ப்ரமேய ஸாரம் – 5 – வழியாவது

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<<< நாலாம் பாட்டு

ஐந்தாம் பாட்டு

namperumal-thiruvadi

முகவுரை

திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு  வீடு பேறு அளிக்கும் பொழுது தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை. இதன் காரணம் அவன்  பேரறிவாளனாய்  மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய் நற்குணங்கள் நிறைந்தவனாய்ச் செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் . இருப்பினும் சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றும் மற்றும் சிலவும் பகவானை அடைவதற்குச் சாதனங்களாகும் (வழியாகும்) என்று சொல்லப்பட்டுள்ளன. சாஸ்திரங்களும் உயிர்களின் அறிவைச் சோதிப்பதற்கு இறைவனை அடையும் வழிகளைப்  பலவகையாகக் காட்டி உள்ளன. பேரறிவாளனான ஒருவன் பயனில்லாத ஒன்றைச் செய்யமாட்டமையால் கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன சாதனம் போன்று தோன்றினாலும் பகவானுடைய அருளைப் பெறுவதற்கு இவை சாதனமாக ஆகமாட்டா. அதனால் இவற்றை சாதனமாக ஏற்கலாகாது. ஆகவே அறிவாளிகள் பகவானையே தஞ்சம் புகுந்து அவன் அருளாலேயே வீடு பேறு அடைகிறார்கள். அவ்வாறு அடைவதிலும் நாம் பகவானைத் தஞ்சமாக அடைந்திருக்கிறோம் என்னும் நினைவையும் அறவே விட்டுவிட்டு நம்மிடத்தில் இறையருளைப் பெறுவதற்கான ஒன்றும் இல்லை என்று தன்னுடைய வெறுமையை எண்ணி இருப்பானேயானால் அது இறைவனுடைய அருளாலே வந்ததாகும் என்பது இப்பாடலில் குறிக்கப்படும் கருத்தாகும்.

வழியாவது ஒன்று என்றால் மற்றவை முற்றும்
ஒழியா, அது ஒன்று என்றால் “ஓம்” என்று -இழியாதே
இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்
அத்தலையால் வந்த அருள்

பதவுரை:

வழியாவது  – சரணாகதி என்னும் வழியானது

ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்

மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன

முற்றும் – எல்லாவற்றையும்

ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு

அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி

ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்

ஓம் என்று – அதில் உடன் பட்டு

இழியாதே – கைக் கொள்ளாமல்

இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்

ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை

என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி

இருந்ததுதான் – அவ்வொழுக்கத்தில் நின்றது

அத்தலையால் வந்த அருள் –  இறைவன் கொடுத்த அருளாகும்

விளக்கவுரை:

வழியாவது ஒன்று என்றால்: ‘சரணாகதி’ என்னும் வழி ஒன்றே என்று உறுதியானால்,கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி யோகம் முதலான சாதனங்களை நாலு வகையாக சாஸ்திரங்கள் சொல்லியிருந்த போதிலும்  ப்ரபத்தி யோகம் (சரணாகதி) தவிர ஏனைய சாதனங்களெல்லாம்  பலனைத் தரும் அதிகாரம் பகவான் ஒருவனுக்கே உள்ளதால் ஏனைய சாதனங்கள் நேரடியாக பலன் தராது என்பது சாஸ்திர முடிவு. ஆகவே அவற்றைச் சாதனங்களாகப் பற்றுவதில் பயனில்லை என்று தெளிவு. ஆகவே, நாலாவதாகச் சொல்லப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) ஈச்வரனோடு நேரிடையாகத் தொடர்புடையதால் இதுவே வழியாகச் சொல்லப்படுகிறது. அதனால் “வழியாவது ஒன்று” என்று கூறப்பட்டது.

மற்றவை முற்றும் ஒழியா:  இவ்வாறு முடிவான பிறகு கர்ம யோகம், ஞான யோகம் பக்தி யோகம் முதலானவற்றையும் மற்ற சாதனங்களையும் ஒட்டு மொத்தமாக விட்டுவிட வேண்டும் என்பது இதன் பொருள். மற்றவையும் என்று கூறியதால் சரணாகதி தவிர மற்ற மூன்று யோகங்களையும் என்று கொள்ள வேண்டும். “முற்றும்” என்பதற்கு முழுமையான என்று பொருள். அதாவது அவற்றை விடும்போது அவற்றின் தடமும் தெரியாமல் விட வேண்டும் என்பதாம். “ஒழியா” என்பது செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஒழித்து என்று பொருள் இது இருந்தது என்னும் வினை கொண்டு முடிந்தது. இதை மறுவலிடாதபடி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அது ஒன்று என்றால்: அது-ப்ரபத்தி-சரணாகதி. இதற்குப் பகவான் என்று பெயர். “ஒன்று’ என்பது அவன் ஒருவனே என்னும் பொருளைக் குறிக்கிறது. ஒருவனே என்று பிரிநிலை ஏகாரப் பொருளில் வந்து அவனைத் தவிர வேறு எந்த சாதனமும் சாதனமாகாது என்னும் கருத்தைச் சொல்லுகிறது. அடைக்கலம் புகும் பக்தன் ‘உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லுவதும் சாதனம் ஆகமாட்டாது. அவ்வெண்ணத்தையும் கூட சாதனமாகமாட்டாது. என்பது சாஸ்திர முடிவாகும். ‘பவ சரணம்’ என்பதுவும் கழியுண்கிறது என்பது காண்க. அவனே தஞ்சம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணமும் அவனுடைய அருளுக்குத் தடையாகிறது. இவ்வாறு சரணாகதி செய்பவனிடத்திலுல்ல எதையுமே சாதனமாக ஏற்காதவன் பகவான். அவனைச் சரணாகதி என்னும் வார்த்தையால் சொல்லி ‘அது ஒன்று என்று இது அஃறிணையால் கூறப்பட்டது. ‘அது இது உது எது’ என்றார் நம்மாழ்வார். அவன் எப்படி வேண்டுமானாலும் கூறலாமல்லவா? அதனால் அது ஒன்று என்றால் பகவானாகிற ஒருவனே வழி என்று முடிவானால் என்று பொருள் காண்க.

ஓம் என்று இழியாதே: இம்முடிவுக்கு உடன்பட்டு அவனைப் பற்றுவதிலேயே முனைந்தால் அதாவது இறைவனுடைய திருவடிகளை நாம் பற்றினாலன்றோ அவன் நமக்கு அருள் செய்வான் என்று நினைத்து அவனை அடைக்கலம் புகாமல்.

இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்: இவ்வருளைப் பெறுவதற்குச் சொல்லப்படும் சாதனங்கள் நம்மால் செய்யலாவது ஒன்றுமில்லை என்று தனது வெறுமையை (ஒன்றுமில்லாமையை) எண்ணியிருக்கும் அவ்விருப்புத்தான்

அத்தலையால் வந்த அருள்:  அவன் உயிர்களிடம் வைத்துள்ள அருளினால் வந்ததாகும் என்பதாம்.

சாஸ்திரங்களில் ‘வீடுபேற்றுக்கு சாதனமாக சரணாகதி என்னும் ஒரே வழி தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முடிவான பிறகு ஏனைய கர்ம, ஞான பக்தி யோகங்கள் எல்லாவற்றையும் தடம் தெரியாமல் விட்டு விட வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்டதால் ‘அச்சரணாகதி நெறியே நமக்குத் தஞ்சம்’ என்னும் எண்ணம் உண்டாகும். அவ்வெண்ணத்தையும் கொள்ளலாகாது என்பதாம். ஏன் எனில் ‘இறைவனாகிற ஒருவனே அருள் செய்கிறான்’ என்று கூறுகையில் ஒருவனே என்ற இடத்தில் உள்ள பிரிநிலை ஏகாரம் கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பிரித்து  நிற்கிறது.  அது போல இவனுடைய பற்றுதலையும் பற்றுதல் எண்ணத்தையும் பிரித்துக் காட்டுகிறது. ஆகவே, இறைவன் அருளுவதற்கு உயிர்களிடம் சிறிதளவு எதையும் எதிர்பார்த்து அருளுவதில்லை என்பதும் அவன் தன்னுடைய இயல்பான கருணை குணத்தால் மட்டுமே அருளிகிறான் என்பதும் உணர்த்தப்படுகிறது. ‘வெறிதே அருள் செய்வர்’ என்னும் திருவாய்மொழி பாடல் உரையில் இதை விளங்கக் காணலாம். இவ்வாறு இறைவன் தானே அருள் செய்கையில் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையாகிறது. இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு சாதனங்களாக எதையும் செய்யாமால் வெறுமையாக இருக்கும் நிலை ஒருவனுக்கு அமைந்தால் அது இறைவன் திருவருளாலே தான் வரவேண்டுமேயல்லாது அதை நம்மால் கொள்ள முடியாது. வெறுமைக்கு இறைவன் அருள் வேண்டுமோ என்றால் கட்டாயம் வேண்டும்.  ஒருவன் செயல் எது இல்லாமல் வெறுமையாக இருப்பது மிகவும் அரியதாகும். ஒரு சிறு பொழுதுகூட செயலற்று இருக்க முடியாது. என்றும் கை, கால் முதலிய உறுப்புக்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே வெறுமையாக இருத்தலே நன்றாகும். அதாவது இறைவனுடைய பற்றுதலையோ பற்றியுள்ளோம் என்னும் எண்ணத்தாலேயோ பயன் அடைவதில்லை என்பதாம். இக்கருத்தை ‘வாழும் சோம்பர்’ என்றார் தொண்டரடிப்பொடிகள். ‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றார் பெரியாழ்வார். ‘என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே’ என்றார் நம்மாழ்வார். ‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்றார் திருமங்கையாழ்வார். ‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ என்றார் திருமழிசைப்பிரான். ‘சிறுமானிடவர் நாம் செய்வதென்’ என்றாள் ஆண்டாள். ஆசார்யர்களில் திருக்கண்ணமங்கையாண்டான் இக்கொள்கையைக் கடை பிடித்தார்.

‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம். அவனுடைய ச்வீகாரமே ரக்ஷகம்’ என்ற முமுக்ஷுப்படி (சூத்திரம் எண் 230) தொடரிலே காணலாம். இதற்கு உதாரணம்: ஸ்ரீ இராமாயணத்தில் சீதை இராமனை அடைவதற்கு எந்த உபாயத்தையும் செய்யவில்லை. ஆனால் ஸ்ரீ ராமபிரான் சீதையை அடைவதற்கு வில்லை முறித்தல் போன்ற பல சாதனங்களையும் நடத்தியிருக்கிறான். இதனால் சீதை இருக்கும் இடம் தேடி வந்து இராமன் அவளை அடைந்திருக்கிறான். இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் மேலே சொன்ன கருத்துக்கள் தெளிவாகும். இது வான்மீகியின் கதைப் போக்கு.

இவ்வாறு கூறியவற்றால் சரணாகதி தத்துவம் அசேதனம் போல் எவ்வித செயல்பாடுமின்றி இருத்தல் என்று தேறுகிறது. இந்நிலை ஒருவனுக்கு வருவது இறைவனுடைய திருவருளால் தான் ஆகும் என்ற கருத்தை உரைத்துக் கூறுகிறது. இப்பாடல். தற்கு உதாரணமாக திருவாய்மொழி 6ம் பத்து 10ம் திருவாய்மொழி “உலகமுண்ட பெருவாயா” என்ற பதிகத்தில் ‘ஆவாவென்னும் ‘    பாசுர ஈட்டில் கூறப்படும் ஒரு ஐதீஹியத்தைக் காணலாம்.

நம்பிள்ளை, ஜீயரை ஒரு நாள் பஞ்சமோபாயம் என்று உண்டு என்று சொல்லுகிறார்கள். நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்றுண்டோ என்று கேட்டருள ‘நான் அறிகிலேன். இனி சதுர்த்தோபாயம் தான் பகவானேயாக இருக்க வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போல. ‘அவனுக்கும் அவ்வருகே ஒன்றுண்டு என்கையிறே’ அது நான் கேட்டறியேன்’ என்று அருளிச் செய்தார். இங்கு அரும்பதத்தில் “சதுர்த்தோபாயமான ஈஸ்வரனை ஒழிய வேறு உபாயமில்லை என்கைக்கு சம்வாதமாக ஐதீஹ்யம் நம்பிள்ளை இத்யாதி’ என்ற இந்த தொடர்களை ஊன்றி நோக்கவேணும்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 5 – வழியாவது”

Leave a Comment