ஞான ஸாரம் 36 – வில்லார் மணி

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     36-ஆம் பாட்டு

முன்னுரை:

நற்சீடனாய் நல்லாசிரியனிடம் மிக்க அன்புடயவனாய் இருப்பவனுக்கு அனைத்து திவ்ய தேசங்களும் தன ஆசார்யனேயன்றி வேறில்லை என்று கூறப்படுகிறது.

nammalwar-final
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல்
 செல்லார் பொழில் சூழ் திருப்பதிக -ளெல்லாம்
 மருளாம் இருளோட மத்தகத்துத் தன்  தாள்
 அருளாலே வைத்தவவர்.”

பதவுரை:

வில்லார் ஒளி நிறைந்த
மணி ரத்தினங்களை
கொழிக்கும் குவித்துத் தள்ளும்
வேங்கடம் அழகிய திருமலை முதலான
செல்லார் மேகங்கள் வந்து படிகின்ற
பொழில் சோலைகளாலே
சூழ் சூழப்பட்ட
திருப்பதிகள் எல்லாம் திவ்ய தேசங்கள் எல்லாம்
மருளாம்  இருள் அறியாமையாகிற இருளை
ஓட விரைவில் அகலும்படி
மத்தகத்து சீடன் தலைமேல்
தன்தாள் தம்முடைய திருவடிகளை
அருளாலே மிக்க கருணையினாலே
வைத்த வைத்து அருளின
அவர் ஆசார்யரான அவரே ஆவார்

விளக்கவுரை:

வில்லார்  மணி கொழிக்கும்   – வில்-ஒளி ஆர் -மிகுதி-ஒளி மிகுந்த ரத்தினங்களை

     ” நன்மணி வண்ணனுர் ஆவியும் கோளரியும்
       பொன்மணியும் முத்தமும் பூமரமும் – பன்மணி
       நீரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
       வேடுமுடை வேங்கடம்.”                                          (நான்முகன் திருவந்தாதி – 48)
என்ற திருமழிசைப்பிரான் பாடலில் யாழிகளையும் சிங்கங்களையும் பொன், ரத்தினம்,முத்து முதலிய பொருட்களையும் மற்றும் அனேக மணிகளையும் பூமரங்களையும் இழுத்துக்கொண்டு புரண்டு விழுகின்ற அருவிகளோடு காடுகளையும் வானரங்களையும் வேடர்களையும் உடைய திருவேங்கடம் என்று உரைத்ததை இங்கு ஒப்பு நோக்குக.

வேங்கடப் பொற்குன்று முதல்:  இவ்வாறு சிறப்பிக்கப் படுகின்ற திருவேங்கடம் என்ற பெயர் கொண்டதாய் எல்லா இயற்கைகளாலும் மிக அழகான திருமலை முதலான

செல்லார் பொழில் சூழ்: உயர்ந்து நிற்பதால் மேகங்கள் வந்து படியும்படி இருக்கும் சோலைகளாலே சூழ்ந்த (செல்-மேகம்-ஆர்த்த-படிதல்)

திருப்பதிகள் எல்லாம்: பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திவ்ய தேசங்களெல்லாம்

மருளாம்  இருளோட: அறியாமையாகிற இருள் விரைவில் அகல

மத்தகத்துத்தன் தாள் அருளாலே வைத்த அவர்: சீடனது முடியில் தன்னுடைய திருவடிகளைத் தம்முடைய கருணையினாலே வைத்தருளின குருவானவர் அருளாலே வைத்தார் என்றதால் இதற்கு காரணம் எதுவுமில்லை என்பதாம். சீடனது பணிவிடை முதலியவற்றைக் காரணமாகச் சொல்லலாமல்லவா? அப்படி எதையும் எதிர்பார்த்து அருளவில்லை என்பது கருத்து. இங்கு திருமலை முதலான அர்ச்சா ஸ்தலங்களைக் குறிப்பிட்டது ஏனைய பரமபதம், பாற்கடல் முதலிய இடங்களைக் கூட்டிகொள்ளவேணும்   என்பது குறிப்பு.ஆகவே பகவான் எழுந்தருளியுள்ள பரமபதம், திருப்பாற்கடல், இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள், எல்லாப் பொருள் உள்ளும் மறைந்திருக்கும் அந்தர்யாமித்வம் ஆகிய ஐந்து நிலைகளும் அடங்கும். ஆக இவ்வைந்து நிலைகளும் தனக்கு ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும் என்பது கருத்து. இக்கருத்தை சீடனிலக்கணம் சொல்லும் ஸ்ரீவசனபூஷணத்தில் ” பாட்டுக் கேட்குமிடமும் கூப்பீடு கேட்குமிடமும் குதித்த இடமும் வளைத்த இடமும் ஊட்டுமிடமும் எல்லாம் வகுத்த இடமே என்றிருக்கக் கடவன்” என்று கூறப்பட்டுள்ளது ஒப்பு நோக்குக.

இதன் பொருள்,

பாட்டுக் கேட்குமிடம்    – பரமபதம்
கூப்பீடு கேட்குமிடம்     – திருப்பாற்கடல்
குதித்த இடம்                – இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்
வளைத்த இடம்             – அந்தர்யாமித்வம் (உள்ளும் புறமும் உளனாயிருத்தல்)
ஊட்டுமிடம்                 – விக்ரஹ வடிவில் எழுந்தருளி சேவை கொடுக்கும் திருக்கோயில்கள்
இவையெல்லாம்           – இவ்வைந்து நிலைகளும் ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும்
வகுத்த இடம்                – ஆச்சார்யன் என்பதாம்

108 திருத்தலங்களும் மற்றும் பகவான் எழுந்தருளியுள்ள அனைத்து இடங்களும் ஆச்சார்யனே என்று இருப்பதுவே நற் சீடனிலக்கணமாகும் .இதனால் அச்சர்யனை பகவான் எழுந்தருளி இருக்கும்  இடங்களுக்கு ஒப்பாகக் கருத வேண்டும் என்பது கருத்து.

    “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலைஎன்னும் 
       பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்  அவை தன்னொடு வந்
       திருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்தின்றவன்  வந்
       திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே”                                                                                                                                                                           (இராமனுச நூற்றந்தாதி  106)

என்ற நூற்றந்தாதி பாடலும் இக்கருத்து   பற்றியே சொல்லப்பட்டது.

Leave a Comment