ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

<< ச்லோகங்கள் 21 – 30

ஶ்லோகம் 31 – இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” (இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும் திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே” (என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச்செய்கிறார்.

கதா புநஶ்  ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ  வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

ஶ்லோகம் 32 – இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம் ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம் தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார். இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச்செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப்பீதாம்பரத்தை அணிந்துள்ளான்; மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்; ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான், ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன் …

ஶ்லோகம் 33 – இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும் எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ்ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த  ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக்கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்; மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில் இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன …

ஶ்லோகம் 34 – திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும் ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும், அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது. தன்னுடைய திருமுகமண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் …

ஶ்லோகம் 35 – ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை” (எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும், திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் …

ஶ்லோகம் 36 –ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

ஶ்லோகம் 37 – இனி வரும் இரண்டு ச்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார். இந்த ச்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈச்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச்செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ, எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ, எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ, யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ …

ஶ்லோகம் 38 – இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும், திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை” (உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ  ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

ஶ்லோகம் 39 – ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ  மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்; இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான் …

ஶ்லோகம் 40 – கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார். ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |” (எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி, கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம். ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச்செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் …

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-31-to-40-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment