத் தொகுத்து எங்கும் பரவும்படி செய்யச் சொன்னார்.
ஸ்ரீமந் நாதமுனிகளும் 3000 (முதலாயிரம், இரண்டாம் ஆயிரம், நான்காம் ஆயிரம்) பாசுரங்களுக்கு இசையும் தாளமும் அமைத்து, அவற்றை தம் மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் ஆகியோருக்கு அரையர் சேவை (எம்பெருமான் திருமுன்பு அலங்காரத்துடன் அபிநயங்களுடன் ராகத்துடனும், தாளத்துடனும் பாடுவது) முறையில் பாடும்படி சொல்லிக் கொடுத்தார். இயற்பாவை தாளம் இல்லாமல் பாடும்படிச் சொல்லிக் கொடுத்தார்.
நம் ஆசார்ய பரம்பரை எவ்வாறு திவ்யப்ரபந்தங்களை வளர்த்தார்கள் ?
மேலும், இவருடைய சிஷ்யர்களில் ப்ரதான சிஷ்யரான உய்யக்கொண்டாருக்கு இந்த ப்ரபந்தங்களையும் அதன் அர்த்தங்களையும் உபதேசிக்க, அவர் தம் சிஷ்யரான மணக்கால் நம்பிகளுக்கு உபதேசித்து, பின் அவர் மூலம் ஆளவந்தாருக்கும் (ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனார்) இந்த ஞானமெல்லாம் வந்து சேர்ந்தது.
ஆளவந்தார் திருவரங்கத்திற்கு வந்து, அங்கே நிரந்தரமாக வாஸம் செய்து, ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரித்து, நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்த்து வந்தார். அவர் சிஷ்யர்கள் பலர். முக்கியமாக பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், திருக்கோஷ்டியூர் நம்பி, ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வவாரி ஆண்டான், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி போன்ற சிஷ்யர்கள் இருந்தனர்.
அதிலே பெரிய நம்பியின் சிஷ்யராக ராமானுஜர் ஸந்யாஸ ஆச்ரமத்தை மேற்கொண்டு திருவரங்கத்துக்கு வந்து, ஸம்ப்ரதாய கைங்கர்யங்களைச் செய்து வந்தார். ஸம்ஸ்க்ருதத்தில் 9 கிரந்தங்களை அருளியுள்ளார் பகவத் ராமானுஜர். வேத வேதாந்தங்கள், பகவத் கீதை போன்றவற்றிற்கு நன்றாக வ்யாக்யானம் அருளியுள்ளார். தமிழ் வேதமாகிய இந்த திவ்யப்ரபந்தங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, இவற்றை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற திருவுள்ளத்தால், தான் நேரே வ்யாக்யானம் எழுதாமல் (தான் எழுதினால் பிறகு பின் வருவோர் மேலும் வ்யாக்யானங்கள் எழுத மாட்டார்கள், பல பல வ்யாக்யானங்கள் திவ்யப்ரபந்தங்களுக்கு வர வேண்டும் என்பதால்), தன் சிஷ்யரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்பவரை எழுதுமாறு ஆணையிட, அவரும் திருவாய்மொழிக்கு எம்பெருமானாரின் ஆணையின்பேரில் முதல் வ்யாக்யானம் அருளிச் செய்தார். இது தான் 6000 படி வ்யாக்யானம்.
இதைத் தொடர்ந்து, பராசர பட்டர் (கூரத்தாழ்வானின் மூத்த திருக்குமாரர்), அவருடைய காலத்தில் திவ்யப்ரபந்தங்களுக்கு பல அற்புதமான விளக்கங்களை அருளினார். அவருடைய விளக்கங்களே அனைத்து அருளிச்செயல் வ்யாக்யானங்களில் நிறைந்து இருக்கும். ஆங்காங்கே நாம் “இது பட்டருடைய நிர்வாகம்” என்று சேவிக்கலாம். மிக்க ரஸமாகப் பாசுரங்களுக்கு அர்த்தங்களை எடுத்துக் காட்டி, திவ்யப்ரபந்தங்களை நன்றாக வளர்த்தார்.
பட்டர் தன் சிஷ்யரான நஞ்சீயருக்கு 6000 படி வ்யாக்யானத்தின் அடிப்படையில், அர்த்தங்களை உபதேசித்தார். பின் பட்டரின் உத்தரவின் பேரில் நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானம் திருவாய்மொழிக்கு அருளினார்.
நஞ்சீயரின் முக்கியமான சிஷ்யர் நம்பிள்ளை. லோகாசார்யர் என்றும், திருக்கலிகன்றி தாஸர் என்றும், கலிவைரி தாஸர் என்றும் இவருக்குத் திருநாமங்கள் உண்டு. இவர் தமிழிலும், ஸம்ஸ்க்ருதத்திலும், இலக்கணம், இலக்கியம் , இதிஹாஸ புராணங்கள் போன்ற எல்லாவற்றிலும் மிகச்சிறந்த வித்வான். இவர்தான் திருவாய்மொழிக்கு விரிவான வ்யாக்யானங்களை அருளிச்செய்தார். திருவரங்கத்தில் பெரிய பெருமாளுடைய திருவடி பக்கத்தில் இருக்கும் மண்டபத்தில் தினப்படி இவருடைய காலக்ஷேபம் நடந்து கொண்டே இருக்கும். நம்பெருமாள் புறப்பாடா நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டியா என்று கொண்டாடும்படி இருக்கும். நம்பெருமாள் புறப்பாட்டிற்கு எவ்வளவு பேர் வருவார்களோ அதே போல், நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டிக்கும் வருவார்கள். நம் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருட்களை எல்லாம் எளிய முறையில் நன்கு ப்ரஸித்தமாக உபன்யாஸமாக வழங்கினார். தன் சிஷ்யர்களுக்கு உபதேஸித்தார். இவ்வாறாக அருளிச்செயல்களுக்கு ஒரு மிகப் பெரிய எழுச்சியை உண்டாக்கினார்.
இவருடைய ப்ரதான சிஷ்யர்கள் வடக்கு திருவீதிப் பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளை. நம்பிள்ளையின் ஆணைப்படி, பெரியவாச்சான் பிள்ளை நாலாயிர திவ்யப்ரபந்தங்களுக்கும் பூர்த்தியாக வ்யாக்யானம் அருளி, அவற்றை ஏடு படுத்தியும் உள்ளார். வ்யாக்யானச் சக்ரவர்த்தி என்றே எல்லோரும் கொண்டாடும்படியாக இவருக்குத் திருநாமம். அருளிச்செயல்களை வளர்த்ததில் இவருடைய பங்கு மிகவும் இன்றியமையாதது. இவரது வ்யாக்யானங்கள் இல்லை என்றால், நம்மால் இன்றளவும் ஆழ்வார் பாசுரங்களின் பல ஆழ்ந்த கருத்துக்களையும், விசேஷ அர்த்தங்களையும் தெரிந்து கொண்டிருக்கவே முடியாது. ஆழ்வார்களின் மனத்தில் இருக்கும் உட்கருத்துக்களை உணர்ந்து வ்யாக்யானம் சொல்லக்கூடியவர்கள் நம் ஆசார்யர்கள். அவற்றையெல்லாம் நம்பிள்ளையிடம் காலக்ஷேபம் கேட்டு அவற்றை நமக்காக ஏடு படுத்தி அருளியுள்ளார் பெரியவாச்சான் பிள்ளை. இவர்தானும் நம்பிள்ளையின் கட்டளையின் படி, திருவாய்மொழிக்கு 24,000 படி வ்யாக்யானம் அருளிச்செய்தார்.
அதே போல், வடக்கு திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளை சாதித்த திருவாய்மொழி வ்யாக்யானங்களை ஏடு படுத்தினார். இதுவே ஈடு முப்பத்தாறாயிரம் (36,000) என்று ப்ரஸித்தமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வ்யாக்யானத்திலே, பரவலாக எல்லா திவ்யப்ரபந்த பாசுரங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி, பல விசேஷ அர்த்தங்களை நம்பிள்ளை மிக விளக்கமாக எடுத்துக் காட்டுகின்றார்; அதை அப்படியே மிக ஸ்பஷ்டமாக, நம்பிள்ளை சொல்லியவாறே வடக்கு திருவீதிப் பிள்ளை, ஒரு அக்ஷரம் மாறாமல் ஏடுபடுத்தி நமக்காகப் பேருபகாரம் செய்து அருளினார்.
இவ்வாறாக நம் பூர்வாசார்யர்கள் திவ்யப்ரபந்தங்களை மிகச் சிறந்த முறையில் வளர்த்து வந்த காலம் நம்பிள்ளையின் காலம். நம்பிள்ளையும் அவரது சிஷ்யர்களுமான பெரியவாச்சான் பிள்ளையும் வடக்கு திருவீதிப் பிள்ளையும் செய்த இந்தப் பேருபகாரம், அருளிச்செயல் இன்றளவும் வாழ இன்றியமையாத காரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்கள் – பிள்ளை லோகாசார்யரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும். இவர்கள் இருவரும், திவ்யப்ரபந்தங்கள் வளர மிகப் பெரிய கைங்கர்யத்தை அருளிச் செய்துள்ளார்கள். அருளிச் செயல்களின் ஆழ் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்து ரஹஸ்ய க்ரந்தங்களாக ஏடு படுத்தியுள்ளார்கள். பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீவசனபூஷணம் என்ற அதி அற்புதமான, தலை சிறந்ததொரு ரஹஸ்ய க்ரந்தத்திலே திருவாய்மொழியில் காட்டப்பட்ட முக்கியமான அர்த்தங்கள், ஆழ்வார் பாசுரங்களில் காட்டப்பட்ட முக்கியமான கொள்கைகள் போன்ற எல்லாவற்றையும் தொகுத்து அருளியுள்ளார்.
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயம் என்ற ஒரு அற்புதமான ரஹஸ்ய கிரந்தத்தில் ஆழ்வாரின் பெருமை, திருவாய்மொழியின் பெருமை, அதிலே காட்டப்பட்ட அர்த்த விசேஷங்கள், ஸ்வாபதேச அர்த்தங்கள், உள் அர்த்தங்கள் – எல்லாவற்றையும் மிக விரிவாக எடுத்து அருளிச்செய்துள்ளார். இவர்கள் இருவரும் திவ்யப்ரபந்தங்களின் ஆழ் பொருள்களை வளர்ப்பதிலே மிகப் பெரிய பங்காற்றியுள்ளனர்.
பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர் திருவாய்மொழிப் பிள்ளை. ஆழ்வார் திருநாடு அலங்கரிக்கச் செல்வதற்கு முன், மதுரகவி ஆழ்வாரைத் தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சச் சொல்லி, அதன் மூலம் வந்தது ஆழ்வார் விக்ரஹமும் பவிஷ்யதாசார்யர் விக்ரஹமும். இந்த இரு திருமேனிகளை நாம் இன்றளவும் ஆழ்வார் திருநகரியில் காணலாம். ஆனால், நம்பெருமாள் எப்படி கலாப காலத்தில் திருவரங்கத்தை விட்டு வெளியேறி இருந்தாரோ, அதே போல் நம்மாழ்வாரும் ஆழ்வார் திருநகரியை விட்டு வெளியேறி இருந்தார். திருவாய்மொழிப் பிள்ளை தான் ஆழ்வார் திருநகரிக்கு வந்து, அங்கு காடாக இருந்த இடத்தை நாடாகத் திருத்தி, ஆழ்வாரைத் திருக்கணாம்பியிலிருந்து (கேரளா அருகில்) மீட்டு வந்து, மீண்டும் பிரதிஷ்டை செய்து, நன்றாகப் புனருத்தாரணம் பண்ணி, ஆதிநாதப் பெருமாளுக்கும், ஆழ்வாருக்கும் நித்யப்படி கைங்கர்யங்கள் மீண்டும் சிறப்பாக நடக்கும் படி ஏற்பாடு செய்தவர். ஆழ்வார் திருநகரியில் மேற்குப் பகுதியிலே ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அமைத்து, எம்பெருமானாருக்கும் தனிக் கோயில் கட்டி, அங்கு பவிஷ்யதாசார்யர் திருமேனியையும் பிரதிஷ்டை செய்து, மிகச் சிறந்த முறையிலே அருளிச்செயல்களுக்கும் ஒரு ஏற்றத்தைக் கொண்டு வந்தார்.
முன்பு வடக்கு திருவீதிப் பிள்ளை ஏடு படுத்திய நம்பிள்ளையின் திருவாய்மொழி 36000 படி வ்யாக்யானத்தை, நம்பிள்ளை வாங்கி, “இது இப்பொழுது வெளியிடும் சமயம் இல்லை” என்றும், “பிற்காலத்தில் ஒரு மிகப் பெரிய ஆசார்யர் வந்து இதை வெளியிடுவார்” என்றும் சொல்லி, ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்கிற ஆசார்யரிடம் கொடுத்தார். அந்த 36,000 படி ஈடு வ்யாக்யானம் ஒரு ரஹஸ்ய பரம்பரை வழியாக காப்பாற்ற பட்டு வந்தது. இந்தத் திருவாய்மொழி ஈடு அர்த்தங்களை, ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் அவருடைய திருக்குமாரராகிய ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் ஆசார்ய சிஷ்ய முறைப்படிப் பெற்றார். பின்பு அவரிடமிருந்து அவருடைய சிஷ்யரான நாலூர் பிள்ளை பெற்றார். அவரிடமிருந்து அவருடைய திருக்குமாரரும் சிஷ்யருமான நாலூராச்சான் பிள்ளை பெறுகிறார். இவ்வாறாக ஓராண் வழி பரம்பரையாக ஈடு 36,000 படியைக் கற்றும் காத்தும் வந்தனர்.
திருவாய்மொழிப் பிள்ளை, இந்த ஈடு பரம்பரையில் நாலூராச்சான் பிள்ளையிடம் தானும் ஈடு 36,000 படி வ்யாக்யான அர்த்த விசேஷங்களை முழுவதுமாகக் கற்றார். இவருடைய கைங்கர்ய மனப்பாங்கையும் ஆசார்ய பக்தியையும் பார்த்து, நாலூர் ஆச்சான் பிள்ளை, தனது திருவாராதன பெருமாளையே (இனவாயர் தலைவன்) திருவாய்மொழிப் பிள்ளைக்கு அருளுகின்றார். பின்பு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார் திருநகரிக்கு மீண்டும் வந்து, அங்கேயே இருந்து ஆழ்வாருக்குக் கைங்கர்யம் புரிந்து வருகின்றார்.
அந்த ஸமயத்தில், ஆதிசேஷனின் அவதாரமாகவும், எம்பெருமானாருடைய புனர் அவதாரமாகவும் உள்ள மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமைகளைக் கேட்டு, ஆழ்வார்திருநகரிக்கு வந்து, திருவாய்மொழிப் பிள்ளையைத் தனது ஆசார்யராக ஏற்று அவரை ஆச்ரயிக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி, இவர் எம்பெருமானார் மீது மிகுந்த பக்தி கொண்டு, பவிஷ்யதாசார்யர் ஸந்நிதியில் அளவு கடந்த ஈடுபாட்டுடன் கைங்கர்யம் செய்து கொண்டு வந்திருந்தார். இவர் யதீந்திரப்ரவணர் என்றே கொண்டாடப்பட்டார். திருவாய்மொழிப் பிள்ளையினடத்தே ஸகல விதமான ஸம்ப்ரதாய விஷயங்களைக் கற்றுக் கொண்டு, ஈடு வ்யாக்யான அர்த்தங்களிலும் ஆழ்வார் பெருமைகளிலுமே இவர் ஆழ்ந்து இருந்தார். ஈடு 36000 படியை முழுவதுமாக தன் மனத்தில் எப்போதும் தரித்துக் கொண்டு மனனம் செய்து வந்தார்.
பின்பு இவரும் திருவரங்கத்தில் வந்து சேர்ந்து, கலாப காலத்தில் தொலைந்து போன வ்யாக்யானங்கள், க்ரந்தங்கள் ஆகியவற்றை மீட்டு, திரும்பவும் ஏடு படுத்தி, நன்றாக வ்யாக்யான காலக்ஷேபங்கள் நடக்கும்படி ஏற்பாடு செய்தார். திருவரங்கத்திலேயே நித்ய வாஸம் செய்து கொண்டு, அங்கிருக்கும் சிஷ்யர்களுக்கு ஸத் விஷயங்களைக் கற்றுக் கொடுத்து, ஸம்ப்ரதாய கைங்கர்யங்களில் ஆழ்ந்து வந்தார். எம்பெருமானர் அவர் காலத்தில் பற்பல ஸம்ஸ்க்ருத க்ரந்தங்களை அருளிச்செய்தார். அவருடைய புனர் அவதாரமான மாமுனிகளோ, த்ராவிட வேதம் (ப்ரபந்தம்), த்ராவிட வேதாந்தங்கள் (வ்யாக்யானங்கள்), ஆகியவை வளரப் பல க்ரந்தங்களையும் வ்யாக்யானங்களையும் அருளிச்செய்தார். த்ராவிட வேத வேதாந்தங்களின் பெருமைகளை நன்றாக விவரித்து, ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு எல்லாம் வ்யாக்யானம் அருளி, ஆழ்வார் ஆசார்யர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் பாசுரங்கள் அமைத்து, பல விதமாகக் கைங்கர்யங்கள் செய்து அருளிச்செயல்களின் ஏற்றத்தை மேலும் வளர்த்தார்.
பின்பு, உத்ஸவப்ரியரான நம்பெருமாள், திருவரங்கத்தில் தன்னுடைய உத்ஸவங்களை நிறுத்தி வைத்து, ஓராண்டு காலம் இடை விடாது திருவாய்மொழி காலக்ஷேபம் மணவாள மாமுனிகள் வாயிலாக கேட்க வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி ஆணையிடுகிறார். நம்பெருமாளின் ஆணையின் பேரில், திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை மாமுனிகளும் திருவரங்கத்தில் நம்பெருமாள், நாச்சிமார்கள், ஆசார்யர்கள் எல்லோரும் கொலு வீற்றிருக்க, ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் அனுபவிக்கும்படி மிக ஆச்சர்யமாகக் காலக்ஷேபமாக அருளினார். மாமுனிகள் 36000 படி, மற்றும் 24000 படி, 9000 படி, 6000 படி என்று எல்லா வ்யாக்யானங்களின் அடிப்படையில், அரும்பத விளக்கம், உள் அர்த்தம், ஆழ்ந்த அர்த்தங்கள் என்று மிகச் சிறப்பாக விளக்குகின்றார். பத்து மாதங்கள் முடிவிலே, ஆனித் திருமூலம் அன்று சாற்றுமுறை ஆகிறது. அப்பொழுது நம்பெருமாள் தானே அரங்கநாயகம் என்ற ஒரு சிறு பாலகன் வடிவில் சபைக்கு எழுந்தருளி, மாமுனிகளை தன் ஆசார்யராக பரிபூர்ணமாக ஏற்றுக்கொண்டு இவருக்கென்று “ஸ்ரீசைலேச தயா பாத்ரம்” என்று தொடங்கும் தனியனையும் ஸமர்பிக்கிறார். இப்படி, ஆழ்வாருடைய பாசுரங்களையும் அர்த்தங்களையும் எம்பெருமானே விரும்பி கேட்கும்படிக்கு மிகச் சிறந்த முறையிலே திவ்யப்ரபந்தங்களை வளர்த்து வந்தார் மாமுனிகள்.
மாமுனிகள் காலத்திற்குப் பின், பலரும் இந்த பாசுரங்களை அர்த்தங்களுடன் கற்று வ்யாக்யானத்துடன் சேர்த்தே அனுபவித்து பலருக்கும் கற்றுக் கொடுத்து, இன்றளவும் பல பல திருமாளிகைகள், மடங்கள் என்று பல ஆசார்யர்கள் மூலமாக நம்மிடையே வந்து சேர்ந்து, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இப்படி இந்த திவ்யப்ரபந்தங்களையுடைய தோற்றம், வளர்ச்சியை ஒருவாறாகப் பார்த்தோம். எப்படி வேதம் அநாதியாக (ஆரம்பமும், முடிவும் இல்லாமல்) இருக்கின்றதோ, அதே போல் திவ்யப்ரபந்தங்களும் அநாதி என்றே நாம் அறிந்து கொள்ள வேண்டும். எம்பெருமான் ஆழ்வார்கள் மூலமாக, தன்னுடைய உள்ளக்கிடங்கை, தன் பெருமைகளை, வைபவங்களை ப்ரபந்தங்களாக வெளியிட்டான்.
இதைத்தான், நம்மாழ்வாரும் திருவாய்மொழி 7ம் பத்தில், “என்றைக்கும் என்னை” என்ற பதிகத்தில் “என்னை ஒரு உபகரணமாக (கருவியாக) எம்பெருமான் உபயோகப்படுத்தி என் மூலமாக இந்தப் பாசுரங்களை வெளியிட்டானே, எப்படிப்பட்ட குணம், ஏற்றம் எம்பெருமானுக்கு?!” என்று மிகவும் வியந்து ஆனந்தப் படுகிறார்.
திருவாய்மொழி 7.9.1
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு* போகிய
அன்றைக்கு அன்று என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை*
இன் தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்
நின்ற என் சோதியை* என் சொல்லி, நிற்பனோ?
“மிகவும் நீசனாய் இருக்கின்ற என்னை ஞானம் சக்தி முதலியன உடையவனாய் மாற்றி, என்னை வைத்துக் கொண்டு, திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட உபகாரத்தை நினைக்க, தரிக்க கில்லேன்” என்கிறார். “என்றைக்கும், போகிய அன்றைக்கன்று என்னை உய்யக்கொண்டு என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ!” என்று அந்வயம்.
இப்படி, மிகச்சிறந்த பெருமைகள் வாய்ந்தவை இந்த திவ்யப்ரபந்தங்கள். இந்தப் பதிவில், ப்ரபந்தங்கள் எவ்வாறு தோன்றின, எப்படி நம் ஆசார்யர்கள் அவற்றை வளர்த்து வந்தார்கள் என்பதைச் சுருக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு ப்ரபந்தத்தைப் பற்றியும் இதே போல் மேற்கொண்டு வரும் பதிவுகளிலே பார்ப்போம்.
ஆதாரம் – https://youtu.be/r_AU-bU3kys மற்றும் https://divyaprabandham.koyil.org/index.php/2023/10/simple-guide-to-dhivyaprabandham-introduction/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org