நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்

முன் பதிகத்தில் கண்ணனும் ஆண்டாள் முதலான இடைப்பெண்களும் கூடி இருக்க, இதைக் கண்ட இடைப்பெண்களின் பெற்றோர் “இப்படியே இவர்களை விட்டோம் என்றால் இவர்களின் கூடலினால் ஆனந்தம் தலைக்கேறி இவர்கள் அழிந்தே விடுவார்கள்” என்றெண்ணி, தங்கள் பெண்களைக் கண்ணனிடமிருந்து பிரித்து நிலவறைகளிலே அடைத்து விட்டனர். அந்நிலையிலே அப்பெண்கள் ஒரு பக்கமும் கண்ணன் மற்றொரு பக்கமும் தனித்தனியே மிகவும் வருந்தி வாடினர். இதைக் கண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் “இவர்களை இப்படியே பிரித்து வைத்தால் இவர்கள் இறந்தேவிடுவார்கள். கண்ணனுடன் நாமே இவர்களைச் சேர்த்தால் அதுவும் விபரீதமாக முடிகிறது. ஆக, இவர்களைக் கண்ணனுடன் சிறிதளவு சேரும் வகையில் நல்ல கணவனைப் பெறச் செய்யும் பனி நீராட்டம் (அதிகாலையில் சென்று நதியில் குளிப்பது) என்னும் செயலில் ஈடுபடுத்தி, அந்த ஸமயத்தில் கண்ணனுடன் சிறிது நேரம் இருக்க அனுமதித்து, நாம் அதைக் கண்டும் காணாமல் இருப்போம்” என்று அப்பெண்களைப் பனி நீராடச் சொன்னார்கள். கண்ணன் இவர்களை விடாமல் கவனித்து வருவதால் இந்த விஷயம் தெரிந்து அப்பெண்கள் அதிகாலையில் நீராடச் செல்லும்போது பின்தொடர்ந்து சென்றான். அப்பெண்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் கண்ணனுக்குத் தெரியாமல் நீராடப் போனாலும் எப்படியோ பின்தொடர்ந்து சென்று அவர்கள் போன பொய்கைக்கரைக்கே இவனும் சென்றான். அவர்கள் இடைப்பெண்களாகையாலே தங்கள் வஸ்த்ரங்களைக் கரையிலே களைந்துவிட்டு நதியில் சென்று நீராடினர். அந்த ஸமயத்தில் கண்ணன் வந்து அந்த வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு, குருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்தான். நீராடிவிட்டு வெளியே வந்த பெண்கள் தங்கள் வஸ்த்ரங்களைக் காணாமல் “இது ஆகாசம் கொண்டதோ, திசைகள் கொண்டதோ இக்குளம் கொண்டதோ இல்லை நம் கண்ணன் தான் கொண்டானோ” என்று கலங்கி, அங்கே குருந்த மரத்தின் மேலே கண்ணனைப் பார்த்து, நடந்த விஷயத்தை உணர்ந்தார்கள். எப்படி இவன் நம் புடவையைப் பிடித்துக் கொண்டு நம்மைப் பின் தொடர்ந்து வந்து நாமறியாதபடி இவற்றைக் கொண்டானோ, அதே போல நாமும் இவனிடத்தில் எப்படியாவது இதை வாங்க வேண்டும் என்று பார்த்து, பல வழிகளில் கேட்டுக் கடைசியில் தங்கள் துன்பத்தை அவனுக்கு அறிவிக்க, அவனும் அவர்களுக்கு வஸ்த்ரங்களைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் கூடி இருந்தான்.

முதல் பாசுரம். தாங்கள் படும் துன்பத்தைக் கூறிக் கைதொழுது வஸ்த்ரங்களைத் தரும்படி யாசிக்கிறார்கள்.

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்!
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே

திருவநந்தாழ்வானாகிற படுக்கையின்மேலே சயனித்திருப்பவனே! குளத்தில் நன்றாக மூழ்கி நீராடுவதற்காக கோழி கூவுவதற்கு முன் இங்கே வந்தோம். இப்பொழுது செல்வத்தை உடைய ஸூர்யனும் உதித்தான். நாங்கள் இங்கே மிகவும் துன்பப்படுகிறோம். இனி நாங்கள் குளத்திற்கு எப்பொழுதும் வரமாட்டோம். தோழியும் நானுமாக உன்னை கைகூப்பி வணங்குகிறோம். எங்கள் வஸ்த்ரங்களை கொடுத்தருள வேண்டும்.

இரண்டாம் பாசுரம். இவர்கள் நம்முடன் கூடி இருக்க ஆசைப்படாமல் வஸ்த்ரங்களைக் கேட்கிறார்களே என்றெண்ணி கரையில் மீதம் இருந்த சில வஸ்த்ரங்களையும் எடுத்துக் கொண்டு மரத்தின் மேலேறி அமர்ன்து கொண்டான் கண்ணன். அதைக் கண்ட பெண்கள் அவனிடம் தங்கள் வஸ்த்ரங்களைத் தருமாறு மிக வருத்தத்துடன் ப்ரார்த்திக்கிறார்கள்.

இதுவென் புகுந்தது ! இங்கந்தோ!  இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே! மாயனே! எங்கள் அமுதே!
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய்! விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்! குருந்திடைக் கூறை பணியாய்

இங்கே என்ன கார்யம் நடந்தது! ஐயோ! இந்த பொய்கைக்கு எவ்வழியாலே நீ வந்தாய்?  தேனொழுகும் இனிய திருத்துழாய் மாலையை அணிந்த கிரீடத்தை உடைய பெரியோனே! ஆச்சர்யமான செயல்களை உடையவனே! எங்களுக்கு அமிர்தத்தைப் போல  இனிமையாக இருப்பவனே! எங்களுக்கு பாக்யம் இல்லாததாலே உன்னுடன் கூடி இருக்க இசையமாட்டோம்! ஆச்சர்யமான லீலைகளை உடையவனே! அவஸரப்படாதே. காளியன் என்னும் நாகத்தின் மீது குதித்து நாட்டியம் ஆடியவனே! குருந்த மரத்தின்மேல் வைத்திருக்கும் வஸ்த்ரங்களை எங்களுக்குக் கொடுத்தருளவேண்டும்.

மூன்றாம் பாசுரம். அவன் வஸ்த்ரங்களைக் கொடுக்கிறேன் என்று சொல்ல, அதை நம்பிப் பொய்கையில் இருந்து வெளியே வந்த சில பெண்களைப் பார்த்துச் சில ஆசை வார்த்தைகள் சொல்ல, அதைக் கண்டு அவர்கள் எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுத்துவிடு நாங்கள் இங்கிருந்து போகிறோம் என்று சொல்கிறார்கள்.

எல்லே! ஈதென்ன இளமை? எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்! நீ வேண்டியதெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தருளாயே

வில்லாலே லங்கையை அழித்தவனே! என்னே! இது என்ன விளையாட்டு! எங்கள் தாய்மார்கள் இங்கே நடப்பதைக் கண்டால் எங்களை வீட்டிலே சேர்க்கமாட்டார்கள். நீயோ நாங்கள் இப்படி வஸ்த்ரம் இல்லாமல் இருப்பதைத் தவறு என்று எண்ணாமல் இருக்கிறாய். பூக்கள் மலர்ந்திருக்கும் குருந்த மரத்தில் ஏறி அமர்ந்திருக்கிறாய். நீ எதை விரும்பினாலும் நாங்கள் கொடுக்கிறோம். இவ்வூரில் உள்ள பலரும் எங்களைப் பார்க்காதபடி நாங்கள் வீட்டை நோக்கிச் செல்வோம். எங்களுடைய பட்டு வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும்.

நான்காம் பாசுரம். இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருந்த காலத்தில் இவர்களை அச்சப்படுத்தும் சில செயல்களை அவன் செய்ய, அதைக் கண்டு அவர்கள் தங்கள் துன்பத்தைச் சொல்லி அவனுடைய அருளை ப்ரார்த்திக்கிறார்கள்.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! இலங்கை அழித்த பிரானே!
குரக்கரசு ஆவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்

லங்கையை அழித்த பிரானே! பலரும் நீராடும் இந்தப் பொய்கையின் கரையில் எல்லா திசைகளிலும் சுற்றிச் சுற்றி நன்றாக விழித்துப் பார்த்து, எங்கள் கண்களில் கண்ணீர் அடக்கினாலும் நிற்காமல் தளும்புகிறபடியை நன்றாகப் பார். சிறிது கூட இரக்கம் இல்லாதவனே! நீ மரம் ஏறும் குரங்குகளுக்குத் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம். குருந்த மரத்தின் மேலே உள்ள எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும்.

ஐந்தாம் பாசுரம். ஆண்டாள் முமுக்ஷுக்களின் (ஆழ்வார்களின்) குடியில் பிறந்தவளாகையால், எம்பெருமானின் திருவுள்ளத்தை அறிந்தவள். ஸ்ரீ கஜேந்த்ராழ்வான் ஆபத்திலே அழைத்தபோது, எம்பெருமான் தன் மேன்மை பாராமல் வந்தான். இதைக் கருத்தில் கொண்டு, எப்படி ஸ்ரீ கஜேந்த்ராழ்வான் துன்பப்பட்டானோ அதைவிட அதிகமாக நாங்கள் துன்பப்படுகிறோம். ஆகையால் எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும் என்கிறாள்.

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்களோட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே! குருந்திடைக் கூறை பணியாய்

கரிய திருமேனியை உடைய எம்பெருமானே! கயல் மீன்களும் வாளை மீன்களும் ஒன்றாய்க் கூடி எங்கள் கால்களைக் கடிக்கின்றன. நீ இப்படி எங்களைத் துன்புறுத்துவது தெரிந்து எங்கள் அண்ணன்கள் வேலைப் பிடித்துக் கொண்டு வந்து உன்னை விரட்டி விட்டால், அது வேறு விதமான விளையாட்டிலே முடிந்து விடுமன்றோ?  நீ அழகிய சிற்றாடைகளை அணிந்துகொண்டு மரத்தின் மேல் இருக்காமல், குருந்த மரத்தில் உள்ள எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும்.

ஆறாம் பாசுரம். இதில் தாங்கள் பொய்கையில் இருக்கும் தாமரைத் தண்டுகளாலே துன்பப்படுவதைச் சொல்லி ப்ரார்த்திக்கிறார்கள்.

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே!
படிற்றை  எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே

விசாலமாயும் மலர்ந்த தாமரைகளை உடையதுமான பொய்கையிலே தாமரைத் தண்டுகள் எங்கள் கால்களைக் கடிக்க, விஷத்தை உடைய தேளாலே கொட்டப்பட்டதைப் போல நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம். குடங்களை உயர எறிந்து கூத்தாட வல்ல எங்கள் தலைவனே! நீ செய்யும் தீம்புகளை விட்டு எங்கள் பட்டு வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும்/

ஏழாம் பாசுரம். இதில் எங்களைப் போன்ற பெண்களைத் துன்புறுத்தி நீ நீதி தவறாதே என்று அறிவுரை கூறுகிறார்கள்.

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே!
ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே

ஒருவரும் இல்லாத ஊழிக் காலத்திலும் எல்லோரையும் காக்கும் சிந்தனையுடன் இருப்பவனே! நாங்கள் நீரிலே நின்று வருந்திகிறோம். அநீதியான செயல்களைச் செய்தாய். உன்னிடத்திலிருந்து தப்புவோம் என்று பார்த்தால், எங்கள் வீடுகளும் ஊரும் மிகவும் தொலைவில் உள்ளன. ஐயோ! நீ எங்களை இப்படிச் செய்தாலும், நாங்கள் உன்னிடத்திலே அன்பு கொண்டுள்ளோம். எங்கள் தாய்மார்கள் நாங்கள் உன்னுடன் கூடியிருப்பதைக் கண்டால் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் பட்டு வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும். மலர்ந்த புஷ்பங்களை உடைய குருந்த மரத்தில் அமர்ந்திருக்காதே.

எட்டாம் பாசுரம். உனக்கு வெட்கப்பட வேண்டும்படியான உறவை உடையவர்கள்  இங்கே வந்துள்ளார்கள். அவர்கள் முன்பு தீம்புகளைச் செய்து அவமானப்படாதே என்கிறார்கள்.

மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையிராத் துயில்வானே!
சேமமேல் அன்றிது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே! குருந்திடைக் கூறை பணியாய்

முற்காலத்தில் (பகலெல்லாம் தீம்பு செய்து) இரவுப்பொழுதில் பரிசுத்தமான மலர் போன்ற கண்கள் உறக்கத்துக்கு ஆட்படும்படி சயனித்திருப்பவனே! இங்குள்ளவர்கள் உனக்கு மாமன் மகள் முறையை உடையவர்கள் மாத்திரமன்று. மற்றும் உள்ள உறவு முறைகளான மாமிமார், அவர்கள் தாய்மார் ஆகியோரும் வந்துள்ளனர். நீ செய்யும் இந்தத் தீம்பு, தகுதியான செயலன்று. இவ்வார்த்தையை நாங்கள் உண்மையாகச் சொன்னோம். ஆயர் குடிக்கு இளம் கொழுந்து போன்றவனே! எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுத்தருள வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் இரண்டு நிலைகளில் இருப்பான். தன்னைக் கொண்டாடுபவர்க்கும் கார்யம் செய்வான், நிந்திப்பவர்க்கும் கார்யம் செய்வான். நாம் இவனைக் கொண்டாடி நன்மை பெறவில்லை. அதனால் நிந்தித்துப் பார்க்கலாம் என்று நிந்திக்கிறார்கள்.

கஞ்சன் வலை வைத்த அன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட மசிமையிலீ!  கூறை தாராய்

கம்ஸன் உன்னை அழிக்க நினைத்த காலத்தில் மிக்க இருளை உடைத்தான இரவில் பிழைத்து, இப்பொய்கையில் நிற்கின்ற இளம் பெண்களான எங்களுக்கு நெஞ்சில் துக்கத்தைக் கொடுக்க இங்கே வந்து சேர்ந்தாய். யசோதைப் பிராட்டியோ நீ பயப்படும்படி உன்னை அதட்டமாட்டாள். நீ தீம்பு செய்யும் அளவுக்கு உன்னை அனுமதிக்கிறாள். வஞ்சனை கொண்ட பூதனையின் பாலையும் உயிரையும் உண்ட லஜ்ஜையிலாதவனே! எங்களுடைய வஸ்த்ரங்களைக் கொடுத்துவிடு.

பத்தாம் பாசுரம். இந்தப் பதிகத்தை நன்கு கற்றிருப்பவர்களுக்குப் பலன் சொல்லி முடிக்கிறாள்.

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே

எங்களுக்கு ஸ்வாமியான, கரிய நிறத்தனான கண்ணபிரான் ஆயர்சிறுமியர்களுடன் செய்த தெய்வீக விளையாட்டைக் குறித்து பொன்போன்று அழகிய மாடங்களால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்குத் தலைவரான பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் (நான்) இனிய இசையால் அருளிச்செய்த பாமாலையாகிய இந்தப் பத்து பாசுரங்களையும் கற்கவல்லவர்கள் அர்ச்சிராதி மார்க்கத்தில் போய் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து அங்கே எப்பொழுதும் பொருந்தி வாழ்கிற ஸ்ரீமந் நாராயணனோடு கூடி உயர்ந்த அனுபவத்துடன் வாழ்வார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment