யதிராஜ விம்சதி – ச்லோகம் – 6

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்   5                                                                                                                         ச்லோகம் 7

ச்லோகம் 6

अल्पापि मे न भवदीयपदाब्जभक्तिः शब्दादिभोगरुचिरन्वहमेधते हा।
मत्पापमेव हि निदानममुष्य नान्यत् तद्वारयार्य यतिराज दयैकसिन्धो ॥ (6)

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: ஸப்தாதி போகருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ || (6)

பதவுரை:- தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே, ஆர்ய – ஆசார்யரே, யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே, மே – அடியேனுக்கு, பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது, அல்பா அபி – சிறிது கூட, (அஸ்தி) – இல்லை, ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது, அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும், ஏததே – வளர்ந்து வருகிறது, ஹா – கஷ்டம், அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு, நிதாநம் – மூலகாரணம், மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும். அந்யத் ந – வேறொன்றுமன்று, தத் – அந்த பாபத்தை, வாரய – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ? இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால். தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால், எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும், எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது. ஆர்ய ஸப்தம் (1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது. (2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரமவைதிகர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் = அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது. வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே – தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டுபண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும். ‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் – பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது. ‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ, அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும் தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்; பின்னையோவென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment