ஞான ஸாரம் 22- உடைமை நானென்றும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     22-ஆம் பாட்டு:

முன்னுரை:

வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி நூல். அதாவது வந்து கூடுகின்ற தீவினைகளைத் தடுப்பது தேவர்களுக்கும் முடியாவாம். அதுபோல பெறக்கூடிய நல்வினைகளையும் தடுக்க முடியாவாம். மழை வறண்டால் அதனை யாரும் தரமுடியாது. அதிக மழை பெய்தால் அதைக் குறைக்க வல்லவருமில்லை. இதனால் விளைப்பயன்களைத் துய்த்தே ஆக வேண்டும் என்பது இறைவனால் இடப்பட்ட நியதி. முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் நுகரப்படுவதாலும் இப்பிறப்பில் செய்த வினை வரும் பிறப்பில் நுகரப்படுதலுமாகிய சுழல் போல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இவ்வாறு பிறவிச் சுழலில் சுழன்று வரும் ஆன்மாவுக்கு அதிலிருந்து தப்ப முடியுமா? என்று வினா எழுந்தபொழுது அதற்கு பதில் கூறுகிறது இப்பாடல். பிறவிக்குக் காரணமான பழவினைகள் கழிதலால், பின் ஒரு பிறவி பிறந்து நுகரவிருக்கும் வினையும் இருக்குமோ? இராது. ஆகவே வினைகளெல்லாம் ஆன்ம ஞானத்தால் தீயினில் பட்ட பஞ்சு போல் கருகி விடும். ‘தீயினில் தூசாகும்’ என்பது தமிழ் வேதம். ஆகவே, பிறவித் தொடர் என்ற துயரமில்லை என்பதாம்.

paramapadhanathan

“உடைமை நானென்றும் உடையானுயிரை
வடமதுரை வந்துதித்தா னென்றும் – திடமாக
அறிந்தவன் தன் தாளிலடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின்”

பதவுரை:

நான் நான் என்கிற ஆன்மா
உடைமை இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்
உயிரை உடையான் இவ்வாத்மாவை சொத்தாக உடையவன்
வடமதுரை வந்துதித்தான் என்றும் பிறந்தான் என்றும்
திடமாக அறிந்து உறுதியாக அறிந்து
அவன்தன் தாளில் இறைவனான அவன் திருவடிகளில்
அடைந்தவர்க்கும் அடைக்கலம் புகுந்தவர்க்கும்
பின் பிறந்து படும் இனிமேலும் ஒரு பிறப்பெடுத்து நுகரத்தக்க பழவினைகள்
நீள் துயரம் பழவினைகள்
உண்டோ இருக்குமோ? இல்லை என்றவாறு

விளக்கவுரை:

உடைமை நானென்றும் – நான் இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும், அதாவது வேதம் முதலிய சாஸ்திரங்களில் ஆன்மாக்கள் இறைவனுடைய உடைமைகள் என்று சொல்லப்பட்டதறிந்து அதன்படி இருத்தல்.

உடையான் உயிரை வடமதுரை வந்து உதித்தான் என்றும் – நான் என்று சொல்லப்படுகிற இவ்வாத்மாவை உடைமையாகக் கொண்டவன் வடமதுரையில் கண்ணனாக வந்து பிறந்தவன் என்றும், பகவத் கீதையில் தானே பரம்பொருள் என்றும், உலகமெல்லாம் என் உடைமைகள் என்றும், பிறவிப் பெருங்கடல் சுழலும் ஆன்மாக்களில் யாவர் என் பாதத்தையே அடைக்கலம் புகுகிறார்களோ அவர்களை நான் பிறவியிலிருந்து கரையேற்றுவேன் என்றும் சொன்ன கண்ணபிரானுடைய தலைமையை.

திடமாக அறிந்து – உறுதியாக அறிந்து அதாவது உண்மையை சாஸ்திரங்களால் ஆராய்ந்தால் ஆன்மாவுக்கு உடைமைத் தன்மையும் இறைவனுக்கு உடையவனாம் தன்மையும் வகுக்கப்பட்டுள்ளது தெரியவரும். அதனால் உடைமை – உடையான் என்று இங்கு இரு பொருளில், உடைமை என்று உயிர்களுக்கும், உடையான் என்று இறைவனுக்கும் வகுத்துக் கூறப்பட்ட பெயராகும். ஆகையால் உடைமையான ஆன்மா இருக்குமிடத்திற்கு வருவானும், அதனைத் தன்னுடனே சேர்த்துக் கொள்வானும் அவனே. இதனால் ஆன்மாவை வந்து அடைபவனும், அடைவதற்கு வழியாயிருப்பவனும் , அடைந்து மகிழ்வானும் அவனே என்று சொல்லப்பட்டது. திடமாக அறிகையாவது இறைவனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள உடைமை உடையான் என்னும் அநாதியான இவ்வுறவை ஐயம் திரிவற அறிதல். இவ்வாறு இருவருக்குமுள்ள உறவு முறையை அறிந்து.

அவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் – ஆன்மாவுக்கு உடையவனான இறைவன் திருவடிகளில் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் என்று பொருள். அதாவது த்வய மந்திரத்தில் முன் பாதியில் சொன்னபடி சரணாகதி செய்தவர்களுக்கும் என்று கருத்து.

உண்டோ பிறந்து படு நீள்துயரம் பின் – நீள்துயரம் என்றது பழவினையை, பிறப்புக்குக் காரணமாகிற பழைய வினைகள் சரணாகதி செய்த பிறகு இருக்குமோ? சரணாகதி செய்த உடன் உயிரைப் பற்றி நின்ற வினையெல்லாம்.

“வானோ மறிகடலோ, மாருதமோ, தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனின்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதித்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை அவா மருங்கு”
(பெரிய திருவந்தாதி – 54)

என்று நம்மாழ்வார் அருளியபடி வினை போனயிடம் தெரியாமல் போய்விடும். ஆகவே சரணாகதி செய்த பின்பு ஒருபிறவி பிறந்து நுகரத்தக்க பழைய வினையும் கழியாமல் இருக்குமோ?. உடனடியாக வீடு பெற வேணும் என்னும் வேகத்துடன் அப்பொழுதே வீடுபேறு அடைவதும் உடல் வீழ்ந்த பிறகு வீடு பேறு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு உடல் கழிந்த பிறகு வீடு பேறு கிடைப்பதும் உறுதியாக உண்டு. இதனால் சரணாகதி செய்தவர்களுக்கு மறுபிறப்பின் தொடர்ச்சி இல்லை. “உறுதியாக இல்லை.”

 

Leave a Comment