அமலனாதிபிரான் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

முதலாயிரம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் அமலனாதிபிரானின் பெருமையை உபதேச ரத்தின மாலை 10ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.

கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்

உலகத்தவர்களே! பாருங்கள், இன்று கார்த்திகையில் ரோஹிணி நன்னாள். இன்றைய தினமே பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார் அவதரித்ததால், வேதத்தை மதிக்கும் ஆஸ்திகர்கள் இவ்வாழ்வார் அருளிய அமலனாதிபிரானைக் கற்றதற்பின், அது வேதத்தின் ஸாரமான விஷயமான ஸதா பச்யந்தி (எம்பெருமானையே எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பதை) என்ற விஷயத்தை பத்தே பாசுரங்களில் அழகாக விளக்குவதை உணர்ந்து, அவர்களால் மிகவும் கொண்டாடப்படும் நாள்.

பத்தே பாசுரங்களை அருளிச்செய்து பெரிய பெருமாளுடைய திருமேனி ஒன்றே தம் அனுபவத்துக்கு விஷயம் என்று காட்டிக்கொடுத்தவர் திருப்பாணாழ்வார். லோக ஸாரங்க முனிவர் ஆழ்வாரிடம் அபசாரப்பட, பெரிய பெருமாள் தன் ப்ரிய பக்தரான ஆழ்வாரை அழைத்து வரும்படி அந்த லோக ஸாரங்க முனிவருக்கே ஆணையிட, அவரும் உடனே ஆழ்வாரிடம் சென்று ப்ரார்த்திக்க, ஆழ்வார் திருவரங்கத்தில் தன் திருவடிகளை வைக்கும் தகுதி தனக்கில்லை என்று சொல்ல, அதனாலே ஆழ்வாரைத் தோளில் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தார். அதனாலே முனிவாஹனர் என்ற சிறப்புத் திருநாமத்தையும் பெற்றார். அந்த ஸமயத்தில் பாடத் தொடங்கி, பெரிய பெருமாள் திருமுன்பே வந்து, பத்தாம் பாசுரத்தை அருளிச்செய்து, பெரிய பெருமாள் திருவடியை அடைந்தார் என்பது சரித்ரம்.

இதில் உள்ள பாசுரங்களுக்கு இரண்டு விதமான தொடர்புகளை ஆசார்யர்கள் காட்டியுள்ளனர். முதல் தொடர்பு – ஆழ்வார் எப்படி எம்பெருமானின் அவயவங்களை படிப்படியாக அவன் காட்டிக்கொடுத்தபடி அனுபவிக்கிறார் என்பது. இரண்டாம் தொடர்பு, எம்பெருமான் செய்த உபகார பரம்பரைகள் என்ன என்பது. இவ்விரண்டு தொடர்புகளையும் கொண்டு அனுபவிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களைத் துணையாகக் கொண்டு இந்த ப்ரபந்தத்தின் எளிய விளக்கவுரை  எழுதப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

*****

தனியன்கள்

ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

வடதிருக்காவேரி மற்றும் தென்திருக்காவேரி ஆகிய இரண்டுக்கும் நடுவே சயனித்துக்கொண்டிருக்கும் ஹரியான பெரிய பெருமாளைத் திருவடி தொடக்கமாக திருமுடி ஈறாக அனுபவித்து மகிழ்ந்த உள்ளத்தை உடையவரும், அந்தப் பெரிய பெருமாளைத் தவிர மற்ற விஷயங்களைக் காணமாட்டேன் என்று அறுதியிட்டவரும்,  லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டவருமான திருப்பாணாழ்வாரை நான் வணங்குகிறேன்.

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி *
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய் *
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து *
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே

லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம்.

*****

முதல் பாசுரம்.

பெரிய பெருமாள் தன் திருவடியை ஆழ்வாருக்குக் காட்டியருள, ஆழ்வாரும் அந்தத் திருவடிகளை அனுபவித்துக் கொண்டாடுகிறார்.

பரிசுத்தியை உடையவனான எம்பெருமான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நிர்ஹேதுக க்ருபையால் தன்னை அடிமை கொண்டு, தன்னை அடியார்களுக்கு அடிமை ஆக்கிய குணத்தை அனுபவிக்கிறார்.

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்காத பரிசுத்தனாய், எல்லோருக்கும் காரணனாய், நன்மை செய்பவனாய், என்னைத் தன்னளவில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் தன் அடியார்களுக்கு ஆட்படுத்தும் தூய்மையை உடையவனாய், நித்யஸூரிகளுக்கு நாயகனாய், மணம் மிகுந்த சோலைகளால் சூழப்பட்ட திருவேங்கட மலையில் நித்யவாஸம் செய்பவனாய், அடியார்களுக்கு எளிதில் வந்தடையும்படி இருக்கும் தூய்மையை உடையவனாய், அடியார்களின் தோஷத்தைப் பார்க்காத தூய்மையை உடையவனாய், தலைவன் – தொண்டன் என்னும் நீதி மாறாமல் நடக்கும் பரமபதத்தை ஆள்பவனாய், நீண்ட மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் சயநித்தருளும் என் ஸ்வாமியே! உன்னுடைய திருவடிகள் தானே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்ததனவே.

இரண்டாம் பாசுரம்.

ஆழ்வார் பெரிய பெருமாள் உடுத்தியிருக்கும் திருப்பீதாம்பரத்தை அனுபவிக்கிறார். கடலில் அலைகளானவை எப்படி ஒரு மரக்கலத்தை சிறிது சிறிதாகத் தள்ளிச் செல்லுமோ, அதுபோலே ஆழ்வாரும் எம்பெருமானின் திருமேனியில் உள்ள அவயவங்களால் தள்ளப்பட்டு, அடுத்தடுத்த அவயவங்களை அனுபவிக்கிறார்.

எம்பெருமான் தன் நிர்ஹேதுக க்ருபையை எங்காவது காட்டியுள்ளானா என்ற கேள்வியெழ, அதற்கு, எம்பெருமானின் த்ரிவிக்ரமாவதார சரித்ரத்தைக் காட்டி அனுபவிக்கிறார்.

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே

இன்பம் மிகுந்த மனத்தை உடையவனாய் திருவுலகளந்தருளின எம்பெருமானின் திருமுடி (கிரீடம்) அக்காலத்தில் அண்டத்தின் எல்லை வரை நீண்டது. த்ரேதா யுகத்தில், எதிர்த்து வந்த ராக்ஷஸர்களை அழித்த க்ரூரமான அம்புகளையுடைய ஸ்ரீராமன் எம்பெருமான், நறுமணம் மிகுந்த சோலைகளையுடைய திருவரங்கத்தில் பெரிய பெருமாளாய் சயனித்திருக்கிறான். அந்த எம்பெருமானுடைய திருவரையிலே இருக்கும் பீதாமபரத்தில் என் சிந்தனையானது பதிந்தது.

மூன்றாம் பாசுரம்.

இதில், எம்பெருமானின் திருநாபீகமலத்தை ஆழ்வார் அனுபவிக்கிறார். ப்ரஹ்மாவைப் பெற்றெடுத்தபின் அந்த திருநாபீகமலம் மேலும் அழகுபெற்றது என்று அனுபவிக்கிறார்.

முன் பாசுரத்தில் அனுபவித்த அந்த த்ரிவிக்ரமன் இப்பொழுது திருவேங்கடமுடையானாக சேவை சாதிக்கிறான் என்றும், பெரிய பெருமாளும் திருவேங்கடமுடையானும் ஒரே எம்பெருமானின் இரண்டு திருமேனிகள் என்பதையும் அனுபவிக்கிறார்.

மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின்னுயிரே

குரங்குகள் பாய்ந்து விளையாடும் தமிழ் தேசத்தின் வடதிசையில் உள்ள திருவேங்கடமலையில் நித்யஸூரிகள் வந்து வணங்கும்படி நிற்கும் ஸ்ரீநிவாஸனாய், திருவரங்கத்தில் திருவனந்தாழ்வானாகிய இனிமையான படுக்கையை உடையவனான பெரிய பெருமாளின் அழகிய செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும் அதற்கு மேலே இருக்கும் ப்ரஹ்மாவைப் படைத்து அதனால் மேலும் அழகுபெற்ற திருநாபீகமலமும் ஆகிய இவற்றின் மேலன்றோ என்னுடைய நெஞ்சிலே விளங்குகிற ஆத்மாவானது சென்று படிந்தது.

நான்காம் பாசுரம்.

இதில் திருநாபீகமலத்துடன் சேர்ந்த திருவயிற்றை ஆழ்வார் அனுபவிக்கிறார். திருநாபீகமலம் ப்ரஹ்மாவை மட்டுமே படைத்தது ஆனால் திருவயிறான நானோ உலகம் முழுவதையும் என்னுள் அடைக்கி வைத்துள்ளேன் என்கிறது.

எம்பெருமான் ஒருவரைக் கைக்கொள்ளும் முன் அஹங்கார மமகாரங்கள் அழியவேண்டுமே என்று ஒரு கேள்வி வர, ஆழ்வார் எப்படி எம்பெருமான் இலங்கையைச் சுற்றியுள்ள மதிள்களைத் தகர்த்தானோ, அதுபோல என்னுடைய விரோதிகளையும் போக்குவான் என்று சொல்லி அனுபவிக்கிறார்.

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

நான்கு விதமான அரண்களை உடைய இலங்கைக்குத் தலைவனான இராவணனை யுத்தத்தில் இருந்து விரட்டி, அதற்குப் பின் அவனுடைய பத்துத் தலைகளையும் உதிரும்படி ஒப்பற்ற ஒரு க்ரூரமான அம்பை எய்தவனும், கடல் வண்ணனும், வண்டுகளானவை இனிமையாக இசை பாட, சிறந்த மயில்கள் ஆடப்பெற்ற திருவரங்கத்தில் சயனித்திருக்கும் ஸ்வாமியான பெரிய பெருமாளின் திருவயிற்றை அலங்கரிக்கும் ஆபரணமான உதரபந்தம் என்னுடைய நெஞ்சுள் நிலைத்து நின்று உலாவுகின்றது.

ஐந்தாம் பாசுரம்.

இதில் ஆழ்வார் பெரிய பெருமாளின் திருமார்பை அனுபவிக்கிறார். ப்ரளய காலத்தில் உலகங்களை வைத்திருக்கும் மதிப்பைக் காட்டிலும் எப்பொழுதும் சேதன அசேதன தத்துவங்களைக் குறிக்கும் ஸ்ரீவத்ஸ கௌஸ்துபங்களையும் தரிக்கும், எம்பெருமானை அடையாளம் காட்டும் பெரிய பிராட்டியின் ஸ்தானமான என்னைப் பாரீர் என்று திருமார்பு அழைக்க அதை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

அஹங்கார மமகாரங்கள் அழிந்த பிறகும், அநாதி காலமாகத் தொடரும் புண்ய பாபங்கள் இருக்குமே என்ற கேள்வி வர, ஆழ்வார் எம்பெருமான் அவற்றையும் போக்குவான் என்கிறார்.

பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே

பெரிய சுமையான, அநாதி காலமாகத் தொடரும் வினைகளின் தொடர்பை நீக்கி, என்னைத் தன்னிடத்தில் அன்புகொள்ளும்படி செய்த பெரிய பெருமாள், அத்துடன் நில்லாமல் என் நெஞ்சிலும் புகுந்தான். இப்படிப்பட்ட பாக்யத்தைப் பெற நான் முற்பிறவியில் எத்தனை பெரிய தவம் செய்திருப்பேன் என்று தெரியவில்லை. அல்லது, இப்படிப்பட்ட பாக்யத்தை நான் பெற அவன் எத்தனை பெரிய தவத்தைச் செய்து வந்துள்ளான் என்று தெரியவில்லை. திருவரங்கத்தில் இருக்கும் ஸ்வாமியான அப்படிப்பட்ட பெரிய பெருமாளின் திருவையும் (பிராட்டியையும்) ஆரத்தையும் உடைய திருமார்பு அடியவனான என்னை ஆட்கொண்டது.

ஆறாம் பாசுரம்.

இதில் ஆழ்வார் எம்பெருமானுடைய திருக்கழுத்தை அனுபவிக்கிறார். திருமார்பில் சேதனாசேதனங்களும் பிராட்டியும் இருந்தாலும், ஆபத்துக் காலத்திலே உலகங்களை நான்தானே விழுங்கி அவைகளை ரக்ஷிக்கிறேன் என்ற திருக்கழுத்தின் வார்த்தையைக் கேட்டு அதை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

எம்பெருமான் இப்படி யாருக்காவது பாபங்களை போக்கியிருக்கிறானா என்ற கேள்வி வர, ருத்ரனுக்கு ப்ரஹ்மாவினால் ஏற்பட்ட சாபத்தையும், சந்த்ரனுக்கு ஒளி மங்கிய காலத்திலே அந்த சாபத்தையும் போக்கிக் கொடுத்தாள்ளான் என்று ஆழ்வார் அனுபவிக்கிறார்.

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே

ஒரு பிறை வடிவில் இருக்கும் நிலாவைத் தலையில் உடையவனான ருத்ரனின் துயரைப் போக்கியவனும் அல்லது ஒரு பிறை வடிவில் இருக்கும் சந்த்ரனின் துயரைப் போக்கியவனும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் நிறைந்திருக்கும் சோலைகளை உடைய திருவரங்கத்துள் பொருந்தி இருக்கும் ஸ்வாமியான பெரிய பெருமாள். அண்டத்தில் வஸிப்பவர்களையும், அண்டங்களையும், அண்டத்துக்கு வெளியில் இருக்கும் ஆவரணங்களையும், ஒப்பற்ற பெரிய பூமியையும், மற்ற எல்லாப் பதார்த்தங்களையும் விழுங்கும் அந்தப்  பெரிய பெருமாளின் திருக்கழுத்து அடியவனான என்னை வாழவைத்தது.

ஏழாம் பாசுரம்.

இதில் ஆழ்வார் எம்பெருமானுடைய திருவாயையும் திருப்பவளங்களையும் (உதடுகள்) அனுபவிக்கிறார். திருக்கழுத்து விழுங்கினாலும், நானல்லவா முதலில் உலகங்களை உட்கொள்ள வேண்டும் என்றும் நான்தானே “மா சுச:” போன்ற வார்த்தைகளைக் கூறி எல்லோருக்கும் ஆறுதல் தருகிறேன் என்று கூற, ஆழ்வார் அவற்றை அனுபவிக்கிறார்.

ருத்ரன் போன்றவர்கள் தேவதைகள் ஆதலால் எம்பெருமான் அவர்களின் துன்பத்தைப் போக்கி ரக்ஷித்தான், உம்மைப் போன்றவர்களை ரக்ஷிப்பானா என்ற கேள்வி வர, மற்ற ப்ரயோஜனங்களை விரும்பும் தேவதைகளைக் காட்டிலும், அவனையே ஆசைப்படும் நம்மையே அவன் முக்யமாக ரக்ஷிப்பான் என்று அனுபவிக்கிறார்.

கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

திருக்கையிலே பொருந்தி இருக்கும் சுரியையுடைய திருச்சங்கினையும் நெருப்பைக் கக்கும் திருவாழியையும் உடையவராய், பெரிய மலை போன்ற திருமேனியை உடையவராய், திருத்துழாயின் பரிமளத்தினாலே நறுமணம் வீசும் உயர்ந்த திருமுடியை (கிரீடத்தை) உடையவராய், எனக்கு ஸ்வாமியாய், அழகிய திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் என்கிற இனிய படுக்கையிலே சயனித்திருப்பவராய், ஆச்சர்யமான செயல்களையுடைய பெரிய பெருமாளின் சிவந்த திருவாய் என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

எட்டாம் பாசுரம்.

இதில் ஆழ்வார் எம்பெருமானுடைய அழகிய திருக்கண்களை அனுபவிக்கிறார். வாய் என்ன வார்த்தை சொன்னாலும், கண்ணான நான் தானே வாத்ஸல்யத்தைக் காட்டுகிறேன். மேலும் நானே எம்பெருமானைப் பரமபுருஷனாக அடையாளம் காட்டுகிறேன் ஆகையால் என்னைப் பார் என்று சொல்ல அக்கண்களை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

நான்கு மற்றும் ஐந்தாம் பாசுரங்களில் காட்டப்பட்டபடி அஹங்காரம், மமகாரம் மற்றும் கர்மங்கள் அழிக்கப்பட்டாலும், அவித்யை இருந்தால் மீண்டும் அவை வருமே என்ற கேள்வி வர, எம்பெருமான் எப்படி அவித்யையின் ப்ரதிநிதியான தமோ குணத்தைக் காட்டும் ஹிரண்யகசிபுவை அழித்தானோ, அதேபோல நம் தமோ குணத்தையும் அழிப்பான் என்று அனுபவிக்கிறார்.

பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக் |
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே

மிகப் பெரிய உருவைக்கொண்டு வந்த அஸுரனான ஹிரண்யனுடைய உடலைக் கிழித்துப் போட்டவனும், ப்ரஹ்மா முதலான தேவர்களுக்கும் அணுகமுடியாதவனும், எல்லோருக்கும் காரணபூதனும், நன்மையைச் செய்பவனும் ஆன திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டிருக்கும் பரம பரிசுத்தியை உடைய பெரிய பெருமாளின் திருமுகத்தில் கறுத்த நிறத்தில், பரந்திருப்பதான, ஒளிபடைத்த, செவ்வரிகள் படர்ந்திருப்பதான, நீண்டதான, பெருமை பொருந்திய திருக்கண்கள் அடியேனைப் பித்துப்பிடித்தவனாக ஆக்கி விட்டன.

ஒன்பதாம் பாசுரம்.

இதில் ஆழ்வார் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதையும் சேர்த்து அனுபவிக்கிறார்.

ஆழ்வார் எம்பெருமானுடைய அகடிதகடநா ஸாமர்த்யத்தை அனுபவிக்கிறார். வேதாந்த ஞானம் இருந்தால்தானே தமோ குணத்தைப் போக்கிக்கொள்ள முடியும், நீரோ வேதாந்தத்தைப் பயிலும் ஜந்மத்தில் பிறக்கவில்லையே என்று ஒரு கேள்வி வர, எம்பெருமான் எப்படி உலகெல்லாம் உண்டு, ஒரு சிறு ஆலிலையில் சயனித்து நம்மால் நினைக்கமுடியாததை நடத்திக் காட்டினானோ அதுபோல எனக்கும் தமோ குணத்தைத் தன் சக்தியால் போக்கிக் கொடுப்பான் என்று அனுபவிக்கிறார்.

ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே

உலகெல்லாம் உண்டு பெரியதான ஆல மரத்தின் சிறிய இலையில் ஒரு சிறு குழந்தையாய் சயனித்து இருந்தவனும், திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் என்கிற இனிய படுக்கையில் சயனித்து இருப்பவனுமான பெரிய பெருமாளின் அழகிய, உயர்ந்ததான ரத்னங்களால் செய்யப்பட்ட ஹாரமும் முத்து மாலை போன்ற பல ஆபரணங்களும் அணியப்பட்டதும், எல்லை இல்லாத ஒப்பற்ற அழகையுடையதுமான கறுத்த திருமேனியானது என்னுடைய நெஞ்சின் அடக்கத்தைக் கவர்ந்தது. ஐயோ! இதற்கு நான் என் செய்வேன்!

பத்தாம் பாசுரம். இறுதியில் ஆழ்வார் கண்ணன் எம்பெருமானைப் பெரிய பெருமாளில் கண்டு இனி வேறொன்றைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து அந்த எம்பெருமான் திருவடிகளில் சேர்ந்து பரமபதத்தை அடைகிறார்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

மேகத்தை போன்ற நிறத்தையும் குணத்தையும் உடையவனும், இடையர் குலத்தில் தோன்றி, வெண்ணெயைத் திருடி உண்ட திருவாயுடன் இருப்பவனும், என் உள்ளத்தைக் கவர்ந்தவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், திருவரங்கத்தில் சயனித்திருப்பவனும், எனக்கு ஆரவாமுதமான பெரிய பெருமாளைக் கண்ட கண்கள் இனி வேறொன்றைக் காணாது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “அமலனாதிபிரான் – எளிய விளக்கவுரை”

Leave a Comment