ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 21 – 25

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 16 – 20

பாசுரம் 21

மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து “நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு. எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். நமக்கு ஒரு பயமும் இல்லை” என்கிறார்.

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?

மனமே! ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமத்தையுடைய திருவாய்மொழிப் பிள்ளை தம்முடைய இயற்கையான கருணையாலே அருளும் ஞானத்தைக் கொண்டு, இவரையே நம்மை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பவராகக் கொண்டு, உறுதியோடு இரு! நம் ஆசார்யருக்காக யதிராஜர் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்றிருக்கிற நம்மை விரைவில் பரமபதத்தில் ஏற்றி அருளுவார். இவ்விஷயத்தில் நமக்கு என்ன பயம்? [ஒரு பயமும் வேண்டாம் என்று கருத்து]

பாசுரம் 22

திருவாய்மொழிப் பிள்ளையுடைய இயற்கையான கருணையால், எம்பெருமானாருடைய அபிமானத்தால் ஸம்ஸாரத்தைக் கடந்து ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவேன் என்கிறார்.

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே

குற்றமற்ற ஆத்மஜ்ஞான குணங்களையுடைய திருவாய்மொழிப் பிள்ளையுடைய இயற்கையான கருணையாலே, காமம் முதலிய தோஷங்களைப் போக்கும் யதிராஜருடைய அபிமானம் (கருணை) என்கிற கப்பலில் ஏறி ஸம்ஸாரமாகிற பெருங்கடலைக் கடந்து குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயிருக்கும் ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகள் என்னும் கரையை அடைவேன்.

பாசுரம் 23

கீழ் இரண்டு பாசுரங்களில் தம்முடைய ஆசார்யரான பிள்ளை, பரமாசார்யரான எம்பெருமானார் ஆகியோருடைய அபிமானத்தாலே தமக்கு பேறு உறுதியாகக் கிட்டும் என்றவர், இப்படி ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிமார்களோடு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலையை விரைவில் அனுபவிக்கும்படி தேவரீர் பண்ணியருளவேண்டும் என்று எம்பெருமானாரிடம் ப்ரார்த்திக்கிறார்.

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!

அடியேனுக்கு நாதரான யதிராஜரே! நித்யர்கள் முக்தர்கள் என்கிற அடியார்கள் சூழ இருந்து அழகாக ஸேவித்துக்கொண்டிருக்க, உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுக்கும் திருமாமணி மண்டபத்திலே, ஒப்பற்ற திவ்யமான படுக்கையாயிருக்கும் ஆதிசேஷனுடைய பணாமணிகளின் ஒளி வட்டத்துக்குள்ளே மிக்க அழகையும் மென்மைத்தன்மையும் உடைய பெரிய பிராட்டியார் வலது பக்கத்திலும், அவளைப் போன்ற பூமிப் பிராட்டியும் நீளாதேவியும் இடது பக்கத்திலும் ஸேவித்திருக்க, இவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை, விரைவிலே அடைந்து அனுபவிக்கும் வகையை அருளவேண்டும்.

பாசுரம் 24

இதில் தேஹத்தில் இருந்து விடுதலை பெறுவது தொடங்கி பரமபதத்தில் அடியார் குழாங்களை அடைவது வரையான பேற்றை ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!

அடியேனுக்கு நாதரான யதிராஜரே! தாழ்ந்ததான இந்த ஸ்தூல சரீரத்தை விட்டு, ஸூர்ய மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு அதற்கும் மேலே போய், இந்த ப்ரஹ்மாண்டத்தையும் கடந்து, நடுவிலுள்ள ஏழு ஆவரணங்களையும் கடந்து, முடிவில்லாத மூல ப்ரக்ருதியைக் கடந்து, மிகவும் அழகாக இருக்கிற விரஜா நதியில் குளித்து, அங்கே அமாநவனுடைய கர ஸ்பர்சத்தைப் பெற்று, ஒளிபடைத்த திவ்யமான தேஹத்தையும் பெற்று, நித்யஸூரிகள் எதிர்கொண்டு வரவேற்று, பகவானை அலங்கரிப்பதைப் போலே அலங்கரித்து, ஸ்தோத்ரம் பண்ணி, நல்ல வழியிலே சென்று, வைகுந்த மாநகரத்தை அடைந்து, உள்ளே சென்று, திருமாமணி மண்டபத்தைக் கிட்டி, நமக்கு ஸ்வாமிகளாகவும் ஸ்ரீமந் நாராயணனுக்கு அடியார்களுமான குழாங்களுடன் கூடும் நாளானது அடியேனுக்கு அருகே ஏற்படும் வழியை நன்றாக ப்ரகாசிக்கும்படிச் செய்ய வேண்டும்.

பாசுரம் 25

எம்பெருமானார் “நீரோ உம்முடைய அபராதத்தைப் பார்க்காமல் பெரிய பேற்றை ஆசைப்படுகிறீர். அதற்கு நாம் செய்வது என்?” என்று நினைப்பதாகக் கொண்டு, முதலில் இருந்து அடியேனுடைய அபராதங்களைப் பொறுத்து, மோக்ஷத்தையும் கொடுக்கிறேன் என்று எண்ணியிருக்கும் தேவரீர், கால தாமதம் பண்ணக் கூடாது என்கிறார்.

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!

யதிராஜரே! என்று ஒரு காரணமும் இல்லாமல் அடியேனை “இவன் நம்முடையவன்” என்று அபிமானித்து அருளி, என்று அடியேனும் அந்தக் கருணையை அறிந்து தேவரீருக்கே அடிமையாய் இருக்கும்படி செய்தருளினீரோ, அன்று முதல் இன்று வரை தவறுகளையே செய்து விட்டு, அத்தவறுகளுக்கு அனுதாபப்படுவது, இனிமேல் செய்யமாட்டேன் என்று தேவரீரிடத்தில் ப்ரார்த்திப்பது ஆகிற அடியேனுடைய கொடும் செயல்களைக் கண்டும், அடியேனை இகழாமல், தேவரீர் திருவடிகளில் எப்போதும் கைங்கர்யம் கொண்டு அருளினீர். இவ்வளவோடு நிறுத்தாமல் இன்று அடியேனுக்கு பரமபதத்தையும் கொடுத்தருளத் திருவுள்ளத்தில் நினைக்கிறீர். அதை விரைவிலே செய்தருள வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment