உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 51

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 50

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்

என்ன உலகாரியனோ என்றுரைக்கப் பின்னை

உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி

விலகாமல் நின்றதென்றும் மேல் 

ஐம்பத்தொன்றாம் பாசுரம். நம்பிள்ளைக்கு லோகாசார்யர் என்ற விலக்ஷணமான திருநாமம் ஏற்பட்ட சரித்ரத்தை அருளிச்செய்கிறார்.

குலம் மற்றும் ஞானங்களால் வந்த பெரிய பெருமையைக் கொண்ட கந்தாடைத் தோழப்பர் முதலியாண்டானின் திருப்பேரனார். இவர் நம்பிள்ளையின் ஞானத்தையும் மிகுதியான சிஷ்யர்களையும் கண்டு அவரிடத்திலே பொறாமை கொண்டிருக்க, ஒரு முறை நம்பெருமாள் திருமுன்பே பொதுவிலே எல்லோரும் பார்க்கும்படி நம்பிள்ளையை அவமானப்படுத்திவிட்டுத் தன் திருமாளிகைக்கு வர, அங்கே இவருடைய தர்மபத்னி இவர் செயலைக் கண்டிக்க, இவரும் கலக்கம் தெளிந்து, நம்பிள்ளையிடம் சென்று மன்னிப்புக் கேட்போம் என்று புறப்பட்டுத் தன் திருமாளிகைக் கதவைத் திறக்க, வெளியிலே நம்பிள்ளை தாம் அங்கே காத்துக் கொண்டிருக்க, இவர் அவரிடத்தில் மன்னிப்புக் கேட்பதற்கு முன்பு, நம்பிள்ளை இவரிடத்திலே “முதலியாண்டான் திருவம்சத்தவரான நீர் கோபப்படும்படி நடந்துவிட்டேன், என்னை க்ஷமித்தருள வேண்டும்” என்று கூற, இதைக் கண்ட தோழப்பர் தம்முடைய பெரிய ப்ரீதியால் “இப்படி ஒருவரை நாம் இதுவரை கண்டதில்லை. நீர் ஒரு சிலருக்கு மட்டும் ஆசார்யர் இல்லை. இவ்வுலகுக்கே ஆசார்யனாக இருக்கும் தகுதி படைத்தவர். நீரே லோகாசார்யர்” என்றுரைத்தார். இந்த நிகழ்வு தொடக்கமாக நம்பிள்ளைக்கு உலகாரியன் என்ற பெயரே எங்கும் பரவி, நிலைத்து நின்றது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment