ஞான ஸாரம் 37 – பொருளும் உயிரும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     37-ஆம் பாட்டு

முன்னுரை:

பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம் இறைவனுக்கு எந்நாளும் இருப்புடமாகும் என்கிறது இப்பாடல்.

images

“பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
 தெருளும் குணமும் செயலும் – அருள்புரிந்த
 தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
 எந்நாளும் மாலுக்கிடம்.”

பதவுரை:

பொருளும் தன்னுடைய செல்வமும்
உயிரும் தன்  உயிரும்
உடம்பும் தன்  உடம்பும்
புகலும் தன்  குடியிருப்பும்
தெருளும் தன் அறிவும்
குணமும் தன்னுடைய நற்பண்புகளும்
செயலும் தான் செய்யும் அனைத்துக் காரியங்களும்
அருள் புரிந்த தன்னைச் சீடனாக ஏற்றுக் கருணை காட்டிய
தன்னரியன் பொருட்டா தன்னுடய ஆச்சாரியனுக்கு உடமையாக
சங்கற்பம் செய்பவர் எண்ணி இருப்பவர்
நெஞ்சு இதயம்
எந்நாளும் எக்காலத்திலும்
மாலுக்கு பகவானுக்கு
இடம் உறையுமிடமாகும்.

விளக்கவுரை:

பொருளும்: தனக்குரிய அனைத்துச் செல்வங்களும்

உயிரும்: தன்னுடைய மூச்சும்

உடம்பும்: தன்னுடைய சரீரமும்

புகலும்: தன்னுடைய குடியிருப்பும்

தெருளும்: தன்னுடைய கல்வி அறிவும்

குணமும்: தன்னிடமுள்ள அடக்கம் முதலிய நற்குணங்களும்

செயலும்: தான் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளும் இவற்றை எல்லாம் அருள் புரிந்த தன் ஆரியன் பொருட்டா: அதாவது காணிக்கை கொடுத்தல் , பணிவிடை செய்தல் முதலிய எதையும் எதிர் நோக்காமல் தன்னிடம் கருணை காட்டித் தன்னைச் சீடனாக ஏற்றுத் தனக்கு மந்திரங்களை உபதேசம் செய்த ஆச்சார்யனுக்குச் சொந்தமானதாக

சங்கற்பம் செய்பவர் நெஞ்சு:  எப்பொழுதும் எண்ணி இருப்பவர் இதயம்

எந்நாளும் மாலுக்கிடம்: எல்லாக் காலமும் பகவானுக்கு விருப்பத்துடன் உறையுமிடமாகும் சீடன் தன்னுடைய எல்லாவற்றையும் தன்னுடைய ஆச்சார்யனுக்கு உடமையாகும் என்று எண்ணுவதால் இத்தகைய தூய நெஞ்சு இறைவனுக்கும் விரும்பி உறையுமிடமளிக்கிறது . மதுரகவி   ஆழ்வார் நம்மாழ்வாரை ஆச்சார்யனாக அடைந்தவர்.அவரைத் தவிர ” தேவு மற்று அறியேன்: என்று வேறு தெய்வத்தை அறியாதவராக இருந்தார். அன்னையாயத்தனா என்னை யாண்டிடும்   தன்மையான் சடகோபனென் நம்பியே” என்று அனைத்தும் நம்மாழ்வாரே என்று வாழ்ந்தவர். அத்தகைய தூய ஆச்சார்ய அன்புடயவரது இதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கண்ணன் விரும்பினான். தேவு மற்று அறியாத இவருடைய இதயம் தேவபிரானுக்கு உகந்து உரைஉமிடமாகும் என்ற கருத்துச் சொல்லப்பட்டது. “தெருளாகும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இந்நூலாசிரியர் போற்றப்பட்டவர். அதனால் இவருடைய ஒழுக்க நெறியான குருபக்தியும் குறிப்பாக உய்த்துரைக்கபடுகிறது.  ஸ்ரீ ஆண்டாள் நிலையும் இதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. “வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” (நாச்சியார் திருமொழி 10-10) என்று கூறியது காண்க.

Leave a Comment