வாழிதிருநாமங்கள் – குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார்

குலசேகராழ்வார் வைபவம்

குலசேகராழ்வார் மலையாள திவ்யதேசமான திருமூழிக்களத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவஞ்சிக்களத்திலே அவதரித்தவர்.  இவருடைய திருநக்ஷத்ரம் மாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரம்.  இவர்  ஸ்ரீராமபிரானுடைய திருநக்ஷத்ரமான புனர்பூசத்தில் அவதரித்தமையால் ஸ்ரீராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பவர். பெரியோர்களை விட்டு ஸ்ரீராமாயணத்தை உபன்யாசம் சொல்லச் சொல்லி அதைக் கேட்டு அனுபவித்துக் கொண்டே இருக்கக் கூடியவர். க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்தவர்.  பெரிய சக்ரவர்த்தியாக இருந்த போதிலும் தன்னை ஒரு அடியவன் ஆகவே நினைத்துக்கொண்டு, அதையே ஒரு பெரிய பாக்யமாகக் கருதியவர். குலசேகராழ்வார் ஸ்ரீரங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தினமும் ஸ்ரீரங்கத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தவர். அடியார்கள் இடத்தில் மிகுந்த பக்தி மற்றும் நம்பிக்கை கொண்டவர்.

குலசேகராழ்வார் வாழி திருநாமம்

அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

அஞ்சன மாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே – அஞ்சன மாமலை என்றால் திருமலை.  கரிசைலம் என்றும் சொல்லப்படுகிறது.  மிகவும் அழகான திருவேங்கட மலையில் ஒரு பிறவி வேண்டும்.   எப்படிப்பட்ட பிறவியாக இருந்தாலும் திருவேங்கட மலையில் பிறப்பு வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டவர் இந்த ஆழ்வார்.   தம்முடைய “பெருமாள் திருமொழி” என்ற ப்ரபந்தத்தில் “ஊனேறு செல்வத்து” என்ற பதிகம் திருவேங்கடமுடையானுக்காக ப்ரத்யேகமாக அருளிச்செய்தார். அந்தப் பதிகத்தில் திருவேங்கடமுடையானின் சம்பந்தம் பெற்ற ஏதாவது ஒரு வஸ்துவாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.   திருமலையிலே இருக்கக்கூடிய கோனேரி என்ற புஷ்கரிணியில் ஒரு குருகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அங்கு இருக்கக்கூடிய சுனையில் ஒரு மீனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.   எம்பெருமானுக்கு அர்க்ய பாத்யங்கள் சமர்ப்பிக்கும் போது அதை வாங்கிக் கொள்ளக்கூடிய பொன்வட்டிலைப் பிடித்துக் கொள்பவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.   செண்பகமரம் ஆக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அல்லது அங்கே ஒரு ஸ்தம்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவ்வாறாக எம்பெருமான் நித்ய வாசம் செய்கின்ற திருவேங்கட மலையில் ஏதாவது ஒன்றாக இருக்கவேண்டும் என்று அவா கொண்டவர்.  படியாக இருக்க வேண்டும் அல்லது போகக்கூடிய வழியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  இறுதியாக  அந்தப் பதிகத்தில் “எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்றும் அருளிச் செய்தார். இந்தப் பதிகத்திற்கு மிகவும் அழகாக நம் பூர்வாசார்யர்கள் வியாக்கியானங்கள் அருளிச் செய்துள்ளனர்.

அனந்தாழ்வான் மிகப் பிரசித்தமான ஆசார்யர். எம்பெருமானாருடைய  ப்ரபாவத்தைக்  கேள்விப்பட்டு எம்பெருமானிடம் ஆச்ரயிக்க வந்தவர். எம்பெருமானாரின் திருவுள்ளப்படி அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் சிஷ்யராக இருந்தவர்.  எம்பெருமானாரிடம் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டவர். அவர் எம்பெருமானாரின் ஆக்ஞைப்படி திருவேங்கட மலைக்குச் சென்று அனைத்து இடங்களையும் திருத்தி ஒரு நந்தவனம் அமைத்து ஒரு குளத்தையும் ஏற்படுத்தி புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவர். அனந்தாழ்வான் திருவேங்கடமலையில் திருவேங்கடமுடையானாகவே இருந்தாலும் நன்று.   நான் ஏதாவது ஒரு வஸ்துவாக இருக்கவேண்டும் என்று ஆசை கொண்டவர்.   அடிமையாக இல்லாமல் எம்பெருமான் உருவமாகவே இருந்தாலும் அல்லது எந்த உருவத்தை நான் எடுத்துக் கொண்டாலும் திருவேங்கடமலையில் ஒரு இருப்பு வேண்டுமென்று அனுபவிப்பார். பராசர பட்டர் “பெருமாள் திருமொழி” அநுபவிக்கும்போது குலசேகராழ்வாரும் திருவேங்கடமலையில் ஒரு வஸ்துவாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.   நான் இருப்பது எனக்கும் தெரிய வேண்டாம் ஒரு கல்லாகவோ அல்லது கட்டையாகவோ இருந்தால் கூட நன்று.  ஒரு சின்னதாக கண்ணுக்குத் தெரியாத பதார்த்தமாக இருந்தாலும் நன்று.  எம்பெருமானுக்கும் தெரிய வேண்டாம். மற்றவர்களும் நான் அங்கு வாழ்கிறேன் என்று பார்த்துக் கொண்டாட வேண்டாம். இப்படி எந்த வஸ்துவாக இருந்தாலும் திருவேங்கடமலையில் இருக்க வேண்டும் என்று ஆழ்வார் ஆசைப்படுவதாக பராசரபட்டர் விளக்குவார்.  இவ்வாறாக நம் பூர்வாசார்யர்கள் மிகவும் ஈடுபட்டு அநுபவித்த பாசுரம்.

அதேபோன்று படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனே என்று ஆழ்வார் அந்த திருவேங்கட மலையில் எம்பெருமானுடைய சந்நிதிக்கு முன்பாக இருக்கக்கூடிய படியாக இருக்க ஆசைப்பட்டார். இந்த நிலை உயர்ந்த நிலையாகக் கருதப்படும்.  அசித்து போல ஞானம் இல்லாமல் இருந்தாலும் உன்னுடைய அழகான பவளம் போன்ற திரு அதரங்களைக் காண வேண்டும். அந்த அதரத்தில் மலரக்கூடிய புன்சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்று ஆழ்வார் “ஊனேறு செல்வத்து” என்ற பதிகத்தின் இறுதியில் இந்த உயர்ந்த நிலையைக் காட்டுகிறார், அதனால்தான் இன்றைக்கும் “குலசேகரன் படி” என்று எம்பெருமானுடைய சந்நிதிக்கு முன்னால் இருக்கக்கூடிய அந்த படிக்குத் திருநாமம். அப்படி ஆழ்வார் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட்ட இடம் இந்தத் திருவேங்கட மலை என்று முதல் வரியில் காட்டப்படுகிறது.

அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே – திருவரங்கம் பெரிய பெருமாளுக்கு முன்பாக இரண்டு தூண்கள் உண்டு.  இவற்றைத் திருமணத்தூண்கள் என்று சொல்வார்கள். ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் எம்பெருமானை மங்களாசாசனம் செய்யப் போகும்போது அந்தத் தூணில் சாய்ந்து கொண்டு தான் மங்களாசாசனம் செய்வார்கள் என்று அறிகிறோம்.  எம்பெருமான் ஸேவை சாதிக்கும்போது அவர்களால் நிற்கவே முடியாது,  உருகி விடுவார்கள். அந்நேரம் அவர்களுக்கு பிடித்துக் கொள்வதற்கு வசதியாக அந்தத் தூண்கள் இருக்கின்றன என்று அறியலாம். அப்படிப்பட்ட மணத்தூணை அடைந்து உய்வோம் என்று ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்.   அவர் ஆசைப்பட்டபடி இறுதியில் திருவரங்கத்தை அடைந்து உஜ்ஜீவனத்தையும் பெற்றார் என்று அறியலாம். இந்த விஷயம் இரண்டாவது வரியில் காட்டப்படுகிறது.

வஞ்சி நகரந் தன்னில் வாழ வந்தோன் வாழியே – வஞ்சி நகரம் என்றால் திருவஞ்சிக்களம். அந்தத் திருவஞ்சிக்களத்தில்  அவதரித்து எம்பெருமானிடம் ஈடுபாடு கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தவர். அதன் பின், திருவரங்கத்தை அடைந்தார்.   அப்படிப்பட்ட ஆழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே – மாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரத்தில் இப்பூவுலகில் அவதரித்தவர் குலசேகராழ்வார்.  அவர் பல்லாண்டு வாழ்க.

அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே – மிகவும் நம்பிக்கையுடன் தைரியமாக ஒரு பாம்பு இருக்கக்கூடிய குடத்திலே கையைவிட்டு பாகவதர்கள் தூய்மையானவர்கள் / கள்ளம் இல்லாதவர்கள் என்று ஆழ்வார் நிரூபித்தார்.   அந்தச் சரித்திரம்தான் இந்த வரியில் காட்டப்படுகிறது.  குலசேகராழ்வாருக்கு அடியவர்கள் மீது மிகுந்த அன்பு. அவருடைய அரசவை மந்திரிகள் சிலருக்கு அரசரான குலசேகராழ்வார் பாகவதர்களிடத்திலே ஈடுபாடு கொண்டிருப்பது கண்டு பொறாமை கொண்டு, எம்பெருமானுடைய திருவாபரணங்களில் சிலவற்றைக் களவாடி அவற்றை மறைத்து வைத்து,  இங்கே வந்து போகக்கூடிய அடியவர்கள் தான் அதை எடுத்து இருக்க வேண்டும் என்று குலசேகராழ்வாரிடம் குற்றம் சாட்டினார்கள்.  மந்திரிகள் மீது ஆழ்வார் மிகவும் கோபப்பட்டு அடியவர்கள் மீது குறை சொல்லலாகாது, அவர்கள் எம்பெருமானையே நம்பி இருப்பவர்கள். அவர்கள் எம்பெருமானுடைய திருவாபரணங்களைத் திருட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அடியவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நான் சத்தியம் செய்து சொல்வேன் என்று உரைத்தார்.   அக்காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது எந்தச் செய்கையையாவது நிரூபிக்க வேண்டும் என்றால் குடத்தில் ஒரு பாம்பை போட்டு ‘நான் சொல்வது உண்மை’ என்று கையை அக்குடத்திற்குள் விட்டு சத்தியம் செய்வார்கள். அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அந்த பாம்பு அவர்களைக் கடிக்காது. அவர்கள் சொல்வது பொய்யாக இருந்தால் அந்தப்  பாம்பானது கடித்து விடும் என்று ஐதீகம்.  ஆழ்வார் அடியவர்கள் மீது கொண்ட நம்பிக்கையால் அந்த குடத்தில் கையை விட்டு அடியவர்கள் இந்த தவறைச் செய்திருக்க மாட்டார்கள் என்று ஆணையிட்டுச் சொன்னார். பாம்பு அவரைக் கடிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதைக் கண்ட மந்திரிகள் தங்களது தவறுக்கு வருந்தி, ஆழ்வார்களிடத்தும், அடியவர்களிடத்தும் மன்னிப்பு கேட்டனர் என்று சரித்திரம்.  அவ்வாறு புகழ் பெற்ற குலசேகராழ்வார் பல்லாண்டு வாழ்க என்று இந்த வரியில் காட்டப்படுகிறது.

அநவரதம் இராமகதை அருளுமவன் வாழியே – எந்நேரமும் இராமாயணத்தை சொல்லிக் கொண்டு / கேட்டுக் கொண்டு இருக்கக்கூடியவர்.  இராமாயணத்தை உபன்யாசகர்கள் சொல்லக் கேட்டு அந்த இன்ப அனுபவத்தில் மூழ்கி தாமும் இராமாயணம் நடந்த த்ரேதா யுகத்தில் வாழ்ந்தவராக  ஈடுபட்டிருப்பார். சீதாப் பிராட்டியை ராவணன் கவர்ந்து சென்றான் என்று தெரிந்தவுடன் தம்முடைய சேனைகளைத் திரட்டிக் கொண்டு ராவணனை எதிர்த்து இராமருக்குத் துணையாகப் போர் புரியலாம் என்று படைகளைத் திரட்டியவர்.  உபன்யாசகர்கள் ‘ஸ்ரீராமன் பிராட்டியை மீட்டு வந்துவிட்டார்’ என்று சொன்னவுடன்தான் அவர் நிகழ் காலத்திற்குத் திரும்பி பதற்றம் தணிந்து இருக்க முடிந்தது. அவ்வாறு இராமாயணத்தை வாழ்நாள் முழுவதும் அநுபவித்துக் கொண்டிருந்த குலசேகர ஆழ்வார் வாழியே.

செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே – மிகுந்த செம்மையான சொற்கள்/ அழகிய நேர்மையான சொற்களைக் கொண்டு ஆழ்வார் அருளிச் செய்தது நூற்றி ஐந்து பாசுரங்கள் கொண்ட பெருமாள் திருமொழி என்ற ப்ரபந்தம். பெருமாளான ஸ்ரீராமருக்கும் குலசேகர ஆழ்வாருக்கும் இடையே இருந்த அன்னியோன்னிய  பாவத்தைக் காட்டும் காரணமாக ஆழ்வாருக்கு  “குலசேகரப் பெருமாள்” என்று பெயர் ஏற்பட்டது. அவ்வாறு சிறப்பு வாய்ந்த “பெருமாள் திருமொழி” என்ற ப்ரபந்தத்தை அருளிச் செய்த குலசேகராழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே –  சேர தேசத்திற்கு சக்கரவர்த்தியாக இருந்த குலசேகர ஆழ்வாருடைய சிவந்த தாமரை போன்ற திருவடிகள் எப்போதும் வாழவேண்டும்.

பெரியாழ்வார் வைபவம்

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர்.  பரத்வ நிர்ணயம் செய்தவர். எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன்தான் பரதெய்வம் என்பதை மதுரையில் ராஜ சபையில், வேதத்தில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தை நிலைநாட்டியவர். இவருடைய திருநக்ஷத்ரம் ஆனி மாதம் சுவாதி நக்ஷத்ரம். இவர் அருளிய ப்ரபந்தங்கள் திருப்பல்லாண்டு,  பெரியாழ்வார் திருமொழி ஆகும். க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஊன்றியவர். பெரியாழ்வார் திருமொழியில், யசோதை பாவனையில், பல பாசுரங்களை அருளிச் செய்துள்ளார். பகவானுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை நமக்கு நன்றாக உணர்த்தியவர். எம்பெருமானைப் பார்த்து நன்றாக இருக்கவேண்டும் என்று மிகுந்த அன்புடன் / மிகுந்த பரிவுடன் வாழ்த்தியவர். மற்றைய ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஏனைய ஆழ்வார்கள் எம்பெருமானை பார்க்கும் பொழுது ‘எனக்கு இந்த சம்சாரம் மிகவும் சிரமமாக இருக்கிறது, என்னை இங்கிருந்து விடுவித்து மோட்சத்துக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ப்ரார்த்திப்பார்கள். ஆனால் பெரியாழ்வாரோ எம்பெருமான் எதிரே வந்த பொழுது ‘இந்த சம்சாரத்தில் நீ வந்து விட்டாயே! உனக்கு ஏதாவது கேடு வந்து விடப்போகிறது!’ என்று பயந்தவர். அவர் எம்பெருமானுடைய பரத்வத்தை நிர்ணயம் செய்து இருந்தாலும் அந்த சமயத்தில் எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தை மனதில் கொண்டு, கண்கள் கொண்டு காண முடியாத அழகு / மென்மை போன்ற குணங்கள் கொண்டவன்; இந்த உலகத்தில் உதித்திருக்கிறானே! எவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்த உலகமிது! என்று பயந்து எம்பெருமான் நன்றாக இருக்கவேண்டும் என்று மங்களாசாசனம் செய்தவர்.

பெரியாழ்வாருடைய வாழி திருநாமம்

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போல் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

பெரியாழ்வாருடைய வாழி திருநாமம் விளக்கவுரை

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே –  உயர்ந்ததான / சிறந்ததான பன்னிரண்டு பாசுரங்கள் கொண்ட திருப்பல்லாண்டு ப்ரபந்தத்தை அருளிச் செய்தவர் பெரியாழ்வார்.  திருப்பல்லாண்டு என்பது பெரியாழ்வார் எவ்வாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்கிறார் என்ற விஷயத்தைக் காட்டக்கூடிய ப்ரபந்தம்.   “வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்” என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில் காட்டியது போல் வேதத்தில் எவ்வாறு ப்ரணவத்தின் சாரம் விளக்கப்பட்டிருக்கிறதோ அது போல் திவ்யப்ரபந்த்தின் சாரம் திருப்பல்லாண்டு பாசுரங்களில் காட்டப்பட்டுள்ளது.  “உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்” என்று மணவாள மாமுநிகள் உரைத்தது போல் திருப்பல்லாண்டின் சிறப்பைக் கருத்தில் கொண்டு திருப்பல்லாண்டை முன்னிட்டே ஸேவாகாலம் இன்றளவும் தொடங்குகிறது. அப்படிப்பட்ட பெருமை கொண்ட ப்ரபந்தம் திருப்பல்லாண்டு. அதை நமக்கு அருளிய பெரியாழ்வார் பல காலம் வாழ்க

நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே / பெரியாழ்வார் அருளிச் செய்த மற்றொரு ப்ரபந்தமான பெரியாழ்வார் திருமொழி நானூற்றறுபத்தொன்று பாசுரங்கள் கொண்டது.  பெரியாழ்வார் திருமொழியில் க்ருஷ்ணவதார அநுபவம் பூர்த்தியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  க்ருஷ்ணாவதாரத்தில் ஒவ்வொரு நிலையிலும் யசோதைப் பிராட்டி எப்படி கண்ணனை அனுபவித்திருப்பாளோ, அதை முழுவதுமாக ரசித்து அனுபவித்து, பெரியாழ்வார் திருமொழியில் வெளிப்படுத்தியுள்ளார் பெரியாழ்வார்.  அவர் வாழ்க.

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே – பெரியாழ்வார் இப்பூவுலகில் வந்து அவதரித்த ஆனி சுவாதி நக்ஷத்ரத்தின்  பெருமையைச் சொல்லி முடிக்க முடியாது. அவ்வாறு சிறப்பு வாய்ந்த ஆனி சுவாதியில் அவதரித்த பெரியாழ்வார் வாழ்க

தொடை சூடிக் கொடுத்தாள் தான் தொழும் தமப்பன் வாழியே – தொடை என்றால் மாலை.  சூடிக் கொடுத்தவள் என்று பெயர் கொண்டவள் ஆண்டாள் நாச்சியார். அந்த ஆண்டாள் நாச்சியார் தன்னுடைய தகப்பனாரான பெரியாழ்வாரைத் தொழுகிறாள்.  பெரியாழ்வார் ஆண்டாள் நாச்சியாருக்குத் தந்தையாக இருந்த போதிலும் அவளுக்கு ஆசார்யராகவும் இருந்திருக்கிறார்.  அவர்தான் எம்பெருமானைப் பற்றி ஒவ்வொரு விஷயங்களையும் சிறுவயதிலேயே ஆண்டாளுக்கு எடுத்துச் சொல்லி பக்தி மார்க்கத்தை ஆண்டாளுக்கு ஊட்டியவர். அதனால் ஆண்டாள் எப்பொழுதும் தந்தையாகிய  ஆசார்யனை நினைத்து தொழக்கூடியவர். சில இடங்களில் “தொடை சூடிக் கொடுத்தாளை தொழும் தமப்பன் வாழியே” என்றும் ஸேவிப்பார்கள்.  ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானின் பத்தினியாக ஆனபடியால் அனைவருமே அவளைப் பிராட்டி ஸ்தானத்தில் வைத்துத் தொழ வேண்டும்.  அவ்வாறு ஆண்டாள் நாச்சியாரை தொழும் தகப்பனாகிய பெரியாழ்வார் என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆண்டாள் நாச்சியாரின் தகப்பனான பெரியாழ்வார் பல்லாண்டு வாழ்க என்று இந்த வரியில் காட்டப்படுகிறது.

செல்வநம்பி தன்னைப்போல் சிறப்புற்றான் வாழியே – செல்வநம்பி என்பவர் மதுரை ராஜ்யத்திற்கு மந்திரியாக இருந்தவர். மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர். பெரியாழ்வார் திருமொழியில் திருக்கோஷ்டியூர் பதிகத்தில் செல்வநம்பியினுடைய பெருமை காட்டப்படுகிறது.  “நளிர்ந்த சீலன், நயாசலன்” என்று பெரியாழ்வார் கொண்டாடுகிறார். செல்வ நம்பியும், அவருடைய தர்மபத்தினியும் எம்பெருமானின் அடியவர்களிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட  ஸ்ரீவைஷ்ணவர்கள். பெரியாழ்வாரே கொண்டாடும் அளவிற்கு உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவராகத் திகழ்ந்தவர் செல்வ நம்பி.  அந்த செல்வ நம்பி போன்று பெரியாழ்வாரும் சிறப்புப்  பெற்றவர்.  அவர் வாழ்க என்று இந்த வரிகளில் விவரிக்கப் படுகிறது.

சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே – ராஜ சபைக்குச் சென்று எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன்தான் பர தெய்வம் என்பதை நிரூபித்த கணம் பொற்கிழியானது தானே அறுந்து பெரியாழ்வாருடைய கையில் வந்து விழுந்தது.  திருமாலான நாராயணன்தான் தெய்வம் என்ற விஷயத்தை நிலைநாட்டியவர். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே – பெரியாழ்வார் அவதரித்தமையால் மிகச் சிறந்த மேன்மையைப் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம்.  தான் அவதரித்தது மட்டுமல்லாமல், தன் மகளான ஆண்டாள் நாச்சியாரின் அவதாரமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்படுத்திக் கொடுத்தமையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் பெருமை பெற்றது. எவ்வாறு தேவகி கண்ணபிரானைப் பெற்றெடுத்தாலும் வளர்த்தமையால் யசோதைப் பிராட்டி பெருமை பெற்றாளோ அவ்வாறே பெரியாழ்வாரும் ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் வளர்த்தமையால்  தானும் பெருமை கொண்டு அந்த நகருக்கும் ஏற்றம் அளித்தார்.  அத்தகைய பெரியாழ்வார் வாழ்க.

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே – வேதியர் கோன் என்றால் மிகச்சிறந்த ப்ராஹ்மணர்.  சாஸ்திரத்தில் மிகப்பெரிய விற்பன்னர். அவர் சிறந்த பண்டிதர்களுக்குத் தலைவராக இருக்கக் கூடியவர் என்பதைக் குறிக்கும் வகையில் பட்டர்பிரான் எனப்படுகிறார்.   அப்படிப்பட்ட பெரியாழ்வார் இந்த உலகத்தில் நன்றாக வாழ வேண்டும். பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று பெரியாழ்வாரின் வாழி திருநாமம் பூர்த்தியடைகிறது.

ஆண்டாள் வைபவம்

கோதை நாச்சியார் என்று கொண்டாடப்படுபவள் ஆண்டாள். பெரியாழ்வாருக்குப் பெண்பிள்ளையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள். பூமிப் பிராட்டியின் அவதாரம். எம்பெருமானிடத்து இயற்கையான அன்பு கொண்டவள். பத்தினி என்ற உறவை உடையவள். ஆண்டாள் அவதரித்த நக்ஷத்ரமான  திருவாடிப் பூரம் மிகவும் பிரசித்தமானது.  ஆண்டாள் அருளிய ப்ரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் ஆகும்.   ஆண்டாள் நாச்சியாரும் க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஊன்றியவள். அனைவருடைய உஜ்ஜீவனத்திற்காகவும் இந்த உலகத்தில் அவதரித்து எல்லோருக்கும் நன்மையை தேடிக் கொடுத்தவள்.   இந்த உலகத்தில் உள்ள சேதநர்கள் அனைவரும் எம்பெருமானுடைய திருநாமங்களைப் பாடி உஜ்ஜீவனத்தை அடையவேண்டுமென்று திருப்பாவையை அருளிச் செய்தவள்.  “பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து” என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்தினமாலையில் கொண்டாடுகிறார்.  மேலும் “இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் வைகுந்த வான் போகந்தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளராய்” என்றும் மாமுநிகள் அருளிச் செய்துள்ளார்.  பிஞ்சாய்ப் பழுத்தாளை என்றால்  ஐந்து வயதிலேயே திருப்பாவை பாடியவள் என்பதைக் குறிக்கும்.  எம்பெருமானிடத்தில் ஆழமான பக்தி கொண்டவள். “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் பெயர் பெற்றவள். பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையைத் தான் சூடி எம்பெருமானுக்கு அதற்குப் பிறகு கொடுத்தவள்.

ஆண்டாள் வாழி திருநாமம்

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே – ஆடி மாதம்   பூரம் நக்ஷத்ரத்தில் இப்பூவுகில் அவதரித்தவள் ஆண்டாள் நாச்சியார்.   அவள் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும்.

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே – முப்பது பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை என்னும் ப்ரபந்தத்தை அருளிச் செய்தவள்.   இந்த முப்பது பாசுரங்களையும் மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.  திருப்பாவை  பாசுரங்களை அறியாதவர்களை  இந்த வையம் சுமப்பதும் கூட வீண் என்று இந்த திருப்பாவை வைபவம் கொண்டாடப் படுகிறது. ஏற்றம் மிகுந்த திருப்பாவையை அருளிச் செய்த ஆண்டாள் நாச்சியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே – பெரியாழ்வாருக்குத் திருமகளாக வந்து அவதரித்தவள் ஆண்டாள் நாச்சியார்.  அவள் பல்லாண்டு வாழ வேண்டும்.

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே – ஸ்ரீபெரும்புதூர் மாமுனிவர் எனப்படுபவர் ராமானுஜர் (எம்பெருமானார்).  அவருக்குத் தங்கையாக இருக்கக் கூடியவள்.   “நாறு நறும் பொழில்” என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் எம்பெருமானுக்கு நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடாவில் அக்கார அடிசிலும் சமர்ப்பிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். அதை எம்பெருமானார் எந்நேரமும் நினைவிலே கொண்டிருந்தார். திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யப் போகும்போது ஆண்டாள் நாச்சியார் ஆசைப்பட்டபடி  நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடாவில் சர்க்கரைப் பொங்கலும் (அக்கார அடிசிலும்) செய்து எம்பெருமானுக்கு சமர்ப்பித்தார். சமர்ப்பித்து விட்டு வடபத்ரசாயி, ரங்கமன்னார், ஆண்டாள் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் ஆண்டாள் சன்னதிக்கு முன்பு வரும்பொழுது, ஆண்டாள் அர்ச்சா சமாதியைக் குலைத்துக் கொண்டு “வாரும் கோயில் அண்ணரே” என்று அழைத்தாள். “கோயில்” என்றால் ஸ்ரீரங்கம். தங்கை ஆசைப்பட்ட காரியத்தை ஒரு தமையனானவன் எப்படிச்  செய்து முடிப்பானோ அதேபோல ஸ்ரீரங்கத்திலிருந்து வந்து தான் ஆசைப்பட்ட கைங்கர்யத்தை செய்து முடித்தமையால் “கோயில் அண்ணன்” என்ற திருநாமத்தை எம்பெருமானாருக்கு வழங்கினாள் ஆண்டாள் நாச்சியார்.  அவ்வாறு பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் (பெரும்பூதூர் மாமுனிக்கு தங்கையாகக் கருதப்பட்டவள்) ஆண்டாள் நாச்சியார். அவள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே –  நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி ப்ரபந்தத்தை அருளிச் செய்தவள் ஆண்டாள் நாச்சியார். திருப்பாவையில் தன்னுடைய எண்ணமானது நிறைவேறாமல் போகவே, எம்பெருமான் தன்னை வந்து கைக்கொள்ளாமல் இருக்கவே, மிகவும் வருத்தத்துடன் நாச்சியார் திருமொழி பாடத் தொடங்கி, எம்பெருமானைப் பிரிந்து  தான் வாடுவதை, தன்னுடைய ஆர்த்தி தெரியும்படிக்கு மிக அழகாக வெளிக்காட்டினாள். அப்படிப்பட்ட அந்த நாச்சியார் திருமொழியை அளித்த ஆண்டாள் நாச்சியார் வாழ்க. பல்லாண்டு வாழ்க என்று இந்த வரியில் காட்டப்படுகிறது.

உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே –  பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதருக்கு (கண்ணி என்றால் மாலை) புஷ்பமாலை மிகவும் ஆதுரத்துடன் / ஆசையுடன் சூடிக் கொடுத்தாள்.  ஆண்டாள் நாச்சியார் மாலையைச் சூடிக் களைந்து பின் அதை எம்பெருமானுக்கு சமர்ப்பித்தவள். தான் அணிந்த மாலையை எம்பெருமான் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி அணிந்து கொள்வான் என்று விருப்பத்துடன் புஷ்பமாலை சமர்ப்பித்தவள். ஆண்டாள் நாச்சியார் வாழ்க.

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியுள்ள பிரதேசம் திருமல்லி வளநாடு என்று அக்காலத்தில் வழங்கப்பட்டது.  ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள பகுதி திருவழுதி வளநாடு என்று வழங்கப்படுவது போல் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியுள்ள ப்ரதேசம் திருமல்லி வளநாடு என்று அறியப்பட்டது.  வாசனை கமழும் திருமல்லி வளநாட்டைச் சேர்ந்த ஆண்டாள் நாச்சியார் வாழ்க.

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே –  நல்ல வள்ளல் தன்மை பொருந்திய ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோதை நாச்சியாரின் மலர் போன்ற பதங்கள், திருவடித் தாமரைகள் வாழியே என்று ஆண்டாள் நாச்சியார் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment