உபதேச ரத்தின மாலை – பாசுரம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 13

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்

பாரோர் அறியப் பகர்கின்றேன் சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்

பதினான்காம் பாசுரம். ஏனைய ஆழ்வார்களைத் தனக்கு அவயவமாகக் கொண்டு, திருவாய்மொழி மூலமாக வேதாந்த அர்த்தங்களை எளிய தமிழில் வெளியிட்ட நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாக நன்னாளை இவ்வுலகத்தவர்கள் நன்றாக அறியும்படிக் கொண்டாடுகிறார்.

சீர்மை பொருந்திய வைகாசி விசாகத்தின் பெருமையை இவ்வுலகத்தவர்கள் நன்றாக அறியும்படிச் சொல்லுகிறேன். சீர்மை பொருந்திய வேதத்தின் அர்த்தங்களை அழகிய தமிழ் மொழியில் அருளிச்செய்த உண்மையாளரான அழகிய திருக்குருகூரின் தலைவரான நம்மாழ்வார் அவதரித்த நாள்.

மெய்யன் என்றால் உள்ளதை உள்ளபடி நேர்மையுடன் பேசக் கூடியவர். வேதத்துக்குச் சீர்மையாவது, அபௌருஷேயத்வம் (யாராலும் இயற்றப்படாதது), நித்யத்வம் (எப்பொழுதும் இருப்பது), ஸ்வத ப்ராமாண்யத்வம் (தானே தனக்கு ஆதாரமாக இருப்பது) போன்றவை. மேலும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்வரூப, ரூப, குணங்களையே பேசுவதாக இருப்பதும் ஒரு முக்யமான சீர்மை. வேதத்தைத் தமிழ் செய்வது என்றல் வேத வேதாந்த்தத்தின் தாத்பர்யங்களை தமிழ் மொழியிலே தன் நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி மூலமாக நாம் அனைவரும் புரிந்து கொள்ளும்படி அருளிச்செய்தது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment