ஞான ஸாரம் 20- விருப்புறினும் தொண்டர்க்கு

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                   20-ஆம் பாட்டு:

முன்னுரை:

தன்னிடம் பக்தியுடைய தொண்டர்கள் தங்களுக்குத் தீமை என்று அறியாமல், ஆசையால் அற்பப் பொருள்களில் சிலவற்றை விரும்பி, இதைத்தரவேணும் என்று வேண்டினாலும் நன்மையே செய்பவனான இறைவன் அதைக் கொடாமல் மறுத்து விடுவான்’ என்னும் கருத்தை உதாரணத்துடன் கூறுகிறார் இப்பாடலில்.

paramapadhanathan-2

“விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டுமிதமல்லால்
திருப்பொலிந்த மார்பனருள் செய்யான் – நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே யொழியுமோ தாய்”

பதவுரை:

விருப்புறினும் அற்பப் பொருள்களை விரும்பினாலும்
தொண்டர்க்கு தன்பக்கல் பக்தி உடையவர்களுக்கு
வேண்டும் இதம் அல்லால் அவர்கள் க்ஷேமத்திற்குத் தேவையான தன்மையொழிய
திருப்பொலிந்த மார்பன் திரு ஆன பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே பிரகாசமான அழகிய மார்பை உடையவன்
அருள் செய்யான் அவர்கள் விரும்பிய அற்பப் பொருள்களைக் கொடுக்கமாட்டான் (உதாரணம் மேல்வருமாறு)
குழவி பின் விளைவு அறியாத சிறு குழந்தை
நெருப்பை தீச்சுடரை
விடாதே அதன் ஒளியைக் கண்டுபிடித்தால் விடமாட்டாமல்
தாய் குழந்தையின் அம்முயற்சி அதற்குத் தீமைதரும் என்றறிந்த பெற்ற தாயானவள்
தடாதே ஒழியுமோ அந்நெருப்பில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளா? (தடுத்தேவிடுவாள்)

விளக்கவுரை:

விருப்புறினும் – அற்பப் பொருள்களில் ஆசை பண்ணினாலும் அதாவது, இதைக் கொடுக்கவில்லையானால் இவர்கள் மிகவும் கஷ்டப்படுவோம் என்று மிகவும் நைந்து வேண்டினாலும் என்று பொருள். தங்கள் விஷயத்தில் இறைவன் மனம் உருகி கேட்டதைத் தரும்படி அவ்வளவுக்கு குழைந்து வேண்டிக் கொண்டாலும் என்றவாறாம்.

தொண்டர்க்கு – தன்னுடைய பக்தர்களுக்கு இங்கு ‘தொண்டு’ என்னும் சொல் அடிமைக்கும் அவாவுக்கும் பொதுவாய் இருந்து ‘அவா’ என்னும் பொருளில் வழங்கி ‘அவாவுடையார் – பக்தர்கள்’ என்று பொருள் கொள்ளப்பட்டது. அவா – பக்தி அதுவுடையார் பக்தர். ஆகவே, தொண்டர் பக்தர் என்றறிக.

வேண்டும் இதம் அல்லால் – அதாவது அவர்களுக்குத் தேவையான நன்மையொழிய “ஹிதம்” என்ற வடசொல் “இதம்” என்று வந்தது. இதற்கு “நன்மை” என்று பொருள். அவர்களுடைய க்ஷேமத்திற்குத் தேவையான நன்மை அது அல்லாமல் அதாவது, நன்மை தவிர என்று பொருள்.

திருப்பொலிந்த மார்பன் – பெரிய பிராட்டியார் எழுந்தருளி இருக்கையாலே  ஒளிமயமான திருமார்பை உடையவன். திருப்பொலிந்த மார்பன் என்றவாறு. திருவால் வந்த பொலிவை உடைத்தான மார்பு என்று பொருள். திருமார்பு முழுவதும் (திருவின்) பிராட்டி நிறைந்திருக்கும் மார்பு. “கருமாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திருமார்பு, கால், கண், கை, செவ்வாய் உந்தியானே” என்றும் ‘உருமாணிக்க மலை மேல் மணித்தடந்தாமரைக் காடுகள் போல், திருமார்பு வாய் கண் கையுந்தி காலுடையாடைகள் செய்யபிரான் என்றும் வரும் பாடல்களில் உறுப்புக்களின் அழகைச் சொல்வதால் ஏனைய உறுப்புக்கள் போல் திருமார்பும் சிவந்திருக்கும்  என்று திருமார்பை முதற்கண் சொல்லியிருக்கிறது. ‘அலர்மேல் மங்கை உறையும்’ மார்பாதலால் அவளது ஒளி அவன் மார்பு எங்கும் நிறைந்து ஒளிமயமாகத் திகழ்கிறது என்று பொருள்.

“மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடராழி சுரி சங்க மேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே”

(திருவாய்மொழி – 9-4-1)

என்ற இப்பாடலிலும் “திருவால் பொலியும் மார்பு” என்று பொருள் கூறப்பட்டது. ஆக “திருவால் பொலிந்த மார்பன்” என்று அவன் மார்பழகு உரைக்கப்பட்டது. இதனால் பிராட்டியோடு கூடியிருக்கும் சேர்த்தி கூறப்பட்டது. இதனால் அருள் செய்யும் சுழ்நிலையிலும் என்று குறிப்பு.

அருள் செய்யான் – அதாவது அவர்கள் ஆசைப்பட்டு வேண்டினாலும் நன்மையே செய்பவனாதலால் மறுத்து விடுவானன்றி கேட்டதைக் கொடுக்க மாட்டார் என்று பொருள்.

அருளுதல் – கொடுத்தல், தன் தொண்டர்கள் ‘இன்னது வேணும்’ என்று அவனிடம் வேண்டிநின்றாலும் அவன் அது கொடாமல் மறுத்தற்குத் தக்க உதாரணம் காட்டி விளக்கப் படுகிறது.

நெருப்பை விடாதே குழவி விழவருந்தினாலும் தடாதே யொழியுமோ தாய் – மேல் விளைவறியாத சிறு குழந்தை நெருப்பு சுடும் என்றறியாமல் அதனுடைய ஒளியை மட்டும் கண்டு அதை விடாமல் அதிலே விழுகைக்கு முயல்கின்ற பொழுது அதைப் பார்க்கும் தாய் தன் குழந்தைக்கு அச்செயல் அழிவை  விளைவிக்கும் என்று கருதி அதில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளோ? தடுத்தே விடுவாள் அல்லவா! அதுபோல, பக்தர்கள் தங்களுக்குத் தீமைதரும் என்பதை அறியாமல் இறைவனிடம் சிலவற்றை வேண்டினாலும் அவர்களுக்கு அவை தீமையை விளைவிக்கும் என்பதை அறிவானாதலால் அவற்றைக் கொடுக்கமாட்டான். மறுத்தே விடுவான் என்பது இதன் பொருள்.

Leave a Comment