திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.7 – செஞ்சொல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.1

ஆழ்வார் பரமபதத்தை விரைந்து சென்று அடையவேண்டும் என்று ஆசைப்பட, எம்பெருமானும் அதற்கு இசைந்தான். ஆனால் அவனோ ஆழ்வாரைத் திருமேனியுடன் பரமபதத்துக்கு அழைத்துச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதைக் கண்ட ஆழ்வார் அவனுக்கு அவ்வாறு செய்யலாகாது என்று உபதேசிக்க, எம்பெருமானும் இறுதியில் ஆழ்வாரின் விருப்பத்துக்கு இசைந்தான். அதைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானின் சீல குணத்தைக் கண்டு மிகவும் ப்ரீதியை அடைந்து, அதை இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார்.

முதல் பாசுரம். ஈச்வரன் தன்னிடத்தில் கொண்ட ஆசையைப் பார்த்த ஆனந்தத்தாலே, தங்களை காத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடும்போது அவனிடத்தில் மூழ்கிவிடாமல் இருக்குமாறு அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானேயாகி நிறைந்தானே

திருமாலிருஞ்சோலை மலையில் இருப்பவனாய் எல்லாரிடத்திலும் எல்லாவற்றையும் அவர்கள் அறியாமல் அபஹரிப்பவனாய் அதுக்குக் காரணமான ஆச்சர்யமான ரூபம், குணம் முதலியவைகளை உடையவனான எம்பெருமான், கவி பாடுவித்துக்கொள்ளும் வஞ்சச் செயலாலே உளனாய், இங்கே வந்து என் நெஞ்சினுள்ளும் உயிரினுள்ளும் கலந்து, அருகில் இருப்பவர்களும் அறியாதபடி அந்த என்னுடைய நெஞ்சையும் உயிரையும் உண்டு தானே அனுபவிப்பவனாய் எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவன் ஆனான். நேர்மையான சொற்களாலே கவிபாட வல்லவர்களே! அவன் கையில் உங்கள் உயிர் மற்றும் உயிரைச் சார்ந்த பொருள்களும் அகப்படாதபடி காத்துக்கொண்டு வாசிக கைங்கர்யம் செய்யப் பாருங்கள்.

இரண்டாம் பாசுரம். என்னுடன் கூடிய ஆனந்தத்தாலே எனக்கு மிகவும் இனியவனாகக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்தவனாக இருந்தான் என்கிறார்.

தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனேயாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே

என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து, தானே ப்ரதானனாகி, பரிபூர்ணனாய் எல்லா லோகங்களும் ஆங்காங்கே இருக்கும் எல்லா ப்ராணிகளும் தானேயாம்படி அந்தர்யாமியாய் இருந்து, நான் என்ற வார்த்தையால் குறிக்கப்படும் வஸ்துவும் தானேயாகி, தன்னைப் பற்றித் தானே துதிப்பவனுமாய் இருந்து துதித்து, அதனால் ஏற்பட்ட ஆனந்தத்தை எனக்குக் காட்டுகையாலே, தேனும் பாலும் சர்க்கரையும் அமுதுமாய் அவற்றில் இருக்கும் எல்லாவித இனிமையும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் தலைவனான தானேயாகி நின்றுவிட்டான்.

மூன்றாம் பாசுரம். என்னளவில்லாமல் என் சரீரத்திலும் ஆசை கொண்டு, அதனாலே ஆனந்தத்துடன் நிலைத்து நிற்கிறான் என்கிறார்.

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திருவருளே

என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து அத்துடன் நில்லாமல் என்னுடைய அஜ்ஞானம் ஆகியவற்றுக்குக் காரணமான சரீரத்துக்குள்ளே புகுந்து என்னையும் சரீரத்தையும் தானே அபிமானியாகி நின்ற ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய இயற்கையான ஸ்வாமியானவன் பொருந்தி வாழும் தேசமாய் தெற்குத் திசையில் சிறந்ததாய் இருக்கும் திருமாலிருந்சோலையில் நிற்கிற திசையை நோக்கி கை கூப்பி அடைந்த நான் அந்தத் திசையிலும் ஆசை பிறந்தவனாய், வேறு ஒரு போக வேண்டிய இடம் இருப்பதாக நினைத்துப் போவேனோ? இயற்கையான தலைவனின் ஆசைகள் எப்படி இருக்கிறது!

நான்காம் பாசுரம். என் சரீரத்தை விரும்புவதற்குக் காரணம் இந்தத் திருமலை ஆகையால் இரண்டையும் ஆதரித்து இரண்டு இடங்களையும் கைவிடாமல் இருக்கிறான் என்கிறார்.

என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே

என்னைப்பிடிப்பதற்காக எல்லா உலகங்களும் எல்லா ப்ராணிகளும் தானேயாகும்படி அந்தர்யாமியாய் இருந்து அத்துடன் நில்லாமல் தன்னை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படி பூமியிலே மிகவும் நடந்து தெற்குத் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ்சோலை என்று பேரைக்கொண்டிருக்கும், நம் போன்றவர்களுக்கு அனுபவிக்கும்படி இருக்கும் திருமலையைக் கைவிடமாட்டான். என் சரீரத்தையும் மிகவும் கைவிடாமல் இருக்கிறான். ஸ்வாமியானவனுடைய உபகாரங்கள் எப்படி இருக்கின்றன!

ஐந்தாம் பாசுரம். தன்னுடன் கூடி திருவாய்மொழி பாடக் கேட்ட ப்ரீதியாலே ரஸிகனாய் தலையை ஆட்டுகிறான் என்கிறார்.

நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித்
தென்னாவென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே

எம்பெருமானை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படியும் பக்தி பரவசராய் எம்பெருமானை ஆசைப்படும் தேவர்கள் பொலிவடையும்படியும் எம்பெருமானின் எண்ணிப்பார்க்க முடியாத வைபவங்களை ப்ரேமத்தாலே ஆசைப்படும் நல்ல முனிவர்கள் ஆனந்தத்தை அடையும்படியும் பண் நிறைந்த இசையையுடைய இனிய கவிகளை எனக்கு அந்தர்யாமியாய் இருந்து கொண்டு தன்னையே தான் பாடி திருமாலிருஞ்சோலையானாய் நிற்கிற என் ஸ்வாமியானவன் தென்னா தெனா என்று தலையை ஆட்டி அனுபவிக்கிறான்.

ஆறாம் பாசுரம். ப்ரஹ்மா ருத்ரன் முதலியவர்களுக்கும் உபகாரகனாய் ச்ரிய:பதியானவன் திருமலையில் நின்று என்னை அடிமைகொள்ளுகைக்கு மிகவும் ஆசையுடன் இருக்கிறான் என்கிறார்.

திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூவுலகும் தன்
ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே

ருத்ரனும் ப்ரஹ்மாவும் காணப்பெறாமல், அவர்கள் பெறுதற்கரிதான பெரிய பக்தியை உடையவர்களாய்க் கொண்டு திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணும்படித் தன் அருளைக் கொடுத்த ஸர்வாதிகனாய், உயர்ந்த மூன்று லோகங்களையும் தன்னுடைய தனித்துவம் வாய்ந்த சக்திபெற்ற திருவயிற்றினுள்ளே ஒரு சிறு பகுதியிலே வைத்து கல்பந்தோறும் சிறந்த முறையில் ரக்ஷிப்பவனாய், திருமகள் கேள்வனாய் திருமாலிருஞ்சோலையிலே நிலை பெற்றவனாய் இருந்து என்னை அடிமை கொள்ளுவதில் பெரும் பித்தனாய் இருக்கிறான்.

ஏழாம் பாசுரம். தம்மை ஏற்றுக்கொள்வதற்காக அவன் வந்து நின்ற திருமலையினுடைய பெருமையைப் புகழ்ந்து அருளுகிறார்.

அருளை ஈ என்னம்மானே! என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே

என்னுடைய ஸ்வாமியே! க்ருபையைத் தந்தருளவேண்டும் என்று முக்கண்ணனான ருத்ரனும், ஞானம் போன்ற குணங்களையுடைய ப்ரஹ்மாவும் தேவர்களின் தலைவனான இந்த்ரனும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அஜ்ஞானம் முதலிய தமஸ்ஸுக்களை போக்கக்கடவரான ரிஷிகளும் ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்வாமியின் இருப்பிடமான திருமலையாய் எல்லா விதமான கலக்கங்களையும் போக்கக்கூடிய மிகவும் இனிமையான சிறந்த மலை திருமாலிருஞ்சோலை மலையே.

எட்டாம் பாசுரம். திருமலை தொடக்கமான திவ்யதேசங்களைப்போலே என்னுடைய எல்லா அவயவங்களையும் விரும்பி ஒரு நொடியும் பிரியாமல் இருக்கிறான். இப்படியும் ஒருவனா! என்று ஆச்சர்யப்படுகிறார்.

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத்தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே

திருமாலிருஞ்சோலை மலையையும் திருப்பாற்கடலையும் என் தலையையும், திருமகள் கேள்வனானவனின் பரமபதத்தையும் குளிர்ந்த திருவேங்கடம் என்கிற பெரிய திருமலையையும் என் சரீரத்தையும் கடத்தற்கரியதாய் மிகப் பெரியதாய் ஆச்சர்யமான ப்ரக்ருதியோடே சேர்ந்து படைக்கப்பட்ட என் ஆத்மாவையும் மனஸ்ஸையும் வாக்கையும் செயல்களையும் ஒரு க்ஷணத்தில் ஒரு சிறு பகுதியும் பிரியாமல் இருக்கிறான். என்னைப் பெறுவதற்காக காலத்துக்கு உட்பட்ட எல்லா பொருள்களுக்கும் காரணனான ஒருவனாயிருக்கிறானே!

ஒன்பதாம் பாசுரம். ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குக் காரணமான ஸர்வேச்வரன் தம்முடைய சரீரம் முதலியவற்றை விரும்பியதைக் கண்டு, அத்தை அவன் விடும்படிக்கு, தன் திருவுள்ளத்தைக் குறித்து “அவன் எழுந்தருளி இருக்கும் திருமலையை விடாமல் வணங்கு” என்று அருளிச்செய்கிறார்.

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன் உள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கை விடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே

காலத்துக்கு உட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் தனிக் காரணன் என்று சொல்லப்பட்ட, தனித்துவம் வாய்ந்தவனாய், எல்லா லோகங்களையும் எல்லாக் காலத்திலும் தன் ஸங்கல்பத்தின் சிறு பகுதிக்குள் படைத்து, காத்து, அழித்து, இதுவே தொழிலாகச் செய்யும் எல்லைகாணமுடியாத தன்மையை உடையவனாய் இந்த உறவாலே எனக்கு ஸ்வாமியானவனின் அழகிய குளிர்ந்த திருமாலிருஞ்சோலையை, மனமே! நமக்கு த்யாஜ்யமான தேஹம் ப்ராணன் முதலியவை மங்கும்படி, நெருங்கி அடையப்பாராய். இதை அவன் நம் கார்யம் செய்து முடிக்கும்வரை கைவிடாதே. இத்தாலே நீ வாழ்ச்சியடைய வேண்டும்.

பத்தாம் பாசுரம். இப்படித் தான் திருமலையை அடைந்திருந்தும் அவனுடைய ஆசையை நிவர்த்தி செய்வதற்காக ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதமான பொருள்களின் தாழ்ச்சியைக் காட்டி, இப்படிப்பட்ட மாயை நசிக்கும்படி அருளவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.

மங்கவொட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே! யானே நீயாகி என்னை அளித்தானே!
பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணி என்போல்வார்க்கு ஸ்வாமியானவனாய் நானே என் குறைகளைப் போக்கிக்கொள்ளுமாபோலே வேறுபாடற நீதானேயாகி என்னை ரக்ஷித்தவனே! கிளர்ந்து புலப்படும் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களும், அதிலே ஈடுபடும் கண் முதலிய ஐந்து இந்த்ரியங்களும், அவற்றில் ஈடுபடுவதற்கு உதவும் ஐந்து கர்மேந்த்ரியங்களும், பஞ்ச பூதங்களும், ஸம்ஸாரத்தில் ஜீவனோடு சேர்ந்து படைக்கப்படும் மூலப்ரக்ருதியும், மஹான் என்கிற தத்வமும், அஹங்காரம் என்கிற தத்வமும், மனஸ்ஸும் ஆகிற உன்னுடைய மிகவும் ஆச்சர்யமான ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதங்களான இவை எல்லாம் மங்கும்படி இசைந்து அருள வேண்டும்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக இவர் ஆசைப்பட்டபடி ஈச்வரன் விரோதிகளை போக்குவதில் ஈடுபட்டதைச் சொல்லி, அதுவே பலமாக அருளிச்செய்கிறார்.

மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்கத்
தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே ஆனானைத்
தேனாங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மானாங்காரத்திவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே

மஹத், அஹங்காரம், மனம் ஆகியவை மூலமாக இருக்கும் இந்த சரீரத்துடனான ஸம்பந்தம் நசிக்கும்படியும் மிகவும் வலிய ஐந்து இந்த்ரியங்கள் மங்கும்படியும் தானே பெரிய அபிமானத்துடன் புகுந்து என் ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகள் எல்லாம் தன் அதீனத்தில் இருக்கும்படி ஆனவனை, வண்டுகளின் செருக்கை உடைய பொழிலை உடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் திருமாலிருஞ்சோலை மலைக்கேயான இந்தப் பத்துப் பாசுரங்களும் மஹத் அஹங்காரம் மனம் ஆகியவற்றால் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களின் நிவ்ருத்தியில் நோக்காக இருக்கும். அவை தன்னடையே கழியும் என்று கருத்து.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment