ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

<< தனியன்கள்

ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

ஶ்லோகம் 2 – இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது. அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச்செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

ஶ்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப்போலே, ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச்செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள். அவர் பூர்த்தியையும் பக்தியோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

ஶ்லோகம் 4 – ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராணரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள். இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள், இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி, ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச்செய்தவர்.

ஶ்லோகம் 5 – ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத் தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

ஶ்லோகம் 6 – திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன், எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி, எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதிஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரதபதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குலதநம் குலதைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்தவிலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன். இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

ஶ்லோகம் 7 – ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின்வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதாமஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிமஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவுகூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்க்கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து) என்னை நானே வணங்கிக்கொள்கிறேன்.

ஶ்லோகம் 8 – யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்) என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை “வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’ (அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான். இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்யஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ்சதுர்முக முகாஶ்ச  மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்; கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

ஶ்லோகம் 9 – இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களைவிட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத் தகுதி படைத்தவர் என்று அருளிச்செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதிக்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்தபுத்தே:
இத்யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜநேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை; ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்; எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்; ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

ஶ்லோகம் 10 – எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின்வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார், எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார். அதில், இந்த முதல் ச்லோகத்தில், ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)  எம்பெருமானின் பரத்வத்தை அருளிச்செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந்  நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு. எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-1-10-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 1 – 10”

Leave a Comment