ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
சரணாகதி செய்யும் காலத்தில் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டும் நமக்கு வேறு புகலில்லை என்பதையும் வேறு உபாயங்களில் அந்வயம் இல்லை என்பதையும் சொல்லி பிராட்டி புருஷகாரமாக எம்பெருமான் திருவடிகளை அணுகவேண்டும். இதை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் திருவேங்கடமுடையான் விஷயத்தில் மிகவும் அழகாகச் செய்து காட்டுகிறார்.
முதல் பாசுரம். எல்லோரையும் ரக்ஷிக்கும் தன்மைகளைக் கொண்டு திருமலையிலே இருக்கும் உன்னை அடிமையான நான் கிட்டும் வழியை அருளிச்செய்ய வேணும் என்கிறார்.
உலகம் உண்ட பெரு வாயா உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே
ப்ரளய காலத்திலே உலகத்தை அமுதுசெய்தபோது, காப்பதற்கு உபகரணமான பெரிய பாரிப்பையுடைய திருவாயையுடையவனாய் முடிவில்லாத கீர்த்தியை உடைய இயற்கையான ஸ்வாமியே! இயற்கையான அழகு முதலிய குணங்களால் ஜ்வலிக்கும் பூர்ணமாய் ஒளிமயமான திருமேனியையுடையவனாய் அளவற்ற பெருமையுடையவனாய் எனக்கு ப்ராணனானவனே! எல்லா உலகுக்கும் திலகமாய் நின்ற திருமலையிலே எனக்கு உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டிக்கொண்டு நின்றவனே! பரம்பரையாகப் பழைய அடியவனான நான் உன் திருவடிகளைச் சேரும் வழியை நீ அருளிச்செய்யவேண்டும்.
இரண்டாம் பாசுரம். எல்லா விரோதிகளையும் போக்கும் ஆய்தங்களையுடைய நீ, உன்னிடத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டுள்ள நான் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும் என்கிறார்.
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே
க்ரூரராய் மிகவும் வலிமை படைத்த அசுரர்களுடைய கூட்டம் எல்லாம் சிதறி தூளியாம்படித் தரைப்பட்டிருக்கும்போது மேலும் சீறி ஜ்வலிக்கும் வீரஸ்ரீயையுடைய திருவாழியை அடக்கி ஆளவல்லவனாய் நித்யஸூரிகளுக்குத் தலைவனே! சேற்றாலே பூர்ணமான சுனையிலே சிவந்த தாமரையானது சிவந்த தீயைப்போன்ற நிறத்தைக் கொண்டு மலரும்படியிருக்கும் திருமலையிலே வாழ்பவனே! அளவற்ற அன்பை உடையவனான அடியேன் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும்.
மூன்றாம் பாசுரம். உன்னுடைய ரூபத்தாலும் குணத்தாலும் இனிமையாலும் மிகவும் உய்ரந்தவிதத்தில் அனுபவிக்கப்படுபவனான நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமலையிலே புகலிடமாய் வந்ததைப்போலே அடியோங்களுக்கு இரங்கி அருளவேண்டும் என்கிறார்.
வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா! மாயவம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே
நிறத்தில் பிச்சேறும்படியான அழகையுடைய மேகம்போன்ற திருமேனியையுடையவனே! ஆச்சர்யமான குணங்களால் எல்லோரையும் விடப் பெரியவனாய் இருப்பவனே! நெஞ்சில் புகுந்து தித்திக்கும் அமுதே! நித்யஸூரிகளுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கும் பெருமையையுடையவனே! தெளிந்த அழகான அருவிகள் மணியையும் பொன்னையும் முத்தையும் அலைக்கும் திருமலையிலே இருப்பவனாய் தனித்துவம் வாய்ந்த தலைவனாய் இருப்பவனே! உன்னுடைய திருவடிகளைச் சேரும்படி அடியோங்களுக்கு ஐயோ! ஐயோ! என்று இரங்கி அருளவேண்டும்.
நான்காம் பாசுரம். உலகத்துக்கு விரோதிகளை அழையச்செய்யும் செல்வத்தையுடைய நீ, உன்னுடைய மிகவும் இனிமையான திருவடிகளை நான் கிட்டும்படி பண்ணியருள வேண்டும் என்கிறார்.
ஆவா! என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள் கேள்வா
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே
உலகத்தை ஐயோ! ஐயோ! என்று இரங்காதே துன்புறுத்தும் அசுரர்கள் ப்ராணன் விஷயமாக அக்னிமுகமான அம்புகளை மழைபோலே பொழிந்த ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லையுடையவனே! வீரபத்னியான லக்ஷ்மிக்கு தகுந்த நாயகனாய் அதனாலே உஜ்ஜ்வலரூபனாய், தேவர்களும், ரிஷிகளும் கூட்டமாக ஆதரிக்கும்படியான திருமலையில் வாழ்பவனே! பூவாலே நிறைந்த உன் திருவடிகளை இழக்கும்படி மிக அரிதான பாபத்தையுடைய நான் உன்னைக் கிட்டும் வழியைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
ஐந்தாம் பாசுரம். அடியார்களைக் காப்பதற்காக அநாயாஸமான செயல்களையுடைய உன் திருவடிகளைச் சேர்வது எந்நாள் என்கிறார்.
புணரா நின்ற மரம் ஏழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?
கூட்டமாக நின்ற ஏழு மராமரங்களையும் ஸுக்ரீவ மஹாராஜருக்கு எம்பெருமான் சக்தியிலே தேவையில்லாத ஸந்தேஹம் வந்த அக்காலத்திலே அவருக்கு நம்பிக்கை பிறக்கும்படியாக எய்த ஒரு வில்லை உடையவனே! பொருந்தி நின்ற இரண்டு மரங்களின் நடுவே போன ஜகத்துக்குக் காரணனானவனே! கதிப்பு விஞ்சின மேகங்கள் என்று சொல்லும்படி யானைகள் சேர்ந்து வாழும் திருமலையிலே வாழ்பவனே! பெருமையையுடைய ஸ்ரீசார்ங்கத்தையுடையவனான உன் திருவடிகளை அடியேன் சேருவது எந்நாள்? ஓ என்று வருத்தத்தின் மிகுதியை ஒவ்வொரு வரியிலும் வெளியிடுகிறார்.
ஆறாம் பாசுரம். மிகுந்த ஞானத்தையுடைய ஸூரிகளும் அடிமை செய்யும் திருமலையிலே உன் திருவடிகளைக்கிட்டி நான் அடிமை செய்வது எந்நாள் என்கிறார்.
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந்நாமனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
எல்லா லோகங்களையும் அளந்த திருவடித்தாமரைகள் இரண்டையும் நாம் காண்பதற்கு எந்த நாளை உடையோம் என்று ஸூரிகள் எல்லாக்காலத்திலும் நின்று இப்படிச் சொல்லி துதித்து வணங்கி கூட்டம் கூட்டமாக சரீரம், வாக்கு மற்றும் மனதாலே அடிமை செய்யும்படியான திருவேங்கமுடையானே! உனக்கே ஆட்பட்டவனான நான் உண்மையாகக் கிட்டி, உன் திருவடிகளிலே பொருந்துவது எந்நாள்?
ஏழாம் பாசுரம். எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும் உன்னை அனுபவிக்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டிக்காமல் இருந்தும் அனுஷ்டித்துப் பலம் காலம் தாழ்த்திக் கிடைப்பதைப்போலே என்னால் பொறுக்கமுடியவில்லை என்கிறார்.
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் உடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியா வினைகள் தீர் மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாதாற்றேனே
இயற்கையான அடிமைத்தனத்தையுடைய நான், உன்னைக் கிட்டி நிரந்தர அனுபவம் பண்ணும்படியான அமுதமே! நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
அடியார்களின் விரோதிகளை அழிப்பவனான பெரியதிருவடியைக் கொடியாக உடையவனே! அழகிய கனிந்த பழத்தைப்போன்ற சிவந்த திருவதரத்தை உடையவனே! செடிபோலே செறிந்த பாபங்களை தீர்க்கும் மருந்தே! திருவேங்கடத்தில் இருக்கும் என் ஸ்வாமியே! எந்த நோன்பையும் நோற்காமல் இருந்தும், உன்னை அடையாமல் இருக்கும் ஒரு நொடிப்பொழுதைக்கூட என்னால் தாங்கமுடியவில்லை.
எட்டாம் பாசுரம். தங்களை ஈச்வரர்களாக நினைப்பவர்களும் நன்றாக வணங்கும்படி ஸுலபனாய் நிற்கிற நீ, க்ருஷ்ணனாய் வந்ததைப்போலே என்பக்கல் வரவேண்டும் என்கிறார்.
நோலாதாற்றேன் உன பாதம் காணவென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே
உன் திருவடிகளைக் காண்பதற்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டியாதிருந்தாலும், பொறுக்கமுடியவில்லை என்று சொல்லி எல்லாமறிந்த நுணுக்கமான ஞானமுடைய கறுத்திருக்கும் கழுத்தையுடையவனான ஜகத்துக்குத் தலைவனான ருத்ரனும், அவனுக்கும் தந்தையாய் நிறைந்த ஞாபத்தையுடைய ப்ரஹ்மாவும் மூன்றுலோகங்களுக்குத் தலைவனான இந்த்ரனும், இளம் மீன்களைப்போன்ற கண்களையுடைய பார்வதி, ஸரஸ்வதி, இந்த்ராணி போன்ற பெண்களும் சூழ, ஆசையுடன் வந்து வணங்கும் திருவேங்கடத்தானே! கரிய நிறத்தையுடைய க்ருஷ்ணனாய் எல்லோரையும் மயக்கி வந்தாற்போலே அடியேன்பக்கல் நீ வரவேண்டும்.
ஒன்பதாம் பாசுரம். மிகவும் இனிமையான மற்றும் அழகான உன் திருவடிகளை ஒரு க்ஷணமும் பிரிய மாட்டேன் என்கிறார்.
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நாற்றோளமுதே எனதுயிரே
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே
உன்னை விரும்பாதவர்கள் விஷயத்தில் வருவதைப்போலே இருந்து வாராமல் இருப்பாய். அடியார்கள் விஷயத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கும்போது அவர்கள் ஆசைப்படி அனுபவத்தைக்கொடுக்க வருவாய். சிவந்த தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களையும், சிவந்த கனி போலே இனிமையாய் இருக்கும் திருவதரங்களையும், அடியார்களை எடுத்தணைக்கும் நான்கு திருத்தோள்களையும் உடையவனே! அடியார்களுக்கு அமுதம்போன்று இருக்கும் நிலையை எனக்குக் காட்டிக்கொடுத்து எனக்கு உயிராய் இருப்பவனே! நினைத்ததெல்லாம் கொடுக்கக்கூடிய விலையுயர்ந்த ரத்னங்களினுடைய ஒளியானது இரவைப் பகலாக ஆக்கும் திருமலையில் வாழ்பவனே! ஐயோ! உன் திருவடிகளை அடியேன் சிறிதும் அகல முடியாதவனாக இருக்கிறேன்.
பத்தாம் பாசுரம். புருஷகாரமான பிராட்டியையும், குணங்களையுமுடைய உன் திருவடிகளை வேறுபுகலில்லாதவனாக அடைந்தேன் என்று முறையாக சரணாகதியைப் பண்ணுகிறார்.
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
“நொடிப்பொழுதும் அகல மாட்டேன்” என்று அலர்மேல்மங்கைத் தாயார் நிரந்தரமாக வாழும் திருமார்பையுடையவனே! ஒப்பில்லாத எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனே! மூன்று விதமான சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களையும் சொத்தாகக் கொண்டிருக்கும் ஸ்வாமித்வத்தை உடையவனே! என்னையும் அடிமைகொள்ளும் ஸௌசீல்யத்தை உடையவனே! ஒப்பில்லாத கைங்கர்ய நிஷ்டரான அமரரும் குணானுபவ நிஷ்டரான முனிவர்களுமான கூட்டங்கள் விரும்பி வாழும் திருமலையிலே இருக்கும் ஸௌலப்யத்தை உடையவனே! வேறு புகல் ஒன்றும் இல்லாத அடியேன் உன்னுடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாக அமர்ந்துவிட்டேன்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பற்றியவர்கள் பரமபதத்திலே பெருமையுடன் நிரந்தரமாக விளஙுவார்கள் என்று பலனை அருளிச்செய்கிறார்.
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்! வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
“அடியார்களே! நம்முடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாகப் புகுந்து நிரந்தரமான அனுபவத்தைப் பண்ணுங்கள்!” என்றென்று தன் க்ருபையைக் கொடுக்கும் நிலைக்கு ஒப்பில்லாத ஸர்வேச்வரனைக் குறித்து, குளிர்ச்சியான நீர்நிலங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் தம்முடைய கார்யங்களை முடித்துக்கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களிலும் வைத்துக்கொண்டு திருமலைக்கு என்று ஏற்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் பிடித்துக்கொண்டவர்கள் மிகவும் பெருமை வாய்ந்த பரமபதத்தில் பெருமையுடன் வீற்றிருந்து நிரந்தர அனுபவத்துடன் வாழ்வார்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org