ஞான ஸாரம் 27- நெறி அறியாதாரும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                               27-ஆம் பாட்டு:

முன்னுரை:-

ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும் கண்ணபிரான் சொன்ன கீதைப் பேருரையில் சொன்ன ‘சரணாகதி’  நெறியில் நம்பிக்கையில்லாதவர்களும் வீடு பேற்றை அடைய மாட்டார்கள். பிறவிப் பெருங்கடலாகிற துன்பக்கடலுள் அழுந்தினராய் பல பிறப்புக்களையும் எடுத்து உழன்று வருவார்கள் என்று கூறுகிறது இப்பாடல்.

$6ABE403FF97C9457

“நெறி அறியாதாரும் அறிந்தவர்பால் சென்று
செறிதல் செய்யாத தீ மனத்தார் தாமும் – இறையுரையைத்
தேறாதவரும் திருமடந்தை கோனுலகத்து
ஏறார் இடரழுந்துவார்”

பதவுரை:-

நெறி உபாயம்
அறியாதாரும் அறிந்து கொள்ளாதவரும்
அறிந்தவர்பால் சென்று வழி அறிந்தவர்களான குருவிடம் சென்று
செறிதல் செய்யா பணிவுடையவராய் வணங்கித் தொழுது குருவை மகிழ்விக்காத
தீமனத்தர் தாமும் தீ மனம் உடையவர்களும்
திருமடந்தை கோன் உலகத்து இலக்குமி நாதனுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுந்தத்தை
ஏறார் அடையமாட்டார்கள்
இடர் பிறவிப் பெருங்கடலாகிற துன்பத்தில்
அழுந்துவார் முழுகித் தவிப்பார்கள்

விளக்கவுரை:-

நெறியறியாதாரும் – “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” சுழன்று வரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாதவரும். நெறி – வழி. இது தப்பிவிக்கும் உபாயத்தை காட்டுகிறது. அது தெரியாதவர்.

அறிந்தவர்பால் சென்று செறிதல் செய்யாத் தீமனத்தர் தாமும் – பிறவிப் பெருங்கடலைக் கடத்தி விடும் வழி அறிந்த ஆசார்யர்களிடம் சென்று சேராதவர்கள் மேலும் தங்களுக்கு அவ்வழியை உபதேசிக்க ஏதுவாக அவர்கள் மனம் இரங்கும் வண்ணம் பணிதல், அடி வீழ்தல் வழியைச் சொல்லும்படி வினாவுதல் மற்றும் அவர்கள் சொல்லும் பணியைச் செய்தல் முதலியன செய்து நெருங்கிப் பழகாமல், அப்பெரியோர்களை நம்மைப் போன்ற மனிதர்களாகக் குறைவாக எண்ணி அவர்களிடம் குற்றங்களைக் கண்டு கொண்டிருக்கும் தீயமனம் உடையவர்களும்.

இறை உரையைத் தேறாதவரும் – எல்லா உயிர்களையும் உள்ளிருந்து நடத்துபவனும் கீதையாகிற உபநிஷத்தை ஆசார்யனாய் நின்று உபதேசித்தவனும் அதாவது எல்லா ஆன்மாக்களும் வீடு பேற்றை அடைவதற்கு உபயோகமாக அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு அருளிச்செய்த கீதையின் 18ம் அத்தியாயத்தில் கடைசியாகச் சொல்லப்பட்ட “சரணாகதி நெறியில்” நம்பிக்கை இல்லாதவர்களும்.

திருமடந்தை கோன் உலகத்து ஏறார் – திருமால் வைகுந்தம் என்று சொன்னபடி திருமகள் நாயகனுடைய உலகமான ஸ்ரீவைகுண்டத்திற்குச் செல்லமாட்டார்கள்.

இடர் அழுந்துவார் – பிறவிப் பெருங்கடலில் பிறவியாகிற துன்பத்தில் முழுகித் தவிப்பார்கள் என்பதாம்.

Leave a Comment