உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 14

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் உண்டோ

திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ

ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் 

பதினைந்தாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்திலே சொன்ன ஆழ்வார், அவர் அவதரித்த நாள், ஊர் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழி ஆகியவற்றின் பெருமையைத் தாமே நன்றாக அனுபவித்துப் பேசுகிறார்.

ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயணனும் அவன் விபூதிகளும் ஓங்கும்படி மங்களாசாஸனம் செய்த நம்மாழ்வார் அவதரித்த இந்த திருவைகாசித் திருநாளுக்கு ஒப்பாக ஒரு நாளுண்டோ? (கிடையாது) நம் சடகோபரான நம்மாழ்வாருக்கு ஒப்பாக ஒருவர் உண்டோ? (ஸர்வேச்வரனும், நித்யர்களும், முக்தர்களும், இவ்வுலகத்தவர்களும் ஒருவரும் ஆழ்வாருக்கு ஒப்பாக மாட்டார்கள்) வேதத்தின் ஸாரத்தை விரிவாக உரைக்கும் திருவாய்மொழிக்கு ஒப்பான ஒரு ப்ரபந்தம் தான் உண்டோ?  (கிடையாது) இப்படிப்பட்ட ஆழ்வாரை நமக்குப் பெற்றுத் தந்த திருக்குருகூருக்கு ஒப்பான ஒரு ஊர் உண்டோ? (ஆதிநாதப் பெருமாளுக்கும் நம்மாழ்வாருக்கும் ஸமமான பெருமையைக் கொடுக்கும் ஊர். எம்பெருமானின் பரத்வம் அர்ச்சாவதாரத்திலே பொலிந்து தோன்றும் திவ்யதேசம். நம்மாழ்வாரின் திருவவதார ஸ்தலம். நம்மாழ்வார் அருளாலே, எம்பெருமானார் காலத்துக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவரின் பவிஷ்யதாசார்ய விக்ரஹம் அவதரித்த ஊர். எம்பெருமானாரின் புனரவதாரமான மணவாள மாமுனிகளின் திருவவதார ஸ்தலம். இப்படிப் பட்ட ஏற்றம் வேறு எங்கும் நாம் காண முடியாது). இப்படி எம்பெருமான், ஆழ்வார் மற்றும் ஆசார்யர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஸ்தலமாக இருப்பதால் முப்புரியூட்டினதாகக் (மூன்று மடங்கு ஏற்றம் பெற்றதாக) கொண்டாடப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment