திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 81 – 90

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 71 – 80

எண்பத்தோறாம் பாசுரம். மாமுனிகள், மற்றவர்களைப் பார்த்து ஒரு காரணத்தின் அடியாக வரும் தேஹ பந்துக்களை விட்டு இயற்கையான பந்துவான எம்பெருமானைப் பற்றச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு

அஜ்ஞானிகளுக்கும் நன்மையே செய்யும் பெருமையை உடைய ஆழ்வார், கர்மம் என்னும் ஒரு காரணத்தின் அடியாக வந்த மனைவி மக்கள் முதலிய தேஹ பந்துக்களைவிட்டு, தன்னைச் சரணடைபவர்களைத் தன் அடியார்களுடன் சேர்க்கும் ச்ரிய:பதியிடம் சரணடையும்படி உபதேசம் செய்கிறார்.

எண்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு எல்லாவிதமான பந்துக்களும் செய்யும் செயல்களைச் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்

தன்னுடன் நித்யமான உறவைக்கொண்ட எம்பெருமானைத் திருப்புளிங்குடியில் கண்டு வணங்கி “எல்லாவிதமான உறவுகளின் செயல்களையும் நான் இடைவிடாமல் செய்யும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஸ்ரீ சடகோபரின் இரு திருவடிகளையும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியாக நினை.

எண்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் சீலம் (எளிமை) என்னும் குணத்தில் மூழ்கியிருக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணனன்றோ நான் என்று – பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை

எம்பெருமான் “உம்முடைய ஆசைகளாக எவற்றை எல்லாம் நீர் ஆராய்ந்து வைத்துள்ளீரோ அவற்றை நான் நிறைவேற்றுகின்றேன். ஸர்வசக்தனான நாராயணன் அன்றோ நான்?” என்று சொல்லி ஆழ்வாருடன் தனக்கு இருக்கும் எல்லா உறவுகளையும் காட்டினான். ஆழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் சீல குணத்தில் மூழ்கினார். ஆழ்வாரின் கருணை நம் மனத்தில் இருக்கும் அறியாமையைப் போக்கும்.

எண்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், சிறந்ததான வடிவழகை உடைய எம்பெருமானைக் காண ஆசைப்பட்டுக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மையார் கண் மாமார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்குடனே காண எண்ணி – மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர்

கருநிற மையாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய பிராட்டியாரைத் தன் திருமார்பில் நிரந்தரமாக வைத்திருக்கும், திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு ஆகியவைகளை வைத்திருக்கும் ச்ரிய:பதியை உண்மையான ஆசையுடன் கூப்பிட்டார் ஆழ்வார். தான் ஆசைப்பட்டபடி கண்ட ஆழ்வார் ஆனந்தத்தை அடைந்தார். இவ்வாழ்வாரின் திருநாமங்களைச் சொல்லவே சிறந்ததான ஆத்மா உஜ்ஜீவனத்தை அடையும்.

எண்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை நினைவு படுத்தும் வஸ்த்துக்களால் தான் துன்புறுவதை அருளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய் – பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்

ஆழ்வார் தன்னை தரிக்கப் பண்ணும் ஸர்வேச்வரன் அவ்வாறே தன் நெஞ்சில் இருப்பதைக் கண்டு, நேரிலும் தன்னுடைய வெளிக் கண்களால் உடனே காண ஆசைப்பட்டு, ஆண் தன்மையை இழந்து பெண் தன்மையை அடைந்தார். மேலும் எம்பெருமானை நினைவுறுத்தும் மேகக் கூட்டங்கள் போன்ற வஸ்துக்களைக் கண்டு தளர்ந்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் க்ருபையை த்யானிப்பவர்களின் நெஞ்சம் உருகும்.

எண்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், வருத்தத்துடன் எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை த்யானிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உருகுமால் என்னெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி – மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்துரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?

ஆழ்வார் “என் நெஞ்சம் உன்னுடைய லீலைகளை நினைத்து உருகும்; மேலும் என்னுடைய ஆசை மிகவும் அதிகமாக ஆனது” என்று வருத்தத்துடன், எம்பெருமான் காதலனாக இருக்கும் தன்மை, தன் நெஞ்சில் நிலைத்திருக்கும்படி அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை என்னுடை நாக்கு எவ்வாறு சொல்லாமல் இருக்கும்?

எண்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வடிவழகை நம்பி எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்காதலுக்கடி மால் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் – எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்

ஆழ்வார் “என்னுடைய காதலுக்குக் காரணம் ஸர்வேச்வரனின் இயற்கையான, தகுந்ததான வடிவழகு” என்று சொல்லி அந்நிலையில் அவனுடைய வடிவழகையே நம்பி, எங்கும் உள்ள பறவைக் கூட்டங்களைத் தூதுவராக அனுப்பினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை த்யானித்தவர்களின் தீமைகள் அழிக்கப்படும்.

எண்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், அனுப்பிய தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல் “உடனே திருநாவாயைச் சென்று அடைய வேண்டும்” என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் – அறப்பதறிச்
செய்ய திருநாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல்

“அவன் நம் துயரங்களைப் போக்குவான்” என்று எம்பெருமானிடம் தூதுவர்களை அனுப்பினார் ஆழ்வார். ஆனால் அவருடைய திருவுள்ளமோ அந்தத் தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கலங்கி, சிறந்ததான திருநாவாய்க்குச் செல்லலாம் என்று புறப்பட்டார்.

எண்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், மாலை வேளையில் தன் விருப்பத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் – செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என்தன் மால்

ஆழ்வார் ஸர்வேச்வரனை “நான் உனக்கு முழுமையாகக் கைங்கர்யம் செய்யும் நாள் என்று?” என்று கேட்டு, இயற்கையான பக்தியால், எம்பெருமானின் பதிலுக்குக் காத்திருக்க முடியாமல், தன்னுடைய தரியாமையைப் பேசி வருந்தினார். என்னுடைய அறியாமைக்கு நேர் எதிரான இவ்வாழ்வாரின் கருணையால், என்னுடைய அறியாமை நீங்கும்.

தொண்ணூறாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய மோக்ஷத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து – மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்

ஸர்வேச்வரன் “முழு மனதுடன், உம்முடைய விருப்பங்களை ஆத்மாவுடன் கூடியிருக்கும் இந்த சரீரத்தின் முடிவிலேயே நிறைவேற்றுவேன்” என்று ஆழ்வாருக்குச் சொல்ல, ஞானம் முதலிய குணங்களை உடைய ஆழ்வார், மிகவும் ஆனந்தித்து “திருக்கண்ணபுரம் சென்று அங்கிருக்கும் ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பணியுங்கோள்” என்றார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகள் நமக்குக் கருணையைப் பொழியாமல் இருக்குமோ?

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-81-90-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment