ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
யதிராஜ விம்சதியின் அவதாரிகை
இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில் தம்முடைய ஆசார்யராகிய மணவாளமாமுனிகளை அநுபவித்து, நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா, பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும் ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து, புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொறு வகையை இப்போது சொல்ல விரும்பியவராய், மணவாளமாமுனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப எம்பெருமானாரைப்பற்றி அருளிச்செய்த யதிராஜ விம்சதி என்ற க்ரந்தத்தை இங்கே அநுவாதம் செய்கிறார்.
பரமபூஜ்யரான மணவாளமாமுனிகள், ப்ரபந்நஜனகூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) நம்மாழ்வார் முதலான பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும், திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய – முடிந்தபொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம் (மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும், ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும் யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி, தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக, தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.
ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் இதன் உரையாசிரியர் திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து, இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க. விம்சதி = இருபது.
தனியன்
ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||
பதவுரை:- ய: – யாவரொருவர், யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான, யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ச்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய, ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை, வ்யாஜஹார – அருளிச்செய்தாரோ, ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான, தம் ஸௌம்யவர யோகிபுங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை), நௌமி – துதிசெய்கிறேன்.
கருத்துரை:- இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது. யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில் யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி. ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர். ப்ரபந்நஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து. யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.
archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org