திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.8 – திருமாலிருஞ்சோலை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.7

எம்பெருமான் ஆழ்வாரைப் பரமபதத்துக்கு அழைத்துப்போகத் தானே கருடவாஹனத்திலே வந்தருளினான். ஆழ்வாரும் எம்பெருமான் தனக்கு முதலில் இருந்து செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து, நாம் இதற்காக ஒன்றுமே செய்யாமல், அவனே நம்மைக் கைக்கொள்ளுகிறான் என்றிருந்தார். அந்த ஸமயத்தில் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இத்தனை காலம் நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க இன்று எப்படி எம்பெருமானின் கடாக்ஷம் நம் விஷயத்தில் பலித்தது என்று ஒர் ஸந்தேஹம் ஏற்பட அதை எம்பெருமானிடத்திலேயே கேட்டார். எம்பெருமானோ அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க, ஆழ்வார் எம்பெருமானின் நிர்ஹேதுக (இயற்கையான) க்ருபையைப் புரிந்து கொண்டு, நம் விஷயத்தில் எம்பெருமான் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்தானே என்று மகிழ்ந்து களிக்கிறார்.

முதல் பாசுரம். தற்செயலாக நான் திருமாலிருஞ்சோலை மலையை அடையும்போது எம்பெருமான் பிராட்டியுடன் என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார்.

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென்திருப்பேரே

நாட்டில் வார்த்தை சொல்வதைப் போலே நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேன். அப்படிச் சொன்ன அளவிலே ச்ரிய:பதியாய் பரிபூர்ணனான தான் வந்து என் நெஞ்சுக்குள்ளே பூர்ணமாகப் புகுந்தான். அந்தத் திருமால் சென்று சயனித்தருளின இடம் மிகவும் உயர்ந்த மாணிக்கங்களை உந்தித் தள்ளுகிற நீரையுடைய காவிரியின் தென்பக்கத்தில் இருக்கும் அழகிய திருப்பேர்.

இரண்டாம் பாசுரம். முன்பு குறைவாளரைப் போலே இன்று இங்கிருந்து போகேன் என்று சொல்லிக்கொண்டு என் நெஞ்சிலே பூர்ணனாய்ப் புகுந்தான் என்கிறார்.

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலை ஏழுலகுண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

திருப்பேரிலே நிரந்தரமாக வாழும் ஸர்வேச்வரன் முன்பு குறைவாளனாய் இருந்தாற்போலே இன்று வந்து போகேன் என்று என் நெஞ்சிலே பரிபூர்ணமாம்படிப் புகுந்தான். மேகங்கள் ஏழையும், ஸமுத்ரங்கள் ஏழையும், குல பர்வதங்கள் ஏழையும் லோகங்களை எல்லாம் அமுதுசெய்தும் நிறையாத வயிற்றை உடையானை என்னுள்ளே எல்லாவிதத்திலும் பரிபூர்ணமாய் அனுபவிக்கப் பெற்றேன்.

மூன்றாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைவது எளிதாகி, அதன் காரணமாக எல்லா துக்கங்களும் விலகப் பெற்றேன் என்கிறார்.

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச்சேர்வது எனக்கு எளிதாயினவாறே

கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேரை இருப்பிடமாக உடைய ஸுலபனான எம்பெருமானின் திருவடிகளை அடைவது எனக்கு எளிதான பின்பு அவற்றைப் பெற்றேன். அதன் காரணமாக பிறவித் தொடர்பை அறுத்தேன். அதனால் வரும் துக்கங்களைச் சேரேன். ஸம்ஸாரத்தில் நிற்கையாகிற அஜ்ஞானத்தைப் போக்கினேன்.

நான்காம் பாசுரம். எனக்குப் பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்தான். அதனாலே என் கண்ணும் நெஞ்சும் களிக்கும்படி ஆனந்தித்தேன் என்கிறார்.

எளிதாயினவாறென்று என் கண்கள் களிப்பக்
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே

வருந்தின என் கண்கள் கிடைத்தற்கரிய பலம் எளிமையாகக் கிடைக்கிறதே என்று களிக்கும்படி ஆனந்தம் நிறைந்த நெஞ்சை உடையவனாகக் கொண்டு ஆனந்தித்தேன். அதற்குக் காரணம் கிளிகள் தாவும்படி செறிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே ஸுலபனாக இருப்பவன், மிகவும் தெளிவையுடைய ப்ரகாசமான பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்ததே.

ஐந்தாம் பாசுரம். இப்படிப் புருஷார்த்தத்தைக் கொடுப்பதற்காக என்னுடைய எல்லா விரோதிகளையும் போக்கினான் என்கிறார்.

வானே தருவான் எனக்கா என்னோடு ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென்திருப்பேர் நகரானே

வண்டுகள் நிறைந்த பொழிலையுடைத்தாய் அழகியதான திருப்பேர் நகரிலே எழுந்தருளி இருப்பவன், எனக்குப் பரமபதத்தையே தருவதாக எண்ணி, என்னோடு சேர்ந்து சபதம் செய்து மாம்ஸம் நிறைந்த கூடான இந்த சரீரத்துக்குள்ளே இன்று தானே வந்து புகுந்து, அவனைப் பிரிந்து நாம் தடுமாறுவதற்குக் காரணமான புண்ய பாபங்களைப் போக்கினான்.

ஆறாம் பாசுரம். மற்றை உகந்தருளின (எம்பெருமான் ஆசைப்பட்டு வாழும்) தேசங்களை விட என் நெஞ்சில் அதிகம் ஆசை கொண்டு இங்கே புகுந்து அவன் அனுபவிக்க அதைக் கண்டு ஆனந்தி ஆனேன் என்கிறார்.

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே

என்னை அடைவதற்காக திருப்பேர் நகரிலேயும் பின்பு இன்னும் அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை மலையிலும் நிரந்தரமாக வாழும் மஹோபகாரகன் இன்று தானே வந்து “இங்கேயே இருப்பேன்” என்று எண்ணி என் நெஞ்சு நிறையும்படிப் புகுந்தான். அவனுடைய பெரிய ஆசையைப் பெற்று குணானுபவம் என்னும் அமுதத்தைப் பருகி ஆனந்தித்தேன்.

ஏழாம் பாசுரம். இப்படி என் நெஞ்சில் நிரந்தரமாக இருப்பவனை அனுபவித்துக் களிக்கிற எனக்கு என்ன குறை உண்டு என்கிறார்.

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை? மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே

வண்டுகள் களிக்கும் பொழில் சூழ்ந்த திருப்பேர்நகரான் தன்னை எப்பொழுதும் கண்டு அனுபவிக்கும்படி என் கண்ணுக்குள்ளே நின்று போகாமல் இருக்கிறான். இப்படி அனுபவித்து ஆனந்தித்த எனக்கு மேலே பரமபதத்திலே போய் அனுபவிக்க என்ன குறை இருந்தது? அதிகமான தொண்டு மேலெழுந்து முடிவிலே தொழுகைக்கு வாசகமான “நம: என்னும் வார்த்தையைச் சொன்னேன்.

எட்டாம் பாசுரம். எல்லா விதத்திலும் மிகவும் இனியவனாகக் கொண்டு என் நெஞ்சிலே த்ருடமாகப் புகுந்தான் என்கிறார்.

கண்ணுள் நின்றகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நன் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே

வெளிக்கண்களுக்கு எப்பொழுதும் அனுபவிக்கும்படி அகலாமல் இருக்கிறான். என்னைப் பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் பெரியவனாய் இருக்கிறான். எண்ணிப்பார்க்கில் மிகவும் நுண்ணிய தன்மைகளை உடையவனாய், தானே ஏழ் இசையின் சுவைகளை உடையவனாய், பல வர்ணங்களில் உயர்ந்ததான மாணிக்கங்களாலே அமைக்கப்பெற்ற மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே வாழ்பவன் என் மனதில் நிர்ஹேதுகமாக (காரணமே இல்லாமல்) இன்று த்ருடமாம்படிப் புகுந்தான்.

ஒன்பதாம் பாசுரம். “இன்று காரணமேயில்லாமல் எனக்கு நன்மை செய்தவன் முன்பு என்னை கைவிட்டிருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்கவேண்டியிருந்தது என்கிறார்.

இன்றென்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

அஸத்தாக இருந்த என்னை இன்று ஸத்தான வஸ்துவாக்கி மிகவும் உயர்ந்த இனிமையை உடையவனான தன்னை என் நெஞ்சுள்ளே வைத்தான். முற்காலத்தில் என்னை மற்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கும்படி எண்ணியிருந்தது எதற்காக? குன்றென்று சொல்லும்படி விளங்குகிற மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இவை இரண்டில் ஒன்றுக்கான காரணத்தை அருளிச்செய்வதற்காக நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

பத்தாம் பாசுரம். கைங்கர்யத்தைப் பெற்றுக்கொள்பவனான அவன் திருவடிகளை அடிமைசெய்து பெற்றேன். இனி வரும் காலம் எல்லாம் இதுவே போதும் என்கிறார்.

உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே

என் முயற்சியாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் உன் திருவடிகளை அடைந்தேன். ப்ரீதியால் தூண்டப்பட்டு வாசிகமான கைங்கர்யத்தைச் செய்து உன்னுடைய திருவடிகளைப் பெற்றேன். இயற்கையான பந்துவானவனே! இந்தக் கைங்கர்யமே எனக்கு எப்பொழுதும் வேண்டுவது. ஆசார்யன் மூலமாக வேதார்த்தங்களைக் கற்று அதை நடத்தவல்லவர்கள் பகவதனுபவத்துடன் வாழும் திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் உனக்காகவே இருக்கும் அடியவர்களுக்கு துன்பங்கள் தன்னடையே நில்லாதே.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாகப் பரமபதத்தை ஆள்வதை அருளிச்செய்கிறார்.

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே

துக்கத்துக்கு இடமல்லாத தேசமாய் பெரிய பரப்பை உடைய வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக உயர்ந்த மஹான்கள் பலரும் திருவாய்மொழி கேட்டு வாழும் திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய சொற்கள் சேர்ந்திருக்கும் ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இவை பத்தையும் கற்க வல்லவரான தொண்டர்கள் தாங்கள் நிர்வாஹகராய் நடத்துவது, பெரியதாகச் சூழ்ந்திருக்கும் பொன்மயமான பரமபதமே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment