21-ஆம் பாட்டு:
முன்னுரை:
திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும் அத்துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது உதாரணத்துடன் விளக்கப்படுகிறது இப்பாடலில்.
“ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள்பால்
வேரிச்சரோருகை கோன் மெய்ந்நலமாம் – தேரில்
பொறுத்தற்கரி தெனினும் மந்தனுடற் புண்ணை
அறுத்தற்கிசை தாதை யற்று”
பதவுரை:
வேரிச்சரோருகைகோன் | நறுமணம் நிறைந்த தாமரைப்பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன் |
அன்பர்கள் பால் | பக்தி உடையவார்களிடத்தில் |
ஆரப்பெருந்துயர் | மிக்க பெரும் துன்பத்தை |
செய்திடினும் | தந்த போதிலும் |
தேரில் | இதை ஆராய்கையில் |
மெய்ந்நலமாம் | உண்மையான அன்பிலேயாகும் |
பொறுத்தற்கு அரிது எனினும் | தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் |
அப்படித் தருவது மைந்தன் | பிள்ளையினுடைய |
உடற்புண்ணை | உடலில் உண்டான புண்ணை |
அறுத்தற்கு | அறுவை சிகிச்சைக்கு |
இசைதாதையற்று | அனுமதிக்கும் தந்தை போலவாம் |
விளக்கவுரை:
ஆரப்பெருந்துயரே – துயர் – துன்பம், பெருந்துயர் – பெருந்துன்பர். ஆரப் பெருந்துயர் – மிக்க பெருந்துன்பம் என்றவாறாம். துயரே என்கிற ஏகாரத்தால் நடுவில் ஒரு இன்பம் கலவாத துன்பம் என்று புலனாகிறது.
செய்திடினும் – கொடுத்தாலும் என்று பொருள். ஆன்மாக்களுடைய முன் வினைப் பயனால் துன்பங்கள் வந்தனவானாலும் அவற்றை நடத்துபவன் இறைவனாகையாலே “போயபிழை” எனப்பட்ட பழவினைகளும் ‘புகுதருவான்’ எனப்பட்ட வரும் வினைகளும் தற்பொழுது உடலுடன் கொண்டு வந்த வினைகளும் ஆகிய மூன்று வினைகளையும் கழிக்கின்றவன் இறைவனாதலால் அவனுக்கு மேற்சொன்ன மிக்க பெருந்துன்பங்களைக் கழிக்க முடியாதவையல்ல. அவர் எண்ணினால் அகற்ற முடியும். ஆயினும் தன் பக்தர்களின் தன்மைக்காக அப்பெரும் துன்பங்களைப் பக்தர்கள் துய்க்கும்படி செய்கிறான். அதனால் பக்தர்கள் துன்பம் துய்க்கும்படி ஆகிறது. ஏனெனில் பக்தர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபடவேண்டுமல்லவா? இக்கருத்து ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழியால் கூறப்பட்டது.
‘இயல்பாகவும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடமை
மயலாகம் மற்றும் பெயர்த்து’
என்ற குறளுக்கு எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை மட்டும் விடாது போனால் அதைத் தொடர்ந்து விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் மனக்கலக்கம் செய்யும் என்ற பரிமேலழகர் உரையைக் காண்க.
வேரிச்சரோருகை கோன் – வேரி – நறுமணம், சரோருகம் – தாமரை
வேரிச்சரோருகம் – நறுமணமே வடிவாகவுடைய தாமரை
வேரிச்சரோருகை – அத்தகைய தாமரையை இருப்பிடமாக உடையவள் இலக்குமி.
சரோருகை கோன் :- அவளுக்குக் கணவனான திருமால் ‘கோன்’ என்ற சொல்லுக்கு ‘வேரிச்சரோருகை’ என்பது கருத்து அடையாக வந்தது. அதாவது பக்தர்களுக்குத் துன்பத்தை விளைப்பதற்காகப் பகவானோடு பிராட்டியும் துணை நிற்கிறாள் என்று தெரிகிறது. காரணம் பக்தனுக்குப் பகவான் துன்பம் தருவது, அவனுடைய நன்மைக்காகவே என்று சொல்லுகையாலே அந்நன்மைக்கு அவளும் துணை நிற்பது தவறல்லவே என்பதாம்.
மெய்ந்நலமாம் – உண்மையான அன்பின் அதாவது உண்மையான சினேகம் என்பதாம்.
தேரில் – ஆராயில், தேறுதல் – ஆராய்தல் வேரிச் சரோருகைகோன், அன்பர்கள் பால் ஆரப்பெருந்துயரே செய்திடினும் தேரில் மெய்ந்நலமாம் என்று கொண்டு கூட்டுக. இதற்கு எடுத்துக் காட்டாக கட்டுரைக்கப்படுகிறது மேல்தொடரில்.
பொறுத்தார்க்கு அரிதெனினும் மைந்தன் உடல் புண்ணை அறுத்தற்கு இசைதாதையற்று – தன் புதல்வனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவன் உடலில் எழும்பிய கட்டியை அறுவை மருத்துவத்திற்கு நல்லெண்ணத்துடன் ஏற்கும் தகப்பனைப் போல என்று பொருள். அதாவது மகனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவனுடைய நன்மைக்காக அவனுடைய உடம்பில் எழும்பிய கட்டியை அறுத்து எறிவதற்கு நல் எண்ணத்தாலே ஏற்றுக் கொள்ளும் பிதாவைப் போல, பகவானும் தன் பக்தர்கள் வினைப்பயனைத் தீர்ப்பதற்கு மிக்க பெரும் துன்பங்களைக் கொடுத்து அவ்வினையிலிருந்து அவர்களை மீட்பதற்காகவாம். இது பக்தனிடம் தான் கொண்ட உண்மையான நேசத்தாலே யாகும். இந் நற்செயலுக்கு இரக்கமே வடிவான பெரிய பிராட்டியாரும் துணை நிற்க இறைவன் செய்யும் செயலாகும் என்று பொருள்.