யதிராஜ விம்சதி – ச்லோகம் – 14

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 13                                                                                                                        ச்லோகம் 15

ச்லோகம் 14

वाचामगोचरमहागुणदेशिकाग्रयकूराधिनाथकथिताकिलनैच्यपात्रम् ।
एषोहमेव न् पुनर्जगतीद्रुशस्तद् रामानुजार्य करुणैव तु मद्गतिस्ते ॥ (14)

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷ: அஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸ: புந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில், (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.

கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment