திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.8 – ஆராவமுதே

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 5.7

சிரீவரமங்கலநகரிலே எழுந்தருளியிருக்கும் வானமாமலை எம்பெருமானிடத்தில் வேரற்ற மரம் போலே விழுந்து சரணாகதி செய்தும் அவன் வந்து முகம் காட்டாமல் இருக்க, ஒரு வேளை எம்பெருமான் நம்முடைய சரணாகதியைத் திருக்குடந்தையிலே ஏற்றுக்கொள்வான் போலிருக்கிறது என்று எண்ணித் திருக்குடந்தையில் ஆராவமுதன் எம்பெருமானிடத்தில் தன்னுடைய அநந்யகதித்வத்தைச் (வேறு புகலில்லாமல் இருக்கும் நிலை) சொல்லிச் சரணம் புகுகிறார் ஆழ்வார்.

முதல் பாசுரம். உன்னுடைய இயற்கையான ஸம்பந்தமே காரணமாக உன் அழகையும் இனிமையையும் காட்டிக்கொண்டு, நான் சிதிலமாகும்படி நீ திருக்குடந்தையிலே கண்வளர அதைக் கண்டேன் என்கிறார்.

ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெற்கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

எனக்கு இயற்கையான தலைவனாய், எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத எப்பொழுதும் இனிமையானவனாய், அடியேனுடைய சரீரம் உன் விஷயத்தில் அன்பே வடிவாக நீரைப்போலே உருக்குலைந்து வருத்தத்துடன் கரையும்படி உருகப்பண்ணும் அளவிடமுடியாத இனிமையை உடையவனே! கனத்தாலே விஞ்சின செந்நெற்கதிர்கள் கவரிவீசினாப்போலே இருப்பதாய் அதற்குக் காரணமான ஜல ஸம்ருத்தியை உடைய திருக்குடந்தையிலே அழகு விஞ்சின ஒப்பனை திகழும்படிக் கண்வளர்ந்தருளினாய். என் கண்ணாலே கண்டு அனுபவித்தேன். ஆனால் வேறு பரிமாற்றங்கள் கிடைக்கவில்லை என்று கருத்து.

இரண்டாம் பாசுரம். அடியார்களுக்காகப் பல அவதாரங்களைச் செய்த நீ உன் கண்ணாலே நன்றாகக் கடாக்ஷிக்கவில்லை, நான் என் செய்வேன் என்கிறார்.

எம்மானே என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே!
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?

எனக்கு ஸ்வாமியாய், எனக்கு ஸத்வகுணம் பிறக்கும்படி பரிசுத்தமான வடிவை உடையவனாய், எனக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய், எல்லா விதங்களிலும் இருக்கும் உயர்ந்த திருமேனிகளை ஆசையால் அங்கீகரித்து இருப்பவனாய், அந்த அந்த விக்ரஹங்களில் இருக்கும் அழகாலே எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து செருக்கனாயிருக்குமவனாய் இருப்பவனே! சிவந்து பெருத்த தாமரைகள் மிகுதியாக நீரின்மேலே எல்லாவிடங்களிலும் மலரும் திருக்குடந்தையிலே அந்த உயர்ந்ததான தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்கள் வளரும்படி கிடக்கிறவனே! நான் இப்பொழுது என் செய்வேன்?

மூன்றாம் பாசுரம். கைம்முதல் இல்லாத நான் உன்னைத் தவிர வேறொருவராலும் ரக்ஷிக்கப்பட வேண்டாம். இப்படியாக்கின நீயே எப்பொழுதும் என்னை உன் திருவடிகளிலே அடிமை கொள்ளாப் பார் என்கிறார்.

என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே

நான் என்னைக் காத்துக்கொள்ள என்ன செயலைச் செய்வேன்? எனக்கு ரக்ஷகர் யார்? என்னை என்ன செய்வதாக இருக்கிறார்? உன்னைத் தவிர வேறு யாராலும் ஒரு குறையும் போக்கப்பட வேண்டியவனாக நான் இல்லை. மிகவும் திண்ணிய மதிள் சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! அடியேனுடைய ஆத்மா உஜ்ஜீவிக்கும் காலம் இருக்கும் நாள் எத்தனை நாளோ அந்த நாளெல்லாம் உன் திருவடிகளை பிடித்துக்கொண்டே நடக்கும்படி பார்த்தருளவேண்டும்.

நான்காம் பாசுரம். அளவற்ற பெருமையையுடைய ஸர்வேச்வரனான உன்னை இந்த அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு அது முடியாமல் கலங்கி நிற்கிறேன் என்கிறார்.

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே

மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காணுமளவுக்கும் மேலே போகக்கூடிய குண கீர்த்தியையுடையவனாய் அதற்கு முடிவில்லாமல் இருப்பவனே! எல்லா உலகத்தையும் அடிமையாகவுடைய அத்விதீயமான திருமேனியையுடையவனாய் உன்பக்கல் ஆசை விஞ்சியிருப்பவர்களுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! உன்னை நான் நினைத்தபடி கண்டு அனுபவிக்கைக்காக அலமந்து ஆகாசத்தை நோக்கி பக்திபரவசரைப்போலே அழுது ப்ரபன்னரைப்போலே தொழுவேன்.

ஐந்தாம் பாசுரம். உன் கண்ணழகிலே ஈடுபட்டுப் பலவிதமான செயல்களைச் செய்யும் நான் உன் திருவடிகளைச் சேரும்படிப் பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்

அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.

ஆறாம் பாசுரம். நித்யஸூரிகளால் வணங்கப்படும் மிகவும் இனிமையை உடையவனான நீ என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருள வேண்டும் என்கிறார்.

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே!
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரியேறே

வாழ்ச்சியாலே இயற்கையான புகழை உடையவர்களுக்காகத்தான் திருக்குடந்தையிலே சயனித்தருளினாய். நித்யஸூரிகளுக்கும் தலைவனாய் யாழின் இசைபோலே, எப்பொழுதும் இனிக்கும் அமுதம்போலே, ஸ்துதிப்பது முதலான செயல்களால் நாக்குக்கு இனியவனாய், மனதுக்கும் இனியவனாய் உயர்ந்த சிங்கத்தைப்போன்ற பெருமையை உடையவனே! உன் திருவடிகளைச் சேர்ந்து அதற்கே ஆட்பட்டிருக்கும் பழமையான நிலையைக் கண்டிருந்தே, நிரப்பமுடியாத ஆசை என்னும் குழியை தூர்த்து எத்தனை நாள் அகன்று இருப்பேன். என் அநாதிகால பாபத்தை அறுத்து உன் திருவடிகளைச் சேரும்படிச் சூழ்ந்தருள வேண்டும்.

ஏழாம் பாசுரம். உன்னுடைய திருமேனி அழகைக்காட்டி என்னை அடிமை கொண்டபின்பு உன் திருவடிகளைத் தந்து என் விரோதியைப் போக்கவேண்டும் என்கிறார்.

அரியேறே என்னம் பொற்சுடரே செங்கட்கருமுகிலே
எரியே பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே

கட்டுக்கடங்காத ஸ்வாதந்த்ரியத்தாலே செருக்குடன் இருப்பவனாய் விரும்பத்தக்க பொன்போலேயிருக்கிற திருமேனியில் ஒளியை எனக்கு அனுபவிக்கக் கொடுத்தவனாய் சிறந்த திருக்கண்களையுடையவனாய் முன்பு சொன்ன பொன்னொளிக்கு இருப்பிடமான கறுத்த திருமேனியையுடையவனாய், எதிரிகளுக்கு அக்னிபோலே சிவந்த பவளக்குன்றுபோலே உயர்ந்த திருமேனியையுடையவனாய் நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமியே! உன்னுடைய க்ருபையை ஒருகாலும் பிரியாதபடி வாசிக கைங்கர்யங்களைக் கொண்டாய். திருக்குடந்தையிலே பிராட்டியுடன் சேவைசாதிப்பவனே! இனி நான் உன் பிரிவைத் தாங்கமாட்டேன். உன் திருவடிகளைத் தந்து என்னுடைய சரீர ஸம்பந்தத்தை போக்கியருள வேண்டும்.

எட்டாம் பாசுரம். விபரீதமான பலமே கிடைத்தாலும் உன்னைத் தவிர வேறொரு ரக்ஷகர் எனக்கு இல்லை. இப்படி வேறு தலைவன் இல்லாத நான் உன் திருவடிகளை விடாதபடி அனுமதி கொடுக்கவேண்டும் என்கிறார்.

களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது
இளையாதுன தாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே

நீ என் துன்பத்தைப் போக்கினாலும் போக்காவிட்டாலும் வேறு ஒரு துன்பத்தைப் போக்கும் புகல் எனக்கு இல்லை. சூழ்ந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையாய்! திருக்குடந்தையிலே சயனித்திருக்கிற மிகவும் ஆச்சர்யமான அழகை உடையவனே! என் உடல் தளர்ந்து எனது ப்ராணன் நிலைகுலைந்து சரீரத்தைவிட்டு போகும்போது சித்தமானது பலவீனத்தை அடையாமல் உன் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக ஒருபடிப்படப் பிடித்து இருக்கும்படி நீயே அனுமதி பண்ணியருள வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். எனக்கு அனுமதி தந்து உன் திருவடிகளை காட்டிய நீ, எப்படி உன் சயனத் திருக்கோலத்தின் அழகைக் காண்பித்தாயோ அதைப்போல் நடையழகையும் காட்டவேண்டும் என்கிறார்.

இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெருமூர்த்தி!
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே

என்னை அடிமைத்தனத்தில் இசையும்படிப் பண்ணி, உன் திருவடிகள் விஷயமான வழி மற்றும் பலனாகிய எண்ணத்துடன் இருத்திய ஸ்வாமியே! பகவதனுபவத்துக்கு ஒரு அசைவும் இல்லாத ஸூரிகளுக்குத் தலைவர்களான அநந்த கருட விஷ்வக்ஸேனர் ஆகியோருக்கும் தலைவனாய், எல்லாவற்றுக்கும் காரணனாய் மிகவும் மேன்மை பொருந்திய திருமேனியை உடையவனே! திக்குக்கள் தோறும் ஒளியை வீசும் அழகிய விலையுயர்ந்த ரத்னங்கள் சேருகிற திருக்குடந்தையில் அலைச்சல் தீர்ந்து உலகம் கொண்டாடும்படி சயனித்திருப்பவனே! நான் காணும்படி வரவேண்டும்.

பத்தாம் பாசுரம். மனதிலே நீ இருந்து ஆனந்தத்தைக் கொடுத்தாலும் வெளியிலே நான் கண்டு அனுபவிக்கமுடியாதபடி இருக்கிற உன்னை, எத்தனை திவ்யதேசங்களிலே தேடித் திரிவது என்கிறார்.

வாரா அருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊரா உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ

கண்ணாலே அனுபவிக்கலாம்படி திருமேனியழகோடு நடந்து வாராமல், உருவமில்லாதவனாய் என் மனதிலே தோன்றி உன் ஆச்சர்ய குணங்களை எனக்குக் காட்டுபவனாய், அழிவில்லாத திருமேனியோடு எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம்போலே இனியவனாய் உனக்கு அடிமையான என் ப்ராணனின் இருப்பிடமான நெஞ்சுக்குள்ளே மிகவும் ஆனந்தத்தை விளைக்கிறாய். தீராத வினைகள் தீரும்படி என்னை வாசிக கைங்கர்யம் கொண்டவனாய், கண்டு அனுபவிக்கும்படி திருக்குடந்தையை தனித்துவம் வாய்ந்த இருப்பிடமாய்க்கொண்டு இருப்பவனே! உனக்கு அடிமைப்பட்டிருந்தும் வேறு கதியில்லாத அடியேன் இன்னும் மேலுண்டான காலத்திலும் நினைத்தபடி அனுபவிக்கமுடியாமல் வருந்துவேனோ?

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நன்றாகக் கற்கவல்லவர்கள் அடியார்களுக்கு விரும்பத்தவர்களாவர்கள் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே

உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையினுள்ளிருந்த அவளுடைய ப்ராணனை எடுத்த க்ருஷ்ணனுடையவையாய் தமக்கு உபாயமாக முன்பு காட்டிகொடுத்த திருவடிகளையே உபாயமாக புத்திபண்ணிக்கொண்ட, திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் குழலிலும் மிகவும் இனிதாக இருக்கும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் தங்கள் சிறுபிள்ளைத்தனம் தீர்ந்து சொல்ல வல்லவர்கள் மான்போலிருக்கிற கண்களையுடைய திவ்ய அப்ஸரஸ்ஸுகளுக்கு ப்ரஹ்மாலங்காரம் செய்யும் க்ரமத்தில் விரும்பத்தக்கவர்களாக ஆவார்கள். மான்போன்ற கண்களை உடையவர்களுக்கு காமுகர்கள் எப்படியோ அதைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இந்த பாசுரங்களைச் சொல்ல வல்லவர்கள் என்று கருத்து.

 

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.8 – ஆராவமுதே”

Leave a Comment