யதிராஜ விம்சதி – ச்லோகம் – 18

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 17                                                                                                                        ச்லோகம் 19

ச்லோகம் 18

कालत्रयेSपि करणत्रयनिर्मितातिपापक्र्यस्य शरणं भगवत्क्षमैव ।
सा च त्वयैव कमलारमणेSर्थिता यत् क्षेमस्स एव हि यतीन्द्र! भवच्छ्रितानाम् ॥ (18)

காலத்ரயேSபி கரணத்ரயநிர்மிதாதிபாப்க்ரியஸ்ய ஸரணம் பகவத்க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் || (18)

பதவுரை:- யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும், கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட, அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு, ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது, பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும். அந்தப் பொறுமையோ எனில், த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே, கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில் அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ, ஏவ – அந்த ப்ரார்த்தனையே, பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு, க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

கருத்துரை:- கீழ்ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார். இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம். முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே, ‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’ (முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று. அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே. அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும், ‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும், உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள் நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல் தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும் யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’ (தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும். இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும் பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment